அமெரிக்க மாணவர்கள்அமெரிக்காவில் உயர் கல்வி பயிலும் 20 லட்சம் மாணவர்களில் 60 சதவீதம் பேர் கல்விக் கடனை நம்பித் தான் கல்லூரிகளில் சேருகின்றனர். தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்து விட்ட நிலையில், கல்விக் கட்டணம், பரீட்சை கட்டணம், உணவு, தங்கும் விடுதி, புத்தகம், கணிப்பொறிக்கான செலவுகள் என்று அனைத்தையும் சமாளிக்க கல்விக் கடன் ஒன்று தான் தீர்வு. அமெரிக்க மக்களைப் பொறுத்த வரை பட்டப்படிப்பு என்பதும் ஒரு முதலீடு தான்.
மாணவர்கள் தமக்கான கல்விக் கடனை இரண்டு வகையில் பெறுகிறார்கள். ஒன்று அரசின் நிதித் துறையிடமிருந்து, மற்றொன்று தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து. அரசுக் கடன் (ஃபெட்ரல் கடன்) வரம்புகளுக்குட்பட்டது. எனவே குறைவாக தான் கிடைக்கும், ஆனால் வட்டி விகிதம் குறைவு. படிப்பை முடித்த பிறகு 6 மாதங்கள் வரை தவணை கட்டுவதிலிருந்து விலக்கு உள்ளிட்ட சில அடிப்படை சலுகைகளும் அரசுக் கடனில் உண்டு.
தனியார் நிதி நிறுவனங்களோ கடனை தாராளமாக வாரி வழங்குகின்றன, ஆனால் அவற்றுக்கான வட்டி விகிதமோ மிக மிக அதிகம், சலுகைகளும் குறைவு. அரசிடமிருந்து கல்விக் கடன் பெறும் பெரும்பாலான மாணவர்களுக்கு அந்தத் தொகை போதுமானதாக இருப்பதில்லை. எனவே கூடுதலாக தனியார் நிதி நிறுவனங்களிடமும் வாங்குகிறார்கள். இவ்வாறு கற்பதற்கே கடன் பெறுவதன் மூலம், அமெரிக்காவில் பட்டப்படிப்பு படிக்க நுழையும் பெரும்பாலான மாணவர்கள் கடன்காரர்களாகத் தான் தமது வாழ்க்கையைத் துவங்குகிறார்கள்.
கடனை திருப்பிச் செலுத்துவது என்பது அவர்களுக்கு அமையப் போகும் வேலை மற்றும் சம்பளத்தைப் பொருத்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியாலும், உலகமயமாக்கலின் விளைவாகவும் பெரும்பாலான வேலைகள் குறைந்த கூலிக்கு வெளிநாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுவதால், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது, இதனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் அவற்றைத் திருப்பிச் செலுத்துவது பெரும் பிரச்சினையாகியுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை நிலுவையில் உள்ள கல்விக் கடன் மட்டும் சுமார் 1 ட்ரில்லியன் டாலர் (63 லட்சம் கோடி ரூபாய்). இது பத்து வருடத்திற்கு முன்பு வெறும் 260 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு ட்ரில்லியன் டாலரில் சுமார் 150 பில்லியன் டாலர் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் கொடுக்கப்பட்டது. கல்விக் கடன் கொடுத்து வந்த தனியார் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் யு எஸ் பேங்க்கார்ப் (US Bancorp), வெல்ஸ் ஃபோர்கோ ( Wells Fargo & Co), டிஸ்கவர் பினான்சியல் சர்வீஸஸ் (Discover Financial Services Inc), சன் ட்ரஸ்ட் பேங்க் (SunTrust Banks Inc).
இவற்றில் யு எஸ் பேங்கார்ப் நிறுவனம் கல்வி கடன் வழங்குவதை நிறுத்திக் கொள்வதாக கடந்த ஆண்டே அறிவித்து விட்டது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜே.பி. மார்கனும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. “நாங்கள் இனி மேலும் இதை (கல்வி கடனை) எங்கள் வளர்ச்சிக்கான சந்தையாக கருத முடியவில்லை” என்று காரணம் கூறுகிறது ஜேபி மார்கன். போதுமான வேலைகள் இல்லை, அதனால் கடன்கள் திரும்ப வருவதில்லை என்று சலித்துக் கொள்ளும் ஜேபி மார்கன் முறையான வேலை வாய்ப்புகள் இருந்த போது இது லாபகரமான சந்தையாக இருந்ததை மறுக்க முடியாது. ஏன் வேலை இல்லை என்பது ஜேபி மார்கன் நிறுவனத்திற்கு தெரியாததும் அல்ல. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் (ஏன் ஜே பி மார்கனையும் உள்ளிட்டு தான்) வளர்ச்சிக்காக (லாபத்திற்காக) தமது வேலைகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு கொடுத்து (அவுட்சோர்சிங்) வாங்கிக் கொண்டது தான் வேலை இல்லாமல் போனதற்கு முக்கியமான காரணம்.
கல்விக் கடனில் வாராக் கடன் அதிகரித்து செல்வதும், தொடர்ந்து வங்கிகள் கல்விக் கடன் தர மறுப்பதும் இன்னொரு பொருளாதார நெருக்கடியை நினைவுபடுத்துவதாக நிதி மேலாண்மை அறிஞர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். 2008-ல் லேமேன் பிரதர்ஸ் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் வீட்டு கடனுக்கான சப் பிரைம் நெருக்கடியில் சிக்கிய போதும் இதே போலத்தான் வீட்டுக் கடன் கொடுப்பதை நிறுத்திக்கொண்டன. பிறகு “எங்களுக்கு இந்த (வீட்டுக் கடன்) சந்தையில் வளர்ச்சியில்லை” என அடுத்தடுத்து அறிக்கைகளை விட்டன. பிறகு ஒரு நாள் காலையில் டர்ர்ர் என்று அமெரிக்காவின் டவுசர் கிழிந்த சப்தம் உலகம் முழுவதும் கேட்டது.
மாணவர்கள் கல்வி பெறுவதை பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்வதும் இந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். ஆனால் அவர்களோ தங்களுக்கு தேவையான மூளைகளை தற்போது குறைந்த விலைக்கே மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்கிறார்கள். மறுபக்கம் அமெரிக்காவின் தனியார் நிறுவனங்களிலும், நாசாவிலும் வித்தை காட்டுவதற்காகவே இந்திய மக்களின் வரிப் பணத்தை வாரி இறைத்து ஒரு கூட்டம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் களில் உருவாக்கப்படுகிறது.
அமெரிக்க மாணவர்களுக்கு இப்பொழுதும் பெரும்பாலான கல்விக் கடனை அரசு தான் வழங்கி வருகிறது. சுதந்திரச் சந்தையாளர்கள் முன் வைக்கும் கோரிக்கையான “அரசு பொருளாதார விசயங்களில் தலையிடக்கூடாது“ என்பதை இங்கு பொருத்தினால் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்?
சப் பிரைம் நெருக்கடி அமெரிக்காவை உலுக்கிய போது முதலாளித்துவ அறிஞர்கள் அதற்கு கூறிய காரணம், “தகுதியற்றவர்களுக்கு தகுதியற்ற கடன் வழங்கப்பட்டது” என்பது தான். இப்பொழுது கல்வி கடனுக்கும் அதையே தான் சொல்வார்கள். ஆனால் அது ஒருவகையில் உண்மை தானே, முதலாளித்துவ நுகத்தடியில் மூலதனத்திற்கு கூலியடிமைகளாக இருப்பதற்காக மாணவர்கள் கல்வி கற்பது தகுதியற்ற செயல் தானே.
மேலும் படிக்க
The student loan bubble is starting to burst