Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!

என்கவுண்டர் செய்யப்பட்ட வடமாநில இளைஞர்கள்
என்கவுண்டர் செய்யப்பட்ட வடமாநில இளைஞர்கள்

சென்னை வேளச்சேரியில் ஐந்து வடமாநில இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போலி மோதல் கொலை, திருப்பூரில் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்த திருட்டு ஆகிய இரண்டு சம்பவங்களுக்குப் பின், வட மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்திருக்கும் கூலித் தொழிலாளர்கள், தமிழகத்தில் உயர் கல்வி படித்துவரும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது, தமிழக போலீசு. சென்னை, திருப்பூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வடமாநிலக் கூலித் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்வதைத் தமிழக போலீசு அதிகாரிகளே நேரடியாக நடத்தி வருகின்றனர்.

வட மாநிலக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் அதிரடியாகப் புகுந்தும், அவர்களைத் திருமண மண்டபங்கள் போன்ற இடங்களுக்கு வலுக்கட்டாயமாக ஓட்டிவந்தும் இப்பதிவினை போலீசார் நடத்தி வருகின்றனர். வட மாநிலத் தொழிலாளர்களின் பிறந்த ஊர், தொழில், தற்போதைய முகவரி, கைபேசி எண்கள் ஆகியவற்றோடு, அவர்களின் விரல் ரேகைகளும் போலீசாரால் வலுக்கட்டாயமாகப் பதிவு செய்யப்படுகின்றன. தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தற்பொழுது கணக்குப் பாடம் நடைபெறுகிறதோ இல்லையோ, வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களைக் கணக்கெடுக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசும், போலீசும் தயாரித்து வரும் இந்த “சந்தேக லிஸ்டு” வடமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்து வரும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய விவரங்களை அவர்களது புகைப்படம், கைபேசி எண்களோடு பெற்று அருகிலுள்ள போலீசு நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகர போலீசு வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்களைக் கொடுக்கத் தவறும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் போலீசு எச்சரித்துள்ளது.

ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளாக அல்லது அவர்களின் ஆதரவாளர்களாக, முசுலீம்கள் தீவிரவாதிகளாகச் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டதைப் போல, வடமாநிலக் கூலித் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும், வாடகைக்குக் குடியிருப்போரைச் சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் முத்திரை குத்துகிறது, தமிழக போலீசின் இந்த உத்தரவு. இது, குடிமக்களின் சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் குடிபெயரும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது; இனப் பாகுபாடு மற்றும் வர்க்கப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக விரோத நடவடிக்கை எனக் குறிப்பிட்டுப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இந்த உத்தரவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளன.

எனினும், தமிழகத்தில் நடந்துவரும் கொலை, கொள்ளை ஆகியவற்றைக் காரணமாகக் காட்டி, தனது இந்தப் பீதியூட்டும் உத்தரவை நியாயப்படுத்தி வருகிறது, தமிழக போலீசு.  பாதுகாப்பான நகர வாழ்க்கைக்கு இது போன்ற கணக்கெடுப்பு அவசியமென்றும், மும்பய், டெல்லி, பெங்களூரு, புனே போன்ற நகரங்களில் வசிப்போர் பற்றிய விவரங்களைப் போலீசிடம் பதிவு செய்யும் நடைமுறை ஏற்கெனவே அந்நகரங்களில் அமல்படுத்தப்பட்டு வரும்பொழுது, தமிழகத்தில் இது காலதாமதமாகத் தொடங்கப்படுகிறதென அலுத்துக் கொள்கிறது, தமிழக போலீசு.  அதாவது, சென்னையின் புறநகர்ப் பகுதியில் நடந்த இரண்டு வங்கிக் கொள்ளைகளையடுத்து, வாடகை வீட்டில் குடியிருப்போரைக் கண்காணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசு வரவில்லை; அதன் மனதில் ஏற்கெனவே தயாராக இருந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு இந்தக் கொள்ளைகளை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பதுதான் இப்பதிவின் பின்னணியிலுள்ள உண்மை.

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் நக்சலைட்டுகளும் கலந்து வருகிறார்கள் என ஏற்கெனவே பீதி கிளப்பி வந்த போலீசு, அவர்களைப் பாகுபடுத்திப் பதிவு செய்வதற்கான வாய்ப்பாக இந்தக் கொள்ளைச் சம்பவங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.  நடக்கின்ற எந்தவொரு குற்றத்தையும் தனது அதிகாரத்தையும் மக்கள் மீதான கண்காணிப்பையும் கூட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாக போலீசு பயன்படுத்தி வருகிறது என்பதுதான் இங்கு நமது கவனத்திற்குரியது.

தமிழகத்தில் போலீசின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே எந்தப் பஞ்சமும் கிடையாது.  தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது என்ற பெயரில் முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் “மெட்டல் டிடெக்டர் மற்றும் சி.சி.டி.வி. கேமரா” கண்காணிப்பு; இரவு 11 மணிக்கு மேலாகிவிட்டால், வாகனங்களைத் தடுத்து நிறுத்திப் பரிசோதிக்கும் நேரடிக் கண்காணிப்பு; பகல்பொழுதுகளில் தெருவுக்குத்தெரு நடத்தப்படும் வாகனப் பரிசோதனை என்ற கண்காணிப்பு; இவை ஒருபுறமிருக்க, தெருவில் குடிமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காகப் புறக்காவல் நிலையங்கள் புதிதுபுதிதாகத் திறக்கப்படுவதோடு, பல்வேறு தெருச் சந்திப்புகளில் செக்போஸ்டுகளும், சி.சி.டி.வி. கேமராக்களும் அமைக்கப்படுகின்றன.  போலீசின் “இன்ஃபார்மர்களாக’’ப் பணியாற்றுவதற்காகவே போலீசு நண்பர்கள் குழு, போலீசு பாய்ஸ் கிளப்புகள் ஒவ்வொரு பகுதியிலும் கட்டப்படுகின்றன.  இப்படி தெருக்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து வரும் போலீசின் கண்காணிப்பு இன்று வீடு வரை நீள்கிறது.

குடும்ப அட்டை, மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவை மூலம் குடிமக்கள் பற்றிய தேவையான விவரங்களை அரசு பெற்று வந்தா

லு

ம், மேலும் மேலும் குடிமக்களின் அந்தரங்க விசயங்களை அறிந்து கொள்ளுவதற்கும், அவற்றைத் தொகுத்து வைத்துக்கொண்டு அவர்களின் அனைத்து நடவடிக்

கைகளையும் கண்காணிப்பதற்கும் அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.  தமிழகத்தில் பயின்று வரும் வடமாநில மாணவர்கள் பற்றி தற்பொழுது தமிழக போலீசு நடத்தத் துணிந்திருக்கும் இந்தக் கணக்கெடுப்பை, மைய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை ஏற்கெனவே எடுத்து வருவதாகக் கூறுகிறார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்.  மைய அரசோ தேசிய அடையாள அட்டைத் திட்டம் மூலம் குடிமக்கள் அனைவரையும் தமது முழுக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும் முயற்சியினைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

தேசிய அடையாள அட்டை (ஆதார்) திட்டம், குடிமக்களின் பெயர், வயது, முகவரி போன்ற வெளிப்படையான விவரங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை; அவரது வங்கி இருப்பு தொடங்கி அவருக்கு உள்ள நோய் வரை அனைத்து அந்தரங்கமான தகவல்களையும் இந்த ஆதார் அட்டையின் மூலம் அரசு நோட்டம் விடுகிறது.

தமிழகத்தில் நடந்து வரும் கொலை, கொள்ளையைச் சாக்கிட்டு தமிழக போலீசு மேற்சொன்ன கணக்கெடுப்பு  கண்காணிப்பை நடத்தி வருகிறதென்றால், மைய அரசு கார்கில் போரைச் சாக்காக வைத்து ஆதார் திட்டத்தைக் கொண்டுவந்தது.  பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் கார்கில் போரை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டி, தீவிரவாத ஊடுருவலைத் தடுப்பதற்காக எல்லைப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க வேண்டுமென ஆலோசனை கூறியது.  பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இந்த ஆலோசனையின் அடிப்படையில், தேசிய பாதுகாப்பை மறுசீரமைப்பது என்ற அறிக்கையைத் தயாரித்தது.  அதில் வங்கதேச முசுலீம்கள் ஊடுருவலை மிகப் பெரும் அச்சுறுத்தலாகக் காட்டி, தேசிய அடையாள அட்டைத் திட்டத்தை நாடெங்கும் கொண்டு வரும் முடிவை எடுத்தது.  இதற்கு ஏற்ப, குடிமக்களின் அந்தரங்க விசயங்களையும் பதிவு செய்வதற்கு ஏற்றவாறு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.  பா.ஜ.க.விற்குப் பின் ஆட்சியைப் பிடித்த காங்கிரசு கூட்டணி அரசு, 2008  ஆம் ஆண்டு மும்பயில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைச் சாக்காகக் காட்டி, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு தனியான ஆணையத்தை அமைத்தது.

‘‘தேசிய அடையாள அட்டை இருந்தால்தான் இனி ரேஷன் பொருட்கள் கிடைக்கும்; சமையல் எரிவாயு உருளை கிடைக்கும்; அரசு அறிவிக்கும் சமூக நலத் திட்டங்களைப் பெற முடியும்” என அரசு அடுத்தடுத்து போகிறபோக்கில் அறிவிப்பதன் மூலம் இத்திட்டத்தில் பொதுமக்கள் தாமே முன்வந்து பதிவு செய்துகொள்வதைக் கொல்லைப்புறவழியில் கட்டாயமாக்கி வருகிறது.  ஆதார் அட்டை தனி மனித உரிமைகள், அந்தரங்கங்களை மீறுகிறது என மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக இயக்கங்களும் சுட்டிக் காட்டினாலும், அந்த எச்சரிக்கையை நடுத்தர வர்க்கம்கூடப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.  ஏதாவதொரு அட்டை இருந்தால்தான் தமது அடையாளத்தை அரசிடம் உறுதிப்படுத்த முடியும் என்ற நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டிருப்பதால், பொது மக்கள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பதிவுசெய்து, அவர்களைக் கண்காணிக்கும் திட்டத்தைச் செயற்படுத்துவது அரசுக்கு எளிதாகிவிடுகிறது.

வடமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வாடகை வீட்டில் குடியிருப்போர் பற்றித் தமிழகப் போலீசு நடத்திவரும் பதிவின்பொழுது அளிக்கப்படும் புகைப்படங்களும், கைபேசி விவரங்களும் போலீசாரால் தவறாகப் பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதமுள்ளது என்ற கேள்விக்கு, “எங்களை நம்புங்கள்” என யோக்கியனைப் போலப் பதில் அளித்திருக்கிறது, சென்னை போலீசு.  சென்னை போலீசாரால் பதியப்படும் வழக்குகளுள் 60 சதவீத வழக்குகள் பொய்யானவை என மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள விவரத்தோடு ஒப்பிட்டால், போலீசின் நேர்மையும், நாணயமும் நம்மைப் பீதியடையச் செய்துவிடும்.  சென்னை வேளச்சேரியில் நடந்த போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஜய்குமார் வங்கிகளை நோட்டம் விடுவது போல போலீசாரால் வெளியிடப்பட்ட காட்சியின் நம்பகத்தன்மை குறித்து ஐயம் எழுப்பப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்தக் கேள்வியை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.

‘‘போலீசு கேட்கும் விவரங்களை அளிப்பதற்குச் சமூக விரோதிகள்தான் அச்சப்பட வேண்டும்.  சட்டப்படி கண்ணியமாக நடந்துகொள்ளும் பொதுமக்கள் ஏன் அச்சப்பட வேண்டும்?” என்ற எதிர்க்கேள்வியின் மூலம் சாதாரண பொதுமக்களை சமாதானப்படுத்த முயலுகிறது, போலீசு.  சமூக விரோதி யார், சட்டப்படி நடக்கும் குடிமகன் யார் என்ற கேள்விக்கு அரசிடம், போலீசிடம் இருக்கும் அளவுகோலே வேறானது.  ஐந்தாறு மாதங்களுக்கு முன்பாகச் சட்டப்படி நடக்கும் குடிமக்களாகக் கருதப்பட்டகூடங்குளம்  இடிந்த கரை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அணு உலையை எதிர்த்துத் தீவிரமாகப் போராடத் தொடங்கிய பிறகு, அவர்களைச் சமூக விரோதிகளாகக் காட்ட அரசும் போலீசும் தொடர்ந்து முயன்று வருகின்றன.  கோவை பகுதியைச் சேர்ந்த சிறு தொழில் அதிபர்கள் மின்வெட்டைக் கண்டித்துப் போராடியபொழுது, தமிழக போலீசு அவர்களை லத்தியால் அடித்துத் துரத்தியது.  கண்ணியமான குடிமக்கள் சட்டம் ஒழுங்கிற்குச் சவால் விடுபவர்களாக மாறியது அந்தப் போராட்ட தருணத்தில்தான்.

ஆங்கிலேய காலனிய ஆட்சியின்பொழுது தம்மை எதிர்த்துப் போராடிய பழங்குடி இன மக்களைக் குற்றப் பரம்பரை சாதியாக முத்திரை குத்திய வெள்ளை துரைமார்கள், அம்மக்களை இரவு நேரங்களில் போலீசு நிலையங்களில் அடைத்து வைத்துக் கண்காணித்தார்கள்.  தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட இன்றைய மறுகாலனிய கட்டத்தில், இந்திய மக்களைக் கணினி வழியாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர், பழுப்பு நிற துரைமார்கள்.  கண்காணிக்கும் முறை வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால், இரண்டு துரைமார்களுக்கும் பொதுமக்களைப் பற்றிய பார்வை ஒன்றுதான்.

மைய அரசு சமீபத்தில் தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் ஒன்றை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.  இந்த அமைப்பின் கீழ் வரும் மைய அரசின் உளவுத் துறைக்கு, சந்தேகப்படும் அனைவரையும் கைது செய்யும் அதிகாரத்தையும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இதனை மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுவதாகக் கூறி, ஜெயா, மோடி உள்ளிட்டோர் எதிர்த்து சவுண்டு விட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினையில் சந்தேக லிஸ்டில் கொண்டு வரப்படும் நபரைக் கைது செய்யும் அதிகாரம் மாநில போலீசிடம் இருக்க வேண்டுமா, அல்லது மைய உளவுத் துறையிடம் இருக்க வேண்டுமா என்பது குறித்துதான் காங்கிரசிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் நடக்கிறதேயொழிய, மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவது பற்றிப் போலி கம்யூனிஸ்டுகள்கூட அக்கறை கொள்ளவில்லை.

நன்றி : புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

Exit mobile version