Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அப்பா மகனுக்கு எழுதும் கடிதம்…

அமெரிக்க ஏகாதிபத்திய அரசிலிருந்து, இலங்கை பாசிச அரசு வரைக்கும் துயர்படும் ஒரே விடயம் வர்க்கப்போராட்டத்தை எப்படி அழிப்பது என்பதே. இலங்கையில் தேசிய இனங்களின் விடுதலை சிங்கள மக்கள் மத்தியில் வர்க்கப் போராட்டத்தை தோற்றுவிக்கும் என்ற காரணத்தாலேயே சிறுபான்மைத் தேசிய இனங்களை இலங்கை அரசு ஒடுக்கி இனப்படுகொலை செய்கிறது. அதற்கு உலகின் அனைத்து அதிகார வர்க்கங்களும் உதவி புரிகின்றன.
2025 இல் உலகில் அதிகாரவர்க்கங்கள் எப்படியிருக்கும் என அமெரிக்க அரசு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் முழுவதும் உலகில் வர்க்கப்போராட்டம் தோன்றிவிடுமே என்ற துயரமே இழையோடுகிறது. டேர்கையிம் போன்ற மார்க்சின் பிற்காலக் கல்வியாளர்களிலிருந்து, சமுவேல் ஹன்டிங்டன் போன்ற 70 களின் ஏகாதிபத்திய ஆலோசகர்கள் ஈறாக, இன்றைய அமெரிக்க பொருளியல் ஆலோசகர் ஜோசெப் ஸ்டிகிளிட்ஸ் வரை வர்க்கப்போராட்டத்தை எப்படி அழிப்பது என்பது குறித்தே ஆய்வு செய்கிறார்கள்.
வர்க்கப்போராட்டத்தை தற்காலிகமாகப் பின்போடுவதற்கு தன்னார்வ நிறுவனங்களின் உதவிகளில் மக்கள் தங்கியிருக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியே பங்களாதேஷிலும், இலங்கையிலும் தன்னார்வ நிறுவனங்கள் 60 களின் இறுதியிலேயே உருவாக்கப்பட்டு இன்று வரை அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
இலங்கை போன்ற பிந்தங்கிய கலாச்சார பண்பாட்டு தொடர்ச்சியைக் கொண்ட நாடுகளில் மார்க்சியத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் போராடும் முன்னணி சக்திகள் நிராகரிக்கும் போக்கு ஏகாதிபத்தியங்களின் நிகழ்ச்சித்திட்டத்திற்கும் சுரண்டல் தந்திரத்திற்கும் கிடைத்த வெற்றியாகவே கணிக்கப்படுகிறது.
சமூக விஞானத்தை எளிமைப்படுத்தி, ஒரு தந்தை மகனுக்கு எழுதும் கடிதங்கள் போன்று கட்டுரைத் தொடராக வெளியிட்டவர் செ.கணேசலிங்கன். சிறிய அச்சகம் ஒன்றின் உரிமையாளரான கணேசலிங்கனின் ‘உற்பத்தி சக்தியின் மறு உற்பத்தி’ என்ற மகன் குமரனுக்கான கடிதம் ஒன்றை இங்கு பதிவுசெய்கிறோம்:

அருமை மகனுக்கு,

உற்பத்தி சக்தியின் மறு உற்பத்தி

நமது அச்சகத்தியில் சில தொழிலாளகளை வேலைக்கு நியமிக்கிறோமல்லவா? அது போலவே எல்லாத் தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. ஆகவே தொழிலாளர்கள். தொழிலாளர்களின் உழைப்புச்சக்தியின் உற்பத்தி தொடர்ந்து நடைபெறத் தேவையிருக்கிறது.

தொழிலாளர்கள் குழந்தைகளைப் பெறுகிறார்கள். அவர்கள் வயதானதும் தமது உழைப்புச் சந்தையில் விற்கத் தயாராகின்றனர்.
ஆனால் இங்கு ஒன்றை நினைவூட்ட வேண்டும். உழைப்புச் சக்தியின் மறு உற்பத்தி தொழிற்சாலைகளிலோ, அலுவலகங்களிலோ நடைபெறுவதில்லை, அவற்றிற்கு வெளியே நடைபெறுகிறது.

யந்திரங்களை மீள நிறுவும்போது மூலதனம் தேவைப்படுகிறது.ஆனால் உழைப்புச் சக்தியின் மறு உற்பத்தி எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது. எங்கிருந்து மூலதனம் வருகிறது. என்றெல்லாம் கேட்கிறாயா?

தொழிலாளருக்கு வழங்கும் கூலியிலேயே உழைப்புச்சக்தியின் மறு உற்பத்திக்கு உரிய மூலதனமும் அடங்கியுள்ளது என்றே கூறவேண்டும்.(மார்க்ஸ் இதை மாறுதல் மூலதனம் என்றார்). தொழிலாளர் தமக்குக் கிடைக்கும் கூலியைக் கொண்டு உணவு, வீட்டு வாடகை, உடை மட்டுமல்ல: திருமணம் செய்து, குடும்பமாக வாழ்ந்து, குழந்தைகளைப் பெற்று வளர்த்துக் கல்வியும் அளிக்கிறார்கள்.

தொழிலாளி உற்பத்தி தொடர்ந்து நடைபெறத் தேவைப்படும் பல்வேறு ரகமான உழைப்புச் சக்தியை மறு உற்பத்தி செய்கிறான். உழைப்பின் தேவைகள் பலரகமல்லவா? உழைப்போரின் தேவைகளுக்காக முதலாளிகள் மிகக்குறைந்த கூலியையே வழங்குவர்.ஆயினும் தொழிலாளர் உயர்ந்த கூலிக்காகவும் வேலை நேரத்தைக் குறைப்பதற்காகவும்,தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பர் என்பதை மறந்துவிடாதே.

தாமரைக்குளத்தில் ஓரளவு தண்ணீர் இருக்கும் வரையிலேயே தாமரைக் கொடியும் உயிர் வாழ முடியும். தண்ணீர் இல்லாவிடின் கொடியும் அழிந்துவிடும். எந்த அரசும் தொழிலாளர்மேல் கவனம் செலுத்துவதையும் கவனித்திருப்பாய். உழைப்பாளி வர்க்கத்தையும் சுரண்டும் வர்க்கத்தையும் சமரசப்படுத்தி வைப்பதற்கே அரசு என்ற ஓர் அமைப்பு தோன்றியது. இன்றும் நிலவுகிறது. ஆனால் ஒரு முக்கிய விசையம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். இந்த அரசு எப்பொழுதும் உற்பத்திச் சாதனங்களைக்கொண்ட சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். நடுநிலைமை போலக் காட்டுவது வெறும் பொய்மையே என்பதை மறந்துவிட வேண்டாம்.

ஒரு தொழிற்சாலையை அல்லது ஒரு நிறுவனத்தை நடாத்துவதற்குப் பல்வேறு வகைப்பட்ட உழைப்பாளர்கள் தேவைப்படுவர். நமது அச்சகத்தில் மெசின்களை ஓட்டுவோர், அச்சுக்கோர்ப்போர், பைண்டிங் செய்பவர், மானேஜர் என்று இருக்கவில்லையா?அதேபோல் தொழிற்சாலைகளில் இஞ்சினியர்,தொழில்நுட்பம் அறிந்தோர்,யந்திர இயக்குநர், உடலுழைப்பாளர், கணக்காளர், குமாஸ்தாக்கள், சுருக்கெழுத்தாளர், தட்டெழுத்தாளர், வாகனம் ஓட்டுநர், முகாமையாளர் எனப் பலதரப்பட்டவர்கள் பணியாற்றுவர். இவர்களெல்லோரும் ஒரே நாளில் தம் திறமைகளை மந்திர சக்தியால் பெற்றவர்களல்லர்.

முதலாளித்துவம் தனக்கு வேண்டிய கல்வி அமைப்பு மூலம் இத்துறைகளில் பயிற்சியளிக்கிறது. ஆரம்பப்பயிற்சி, பின்னர் இதன் துணையுடன் தன் தொழிற்சாலைக்கோ அலுவலகத்திற்கோ வேண்டியபடி மேலதிக பயிற்சியளித்து அவர்களின் உழைப்பைப் பயன்படுத்திக்கொள்கிறது.
எல்லாப் பிள்ளைகளுக்கும் தேவையான ஆரம்பக்கல்வி உற்பத்தியில் ஈடுபடுவதற்கு அவர்களுக்குப் பயன்படுகிறது.முதலாளிகள் படியாத முட்டாள்களை விரும்புவார்கள் என எண்ணிவிடாதே , ஓரளவு கல்வியறிவுள்ள விவேகமானவர்களையே வேலையில் அமர்த்த விரும்புவார்கள்.ஏனெனில் அவர்களிடமிருந்தே அதிக , வாய்ப்பான உழைப்பைப் பெறமுடியும். வேலைகளை மட்டுமல்ல, ந்ர்வாக ஒழுங்கு விதிகளையும் கற்று அவர்களே ஒழுங்காக உழைப்பர். இவற்றைப் பின்னர் விபரமாக அறிந்து கொள்வாய். முதலாளித்துவம் ஒரு பகுதி மக்களை வேலையின்றியும் வைத்துக் கொள்ளும். கார.ணம்; வேலை தேடும் போட்டியில் குறைந்த கூலியில் உழைப்புச் சக்தியை வாங்க முடியும். வேலையில் இருப்போர் அங்கேயே ஒட்டி இருப்பர். வேலையற்ரோரின் வறுமை,பட்டினி நிலையைக் காட்டிப்பிற தொழிலாளரை அடிமைப்படுத்தி வைக்க முடியும்.

அன்பான,
அப்பா

Exit mobile version