Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அன்புள்ள லீனா மணிமேகலைக்கு அன்புடன் : யமுனா ராஜேந்திரன்

 

நான் இந்த மடலுக்குக் கொடுத்திருக்கிற தலைப்பு எனது மனதின் உள்ளிருந்து வருகிறது என்பதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்காது என நினைக்கிறேன்.

 இலண்டனில் நடந்த உங்கள் முதல் கவிதைத் தொகுப்பு அறிமுகக் கூட்டத்தில் உங்களது கவிதைகள் குறித்த மேலான அபிப்பிராயத்தையே நான் தெரிவித்திருந்தது உங்களது நினைவில் இருக்கும் எனவே கருதுகிறேன். உங்களிடம் தொலைபேசியில் நேர்காணல் செய்து அதனை இலண்டன் ‘நிருபம்’ இதழிலும் நான் பிரசுரித்திருந்தேன்.

 இவ்வளவும் தனிப்பட்டமுறையில் நான் சொல்லக் காரணம், நடந்து வருகிற எந்த சர்ச்சைகளுக்குள்ளும் என்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் சுயாதீனமான கருத்துக்களுடன் இந்த மடலை நான் எழுதுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு மட்டுமே. நடந்து கொண்டிருக்கும் சர்ச்சைகளுக்கு இடையில் இதனை எழுதுவது நிஜத்தில் எனக்கு மிக மிக வருத்தமாக இருக்கிறது.

 நான் நேரில் சந்தித்திருக்கிற தேவ.பேரின்பன், பசுமைக்குமார் போன்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும், ச.தமிழ்ச்செல்வன், பா.வெங்கடேசன் போன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த மடலை நான் எழுத வேண்டியிருக்கிறது.

 நீங்கள் எழுதியிருக்கிற மூன்று கவிதைகள் – புணர்ச்சி பற்றிய கவிதையொன்று,  பொதுவாக பெண்களை ‘ஆண்கள்’ வண்புணர்வுக்கு ஆட்படுத்துவது தொடர்பான கவிதையொன்று, பிறிதொன்று கொலாண்டாய்,லெனின், சிக்மன்ட பிராய்ட் பற்றியது – ‘தன்னிலை’யில் எழுதியிருப்பதாலும் ’ஆத்திரமூட்டும்‘ பண்பு கொண்டிருப்பதாலும்  இரு வேறு தரப்புகளில் இருந்து உங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வருகிறது எனக் கருதுகிறேன்.

 தீவிர இடதுசாரி விமர்சனம் வேறு காரணங்களுக்காகவும், இந்துத்துவவாதிகளின் விமர்சனம் வேறு காரணங்களுக்காகவும் வருகிறது என்பதையும் நாம் அறிய முடியும்.

 பிறப்புறப்புகளை வெளிப்படையாகக் கையாண்டிருப்பதால் ‘மட்டும்தான்’ இந்துத்துவவாதிகளின் விமர்சனம் வந்திருக்கிறது. தீவிர இடதுசாரி விமர்சனம் தங்களது கவிதைகளின் உள்ளார்ந்த அம்சமான ‘ஆத்திரமூட்டலுக்கு’ எதிரான ‘ஆத்திரமூட்டும்’ பண்பு கொண்டதாகவே இருக்கிறது எனவே நான் புரிந்து கொள்கிறேன். கவிதைகள் தன்னிலைப் பண்பு கொண்டதால் விமர்சனம் உங்கள் மீதான வசைகளாகவும் இருக்கிறது. இதுவே நடந்து கொண்டிருக்கும் சர்ச்சைகள் குறித்த எனது புரிதல்.

 கவிதையில் அல்லது இலக்கியப் படைப்பில் ஆத்திரமூட்டல் கூடாதா? கவிதையில் அல்லது இலக்கியப் படைப்பில் தன்னிலையைச் கடந்து எழுதமுடியுமா?

 கவிதையில் மட்டுமல்ல இலக்கியப் படைப்பிலும் ஆத்திரமூட்டுதலும் நையாண்டியும் ஒரு ஏற்கத்தக்க பண்பு எனவே நான் கருதுகிறேன். அதைப் போலவே தன்னிலையை எந்த அளவு பிரபஞ்ச தரிசனமாக மாற்றுகிறோமோ அந்த அளவிலேயே அது கவிதைத் தன்மையை அடைகிறது என்பதும் எனது புரிதல். இந்த இரு அடிப்படைகளிலும் கவிதைகளை மட்டுமல்ல, அகவிதைகள் அபத்தங்களை எழுதுவதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது என்பதனை நான் ஏற்கிறேன்.

 யாரை ஆத்திரமூட்டுகிறீர்கள், எந்தச் சூழலில் நீங்கள் ஆத்திரமூட்டுகிறீர்கள், யாரோடு சேர்ந்து நின்று நீங்கள்  ஆத்திரமூட்டுகிறீர்கள், எந்தப் பிரச்சினை குறித்து நீங்கள் ஆத்திரமூட்டுகிறீர்கள் என்பதனைப் பொருத்தே உங்கள் கவிதைகளுக்கான எதிர்விணையும் அமையும்.

 நீங்கள் பிரச்சினைக்குரிய மூன்று கவிதைகளிலும் யாரை ஆத்திரமூட்டுகிறீர்கள்?

 மார்க்சியர்களையும், போராளிகளையும் ஆத்திரமூட்டுகிறீர்கள். போராளிகளை ஏகாதிபத்திய இனவெறி வண்புணர்வாளர்களுடன் ஒப்புமைப்படுத்தி எழுதுகிறீர்கள். கவிதைகள் எடுத்துக் கொள்ளும் பாடுபொருள் மார்க்சியர்களையும் போராளிகளையும் படகேவலமாகச் சித்தரித்திருக்கிறது.

 கவிதைகளை இப்படி அரசியல் ரீதியில் அணுகலாமா?

நிச்சயமாகவே கூடாது என்பதுதான் எனது பார்வை. என்ன செய்வது நீங்கள் எழுதியிருக்கிற மூன்றும் நிச்சயமாகக் ‘கவிதைகள்’ அல்ல என்பதுவே எனது வாசிப்பனுபவம்.

 ‘கூட்டுப்பண்ணைகளை மலைப்புடன் பார்க்கிற சோவியத் விவசாயி போல, உனது அழகை வியப்புடன் பார்க்கிறேன்’ என்கிற தொனியில் மீரா எழுதிய ‘புரட்சிகரக்’ கவிதைகள் எப்படி கூட்டுப் பண்ணைகளையும் கேவலப்படுத்தி, காதலுணர்வையும் கேவலப்படுத்துகிறதோ அதனைப் போன்றுதான் உங்களது கவிதைகளும், புணர்ச்சி அனுபவத்தையும் கேவலப்படுத்தி, மார்க்சியம் குறித்தும், விடுதலைப் போராட்டம் குறித்தும் நடந்தே தீர வேண்டிய விமர்சன மரபையும் கேவலப்படுத்தியதாக இருக்கிறது.

 உங்களது இந்த மூன்று எழுத்துக் குவியல்களும் கவிதைகளே இல்லை.

 புணர்ச்சி அனுபவத்தில் ஈடுபட்டிருக்கிறபோது, அது காதலுடன் நடந்தாலும் அல்லது உடல் வேட்கையென காதலற்று நிகழ்ந்தாலும் அதில் மார்க்சியப் பிதாமகர்களை அல்ல இட்லரையோ அல்லது சதாம் குசைனையோ நினைவு கூர்ந்தாலும் அது கவிதை அல்ல, அது வெறும் தட்டையான அரசியல். மஹ்மூத் தர்வீஷ், விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா, தஸ்லீமா, ஜோமனா ஹத்தாத் என நிறைய புணர்ச்சி அனுபவக் கவிதைகள் இருக்கிறது. வாசியுங்கள். கவிதைகளுக்கும் தட்டையான அரசியல் ஆத்திரமூட்டல்களுக்கும் உங்களால் அப்போது வித்தியாசம் காண முடியும்.

 போராளிகளையும் பிற ஆதிக்க வண்புணர்வாளர்களையும் ஒரு தளத்தில் பேசுகிறது உங்கள் ‘கவிதைகள்’. செஞ்சேனை பாலுறவு வண்புணர்வில் ஈடுபட்டது நிஜம்தான். அதே அளவு நிஜம் அவர்களுக்கு ராணுநீதிமன்றம் தண்டனை வழங்க வேண்டும் எனும் செஞ்சேனைத் தளபதியின் எழுதப்பட்ட கட்டளையும். இனவெறியர்களும், ஏகாதிபத்தியவாதிகளும், ஏன் இலங்கை ராணுவமும், காஷ்மீரில் இந்திய ராணுவமும், வியட்நாமில் அமெரிக்க ராணுவமும் அவர்கள் புரிந்து வண்புணர்வுகளை ஒப்புக் கொள்கிறார்களா என்ன?

 நாம் வாழ்ந்து கொண்டிருப்பது வர்க்கம் கடந்த, சாதி கடந்த, இனம் கடந்த, பால்வேறுபாடு கடந்த சமூகம் அல்ல. நீங்கள் உங்கள் எழுத்துக்களில் எல்லாவற்றையும் கடந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ள முடியாது. இன்று உலகிலும் – இந்தியாவிலும் – தமிழகத்திலும் – மார்க்சியர்கள் மீதும் ஈழப் போராளிகளின் மீதும் அதனது எதிரிகள் படுகேவலமான வசைகளை முன்வைத்து வருகிறார்கள். விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

 உங்கள் மூன்று ‘கவிதைகளும்’ இதில் எங்கே நிற்கின்றன?

 தேவ.பேரின்பன், பசுமைக்குமார், ச.தமிழ்ச்செல்வன், பா.வெங்கடேசன் – ஆதவன் தீட்சண்யாவின் அரசியல் நேர்மை பற்றி எனக்கு எந்த மரியாதையும் இல்லை – போன்றவர்கள் இந்த மூன்று கவிதைகள் பற்றியும் இலக்கியத் தோய்வு கொண்ட மார்க்சியர்களாக என்ன கருதுகிறார்கள் என்பதனை அவர்கள் தமது கட்சிகளின் அணிகளுக்குச் சொல்லக் கடமைப்பட்டவர்கள். இந்தக் கவிதைகளின் ‘கவித்துவம்’ பற்றியும் ‘அரசியல்’ பற்றியும் தாம் சார்ந்த அமைப்புக்களின் இலக்கிய வாசகர்களுக்கும் விளக்கிச் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

 மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தார்மீகக் கோபமும் வசைகளும் (இது தொடர்பாக லீனா மணிமேகலை குறித்த கட்டுதளையற்ற சில பின்னூட்டங்கள் அவமானகரமாவை என்பதுவே எனது பார்வை) தவிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும் தமது பார்வையை வெளிப்படையாக முன்வைக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.

 அன்புள்ள லீனா மணிமேகலை, நீங்கள் தற்போது சார்ந்திருப்பது ஒரு அரசியல் அணி. இவர்களது அரசியல் ஞாபகமறதி அரசியல். தேர்ந்தெடுத்த மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், அடிப்படைவாதம் பற்றி தந்திரோபாய ரிதியில் அணுகும் பிதாமகனை தற்போது நீங்கள் இப்போது சார்ந்திருக்கிறீர்கள்.

 தங்கள் மீது நேர்மையாக இடதுசாரிகளும் மார்க்சியர்களும் முன்வைக்கத்தக்க விமர்சனங்களை திசைதிருப்பி, அதனை இந்துத்துவ எதிர்ப்பின் பெயரால் மடைமாற்றும் செய்யும் தந்திரோபாயச் செயல்பாட்டில் தமிழகத்தின் மனிதஉரிமைப் பிதாமகன் உங்களின் பொருட்டு இதில் ஈடுபட்டிருக்கிறார் எனவே நான் கருதுகிறேன்.

 எவரோடு சேர்ந்து எந்தச் சூழலில் கருத்துச் சுதந்திரத்திற்கான கூட்டத்தை நீங்கள் ஏற்பாடு செய்கிறீர்கள்?

 தஸ்லீமா தான் அடைக்கலமாகிய இந்தியாவிலிருந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் விரட்டப்படுகிறார். எம்.எப்.குசைன் கத்தார் குடியுரிமை பெற வேண்டிய சூழலை இந்துத்துவாதிகள் உருவாக்குகிறார்கள். நாவலாசிரியர் பால் சக்கரியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலுறவு தொடர்பான இரட்டை நிலைபாட்டைப் பேசியதற்காக அச்சுறுத்தப்படுகிறார். திமுக தலைவரின் குடும்பச் சண்டைக்காக மதுரையில் மூன்று பத்திரிக்கையாளர்கள் எரித்துக் கொல்லப்படுகிறார்கள். ஈழத்தில் ஐம்பதனாயிரம் தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 உங்களுக்காக நடைபெறுகிற இந்தக் கூட்டத்தில் பேசுகிற பெரும்பாலுமான பேச்சாளர்கள் எல்லோரும் இந்தப் பிரச்சினைகளில் எங்கே நின்றார்கள், எங்கே நிற்கிறார்கள் எனபது தமிழகத்தின் மிகச் சமீபத்திய ஞாபகங்கள்தான் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.

 கடைசியில் ஒரு விடயத்தைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும்.

 இணையவெளி என்பது எழுத்து ஊடகத்தின் தொடர்ச்சிதான். எழுத்து ஊடகம் என்பது எவ்வாறு சீரிய எழுத்துக்களையும் மஞ்சள் எழுத்துக்களையும் கொண்டிருக்கிறதோ அப்படித்தான் இணையவெளியும் கொண்டிருக்கும். அச்சில் மஞ்சள் எழுத்துக்களை எழுதிவிட்டு, அவதூறுகளைப் புத்தகத்தில் சாதுர்யமாக எழுதிவிட்டு, இணையத்தில் அதே வகைகளில் எதிர்விணை வரும்போது கூப்பாடு போடுவது தற்போதைய தங்களது அரசியல் பிதாமகனின் பிரலபமாக இருக்கிறது.

 மனித உரிமை என்பதனையும், கருத்துச் சுதந்திரம் என்பதனையும், அடிப்படைவாத எதிர்ப்பு என்பதனையும், தந்திரோபாயத்தின் மூலம் சாதிக்க முடியாது.

Exit mobile version