அதிமுக தேர்தலுக்கு முன்போ தேர்தலுக்குப் பின்னரோ பிளவு படும் வாய்ப்புகள் உள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால். அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று பாஜக கூறி வருவது அதிமுகவினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், அதிமுகவில் உள்ள எவராலும் பாஜகவை எதிர்த்து பேச முடியாத நிலை உள்ளது.தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக ஐ.டி விங்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியை பிரதானப்படுத்தி விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது தன் ஆட்களை வைத்து தனி விளம்பரங்களை கொடுத்து வருகிறார் ஓ.பன்னீசெல்வம். அது போல கர்நாடக மாநில சுற்றுலா அமைச்சரான சி.டி. ரவிதான் தமிழக பாஜக பொருப்பாளராக உள்ளார். அவர் தேர்தலுக்குப் பின்னரே தேசிய ஜனநாயக் கூட்டணி முதல்வரை முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளது.
பாஜகவை பொருத்தவரை அதிமுகவை பயன்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என நினைக்கிறது. அதற்காக ரஜினியை வைத்து ஒரு தேர்தல் நாடகத்தை அரங்கேற்ற நினைத்தது. பாஜகதான் ரஜினியை பின்னால் இருந்து இயக்குகிறது என்பதை தமிழக அறிவுலகமும், சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசி வந்த நிலையில், இது ரஜினிக்கு பெரிய மன உளைச்சலை உண்டாக்க உடல் சுகவீனமும் சேர்ந்து அரசியலில் இருந்தே இப்போது ஒதுங்கி விட்டார்.
ரஜினியை பாஜக தனக்காக குரல் கொடுக்கக் கோரும். ஆனால் அதை ரஜினி செய்வாரா என்பது தெரியவில்லை. அப்படிச் செய்தால் மீண்டும் ரஜினி கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்ற நிலையில். இப்போது பாஜகவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை விட்டால் வேறு வழியில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் மிரட்டல்
1998-ம் ஆண்டு 13 கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியது. அப்போது அக்கூட்டணியில் அதிமுகவும் இருந்தது.ஆனால், இது போன்று அமைக்கப்படும் கூட்டணிகள் நாடாளுமன்ற தேர்தலுக்குத்தானே தவிற மாநிலங்களில் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு அல்ல. பொதுவாக சட்டமன்ற தேர்தல்கள் மாநிலத்தில் எது பலம் பொருந்திய கட்சியோ அதன் தலைமையில்தான் கூட்டணியை அமைக்கும். தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டு கட்சிகள்தான் பலம் பொருந்தியவரை ஒன்று திமுக, இன்னொன்று அதிமுக. அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. இந்த இரண்டு தேசியக் கட்சிகளுக்குமே தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. அதிலும் பாஜகவுக்கு எந்த ஒரு செல்வாக்கும் இல்லை.
ஆனால், மத்தியில் அதிகாரம் இருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலுக்குப் பின்னர் முதல்வரை முடிவு செய்யும் என்கிறது பாஜக. பாஜகவின் திட்டம் இதுதான்.
கூட்டணிக்கட்சியான தங்களுக்கு 40 தொகுதிகளும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு 40 தொகுதிகளுமாக சுமார் 80 தொகுதிகளைக் கேட்டு வெற்றி பெறலாம் என நினைக்கிறது. ஆனால், வேடிக்கை என்னவென்றால் பாஜக நினைக்கும் எதுவும் தமிழகத்தில் நடக்காது. அதிமுகவை பயன்படுத்தி தமிழக அரசியல் வரலாற்றில் சில தொகுதிகளில் வேண்டுமென்றால் பாஜக வெற்றி பெறலாம் அவ்வளவுதான்.