விடுதலைப் புலிகள் முழுமையான தோல்வியை எதிர்நோக்கியிருந்த ஒரு நிலையிலேயே, அவர்களுடைய புலம் பெயர்ந்த மேட்டுக்குடி ஆலோசகர்கள் இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பற்றித் திட்டமிட்டனர். அதற்கான நோக்கம் தெளிவானது. எவ்வாறு தமிழரசுக் கட்சி தமிழ் மக்கள் நடுவே தனது நம்பகத் தன்மை கேள்விக்குரியதாக மாறிய வேளையில், தமிழ் மக்களின் விரக்தி தனக்கெதிரான பேரலையாகாமல் தடுக்கத், தமிழரசுக் கட்சி என்ற பேரைத் தவிர்த்துத் தமிழர் தேசிய விடுதலைக் கூட்டணி என்ற பேரைச் சூடித் தனித் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்ததோ அதையொத்ததே இந்த நாடகம்.
இலங்கையில் நடைபெறும், பேரினவாத இன ஒடுக்கல் காரணமாகப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் நடுவே தமிழீழ விடுதலை என்ற கோட்பாட்டுக்கு ஆதரவைக் கட்டியெழுப்புவதில் சிரமம் இருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் ஜனநாயகமின்மையும் சுத்த ராணுவக் கண்ணோட்டமும் அடக்குமுறைகளும் பற்றிக் கண்டுங் காணாமலே புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பெரும்பாலானவர்கள் இருந்தனர். ஏனெனில் அவர்கள் முன்னால் அரசாங்கத்தின் பேரினவாத, இன ஒழிப்புப் போர் நடவடிக்கைகட்கு முன்னால் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. எனவே போரில் விடுதலைப் புலிகளின் இறுதித் தோல்வி வரை புலம்பெயர்ந்தோரிடையே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இருந்து வந்தது.
விடுதலைப் புலிகளின் அழிவைத் தடுப்பதற்கும் அப்பாவித் தமிழ் மக்களின் மீதான பேரழிவுத் தாக்குதல்களையும் இராணுவக் கொடுமைகளையும் தடுப்பதற்கும் மேலை நாட்டு அரசாங்கங்கள் குறுக்கிடும் என்று நம்பிக்கை ஊட்டிய ஒரு மேட்டுக்குடிகளின் கூட்டம், தான் ஊட்டி வளர்த்த நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் பொய்த்துப் போனவுடன் தன்னுடைய இருப்பை நிலை நிறுத்தித் தன் மீது புலம்பெயர்ந்த மக்கள் சினம் கொள்ளும் முன்பாக எடுத்த ஒரு தற்காப்புத் தந்திரோபாயமே இந்த நாடுகடந்த அரசாங்க ஆலோசனை.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாங்கள் எந்த அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது என்பதை முடிவு செய்வதற்கு வாய்ப்பு இல்லாத விதமாகவே இந்த ஆலோசனைக்கான அதிரடிப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழீழக் கோரிக்கையை நோக்கித் தமிழரசுக் கட்சி நகரத் தொடங்கிய போது பொது மக்கள் நடுவே அரசியல் விவாதங்கள் நடந்தன. அவ் விவாதங்களின் பயனாக மாற்றுக் கருத்துக்கள் வேரூன்றித் தமிழீழக் கோரிக்கை மூலம் தாங்கள் பெறவிருந்த தேர்தல் வெற்றிக்குப் பங்கம் நேரலாம் என்று தமிழரசுக் கட்சித் தலைமை அஞ்சியது. விவாதங்களுக்குத் தடைவிதித்து வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முடிந்த முடிவாக்கியது.
இப்போது புலம்பெயர் சூழலில் நடப்பது அதைவிடப் பொல்லாத மோசடி. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்றால் என்ன என்பதைப் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் விளங்கிக் கொள்ள இடம் வழங்காமல், தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்தித்த தோல்வியைப் பற்றி மக்கள் சிந்திக்க வாய்ப்பே இல்லாமல், இந்த ஆலோசனை புலம்பெயர் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. கருத்து வாக்கெடுப்புக்கள் என்ற பேரிலும் அதைவிட வஞ்சகமாகப் பிரதிநிதிகளின் தெரிவுகளும், ‘ஜனநாயகமான’ முறையில் நடத்தப்பட்டு, ஒரு ஏகாதிபத்திய சார்பு மேட்டுக்குடிக் கும்பல், புலம்பெயர்ந்த தமிழரின் முதன்மைப் பிரதிநிதியாகத் தன்னை அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் பேராலும் தமிழ் மக்களின் நலன்களின் பேராலும் திரட்டப்பட்ட நிதியின் கணிசமான பகுதி இந்தத் திருட்டுக் கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ளது. நிதியின் இன்னொரு பெரிய பகுதி இந்தக் கூட்டத்துடன் முரண்பட்டு நிற்கும் வேறொரு திருட்டுக் கும்பலின் கைகளில் சிக்கியுள்ளது. இவர்களைவிட நிதி திரட்டுவதில் முன்னணியில் நின்ற சில தனி மனிதர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதியைத் தருணம் பார்த்துத் தமதாக்கியுள்ளனர். இலங்கை அரசாங்கத்திடமும் ஒரு பகுதி சில முன்னாள் புலித் தலைமை உறுப்பினர்கள் மூலம் போய்ச் சேர்ந்துள்ளது.
மக்களுக்கு எதையுமே விளக்கத் தேவையில்லை, மக்களிடம் எதற்கும் கணக்குக் காட்டத் தேவையில்லை என்ற மரபு தமிழ்த்தேசியவாத மரபின் ஒரு பகுதியாக இன்று வரை தொடர்ந்து வந்துள்ளதையே இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் பொறுப்பாளர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள்.
எப்படித் தமிழரசுக் கட்சியினதும் விடுதலைக் கூட்டணியினதும் இப்போது தமிழர் தேசியக் கூட்டமைப்பினதும் தலைமை ஒரு வசதிபடைத்த உயர்சாதி மேட்டுக்குடிக் கும்பலின் கையில் இருந்து வந்ததோ அப்படியே புலம்பெயர்ந்த தமிழரின் தலைமையும் பெரிய இடங்களில் தமக்குச் செல்வாக்கு உள்ளதாகக் காட்டிக் கொள்ளும் ஒரு கும்பலின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. தமிழரசுக் கட்சியும் கூட்டணியும் கூட்டமைப்பும் ஒரு சாட்டுக்காகப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த சிலரும் தலைமைப் பீடத்தில் இருப்பதாகக் காட்டிக் கொண்டு மேட்டுக்குடி அரசியலை முன்னெடுத்து வந்தனவோ அப்படியே தான் புலம்பெயர்ந்த தமிழரின் ‘நாடுகடந்த அரசாங்கத்திலும்’ ஓரிருவரை ‘வெளியிலிருந்து’ கொண்டு வந்து வைத்துக் கொண்டு மேட்டுக்குடி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நாடுகடந்த அரசாங்கம் எதைச் சாதிக்கும் என்ற கேள்விக்கு அதன் பின்னால் இருப்பதாகக் கூறப்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சட்ட நிபுணர்களும் அறிஞர்களும் நிதிதிரட்டுவோரும் தெளிவாக எதையுமே கூறவில்லை. ஏனெனில் அரசியல் ரீதியாக அவர்கள் செய்யக் கூடிய எதுவுமே அவர்கள் வாழுகிற நாடுகளின் அரசாங்கங்களின் நோக்கங்கட்கு முரணாக அமையுமானால் அவர்களுடைய இருப்பே மிரட்டலுக்கு உட்படும் என அவர்கள் நன்கு அறிவார்கள். விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனப்படுவோரின் அடாவடித்தனங்களைக் கூடக் கண்டுங் காணாமலும் இருந்து, விடுதலைப் புலிகளைப் புலம்பெயர்ந்தோரிடையே ஒரு வலிய சக்தியாக வளர்வதை அனுமதித்த மேற்கு நாடுகள், இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் விடுதலைப் புலிகட்கு எதிராக மேற் கொண்ட கடும் போக்கிற்கு என்ன காரணம் என்று சிந்தித்தால் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் மேலை நாடுகட்குப் பயன்படும் அளவுக்கே அவற்றின் செயற்பாடுகள் அனுமதிக்கப்படும் என விளங்கும்.
இதிற் கூட, அவர்கள் இலங்கையில் தம் முன்னோரின் மேட்டுக்குடித் தலைமைத் துவத்தின் போக்கையே பின்பற்றுகின்றனர். எனவே சர்வதேச அரங்கில் புலம்பெயர்ந்த தமிழரைத் தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கும் மேலாக இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரமுகர்கள் எதையுமே செய்யப் போவதில்லை.
ஆனாலும் இந்தப் புலம்பெயர்ந்த அரசாங்கப் பிரகடனமும் அதன் பிரமுகர்களது வாய்ச் சவடால்களும் இலங்கையின் பேரினவாத அரசாங்கத்திற்கு மிகவும் வாய்ப்பானவை. ஏற்கனவே அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணையை நியாயப்படுத்த ‘விடுதலைப் புலிகளின் புலம்பெயர்ந்த அரசாங்கம்’ இலங்கையின் பாதுகாப்புக்கு ஒரு மிரட்டலாக உள்ளது என்ற வாதம் பாராளுமன்றத்திற் பயன்பட்டுள்ளது.
1960களில் தமிழ் நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட சி.பா.ஆதித்தனரின் ‘நாம் தமிழர் இயக்கம்’ என்ற பேர் கூட இலங்கையில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை நியாயப்படுத்தப் பயன்பட்டது. 1961 சத்தியாக்கிரகத்தை அடுத்து இலங்கையில் எந்த விதமான அரசியற் செயற்பாடுமற்றுக் கிடந்த ‘திராவிட முன்னேற்றக் கழகங்களும்’ தடை செய்யப்பட்டன. அன்று சிங்கள மக்களுக்குத் தமிழகத்திலிருந்து மிரட்டல் என்று பூச்சாண்டி காட்டிப பேரினவாதத்தையும் அரச அடக்குமுறையையும் எப்படி வலுப்படுத்த முடிந்ததோ அப்படியே இந்தச் செயலற்ற நாடுகடந்த அரசாங்கமும் பயன்படுமென நாம் நம்பலாம்.
இலங்கை அரசாங்கத்திற்கும் ஆளும் அதிகார வர்க்கத்திற்கும் தேசிய
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களின் பேரால் ஒரு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கியிருக்கிற இந்தக் கூட்டத்தினரிடம் முக்கியமான சில கேள்விகளைக் கேட்க வேண்டும். தமிழீழ விடுதலையின் பேராலும் ஈழத் தமிழ் மக்களின் நலனினதும் புனர்வாழ்வினதும் பேர்களாலும் திரட்டப்பட்ட பணத்திற்கான கணக்கையும் அதில் இந்த இடைக்கால அரசாங்கத்திடம் உள்ள பகுதியையும் பற்றிக் கேட்க வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு வேறு இடங்களிலிருந்து யாராலும் நிதி வழங்கப்படுமாயின் அது எவரால், ஏன் வழங்கப்படுகின்றது என்ற முழு விவரங்களும் கேட்டறியப்பட வேண்டும். அதன் வேலைத்திட்டங்கள் என்ன என்றும் எந்த முடிவையும் செயற்படுத்த முன்பு புலம்பெயர் தமிழ் மக்களிடையே விரிவான பொது விவாதங்களை முன்வைக்குமாறு அவர்களை வற்புறுத்த வேண்டும். பொதுவாக ஏற்கப்படாத முடிவுகளை நடைமுறைப் படுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.
நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன. தமிழ் மக்களில் ஒன்பது சதவீதமானோரின் ஆதரவை மட்டுமே தமிழர் பிரதிநிதித்துவம் என மன்றாடிப் பெற்ற ஒரு கூட்டம் இந்திய ஆட்சியாளர்களது கைப்பாவையாக இயங்குகிறது. புலம் பெயர்ந்த மக்களை ஏமாற்றி ஜனநாயக முறையில் அவர்களது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டோரெனக் காட்டிக் கொள்ளும் தமிழரசுக் கட்சிப் பரம்பரையில் வந்த உருத்திரகுமாரின் கும்பல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாகச் செயற்பட்டு வருகிறது. இவற்றுக்கு வெளியே பழைய தவறான பாதையையே பின்பற்றுகிற வௌவேறு மோசடிக் கும்பல்களும் உள்ளன.
இவை அனைத்தையும் கேள்விக்குட்படுத்தித் தமிழ் மக்களின் பேரால் காட்டிக் கொடுப்புக்களையும் உண்மையான தமிழ் மக்கள் விடுதலை எழுச்சி ஒன்று உருவாதற்குப் பாதகமான நடைமுறைகளையும் தடுப்பது புலம் பெயர்ந்த தமிழரின் கடமை.
இலங்கைவாழ் தமிழ் மக்கள் அவநம்பிக்கையின் நடுவே வாழ்ந்தாலும் நிச்சயமாகப் பழைய ஏமாற்றுக் கும்பல்கட்குப் பலியாக மாட்டார்கள். எனவே புலம்பெயர் தமிழருடையேயுள்ள நல்ல சக்திகள் இலங்கைவாழ் தமிழ் மக்களது நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ளவும் புலம்பெயர்ந்தோரிடையே அதை விளக்கவும் கூடிய ஊக்கங் காட்ட வேண்டும்.
புதிய பூமி இதழில் வெளியான கட்டுரையின் மறுபிரதியாக்கம் இவ்விதழுக்கான சந்தாதாரராக : [+94] 71 4302909