Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியலில் விஜய் ! எ.கொ.இது சரவணா?!

வணக்ம்னா, அடுத்த முதல்வர் நாந்தானுங்கோ!
வணக்ம்னா, அடுத்த முதல்வர் நாந்தானுங்கோ!

தமிழ் நாட்டு மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? சினிமாவில் ஜிங்குசா பாட்டைப் பாடியவாறு மரத்தை சுற்றி வரும் டூயட் நட்சத்திரங்கள், சேர்ந்தாற் போல நாலைந்து வார்த்தைகள் பேசத்தெரியாத முட்டாள்கள் அவ்வப்போது அரசியலுக்கு வாரேன் என்று செய்யும் டார்ச்சர் இருக்கிறதே, முருகா, முருகா…

கேட்டால் அரசியலுக்கு வருவது அடிப்படை மனித உரிமை என்று சில அறிவாளிகள் நியாயம் பேசுவார்கள். மனித உரிமையில் பாலைவனமாய் காய்ந்து கிடக்கும் நாட்டில் இதுதான் மனித உரிமையாம், வெங்காயம்.

தினத்தந்தியின் சினிமா இணைப்பைத் தவிர வேறு எதையும் செய்தியாகக் கூட வாசித்திராத, கேள்விப்பட்டிராத இந்த குத்தாட்ட நாயகர்களுக்கு சமூக உணர்வு பொங்கும் அந்த தருணம் இருக்கிறதே, அதைக் கேட்டால் எல்லாரையும் வெட்டிவிட்டு சிறைக்கு போவதற்கு கூட நாம் தயங்க மாட்டாம். அந்த அளவுக்கு இவர்களது சமூக அக்கறை பில்டப் நம்மிடம் கொலைவெறியையே தோற்றுவிக்கும்.

வசனம் எழுதிய கருணாநிதிக்கு வரும் கூட்டத்தை விட தனது மேக்கப் போட்ட சிவப்புத் தோலுக்கு வரும் கூட்டம் அதிகம் என்பதை கருணாநிதி அங்கீகரிக்கவில்லை என்ற ஈகோ போட்டிதான் எம்.ஜி.ஆர் எனும் பாசிசக் கோமாளி கட்சி ஆரம்பித்தற்கு காரணம். சினிமாவில் கையைக் காலை ஆட்டி அசைத்தற்கே முதலமைச்சாராக முடியுமென்றால் வேறு எதைச் சொல்ல?அதனால்தான் எம்.ஜி.ஆர் கட்சியில் தொண்டர்களாக மட்டுமல்ல அமைச்சர்களாகவும் கூட அடிமைகளே நீடித்தார்கள். நீடிப்பார்கள்.

எம்.ஜி.ஆர் மண்டையைப் போட்ட பிறகு குரலை வைத்தே வித்தை காட்டிய சிம்மக் குரலோனுக்கு ஆசை வந்து தனிக்கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் கனவில் மிதந்தார். எனினும் “பிள்ளைகளே இப்படிக் கைக்காசை செலவழிக்க வைத்து மொட்டை அடித்து விட்டீர்களே” என்று “எங்கே நிம்மதி” புதிய பறவை ரேஞ்சில் துக்கத்துடன் போய்ச் சேர்ந்தார் சிவாஜி கணேசன்.

எம்.ஜி.ஆரால் கலையுல வாரிசு என்று அறிவிக்கப்பட்டதும் கே.பாக்யராஜ் எனும் முருங்கைக்காய் நாயகனுக்கும் அப்படித்தான் தலைகால் புரியவில்லை. “தாவணிக் கனவுகள்” ரிலீசான போது அவர் அதிகம் கனவு கண்டது கோட்டையில் கொடியேற்றுவதுதான். பிறகு கட்சி ஆரம்பித்து கடன் வாங்கி இப்போது இத்துப்போன கட்டிடத்தில் “பாக்ய” இதழில் கேள்வி பதில் பகுதிகளுக்கு அம்புலிமாமா கதையைச் சொல்லி காலத்தை ஓட்டுகிறார் நம்ம பாக்யராஜ்.

அப்பாலிகா டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பித்ததும், தி.மு.கவில் ஆஞ்சநேய பக்தாராக இருந்து கொண்டே கொள்கை பரப்பு செயலாளராக இருந்ததும், பின்னர் மீண்டும் தனிக்கட்சி ஆவர்த்தனத்தை தொடருவதும் நம்மைப் பொறுத்தவரை நல்ல வேடிக்கையான விசயங்கள். இப்போதும் ஏதாவது இடைத்தேர்தல் என்றால் இவர் போட்டியிடுவதும், அதற்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் பிரச்சாரம் செய்வதும்…. ஆசை யாரை விட்டது? ஆனாலும் ஒன்றை ஒத்துக் கொள்ளவேண்டும். டி.ராஜேந்தர் பேசும் அடுக்கு மொழி காமடிக்காகவாவது இவர் அரசியலில் தொடர வேண்டும்.!

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவரது கார்பவனிக்காக டிராபிக்கில் சிறிது நேரம் நின்றதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் உணர்வு பொங்கி எழ காரணம். கூடவே மணிரத்தினம் வீட்டுக் காம்பவுண்டில் யாரோ சிலர் நமுத்துப் போன வெங்காய வெடியை போட்டதும், “தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை” என்று வெடித்தார் ரஜினி. சோ, பார்ப்பன ஊடகங்கள் பெரு முயற்சி செய்து ரஜினியின் பலூன் இமேஜை ஊதிப்பெருக்க எது எப்படியோ கடைசியில் அண்ணாத்தேயின் அரசியல் விஜயம் காமடியாக முடிந்து விட்டது.

பிறகு சரத்குமார். தானிருக்கும் போது நடிகர் விஜயை வைத்து மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தபால் தலை வெளியிடுவதா, என்று கோபித்துக் கொண்டு விஜய் மல்லையாவின் தனி விமானத்தில் மதுரை பறந்து ஆண்டிப்பட்டியில் ஜேவை சந்தித்து அ.தி.மு.கவில் அங்கமாகி பிறகு அங்கும் பருப்பு வேகாமல் சமத்துவ கட்சி கண்ட சரத்குமார் அடுத்த தேர்தலில் கூட்டணி தருமத்தில் ஒரு இரண்டு சீட்டாவது கிடைக்குமா என்று ஏங்குகிறார். ஆனாலும் இவர் விடும் சவுடால்களுக்கு குறைவில்லை.

போலீசு கெட்டப்பில் தீவிரவாதிகளை பந்தாடும் விஜய்காந்த் நிஜத்திலும் அப்படி ஒரு ஃபவர் தன்னிடம் இருப்பதாக தவறாக கருதி அரசியல் கட்சியை ஆரம்பித்துவிட்டார். கட்சியை குடும்பத்தின் பிடியிலும், கட்சி பிரமுகர்களாக ஊழலில் கொட்டை போட்ட பெருச்சாளிகளை வைத்தும் காலத்தை ஓட்டுகிறார். அம்மா தயவுக்காக காத்திருக்கிறார்.

கடைசியாக இளைய தளபதி விஜய். ஒரு படத்துக்கு ஊதியமாகவும், சென்னை நகரின் விநியோக உரிமையாகவும் சேர்த்து பதினைந்து கோடி வாங்கும் விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த நான்கு படங்கள் ஓடவில்லை. இன்னும் எத்தனை நாள்தான் மக்கள் குத்தாட்டங்களை இரசிக்க முடியும்? ஒன்னுக்கு நாலு படமாய் முதலுக்கு மோசமாப் போச்சே என்று வயிறெரிந்த திரையரங்க அதிபர்கள் நட்டத்தில் கொஞ்சமாவது திருப்பி கொடுங்கள் என விஜய் தரப்பைக் கேட்டனர். அதில்தான் நம்ம இளைய தளபதி முறுக்கிக் கொண்டு அரசியல், இரசிகர் மன்றம் என்று உதார் விடுகிறார்.

வணக்ம்னா, அடுத்த முதல்வர் நாந்தானுங்கோ!

80களில் ‘புரட்சி’ப் படங்களை எடுத்து பிரபலமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது வாரிசை திட்டமிட்டே களத்தில் இறக்கினார். ஆரம்பத்தில் அது சங்கவியா? போன்ற நடிகைகளை அரை அம்மணமாக்கி அவர்களோடு ஸ்டெப் கட்டிங் விஜயை ஆடவைத்து கிட்டத்தட்ட கொஞ்சம் பலான ஸ்டைலில் படங்களை வெளியிட்டார், சந்திரசேகர். அப்போதெல்லாம் இரசிகர்கள் விஜயைப் பார்ப்பதற்க்காக செல்வதில்லை. சங்கவி போன்ற கவர்ச்சி நடிகைகளை பார்ப்பதற்கே சென்றார்கள். இப்படி ஆரம்பித்த விஜயின் திரையுலக வாழ்க்கை பின்னர் ஒரு நட்சத்திரமாக செட்டிலானது. இதில் கடுமுழைப்புதான் அவரை நட்சத்திரமாக்கியது என்பதெல்லாம் ‘கடவுளே’ தாங்க முடியாத வார்த்தைகள். நன்றாக குத்தாட்டம் ஆடுவார் என்பதைத் தவிர மாலை முரசு சினிமா நிருபர் கேட்கும் மழலைத்தனமான கேள்விகளுக்கு கூட அவரால் பதில் சொல்ல முடியாது என்பதே உண்மை.

இப்போது என்ன பிரச்சினை? மு.க.ஸ்டாலின் மகனது மன்மத அம்பு படத்திற்காகவும், சன் டி.வியின் ஆடுகளம் படத்திற்காகவும் தமிழக திரையரங்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் காவலன் படத்திற்கு திரையங்கு இல்லையாம். அதிலும் திரையரங்க அதிபர்கள் பழைய தோல்வியடைந்த படங்களுக்கான நட்டத்தையும் கேட்கின்றனராம். குருட்டு அதிர்ஷடமாக கிடைத்த நட்சத்திர வாழ்க்கை அதோகதியாகிவிடுமோ என்ற பயம் விஜய் தரப்பினருக்கு வந்துவிட்டது.

தமிழ் சினிமா என்பது ஒரு சூதாட்ட விடுதி போலத்தான். இங்கே ஆண்டாண்டு காலமாக ஏதோ ஒரு பிரிவினர்தான் வருமானத்தை அள்ளுகின்றனர். அது தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள், திரையரங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள், ஃபைனான்ஸ் செய்பவர்கள் என்று மாறிக் கொண்டே இருந்தது இப்போது எல்லாம் தி.மு.க குடும்பத்தின் பிடியில் என்று ஆகிவிட்டது. அதன்படி இனி நட்சத்திரங்களின் இமேஜூம், வருமானமும் கூட சன்.டி.வியின் பிடியில்தான். இந்த காலமாற்றத்தை இளைய தளபதியால் ஜீரணிக்க முடியவில்லை. கடவுளர்களைப் பொறுத்தவரை அவர்களது ஆட்சி முடிந்து விட்டது என்பதை எப்போதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் பிரச்சினை.

இந்நிலையில் இரசிகர் மன்றக் கொடி, இரசிகர்களை விஜய் சந்திக்கிறார், என்ற ஆர்ப்பாட்டங்களெல்லாம் நல்லபடியாகவே நடந்து முடிந்துவிட்டன. எல்லாம் தமிழகமே தனது பின்னே அணி திரண்டிருக்கிறது என்று காட்டத்தான். இதன் பின்னிணைப்பாக அப்பா சந்திரசேகர் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் சந்தித்திருக்கிறார். கருணாநிதியிடம் தனது மகன் உயிருக்கு ஆபத்து என்று பாதுகாப்பை கேட்டாராம் தந்தை. ஒரு கொசு கூட கடிக்க விரும்பாத இந்த அய்யோ பாவம் மூஞ்சிக்கு என்ன ஆபத்து இருக்க முடியும், ஒன்றும் தெரியவில்லை.

காவலனை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்தை தவிர இவர்களது அரசியல் ஆவேசத்துக்கு எந்த எழவும் அடிப்படையல்ல. காவலன் படத்தை நாற்பது கோடிக்கு வாங்கியிருக்கும் ஷக்தி சிதம்பரம் ஒரு சிறு முதலீட்டு தயாரிப்பாளர். இவருக்கு ஏது இவ்வளவு பணம் என்றால் எல்லாம் அ.தி.மு.க பெருந்தலைகள் கொடுத்தது என்று அவரே கூறுகிறார். சன்.டிவியின் ஏகபோகத்தை தடுப்பதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் வழி புரட்சித் தலைவியின் ஏகபோகமாகும். இதில் நமது சி.பி.எம் நண்பர்கள் காவலன் ரிலீசு ஆகவில்லை என்று ஏக கோபத்தில் இருக்கிறார்கள். தமிழ் சினிமா தி.மு.க குடும்பத்தின் ஏகபோகமாகிவிட்டது என்று சவுண்டு விடுகிறார்கள். இதைத் தடுப்பதற்கு இவர்களும் போயஸ்தோட்டத்திற்குத்தான் செல்கிறார்கள். அய்யா குடும்பத்தின் ஏகபோகத்தை தடுப்பதற்கு அம்மா குடும்பம். தோழர்களும் என்ன செய்வார்கள், பாவம்.

ஆக அடுத்த தேர்தலில் விஜய் அ.தி.மு.க அணிக்கு பிரச்சாரம் செய்வாரா, இல்லை கட்சியில் சேருவாரா, இல்லை தனிக்கட்சி ஆரம்பிப்பாரா என்ற கேள்விகளெல்லாம் காவலன் படம் ரிலீசாவதைப் பொறுத்தது. ஒரு படம் பதினைந்து கோடி ரூபாயை தருகிறது என்றால் அதைத் தவிர இவர்கள் கவலைப்படத்தக்க பிரச்சினைகள் ஏதுமில்லை. ஆஃப்டரால் ஒரு படம் ரிலீசாக முடியவில்லை என்பதற்காக நாட்டு மக்களை காப்பாற்ற அரசியிலில் குதிக்கிறேன் என்று ஃபிலிம் காட்டுவதைத்தான் சகிக்க முடியவில்லை.

இனி அடுத்த அஜித் படமும் இதே போல ரிலீசாகவில்லை என்றால் என்ன நடக்குமோ தெரியவில்லை. சினிமாவில் சூரத்தனம் காட்டும் இந்த வீரர்கள் உண்மையில் ஏன் இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? சன் டி.வியின் ஏகபோகம் பிரச்சினை என்றால் அதை வெளிப்படையாக கூறி திரையுலகை அணிதிரட்டி போராடலாமே, ஏன் செய்ய வில்லை?

தமது நட்சத்திர இமேஜ் சன் டி.வியால் உயர்ந்த போது மகிழ்ந்தார்கள். இப்போது தாழ்த்தும் போது எதிர்க்க முடியாமல் அரசியல் பலம் என்ற பெயரில் ரசிகர் பட்டாளத்தை வைத்து பேரம் பேசுகிறார்கள். இதுதான் இவர்களது அவர்களது அரசியல் பிரவேசத்துக்கு காரணம் என்றால் தமிழகத்தை யாரால் காப்பாற்ற முடியும்?

நன்றி:http://www.vinavu.com/2010/12/21/vijay-politics-entry/

Exit mobile version