Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அதிர வைக்கும் காணொளி : ரிஷான் ஷெரீப்

வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தும் இராணுவம்
வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தும் இராணுவம்

கடந்த மே மாதம் கொண்டாடப்பட்ட புத்தரின் பிறந்தநாளுக்குப் பிறகு இலங்கையானது பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கும் என ஒரு சாஸ்திரக்காரர் கூறிய ஆரூடம் பலித்தது போல, இலங்கையானது பல தரப்பட்ட நெருக்கடிகளைத் தற்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறது. சற்றும் எதிர்பாராதவிதமாக கட்டுநாயக்கவில் ஆடைத் தொழிற்சாலைப் பெண்கள் அரசுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடி வெற்றியீட்டியதுவும், இன்னும் முடிவுறாத பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் போராட்டங்களும், இலங்கையின் ஆகாரங்களைப் பாதித்திருக்கும் ஆசனிக் விஷம் சம்பந்தமான பிரச்சினைகளும், விலைவாசி ஏற்றங்களுக்காகக் கிளர்ந்தெழும் மக்களும், டெங்கு நோய் மரணங்களும் நோயின் பரவலும் என இலங்கை அரசுக்குப் பல தலைவலிகள் அண்மையில் தோன்றியிருக்கின்றன. அவற்றோடு தலையை பல துண்டுகளாகச் சிதறடிக்கக் கூடிய இன்னுமொரு பாரிய தலையிடிக்கு இலங்கை அரசாங்கமானது தற்பொழுது முகங் கொடுத்திருக்கிறது.

‘இலங்கையின் கொலைக் களங்கள்’ எனும் தலைப்போடு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களால் தொகுக்கப்பட்ட புதிய காணொளியொன்று சேனல் 4 எனும் பிரித்தானிய தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக ஒளிபரப்பப்பட்டதும், இலங்கையானது அதன் சர்வதேச விம்பம் தொடர்பான சிக்கல்களுக்கு மீண்டும் உள்ளாகியிருக்கிறது. கடந்த மே மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டின் போது முதன்முதலாக ஒளிபரப்பப்பட்ட இக் காணொளியானது, அதன் பிறகு கடந்த ஜூன் மாதம், பதினான்காம் திகதி சேனல் 4 அலைவரிசையிலும் ஒளிபரப்பப்பட்டது. இப்பொழுது உலகம் முழுவதிலுமுள்ள பல செய்தி வலைத்தளங்களில் இவற்றைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இக் காணொளியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அனேகமான காட்சிகள் கைத் தொலைபேசியில் எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. குற்றவாளிகளின் தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளும் இக் காணொளியில் பதிவாகியிருக்கின்றன.

கிட்டத்தட்ட 48 நிமிடங்கள் ஓடக் கூடிய, யுத்தக் குற்றங்கள் நடைபெற்றதாக சாட்சிகளோடு ஒப்புவிக்கும் இந்த ஆவணப் படமானது, இலங்கையின் நற்பெயருக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதென்பது பார்த்தவுடனேயே தெளிவாகிறது. இக் காணொளியானது யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும், கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் முடிவுகள் பற்றியும் பேசியிருப்பதோடு, இறுதி யுத்தமானது, ஒரு பொது மகனுக்குக் கூட எந்தப் பாதிப்பும் நேராத வண்ணம் செய்யப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை எனச் சொல்லிக் கொள்ளும், உலகிலேயே நேர்மையான இராணுவத்தைத் தான் கொண்டிருப்பதாக மார் தட்டிக் கொள்ளும் இலங்கை அரசாங்கத்துக்கு பாரியதொரு சவாலையும் முன் வைத்திருக்கிறது. மனிதக் கேடயங்களாக அதிக எண்ணிக்கையான பொதுமக்களைப் பாவித்து அவர்களை இன்னல்களுக்குள்ளாக்கியமை சம்பந்தமாக இக் காணொளியானது, விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

இம் முறைப்பாடுகள் மூலமாக இலங்கையானது, சேனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்வைக்கப்பட்டிருக்கும் பாரிய சவாலுக்கு மீண்டும் முகம் கொடுக்க நேர்ந்திருப்பது தெளிவாகிறது. குறைந்த பட்சம் இக் காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கும் படுகொலைக் காட்சிகள் பொய்யானவை என நிரூபிப்பதற்கு இலங்கை அரசுக்கு மீண்டும் தொழில்நுட்பவியலாளர்கள் பின்னால் ஓட நேர்ந்திருக்கிறது.

இலங்கை இராணுவப் படையைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படக் கூடிய சிலரால், கைகளும் கண்களும் கட்டப்பட்டு நிர்வாணமாக இருக்கும் சிலர் துப்பாக்கியால் சுடப்படுவதைப் போன்ற காட்சியைக் கொண்ட ஒரு காணொளியை இதற்கு முன்பும் சேனல் 4 அலைவரிசை ஒளிபரப்பியிருக்கிறது. இலங்கை அரசாங்கமானது, அந்தக் காணொளிக்கு பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்ததோடு மட்டுமன்றி, தனது தொழில்நுட்பங்களின் மூலம் அக் காணொளி பொய்யானது என்று சாட்சிகளையும் முன் வைத்தது. எனினும், ஐக்கிய நாடுகளின் போர்க் குற்ற மற்றும் சித்திரவதைகள் தடுப்பிற்கான சிறப்பு பிரதிநிதி பிலிப் அல்ஸ்டனால் சர்வதேச அளவிலான தொழில்நுட்பவியலாளர்கள் குழுவொன்றைக் கொண்டு அக் காணொளி உண்மையானது என நிரூபிக்கப்பட்டது.

அக் காணொளி கிளப்பிய சர்வதேச அலைகள் அதிர்வுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போதுதான் இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டமெனக் குறிப்பிடப்படும் இப் புதிய காணொளி வெளியாகியிருக்கிறது. இக் காணொளியை அடிப்படையாக வைத்து, இலங்கையானது தன் மேல் சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு ஒத்துழைக்காவிடின், இலங்கைக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு அது காரணமாக அமையுமென, ஐக்கிய நாடுகள் அமைப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது.

தமக்கெதிரான இக் காணொளி தொடர்பாக, இலங்கை அரசாங்கமானது தனது கருத்தினை பலவிதமாகத் தெரிவித்து வருகிறது. சேனல் 4 அலைவரிசையானது விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து பணத்தினைப் பெற்றுக் கொண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் திட்டமிட்டுச் செய்திருக்கும் சதி இதுவென பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதாபய ராஜபக்ஷ சொல்லிக் கொண்டிருக்கிறார். இது முற்றுமுழுதாகப் பொய்யால் நிரம்பியிருக்கும் ஒரு காணொளி எனவும் கருத்துத் தெரிவித்திருக்கும் அவர், யுத்த காலங்களில் இராணுவமானது எப்பொழுதுமே பொதுமக்களைக் காப்பாற்றிப் பாதுகாத்ததாகவும், இராணுவம் ஒரு போதுமே அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்யவில்லையெனவும் சொல்கிறார். இறுதி யுத்தத்தில் சம்பந்தப்பட்ட விடுதலைப் புலி இயக்கத் தலைவர்களது குடும்ப உறுப்பினர்கள் இன்றும் கூட அரச பாதுகாப்போடு மிகவும் நலமாக இருப்பதாகக் கூறும் பாதுகாப்புச் செயலாளர், அதற்கு உதாரணமாக கடற்புலிகளின் தலைவரான சூசையின் மனைவி, பிள்ளைகளும், அரசியற் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனது மனைவி உட்பட இன்னும் 11,000 உறுப்பினர்களும் தம்மால் நன்கு பராமரிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். அல் ஜஸீரா தொலைக்காட்சி ஊடகம், இலங்கை பாராளுமன்ற அமைச்சர் விஜேசிங்ஹவிடம் இது சம்பந்தமாகக் கருத்தை வினவிய போது அவரும் கூட பணத்துக்காக எதையும் செய்பவர்களே இக் காணொளியைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் இவ்வாறு சொன்ன போதும், இந்த ஆவணப்படமானது உலகம் முழுவதிலுமுள்ள கோடிக் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டாயிற்று. தற்பொழுது இந்த ஆவணப்படமானது யூட்யூப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் காணக் கிடைக்கின்றது. இலங்கையில் பிரசுரிக்கப்படவில்லையாயினும், உலகம் முழுவதிலுமுள்ள பிரபல அச்சு ஊடகங்களில் இக் காணொளி குறித்தான விமர்சனங்களும் மக்களது கருத்துக்களும் தினமும் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. எனவே, இலங்கை அரசும், அரசியல் தலைவர்களும் ஆளாளுக்கு இப்படி ஆவேசமாக மறுப்புக் கருத்துக்களை சொல்லித் திரிவதை விடவும், தாம் குற்றமற்றவர்களெனில், அதனை நிரூபிப்பதுதான் சரியானது. அத்தோடு, இக் காணொளியில் காண்பிக்கப்படும் சம்பவங்களது உண்மைத்தன்மை குறித்து நீதியானதும், முழுமையானதுமான விசாரணையொன்றை நடத்தி அதன் முடிவுகளை நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் பகிரங்கமாகத் தெரியப்படுத்த வேண்டியதுவும் அரசின் கடமை.

சேனல் 4 முன்வைக்கும் குற்றச்சாட்டானது, ஒரு சிறுபான்மை இனத்துக்கு அரசினால் இழைக்கப்பட்டிருக்கும் மிகப் பாரிய அநீதத்தை அதன் மூலம் கண்டுகொள்ளலாம். அவ்வாறான அநீதத்தை இழைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தால் அக் குற்றச் சாட்டிலிருந்து இலகுவில் தப்பித்துக் கொள்ள முடியாது. சேனல் 4 தொலைக்காட்சியானது தன் மீது பொய்க் குற்றச்சாட்டொன்றை முன் வைத்திருந்தால், இலங்கை அரசாங்கத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரும் ஒரு காணொளியை ஒளிபரப்பச் சொல்லி பிரித்தானிய சட்டமன்றத்திடம் தைரியமாகக் கோரலாம். அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் சொல்லிக் கொண்டிருப்பதுபோல இக் காணொளியில் காண்பிக்கப்படும் காட்சிகள் அனைத்தும் பொய்யானவை எனில், அதனை நிரூபிப்பதற்காக சேனல் 4 ஊடக நிறுவனத்துக்கெதிராக இலங்கை அரசாங்கத்தால் வழக்குத் தொடர முடியும். அதைச் செய்ய ஏன் தயங்குகிறது அரசு? அவை மட்டுமே இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தைத் துடைக்கும்.

இப் பிரச்சினையின் இன்னுமொரு பக்கத்தை நோக்கினால், பிரித்தானியாவோ, அமெரிக்காவோ, இந்தியாவோ மற்றும் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளோ இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றிக் கதைப்பது அவர்கள் மீது கொண்டுள்ள உண்மையான அன்பினால் அல்ல என்பது தெளிவாகும். ஏனெனில் இவை எல்லாவற்றுக்கும் அப் பிரச்சினைகளிலிருந்து அரசியல் ஆதாயம் தேடும் உள்நோக்கங்கள் அந் நாடுகளிடம் மறைந்திருக்கின்றன. அந் நாடுகளிடம் எவ்வளவுதான் அரசியல் ஆதாயம் தேடும் உள்நோக்கங்கள் இருந்தபோதிலும், தான் குற்றமற்றவர் என தகுந்த சாட்சிகளோடு நிரூபிக்காமல் தன் மீது சாட்டப்பட்டுள்ள இக் குற்றச் சாட்டிலிருந்து விலகிக் கொள்ள இலங்கை அரசாங்கத்தால் முடியாது. தன் மீது சுமத்தப்படும் ஏனைய குற்றச் சாட்டுக்களிலிருந்து இலகுவாகத் தப்பித்துக் கொள்வதைப் போல இதிலிருந்து அரசாங்கத்தால் இலகுவாகத் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் இது சர்வதேசம் முன் வைத்திருக்கும் யுத்தக் குற்றச் சாட்டு.

இதற்கு முன்பும் இலங்கையில் முன்னைய ஆட்சிகளின் போது அரசாங்கத்தினாலேயே பல மனிதப் படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. என்ற போதும் இதற்கு முன்பு இது போன்ற சாட்சிகளுடன் கூடிய பாரிய குற்றச்சாட்டு பிற நாடுகளிலிருந்து அரசைக் குறி வைத்து முன்வைக்கப்படவில்லை. பிற நாடுகளைத் தவிர்த்து, அரசின் மீதுள்ள அச்சம் காரணமாக இலங்கையிலுள்ள பொதுமக்கள் கூட அரசை நோக்கி எந்தக் குற்றச் சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை. அரசு மேற்கொள்ளும் படுகொலைகளுக்கும், ஆட்கடத்தல்களுக்கும் நீதமான விசாரணையொன்றை நடத்தி, நீதியை நிலைநாட்டும் விதத்தில் குற்றவாளிகளைத் தண்டிக்கச் சொல்லி எந்தச் சமூகமுமே கோரவில்லை. அப் படுகொலைகளையும், குற்றங்களையும், அழிவுகளையும் உடனே மறந்த பொதுமக்கள் சமூகமானது, கதறும் மனசாட்சியை மறைத்தபடி, அக் குற்றவாளிகளுடனேயே தோளில் கை போட்டுக் கொண்டு வாழ்ந்து செல்லப் பழகிப் போயிருக்கிறது. தம்மை எதிர்த்து எவரும் வரமாட்டார்கள் என்பதை நன்கு அறிந்த அரசுகள் மிகத் தைரியமாக குற்றங்களைச் செய்யத் தொடங்கின. எல்லா மரங்களையும் கொத்திச் செல்லும் மரங்கொத்திப் பறவையானது வாழை மரத்தில் கொத்தப் போய் மாட்டிக் கொள்வதைப் போல இலங்கையின் தற்போதைய அரசாங்கமானது இக் காணொளி விடயத்தில் மாட்டித் தவிக்கிறது.

முப்பது வருட கால யுத்தத்தை தாமே முடிவுக்குக் கொண்டு வந்ததாக, நாட்டு மக்களிடம் ஒவ்வொரு முறையும் மார்தட்டிக் கொள்ளும் இலங்கையின் தற்போதைய அரசாங்கமானது, யுத்த வெற்றி தினத்தை வருடந்தோறும் கொண்டாடுகிறது. இலங்கை ஜனாதிபதி பற்றிய ஏதேனுமொரு நற்செய்தியை தினந்தோறும் ஒளிபரப்பாத அரச ஊடகங்கள் இல்லவே இல்லை. இவ்வாறாகவும், அச் செய்திகளில் யுத்த காலத்தில் பொதுமக்கள் கொல்லப்படவேயில்லை எனக் கூறியும் நாட்டு மக்களின் மத்தியில் தனது ஆட்சி குறித்துக் கட்டியெழுப்பியிருக்கும் பிரமாண்ட விம்பமானது, சட்டென உடைந்து நொறுங்கிவிடும் அபாயம் சேனல் 4 உடன் இக் குற்றச் சாட்டு குறித்து மோதுவதில் இருக்கின்றதென்பதை அரசாங்கம் உணர்ந்தே இருக்கிறது. எனவே இலங்கை அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் இலங்கைக்குள் இக் காணொளி குறித்து பொதுமக்களிடம் என்னென்ன கதைகள் பரப்பினாலும், அக் கதைகளை எடுத்துக் கொண்டு பிரித்தானியா வரை செல்ல முடியாது என்பதே நிதர்சனம்.

http://www.channel4.com/programmes/no-fire-zone/4od

– எம்.ரிஷான் ஷெரீப்
இலங்கை

mrishansha@gmail.com

Exit mobile version