Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமித்ஷாவின் வருகை அதிமுகவில் குழப்பத்தை  ஏற்படுத்தியுள்ளது?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்து அதிமுகவுடன்  தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணியை உறுதிப்படுத்திச் சென்றார். இது அதிமுகவின் கீழ் மட்ட அணிகளில் குழப்பங்களையும் சிறுபான்மை மக்களிடம் அதிருப்தியையும் உருவாக்கியிருக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் பல காரணங்களுக்காக மக்களை எதிர்கொள்வதில் சங்கடம் உள்ளதாக எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுகவினர் தெரிவித்து வருகிறார்கள் என செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் திமுக, அதிமுக இந்த இரு கட்சிகளும்தான் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும்  கட்டமைப்பைக் கொண்ட கட்சிகள் வேறு எந்தக் கட்சிகளுக்கும் இந்த கட்டமைப்பு கிடையாது. ஆனால், ஜெயலலிதா மரணத்தின் பின்னர் சசிகலா, தினகரன் தரப்பால் தஞ்சை, மதுரை, திண்டுக்கல், உட்பட தென் மாவட்டங்களில் அதிமுகவின் கட்டமைப்பு சிதைந்து இருக்கிறது. இன்னொரு பக்கம் அதிமுகவின் இரட்டைத் தலைமையை ஏற்றுள்ள ஓபிஎஸ்-இபிஎஸ் இவர்கள் இருவருக்குமிடையிலான பனிப்போர் காரணமாகவும் கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது. இது போன்ற சூழலில்தான் அமித்ஷா தமிழக அரசு விழாவில் பங்கேற்றார்.

 

அமித்ஷா வருவதற்கு முன்பே “அமித்ஷாவின் வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை உருவாக்கும்” என்று தமிழக பாஜக தலைவர் முருகன் சொன்ன நிலையில், #GOBACKAMITHSHA டிரெண்டிங் ஆனது. அரசு விழாவில் அமித்ஷாவை மேடையில் வைத்துக் கொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  “பாஜகவுடன் வெற்றிக் கூட்டணி தொடரும்” என்றார். இது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை  உருவாக்கியது. காரணம் அதிமுகவின் உயர்மட்ட செயற்குழு கூட்டத்தில் கூட்டணி பற்றி எதுவும் பேசாத நிலையில் தன்னிச்சையாக பன்னீர்செல்வம் இப்படி அறிவித்தார்.

பாஜக மொத்தம் 110 தொகுதிகளைக் கேட்டதாகவும் கூட்டணிக் கட்சிகள் பாமக, தேமுதிகவுக்கு தாங்களே தொகுதிகளை ஒதுக்கிக் கொள்கிறோம் என்று கூறிய நிலையில், எடப்பாடி பழனிசாமி  இது குறித்து எதுவும் சொல்லாமல் திரும்பியதாக கூறப்படுகிறது. இப்போது ஐம்பது தொகுதிகளாவது வேண்டும். உடன்பாட்டை இப்போதே முடித்து அறிவிக்க வேண்டும் என்று பாஜக நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கூட்டணிக் கட்சியான பாமக டிசம்பர் முதல் வன்னியர் இட ஒதுக்கீடு கோரி போராட்டங்களை அறிவித்துள்ளது. இது அரசியல் ரீதியாக அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் போராட்டம் ஆகும். கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி தங்களிடம்  எதுவும் பேசாமல் பாஜகவை வைத்தே கூட்டணிக் கட்சிகளை கையாள முடியாது என்ற நிலையை பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் உருவாக்கியுள்ளார் என்றேஅரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

ஒரு பக்கம் ஆளும் கட்சி மீதான அதிருப்தி, கொரோனா ஊரடங்கு உருவாக்கியுள்ள வாழ்க்கை நெருக்கடி இவைகளுக்கு மத்தியில் வாக்காளர்களை எதிர்கொள்வதில் சிக்கல் உள்ள நிலையில் கூடுதலாக பாஜகவயும் தூக்கிச் சுமப்பது நம் கட்சிக்கு நல்லது அல்ல என பீகார் தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளார்கள்.

பாஜக மனநிலை?

அம்த்ஷா சென்னைக்கு வரும் போது அவரை ரஜினி சந்திப்பார் என்று செய்திகள் பரப்பப்பட்டது ஆனால், ரஜினி தொடர்பெல்லைக்கு வெளியில் சென்று பண்ணை வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அடுத்தது திமுக முன்னாள் பிரமுகரும் கலைஞரின் மகனுமான அழகிரி அமித்ஷாவை சந்திப்பார் என்ற செய்தி பரப்பப்பட்டது. ஆனால் அழகிரி இப்போதைக்கு யாரையும் சந்திக்க விரும்பவில்லை, தவிறவும் பாஜகவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை அவர் சுத்தமாக விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.  அமித்ஷா வருகிறார் வந்து சந்தியுங்கள் என்று பல நடிகர்களை அழைத்தும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். அனைவரும்.

மொத்தத்தில் அமித்ஷாவின் வருகை தோல்வியில் முடிந்த ஒன்று. அவர்களிடம் சிக்கியிருக்கும் அதிமுகவைத் தவிற பாஜகவுக்கு இப்போதைக்கு வேறு வாய்ப்புகள் எதுவும் இல்லை.

அதிமுகவுக்குள் பாஜக கூட்டணி பற்றி அதிகாரபூர்வ முடிவு எதனையும் எடுக்காத நிலையில் பாஜகவுடன் கூட்டணி என்ற முடிவை ஓபிஎஸ் அறிவித்ததோடு அமித்ஷாவை வரவேற்க பாஜகவினரை விட அதிக  ஆர்வம் காட்டிய அதிமுக மீது கட்சியினர் அதிருப்தியில் உள்ளார்கள்.

காரணம் பாஜகவினர் கூட்டணி என்பதையும் கடந்து பாஜக தயவில்தான் இங்கு எவரும் முதல்வராக முடியும் என்று பேசுவதோடு. பாஜக பிரமுகர் வானதி சீனிவாசன் “கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கும். அதில் பாஜக முக்கிய பங்கு வகிக்கும் “ என்று பேசி வருகிறார். மேலும் பழனி, திண்டுக்கல், அரவக்குறிச்சி, என தொகுதிகளைக் குறிப்பிட்டு கேட்டு வருகிறார்கள். பாஜகவில்  இணைந்த அண்ணாமலை, வானதி சீனிவாசன் போன்றோர் வெளிப்படையாகவே இப்படி தொகுதிகளை கேட்டு வருவது உள்ளூர் அதிமுக பிரமுகர்களிடம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இதுதான் அதிமுகவினரை ஏகத்திற்கும் டென்ஷன் ஆக்கியிருக்கிறது. அதிமுகவின் நிழலில் சில தொகுதிகளில் பாஜக வெல்ல நாம் ஏன் நம் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கும் நிலையில் ஆட்சியைப் பற்றி கவலைப்படாமல் பாஜக தவிர்த்து  பாமக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகளை வைத்து தேர்தலை எதிர்கொள்வொம் என்ற குரல்கள் அதிமுகவில் கேட்கத்துவங்கியுள்ளதால். விரைவில் உயர்நிலைக் குழுவை கூட்ட இருக்கிறார்கள்.

 

-செம்மலர்

Exit mobile version