ஆனால் தேர்தல் முடிந்து மைத்திரி பதவியேற்று சுமார் ஒருவாரம் வந்துவிட்டது. ஆனால் இதுவரை எந்த குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை.
மகிந்த தரப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மைத்திரி தரப்பு செயலிழந்து நிற்கிறது.
ஊழலில் மகிந்தவிற்கு அடுத்த இடத்தை கோட்டபாய மற்றும் நாமலுடன் பகிர்ந்துகொள்ளும் பசில் ராஜபக்ஷ தனது மனைவியுடன் மிக சாதாரணமாக அமெரிக்கா தப்பி சென்றுவிட்டார். இது போல ஏராளமான மகிந்த தரப்பு குற்றவாளிகள் தினம் தினம் தப்பி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் மைத்திரி தரப்பு எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கிறது.
மைத்திரியை ஜனாதிபதியாக்க முன்னின்று உழைத்த ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ரஞ்சன் ராமநாயக்க கூட இது தொடர்பில் தனது அதிருப்தியை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி குற்றவாளிகள் வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்துமாறு மைத்திரிபாலவிடம் கோரியதாகவும் ஆனால் வழக்கு பதியப்படாமல் அது சாத்தியமில்லை என்று அவர் கூறியதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்து குற்றவாளிகளின் கடவுசீட்டை முடக்குமாறு கோரியதற்கு அவ்வாறு உடனடியாக செய்ய முடியாது என அதிகாரிகள் பதிலளித்ததாக ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தார். அப்படி என்றால் மகிந்தவின் பழி வாங்கலுக்குள்ளான முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கடவுசீட்டு மட்டும் எப்படி ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து இரண்டொரு தினங்களில் முடக்கப்பட முடிந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
மறுபுறம் இதே போன்ற அதிருப்தியில் ஜே.வி.பி கட்சியினர் உள்ளனர். மகிந்த தரப்பின் ஊழல்களை மக்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் கொண்டு சென்றதில் ஜே.வி.பியின் பங்கு முக்கியமானது. மைத்திரி தரப்பின் மந்தமான செயல்பாட்டையடுத்து ஜே.வி.பி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய நேர்ந்துள்ளது. அவர் மகிந்த ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் சில முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
முதலாவதாக மகிந்தவின் கடந்த பத்தாண்டு ஆட்சி எந்த சிக்கலும் இல்லாமல் செல்வதற்கு துணை புரிந்தவர் ரணில் விக்கிரமசிங்க தற்போது மைத்திரி அரசாங்கத்தின் பிரதமராக இருப்பதை கவனிக்க வேண்டியுள்ளது. மகிந்த கடந்த 10 ஆண்டுகளாக ரணிலே தனது போட்டியாளராக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். உட்கட்சி கலகத்தில் ரணிலின் பதவிக்கு ஆபத்து வரும் போதெல்லாம் அவரை மகிந்தவே பாதுகாத்தார். தனது போட்டியாளராக ரணில் இருக்கும் வரை தன்னை அசைக்க முடியாது என்பதை நன்கு அறிந்து காய் நகர்த்தியவர் மகிந்த.
அந்த வகையில் தனக்கு வாழ்வளித்த மகிந்தவிற்கோ அவரது குடும்பத்திற்கோ ஆபத்து நேர்வதை ரணில் விரும்பப்போவதில்லை என்பது வெளிப்படையானது. மறுபுறம் மைத்திரிக்கு ஆதரவளித்த சரத் பொன்சேகா மகிந்தவால் பாதிக்கப்பட்டவர். புதிய ஆட்சியில் மகிந்தவை பழி தீர்க்க காத்திருப்பவர். எனவே அவரை பொருத்தவரை மகிந்த தரப்புக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோல சுதந்திர கட்சியை தன்னிடமிருந்து பறித்து 10 வருடங்கள் வனவாசம் செல்ல வைத்த மகிந்தவை சிறையில் தள்ள சந்திரிகா சந்தர்ப்பம் பார்த்திருக்கிறார். மைத்திரி சார்ந்த சுதந்திர கட்சியை சேர்ந்தவர்கள் முழு மனதுடன் மகிந்த மீது நடவடிக்கை எடுப்பதை விரும்புவார்கள் என்று கூற முடியாது. காரணம் மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது. இப்படி பல்வேறுபட்டவர்களின் நகர்வுகள் அடங்கிய இடியப்ப சிக்கலில் மைத்திரி மாட்டி இருக்கிறார்.
இவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு பார்த்தால் மகிந்த மீது கைவைப்பது சிங்கள மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை தாறுமாறாக உயர்த்தி விடும். சிங்கள மக்களின் ஆறரை இலட்சம் பெரும்பான்மை வாக்குகள் இந்த சூழலை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சிங்களத் தலைவன் என்ற இனவாத குதிரையில்தான் மகிந்த இனி பயணிக்க போகிறார்.
நான் முன்பொரு கட்டுரையில் குறிப்பிட்டது போல, 1950 கள் வரை சிங்களத்திற்கும் தமிழுக்கும் சம உரிமை வழங்குவேன், தமிழர்களுக்கு சமஸ்டி உரிமை வழங்குவேன் என்று கூறியவர் பண்டாரநாயக்க. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சமஸ்டி தீர்வு மூலமே தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும் என்று வெளிப்படையாக அவர் அறிவித்தார். அப்போது அப்படி அறிவித்த ஒரே சிங்கள தலைவர் பண்டாரநாயக்கவே. இதனால் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியால் குற்றம் சாட்டபட்டவர் பண்டாரநாயக்க.
ஆனால் அதே பண்டாரநாயக்க சிங்கள மக்களது ஆதரவை பெறுவதற்காக ஒரே நாளில் தனி சிங்கள சட்டம் கொண்டு வருவேன் என்று இனவாதம் பேசி 1956 இல் பிரதமரானார். இனவாதத்திற்கு அடிபணிந்து பண்டா செல்வா ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார்.
இதுதான் யதார்த்தம். இனவாதத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகின்ற அரசியல் சூழலில் நியாய தர்மங்களுக்கு இடமிருப்பதில்லை.
தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த பண்டாரநாயக்கவே சிங்கள வாக்குகளுக்காக இனவாதியாக மாற முடியுமானால், ஏற்கனவே இனவாதியாக இருக்கும் மகிந்த எப்படி மாறுவார் என்பதை எண்ணிப்பார்க்கலாம்.
சிங்கள மக்கள் மத்தியில் அப்போதே இனவாதம் இவ்வளவு மோசமாக இருந்திருந்தால், ஆயுத போராட்டம் காரணாமாக ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் கொல்லப்பட்டு சொத்துக்கள் நாசமாக்கப்பட்டு, சிங்கள அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டு, நாடே நாசமாகிய சூழலில் இன்று எவ்வளவு இனவாதம் இருக்கும் என்று எண்ணிப்பார்க்கலாம்.
இந்த இனவாதத்திற்கு அடிப்படை என்ன? தமிழர்கள் மீது சிங்கள மக்கள் கொண்டிருக்கும் பயமே இந்த இனவாதத்திற்கு மூல காரணம்.
இலங்கை தமிழர்கள் சிங்களவர்கள் முன்னிலையில் தாம் சிறுபான்மையினர் என்று உணருகிறார்கள். அதே போல சிங்களவர்கள் தென்னிந்திய தமிழர்கள் மற்றும் வடகிழக்கு தமிழர்களுடன் தம்மை ஒப்பிட்டு சிறுபான்மையினர் என உணருகிறார்கள்.
இதற்கு பல நூற்றாண்டுகளாக இடம்பெற்ற தென்னிந்திய ஆக்கிரமிப்பு போர்களும் முக்கிய காரணமாக அமைகிறது.
தமிழர்கள் தம்மை ஆக்கிரமித்து விடுவார்கள் என்ற பயம் அவர்கள் இரத்தத்தில் ஊறியிருக்கிறது.
இந்த பயத்தை எப்படி இனவாதத்தை கொண்டு வாக்குகளாக மாற்றலாம் என்பதை மகிந்த போன்ற அரசியல்வாதிகள் நன்கறிவார்கள்.
சிங்கள அரசியல்வாதிகள் இனவாதிகளாக இருக்கிறார்கள் என்பதற்காக தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றும் நியாயவாதிகள் என்று அர்த்தமில்லை. சிங்கவர்களுக்கு சரிக்கு சமமான இனவாத அரசியலையே தமிழ் அரசியல்வாதிகளும் கொண்டு செல்கிறார்கள். அல்பிரட் துரையப்பாவை நேர்மையாக தேர்தல் மூலம் விழுத்த முடியாத அமிர்தலிங்கம் இனவாதம் பேசி பிரபாகரனை வைத்து கொலை செய்ய வைத்தார். மக்கள் செல்வாக்கை இலகுவாக பெறுவதற்கு, தேர்தலில் வெல்வதற்கு இனவாதம் ஒரு அட்சய பாத்திரம். அது 1950 களாக இருந்தால் என்ன 2015 ஆக இருந்தால் என்ன..இலங்கையில் இனவாதமே தேர்தல் வெற்றியின் மந்திரம்.
எனவே மகிந்த அவர் செல்லப்போகும் இனவாத பாதையை தெளிவாக முடிவெடுத்துவிட்டார் என்று கூறலாம். ஆனால் மைத்திரி மாட்டியிருப்பதோ பெரும் பொறியில்.
மகிந்த மீது நடவடிக்கை எடுத்தால் சிங்கள மக்களின் ஆதரவு மகிந்தவிற்கே பெருகும். ஆனால் மகிந்தவும் அவரது குடும்பத்தினரும் செய்த ஊழல்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியே மைத்திரி பதவிக்கு வந்திருக்கிறார்.
இந்த சூழலில் மைத்திரியின் 100 நாட்கள் கொண்ட இடைக்கால அரசாங்கம் சாதிக்க கூடியது என்ன என்பது மிக முக்கியமானது. காரணம் அதை வைத்தே இடம்பெற போகும் பொதுத்தேர்தலை மைத்திரி தரப்பு எதிர்கொள்ள வேண்டும்.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வென்ற அடுத்த சில மணிகளுக்குள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவை பிடரியில் அறைந்து சிறையில் தள்ளினார் மகிந்த. சரியோ பிழையோ அந்த ஆளுமையும் தைரியமும் தலைமைத்துவமும் மகிந்தவிடம் இருந்தது.
ஆனால் மைத்திரியிடம் அந்த பண்புகளை காண முடியவில்லை. மைத்திரி பழிவாங்கும் அரசியல் செய்யாமல் மக்களது நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார் என்று சிலர் காரணம் சொல்ல முடியும். ஆனால் ஆறிய கஞ்சி பழங்கஞ்சி.
நேரடியாக உடனடியாக மகிந்த மீது கைவைக்க முடியாது விட்டாலும் அவரது குடும்பத்தை சேர்ந்த கோட்டபாயவை கைது செய்ய தேவையான ஏராளமான காரணங்கள் உள்ளன. பிரபல பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவுடன் கோட்டபாய கொண்டிருந்த சட்ட முறுகலையடுத்து லசந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு கோட்டபாயவே காரணம் என்பதை சகலரும் அறிவர். சர்வதேச ஊடகங்களே பல தடவைகள் இது பற்றி குறிப்பிட்டுள்ளன. சர்வதேச மன்னிப்பு சபை முதல் இலங்கை பத்திரிக்கை மிக பரவலாக கண்டனங்களை பெற்ற கொலை இது. இக்கொலை வழக்கு இன்றும் நீதிமன்றில் உள்ளது. இக்கொலை தொடர்பில் முறையாக விசாரணை நடத்தப்படுமென தேர்தலுக்கு முன்னர் ராஜித தெரிவித்திருந்தார். அதேபோல 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக செயல்பட்ட லங்கா ஈ நியூஸ் பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனார். இந்த கடத்தலுக்கு கோட்டபாயவே காரணம் என வெளிப்படையாகவே குற்றம் சாட்டப்பட்டது. இம்முறை 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அலரிமாளிகைக்கு முன்னால் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியும் குடும்பத்தினரும் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த அடிப்படையில் தற்போது ரணிலின் பாதுகாப்பில் இருப்பதாக சொல்லப்படும் கோட்டபாயவின் கடவுச்சீட்டை முடக்குவதுடன் அவரை கொலை வழக்குகளில் கைது செய்து சிறையிலிட முடியும். மேலும் சர்வதேச பல்கலைக்கழகம், அப்பலோ வைத்தியசாலை, சுவர்ணவாகினி முறைகேடுகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டுகொண்டு லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு மூலமாக அவரது சொத்துகளை முடக்க முடியும்.
அது போல 2012, 2013,2014 ஆம் ஆண்டுகளில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். நாட்டை விட்டு வெளியேறிய பசிலுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுப்பது, அவரது சொத்துகளை முடக்குவது போன்றவற்றை உடனடியாக செய்ய முடியும். இவற்றை செய்யாதுவிட்டால் பல கட்சிகளையும் சேர்ந்த உற்சாகமான ஆதரவாளர்களின் பங்கை மைத்திரி இழக்கவேண்டி வரும். அது அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த யதார்த்தம் தெரிந்தும் மகிந்த மீது நேரடியாக கை வைக்காமல் உடனடியாக செய்யக்கூடியவற்றை கூட செய்ய முடியாத அரசியல் பொறியில் மைத்திரி மாட்டி இருக்கிறார்.
கடந்த அரசாங்கத்தின் சுதந்திர கட்சியின் உறுப்பினர்களது ஆதரவு மைத்திரி தரப்புக்கு தேவை என்பது வெளிப்படை. ஆனால் ஏற்கனவே அவர்களில் பலர் பெரும் ஊழல் புரிந்தவர்கள். அப்படிப்பட்டவர்களது ஆதரவை ஊழலுக்கு எதிரான ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் மைத்திரி ஆட்சிக்கு பெற்றுக்கொள்வது எப்படி?
சுதந்திர கட்சியின் தலைமை சட்ட ரீதியாக தனக்கு கிடைக்குமா? 100 நாள் ஆட்சிக்கு ஆதரவு கிடைக்குமா? அதன் பின்னர் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது? பின் கதவால் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து மகிந்த செய்யப்போகும் சதி வேலைகளுக்கு எப்படி முகங்கொடுப்பது? என்ற குழப்பத்தில் இருக்கும் மைத்திரி தான் சிக்கி இருக்கும் ஆழமான அரசியல் பொறியில் இருந்து வெளியே வருவாரா? அல்லது அதற்குள் மூழ்கிப்போவாரா? என்பது அவரின் அடுத்த நகர்வுகளை பொறுத்தே இருக்கிறது.