Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அடையாள அரசியலின் அரசியல் : தோழர் சி. சிவசேகரம்

1. அரசியலில் அடையாளம்

அரசியல் எப்போதும் அடையாளஞ் சார்ந்தது தான். அரசியற் செயற்பாடு நிகழுகின்ற களத்தில் உள்ள அடையாளம்; ஒவ்வொன்றும் வௌ;வேறு அளவுகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ செயற்படுகிறது. சமூக ஏற்றத் தாழ்வுகளும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் எந்தெந்த அடையாளங்களில் நிகழுகின்றனவோ அந்தந்த அடையாளங்களின் பேரில் மோதலும் பகைமையான அரசியலும் இருப்பது இயல்பானது. எனினும் சில அடையாளங்களும் அவை சார்ந்த முரண்பாடுகளும் அரசியலில் ஆதிக்கஞ் செலுத்துகின்றன.

எல்லா வகையான அடையாளங்களும் அடையாளப்படுத்தல்களும் குறிப்பிட்ட கால, இடச் சூழல்களிலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. அதை விட அடையாளப்படுத்தல்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பது, எவ்விதமான சமூக நலன்கள் சார்ந்து அவை நிகழ்கின்றன என்பதனாலேயே முடிவாகிறது. சமூக அடையாளங்களில் நிரந்தரமானதும் நீக்க இயலாததுமானது அடிப்படையான அடையாளம் பால் வேறுபாடு சார்ந்தது. பால் அடையாளஞ் சார்ந்த சில விளிம்பு நிலை அடையாளங்கள் சமூக நிலை சார்ந்து வேறுபடும் அளவுகளில் முக்கித்துவம் பெற்றாலும், ஆண்-பெண் என்ற வேறுபாடே சமூக இருப்பிற்கு அடிப்படையாக இருந்து வருவது என நாம் அறிவோம். அறியப்பட்ட வரலாற்றில் நீண்டகாலமாகப் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் சுரண்டலும் இருந்து வந்துள்ளன. எனினும் மாக்சியத்தின் எழுச்சியின் பின்பே, அந்த முரண்பாட்டின் வரலாற்றுத் தோற்றுவாய் சரிவர அடையாளங் காணப்பட்டது. அதன் பின்னரே பெண்ணுரிமைக்கான குரல்கள் பல்வேறு தளங்களில் எழுந்தன. எனினும் கடந்த அரை நூற்றாண்டில் அதன் முக்கியப்படுத்தலில் சமூக நீதியைத் தவிர்ந்த நோக்கங்களும் குறுக்கிட்டுள்ளன. இவ் விடயம் பற்றி இக் கட்டுரையில் விரிவுபடுத்துவது இயலாது. எனினும் இது ஆழச் சிந்தித்துப் பேசப்பட வேண்டிய விடயமாகும்.

சமூகத்தின் இருப்பு அதன் உற்பத்தியைச் சார்ந்தே இருக்கிறது. உற்பத்தி முறைகளும் உற்பத்தி உறவுகளுமே ஒரு சமூகத்தின் தன்மையைத் தீர்மானிக்கும் அடிப்படைகள். அதற்கும் மேலாக, உற்பத்தி முறைகளதும் உறவுகளதும் வரலாற்று விருத்தியின் போக்கில் சமூக அமைப்பில் அவை ஏற்படுத்திய மாற்றங்கள், உற்பத்தி முறைகளும் உறவுகளும் மாறியதன் பின்பும் நீண்டகாலத்திற்குத் தமது பாதிப்பைத் தொடருகின்றன. இவை யாவும் மனித இனத்தின் அடையாளங்களைப் பல பரிமாணங் கொண்டனவாகவும் அவற்றின் சிக்கலான கூட்டுத் தொகுதிகளாகவும் மாற்றுகின்றன.

மிகவும் எளிதாகவே நாம் அடையாளங் காணக் கூடிய இனம், மொழி, பிரதேசம், மதம், பண்பாடு என்பனவற்றுடன் இந்தியத் துணைக்கண்டத்திற்குரிய சாதியையும் எடுத்துக் கொண்டால், இவற்றில் எதுவுமே நிலையானதாகவும் நிரந்தரமானதாகவும் இருந்ததில்லை என்று காணுவோம். சில அடையாளங்கள் இணைந்து ஒரு பொது அடையாளமாகின்றன. சில பிரிந்து தனித்தனி அடையாளங்களாகின்றன. சில அடையாளங்களைப் புதிய அடையாளங்களோ வேறு அடையாளங்களோ மேவி விடுகின்றன. எனினும் தொடர்ச்சியாக மாறி வருகிற மொழி, மதம், பண்பாடு போன்ற அடையாளங்களினூடு ஒரு வரலாற்று இழையையோ ஒரு பொதுச் சிந்தனை அடிப்படையையோ அல்லது கற்பனையான ஒரு பண்பையோ வைத்து அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு நீண்ட வரலாற்றையும் மாறாத் தன்மையையும் நிரந்தரத் தன்மையும் வழங்குகிற போக்கை நாம் காணலாம்.

மேற்கூறிய போக்கின் ஒரு பக்கம் ஒரு சமூகத்தின் அல்லது சமூகக் குழுமத்தின் இருப்புப் பற்றியது. ஒரு சமூகமோ அதன் ஒரு பகுதியோ தன்னை எவ்வாறு அடையாளப்படுத்துகின்றது என்பது அதன் இருப்புச் சார்ந்த ஒரு முக்கியமான கேள்வியாகிறது. அதன் இருப்பு மிரட்டலுக்குள்ளாகிற போது அடையாளப்படுத்தல் மேலும் முக்கியமாகிறது. அவ்வாறே, ஒரு சமூகத்தில் உள்ள ஒரு ஆதிக்கப் பிரிவு, தனது நலன்களைப் பேணவும் அச் சமூகத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவும், சமூகத்தின் அடையாளப்படுத்தலை ஒரு கருவியாக்குகிறது. சமூகங்களின் உள்ளும் சமூகங்கட்கிடையிலும் அடையாளஞ் சார்ந்த முரண்பாடுகள் கூர்மையடைவதும் மோதல்களாவது போர்களாவதும் பெரும்பாலும் முற்கூறிய அடையாளப்படுத்தல்களின் தேவையும் நோக்கமும் சார்ந்தே எனலாம்.

நிதானமாகச் சிந்திக்கும் போது, மேலாதிக்கமும் சுரண்டலும் அடக்குமுறையும் ஒடுக்கலும் போன்ற செயற்பாடுகளற்ற போது சமூகங்களிடையிலான உறவுகளிற் பகைமைக்கான தேவை இல்லை என விளங்கும் பொதுவாக இப்படிப்பட்ட உறவுகளிற் பகைமை இருப்பதும் இல்லை. வரலாற்றில் இருந்து வந்த பகைமையான உறவுகள் மறக்கப்பட்டும் உள்ளன. அவ்வாறே கடந்த காலம் ஒன்றிலிருந்து வரலாற்றுப் பகைமை மீட்டெடுக்கப்பட்டும் புனையப்பட்டும் உருவாக்கப்படுவதை நாம் காண முடியும். இதற்கான சமகால உதாரணங்களில் இந்தியாவில் இந்துத்துவத்தையும் இலங்கையில் சிங்கள பௌத்தத்தையும் நாம் அறிவோம்.

இவ்வாறான அடையாளப்படுத்தல்கள் யாருடைய நலன் சார்ந்தவை என்ற கேள்வி நம்முன் எழுகிறது. ஒவ்வொரு அடையாளப்படுத்தலும் ஒட்டுமொத்தமான சமூகம் ஒன்றைக் குறிப்பதாகவே முன்வைக்கப்படுகிறது. ஆனால் அது பொதுவான நலனைக் குறிப்பதில்லை. சமூகத்தின் ஒரு சிறிய பிரிவினரது நலன்களையே அது முதன்மைப் படுத்துகிறது. இன்னொரு கணிசமான பகுதியினருக்கு அது தமது நலன் சார்ந்தது என்று எண்ணும் விதமாகச் சில நலன்களைக் காட்சிப் படுத்துகிறது. பெரும்பாலானவர்கட்கு அது அவர்களது இருப்பிற்கும் பாதுகாப்பிற்கும் தேவையானது என்கிற விதமான மயக்கத்தை ஊட்டுகிறது. சில வேளைகளில் அவர்களது சமூகம் பற்றிய உயர்வான எண்ணங்களைப் புனைந்து அந்த மேம்பாட்டைத் தொடர்ந்து பேணுகிற தேவையை வலியுறுத்துகிறது.

மேற்கூறியதை விளங்கிக் கொள்வதானால், முதலில் நிறவாதத்தை எடுத்துக் கொள்ளலாம். அடிமை வியாபாரத்தில் தனது வேர்களைக் கொண்டிருந்ததான இந்த நிறவாதம் குறிப்பாக வட அமெரிக்காவில் (இன்றைய ஐக்கிய அமெரிக்க அரசுகள் எனப்படும் அமெரிக்காவில்) ஒரு கறுப்புப் சனாதிபதி ஆட்சிக்கு வந்த பின்பும் குறிப்பிடத்தக்க வலிமையுடனேயே உள்ளது. தென்னாபிரிக்காவில் ஒரு விடுதலைப் போராட்டத்தின் விளைவாகவே நிற அடிப்படையிலான அப்பட்டமான கொடுமையை நியதியாக்கிய ஒரு ஆட்சிமுறை முடிவுக்கு வந்தது. இவ்வாறான சிந்தனை பிற சூழல்களில் வேறு வடிவங்களை எடுக்கிறது. ஜேர்மன் ஃபாசிசம் யூதர்களை மட்டுமே இலக்கு வைக்கவில்லை என்பதும் நிறவாதம் அதன் சித்தாந்த அடிப்படை என்பதும், நாம் மறக்கக் கூடாத உண்மைகள்.

கொலனியத்தின் விருத்தியிலும் நிறவாதம் ஒரு முக்கிய பங்களித்தது. அது காலப் போக்கிலும் கொலனியம் நவகொலனியமாக மாறிய சூழலிலும் தேசிய நலன் என்ற பேரில் தன்னை மறைத்துச் செயற்பட்டு வந்துள்ளது.

இனம், தேசம் என்ற பலவாறான அடிப்படைகளில் அடையாள அரசியல் செயற்படுத்தப்பட்டதன் மூலம் வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் முழுச் சமூகங்கள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. சமூகங்களின் பொருளாதார அடிப்படை தகர்க்கப்பட்டுச் அவை சீரழிக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவில் நடந்தவை அதைவிடக் கொடுமையானவை. ஆபிரிக்காவின் தென் பகுதியிற் சமூகங்கள் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஆசிய வரலாறு பெருமைக்குரியதல்ல. எப்போதெல்லாம் வரலாற்றுப் பெருமைக்குரிய பேரரசுகள் எழுந்துள்ளனவோ அப்போதெல்லாம் பழங்குடிகளும் சிறுபான்மைச் சமூகங்களும் பலவாறான அழிவுகளைச் சந்தித்துள்ளன. அப் போக்கு இப்போது முதலாளிய எழுச்சியுடன் மேலும் தீவிரமாகியுள்ளது. அது எதிர்ப்புக்களையும் போராட்டங்களையும் சந்திக்க நேரிட்டுள்ளதைச் சிறிதேனும் நாம் அறிவோம்.

இவ்வாறு, அடையாளங்களைச் சமூக மோதலுக்கு உள்ளாக்குகிற அரசியல் யாருடைய நலன் சார்;ந்த அரசியல் என்பதை, வர்;க்கமும் வர்க்கப் போராட்டமும் பற்றி அறிந்தவர்கள் விரைவாகவே அடையாளங் காண்பர். எனினும் அதை மீண்டும் நினைவூட்டுவதிற் கேடில்லை. ஒரு சமூகத்தில் ஆதிக்கத்திலிருக்கிற ஒரு சமூகப் பிரிவு தனது நலன்களை முழுச் சமுதாயத்தினது அல்லது ஒரு குறிப்பிட்ட அடையாளமுள்ள ஒரு பிரிவிற்கு (இது பொதுவாக ஒரு பெரும்பான்மையாக இருக்கும், ஆனால் அப்படி அமைய அவசியமில்லை) உரிய நலன்களாகக் காட்டி அந்த நலன்களை முன்னெடுக்கும் போக்கில் பிற சமூகங்கள் மீது ஒடுக்குமுறையையும் ஆக்கிரமிப்பையும் மேற்கொள்வதை ஏற்புடையதாக்குகிறது. இவ்வாறான நடைமுறை வௌ;வேறு சூழ்நிலைகளில் வௌ;வேறு விதங்களில் இருந்தாலும் பொதுவான ஒரு பண்பை நாம் அடையாளங் காணலாம்.

ஒரு சமூகத்தின் உற்பத்தி முறையையும் உற்பத்தி உறவுகளையும் (அதாவது அதனுடைய இருப்பை முடிவு செய்கிற விடயங்களைச்) சார்ந்த முரண்பாடுகளின் முக்கியத்துவம் இரண்டாம் பட்சமானதாகவும் சில சமயங்களிற் பேசக் கூடாததாகவும் மாற்றப்படுகிறது. வர்க்கமும் வர்க்கப் போராட்டமும் இவ்வாறு பின்தள்ளப்படுவது தற்செயலானதல்ல.

2. அடையாளமும் ஆதிக்க அரசியலும்

ஒரு சமூகத்தின் மீது ஆதிக்கஞ் செலுத்துகிற சமூகத்திற்குப் புறம்பான ஒரு சக்தியோ மேலாதிக்கக் கும்பலோ தன்னை ஒரு நேரடியான ஆதிக்கச் சக்தியாகக் காட்டிக் கொண்ட சூழல் கொலனிய யுகத்தில் இருந்தது. இன்று அந்த நிலை மாறிவிட்டது. நவகொலனியம் தன்னை நேரடியாக அடையாளங் காட்டுவதில்லை. தன்னை ஆதிக்க சுரண்டல் சக்தியாகக் காட்டுவதை இயலுமானவரை தவிர்க்கிறது. அது போன்று, ஒரு சமுதாயத்தினுள் ஆதிக்கத்தில் உள்ள ஒரு வர்க்கமோ வர்க்கங்களோ தம்மை அவ்வாறு அடையாளங் காட்டுவதைத் தவிர்க்கின்றன.

ஒடுக்குமுறையாளர்களும் சுரண்டற்காரர்களும் தங்களால் ஒடுக்கப்படுகிற பெரும்பான்மைக்கு எதிராகத் தம்மை நேரடியாக நிறுத்திக் கொள்வதில்லை. கொலனிய யுகத்தில் நேரடியான மோதலைத் தவிர்க்க உள்ளுர் ஆதிக்கச் சக்திகளுடனான கூட்டணிக்கும் மேலாக, ஒரு நடுத்தர வர்க்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சமூகப்பிரிவு ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினின்று தன்னை வேறுபடுத்திக் கொள்ளுமாறு கொலனிய நிருவாகம் கவனித்துக் கொண்டது. வேறு சூழ்நிலைகளில் நாட்டின் ஒரு தேசிய இனப் பிரிவிற்கு அல்லது அதினின்று பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பகுதிக்குச் சலுகைகள் வழங்கி ஒரு நடுத்தர வர்க்கம் உருவாக்கப்படுகிறது. இதில், ஏலவே நாட்டில் இருந்து வந்த ஏற்றத்தாழ்வான நிலைகளும் பயன்படுகின்றன. கிழக்கு ஆபிரிக்காவிற் போன்று இன்னொரு நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சமூகம் இத்தகைய நடுத்தர வர்க்கமாகவும் அமையலாம்.

எவ்வாறாயினும் சுரண்டி ஒடுக்கிற சிறுபான்மை தன்னைத் தற்காத்துக் கொள்ளப் படை வலிமையையும் அடக்குமுறையையும் பயன்படுத்தலாம். அது இயலாது போகிற போது அடையாள அரசியல் மூலம் தன்னை அது பலப்படுத்திக் கொள்ள முயலுகிறது. தனது சுரண்டும் வர்க்க அடையாளத்தைத் தான் சார்ந்த ஒரு பெரும்பான்மைச் சமூக அடையாளத்துக்குள் அது மூடி மறைக்கிறது. அத்துடன் அந்த வர்க்க அடையாள மறைப்பு வெளிப்படாமல், சமூகத்தில் உள்ள சிறுபான்மை அடையாளங்களில் ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ பெரும்பான்மைக்கு எதிரான மிரட்டலாகவோ நெடுங்காலப் பகையாகவோ காட்ட முயலுகிறது. இவ்வாறு பிரதான முரண்பாடாக அமையக் கூடிய வர்க்க முரண்பாட்டிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப இயலுமாகிறது.

அதே வேளை, தன்னோடு அடையாளப்படுத்த இயலாத சமூகப்பிரிவினரைப் பிளவுபடுத்துகிற போக்கையும் நாம் காண முடியும். இதற்கு வசதியாக நீண்ட வரலாற்றையுடைய இன, மத, மொழி வேறுபாடுகள் போன்றவை அமைகின்றன. இத்தகைய அடையாள வேறுபாடுகள் உற்பத்தி உறவுகள் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளாகவும் சொத்துடமையும் பொருள்வளமும் சார்ந்த வேறுபாடுகளாகவும் அமைகிற போதுஈ அவை எளிதாகவே அச் சமூகப் பிரிவினருடைய ஒற்றுமைக்குத் தடையாகின்றன.

மேற்கூறியவாறான அனுகுமுறையை இந்தியப் பார்ப்பனியம் எவ்வாறு கையாண்டுள்ளது என்பதைக் கவனித்தல் ஆளும் அதிகார வர்க்கம் கையாளுகிற ஐக்கிய முன்னணித் தந்திரோபாயம் சிறிது விளங்கும். இந்து என்கிற அடையாளத்தின் மூலம் தொடக்கத்தில் பார்ப்பன சாதி மேட்டுக்குடிகளின் தலைமையின் கீழும் பின்பு கூட்டாளிகளாகவும் உயர் சாதியினர் சேர்க்கப்பட்டனர். பின்பு, தாழ்த்தப்பட்ட சாதியினர் முஸ்லிம்களுடன் கூட்டணி அமைக்காதவாறு பல்வேறு தளங்களில் (அவர்கள் தமது சாதி அடையாளத்தை இழக்காமலும் அதன் தாழ்நிலையை அடையாளங் காணாத விதமாகவும்) அவர்களும் இந்து அடையாளத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இங்கே முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் எதிரிகளாக்கி இலக்கு வைப்பதற்கு இந்த உட்படுத்தல் அரசியல் பயன்பட்டது. குஜராத் கலவரத்தின் போது பழங்குடியினர் கூட இந்த மதவெறி இந்துத்துவ அடையாளத்திற்குள் இணைக்கப்பட்டனர்.

இப்போது தலித்துக்கள் எனப்படுவோரை இந்து அடையாளத்திற்குட் கொண்டுவருகிற முயற்சி ஊக்கத்துடன் நடைபெறுகிறது. ஆனால் சாதியத்தையும் தீண்டாமையையும் ஒழிக்கும் நோக்கம் இல்லாமலே அது மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கையில் சிங்களப் பேரினவாதம் தொடக்கத்திலிருந்தே சிங்கள பௌத்தத்தைத் தனது அடிப்படையாக்கிக் கொண்டது. தங்களது சுய முன்னேற்றத்திற்காகப் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ அடையாளத்தை ஏற்ற மேட்டுக்குடிகள், அரசியல் லாபத்திற்காகப் புத்த மதத்திற்கு மீளத் தயங்கவில்லை. சிங்கள பௌத்த அடையாளத்தை விடச் சாதி அடையாளம் முக்கியமாயிருந்த காலமும் இருந்தது. மேட்டுக்குடி அரசியலில், சர்வசன வாக்குரிமை இல்லாத சூழலில், ஆதிக்க வர்க்கங்களிடையே சாதி வேறுபாடு முக்கிய விடயமாக இருந்தது. ஆனால் நிலவுடைமை சார்ந்த கொவிகம சாதியின் சமூக ஆதிக்கம் குறையத் தொடங்கிய சூழலில் நிலவுடைமை முதலாளிய வர்க்கப் பிரிவினரிடையே சமரசம் ஏற்படுகிறது. குறுகிய காலத்திற்கு மத அடையாளம் அடக்கி வாசிக்கப்பட்டு மொழி சார்ந்த அடையாளம் முதன்மைப் படுத்தப்பட்டாலும், இப்போது சிங்கள பௌத்த ஆதிக்கப் போக்கு வலுவாக உள்ளது. எனினும் தமிழ், முஸ்லீம், கிறிஸ்தவப் பெருமுதலாளிகட்கும் சிங்கள பௌத்தப் பெருமுதலாளிகட்கும் உள்ள உறவு சுமுகமாகவே உள்ளது.

அடையாள அரசியல் என்பது, எவ்வாறு ஒரு சமுதாயத்தின் விருத்திப் போக்கில் அதனுள் அமைகின்ற பல்வேறு அடையாளங்களை முதன்மைப்படுத்துவது என்பதுடன் காலத்துக் காலம் பொது அடையாளங்களைத் தேடுவது என்பதையும் பற்றியதாகும்.

பௌத்த அடையாளத்தை வற்புறுத்துவதில் வேறுபாடுகளுடன், சிங்களத் தேசிய இன அடையாளம் வலுப்பட்ட காலச் சூழலில், தமிழ் இன அடையாளம் அதன் தலைமையில் இருந்த ஆதிக்கச் சக்திகளான யாழ்ப்பாணச் சைவ வேளாளச் சாதியைச் சார்ந்த ஒரு மேட்டுக்குடிச் சிறுபான்மையின் நலன்களையொட்டி உருவானது.அந்த நலனை வலியுறுத்துவதற்குத் தமிழ்ச் சமூகத்திலிருந்து சவால் எதுவும் எழாத நிலையில், அச் சிறுபான்மை, தமிழ் அடையாளம் ஒன்றை வலியுறுத்துவதையும் வளர்த்தெடுப்பதையும் விடுத்துச், சைவ வேளாள பிரதேச ஆதிக்கத்தையே முன்னிறுத்தி வந்தது. 1948ம் ஆண்டு தமிழரசுக் கட்சி தோன்றிய போதே தமிழ்ப் பேசும் இனம் என்ற அடையாளம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்குரிய சமூகச் சிந்தனையோ அரசியல-;-சமூக அடிப்படையிலான வரலாற்று வழிப்பட்ட விருத்தியோ இல்லாததால், அது தமிழ்ப் பேசும் மக்களை ஒற்றுமைப்படுத்தத் தவறியதுடன் தேவையற்ற பகைமைகட்கும் வழி வகுத்தது. இங்கு நாம் காண வேண்டியது ஏதெனின், ஒரு அதிகார வர்க்கத்தின் குறுகியகால நலன்களே சமூக அடையாளப்படுத்தலை வழிநடத்தின என்பது தான். இதில் முக்கியமானது ஏதெனில், நீண்டகாலமாகத் தமிழ் மேட்டுக்குடிகள் தமிழரை ஒரு ஒடுக்கப்பட்ட சிறுபான்மையாகக் காணத் தவறியமையாகும். சிங்கள மக்களிடையே சாதிய பிரதேச வேறுபாடுகள் அரசியலில் இல்லாமில்லை. எனினும் அரசியலில் அவற்றின் ஆதிக்கம் குறைவாக இருந்தமைக்குத், தமிழரிடையே இருந்தது போல எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய தனியொரு மேட்டுக்குடிப் பிரிவு இல்லாமை ஒரு முக்கியமான காரணமாகும்.

ஆளும் வர்க்கம் வெறுமனே இன, மத அடிப்படையிலான பெரும்பான்மை அடையாளம் ஒன்றை நிறுவுவதில் மாத்திரம் தங்கியிருக்க இயலாது. நாடு அல்லது தேசம் என்ற அடையாளமும் பயன்படுகிறது. நாட்டுக்கு எதிரான ஒரு பொது அந்நிய எதிரி இருப்பது வசதியானது. சீன பாக்கிஸ்தான் மிரட்டல்கள் மட்டுமல்லாது, நேபாளம், பங்ளாதேஷ் இலங்கை உட்பட இந்தியாவின் அண்டை நாடுகளையும் இந்தியப் பாதுகாப்பிற்கு மிரட்டலாகக் காட்டலாம். இவை எவ்வாறு வர்க்க நலன்களைப் பேண உதவுகின்றன என்பதை அறிய வேண்டுமானால், தீவிர தமிழ் இன உணர்வு தட்டியெழுப்பப்பட்டு வருகிற தமிழ் நாட்டில், ஒரு காலத்தில் வட இந்தியாவைப் பகைவராகவே கண்ட ஒரு மாநிலத்தில், இப்போது ஒரு புறம் சீன, பாக்கிஸ்தான் விரோத இந்திய தேசப்பற்றும் அதே வேளை மலையாளிகட்கும் தெலுங்கர்கட்கும் கன்னடியர்கட்கும் எதிரான உணர்வுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இவை எந்த வர்க்க நலன்களைச் சார்ந்த முன்னெடுப்புக்கள் என்பது கவனிக்க வேண்டிய விடயம். இவற்றின் நோக்கம் தமிழ்ச் சமூகத்தில் இருந்துவரும் வர்க்கச் சுரண்டலிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதே என்பதை எளிதாக நாம் காணலாம். ஏனெனில் அவை அமெரிக்காவுடனான நட்பை வரவேற்கின்றன.

3. அடையாளமும் விடுதலை அரசியலும்

ஆளும் அதிகார வர்க்கம் தனது நலன்களைக் காப்பாற்றவும்ட தனது சுரண்டும் வர்க்க, ஒடுக்குமுறை அடையாளங்களை மறைக்கவும் தனக்கு வசதியான ஒரு இன, மத, மொழி அடையாளத்தையோ அடையாளங்களின் சேர்க்கையையோ பயன்படுத்துகிற போது, ஆளப்படுகிற வர்க்கங்கள் அதை எவ்வாறு எதிர் கொள்ளுவது என்ற கேள்வி எழுகிறது.

எந்தெந்த அடிப்படையில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் செயற்படுகின்றனவோ அவை சார்ந்து சுரண்டி ஒடுக்கப்படுவோரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த இயலும். ஆனால் அது எப்போதும் இயலுவதில்லை. எளிதாக நிகழுவதுமில்லை. ஒடுக்குமுறையாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே உள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக அடையாள வேறுபாடுகளை வலியுறுத்தவும் புதிய வேறுபாடுகளைப் புகுத்தவும் அவர்கட்கு முடிகிறது. எனவே ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஒடுக்கிற சமூகம் பயன்படுத்துகிற அடையாள அரசியலுக்கு முகங்கொடுக்கக் கூடிய ஒரு அடையாள அரசியல் தந்திரோபாயத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

கொலனிய எதிர்ப்புப் போராட்டங்களிலும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களிலும் அந்நிய ஆக்கிரமிப்புக்களுக்கு எதிரான போராட்டங்களிலும், முக்கியமாக இடதுசாரிச் சிந்தனை வழிகாட்டிய சூழல்களில், ஐக்கிய முன்னணித் தந்திரம் வேறுபட்ட அடையாளங்களை ஒரு பொது எதிரி என்கிற அடையாளத்திற்கு எதிராக முன்னிறுத்தியே வெற்றி பெற்றுள்ளது.

அடையாளங்களிடையிலான முரண்பாடுகளில் நட்பானவை எவை பகைமையானவை எவை என்பதை விளங்கிக் கொள்ளும் போதே எதிரியைத் தனிமைப்படுத்துவதும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று படுத்துவதும் இயலுமாகிறது. எனவே இந்த அடையாள அரசியல் ஒரே நேரத்தில் வேறுபட்ட அடையாளங்களை அங்கீகரிப்பதாகவும் அவற்றிடையே பொதுவான பண்புகளை வலியுறுத்துவதாகவும் அமைய வேண்டி நேரிடுகிறது.

குறுகிய நோக்குடைய அடையாளப்படுத்தல்கள் எவ்வாறு தோல்விக்கும் அழிவுக்கும் இட்டுச் சென்றுள்ள என்பதற்குச் சமகால அரசியலில் நம்மை அண்டிய சூழல்களில் இரண்டு உதாரணங்களை நோக்கலாம். ஒன்று ஈழத்தின் தமிழ்த் தேசியவாத அரசியல். அது, முதலில் தமிழர் என்ற தெளிவீனமான அடையாளத்துடன் யாழ்ப்பாணக் குடாநாட்டு மேட்டுக்குடி நலன்களை முன்வைத்தது. பின்பு தமிழ்ப்பேசும் மக்கள் என்ற அடையாளம் முன்வைக்கப்பட்டது. பின்பு தமிழீழம், தமிழ்த் தேசம் என்கிற அடையாளங்கள் முனைப்புப் பெற்றன. ஆனாலும் எந்த நிலையிலும் அதன் செயற்பாடு வட, கீழ் மாகாணத் தமிழர் என்ற எல்லையைத் தாண்டியதில்லை. அதே வேளை, முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தனித்துவத்தையோ தேசிய இனங்களாக அவற்றின் விருத்தியையோ அது ஏற்கவில்லை. இன்று பிரதேசவாதத்திற்கு முகங் கொடுக்க இயலாமல் அது திணறுகிறது. ஒரு பொதுவான அடிப்படையைக் கட்டியெழுப்பச் சமூக அடையாளங்களை மூடி மறைப்பதும் அக முரண்பாடுகளை மறுப்பதும் தேவையற்றது. அது மட்டுமல்லாது அது கேடானதாகவும்; அமையலாம். என்பதற்குத் தமிழ்த் தேசியவாதத்தின் இன்றைய அவலம் ஒரு நல்ல உதாரணம்.

இரண்டாவதாக, தலித்தியம் என்ற பேரில் முன்னெடுக்கப்பட்ட அரசியல், சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டத் தவறிவிட்டது. அது மட்டுமல்லாது, அது, ஒடுக்கப்பட்ட மக்களின் நடுவே சாதி அடிப்படையிலான தனித்தனிக் கட்சிகளை உருவாக்க உதவியதேயொழியச் சாதி ஒடுக்குமுறைக்கெதிரான பொதுவான போராட்ட அணியை உருவாக்கத் தவறிவிட்டது. அது மட்டுமன்றி, இன்றைய தலித்திய அரசியல், தலித்துக்களினிடையிலிருந்து உருவான ஒரு புதிய மேட்டுக்குடிகளின் உயர்வர்க்க நலன்களைப் பேணத் தலித்துக்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்துகிற ஒரு போக்கையும் கொண்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் அரசியல், இந்துத்துவ மேட்டுக்குடிகளுடான வர்க்க சமரசத்திற்கும் வழி செய்துள்ளதைக் கடந்த பத்தாண்டுகளிற் காண முடிந்தது. தொடரான பல போராட்டங்களின் மூலம் தலித்துக்களின் சமூக உணர்வு நிலை வளர்த்திருந்தாலும் சாதிய வர்க்கக் சுரண்டற் சமூக அமைப்பைத் தகர்க்கிற நோக்கில் அதை நெறிப்படுத்த இயலாத விதமாகவே தலித்தியச் சிந்தனை பயன்பட்டுள்ளது.

இங்கெல்லாம் பொதுமைப்பட்ட ஒரு அடையாளத்தால் அப் பொதுமையைப் பேண இயலாமல் மறிப்பது என்ன என்ற கேள்வி எழுகிறது. வர்க்க அடையாளம் என்பது திட்டமிட்N;ட புறக்கணிக்கப்பட்டு வந்ததை நாம் கவனித்தல் அதற்கான விடை கிடைக்கும். வர்க்க அடையாளம் வெறுமனே புறக்கணிக்கப்படவில்லை. அதை வலியுறுத்துவது தலித் அடையாளத்தை மறுப்பதாகும் என்றும் தலித் ஒற்றுமையைக் குலைக்கும் என்றும் பின்னவீனத்துவத்தின் துணையோடு தமிழகத்தின் தலித்தியவாதிகள் வற்புறுத்தியதை நாம் அறிவோம்.

தமிழ்த்தேசிய அரசியலோ தலித்திய அரசியலோ தமது அடையாளப்படுத்தல்கட்குப் புறம்பான அடையாளங்களையும் பொதுமைப்பட்ட அடையாளப்படுத்தல்களையும் மறுத்ததன் மூலம், தம்மைப் பலவீனப்படுத்திக் கொண்டனரே ஒழியப் பலப்படுத்திக் கொள்ளவில்லை.

மறுபுறம் வரட்டுத்தனமான முறையில் வர்க்க அடையாளத்தை முதன்மைப்படுத்திப் பிற அடையாங்களின் முக்கியத்துவத்தை மறுக்கிற போக்கு உள்ளது. சந்தர்ப்பவாத இடதுசாரிகளை நான் இங்கு கருதவில்லை. மாக்சியத் தூய்மை என்ற ஒன்றின் பேரில் வர்க்க முரண்பாடு தவிர்ந்த பிறவற்றின் முக்கியத்துவத்தை ஏற்க மறுக்கிற போக்குக்களையே இங்கு கருத்திற் கொள்கிறேன். இவ்வாறான அணுகுமுறை தொழிலாளி வர்க்கத்தைக்கூட ஒற்றுமைப்படுத்த இயலாததாகவே உள்ளது. எனவே தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் சுரண்டப்படுகிற பிற வர்க்கங்களை அணி திரட்டுவது என்பது வெறுங் கற்பனையாகவே அமையும்.

வர்க்க அடையாளம், வர்க்க சமுதாயத்தில் அடிப்படையானது. சமுதாய விருத்திப் போக்கில் வர்க்கங்களின் தன்மையும் அமைப்பும் மாறியே வந்தாலும், உழைப்போர் உழைப்பை உறுஞ்சுவோர் என்ற பிளவு மேலும் ஆழப்பட்டு வந்துள்ளதே ஒழிய இல்லாதொழியவில்லை. எனவே அந்த முரண்பாட்டைப் புறக்கணித்து எந்தவிதமான சமூக அநீதியையும் போரிட்டு வெல்ல இயலாது.

ஆனாற், குறிப்பிட்ட சூழல்களில் இனம், மொழி, மதம் போன்ற முரண்பாடுகள் மேலோங்கலாம். சாதி, பிரதேச அடிப்படையிலான முரண்பாடுகள் அவசரமான நடவடிக்கைகளை வேண்டி நிற்கலாம். பால் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகட்கு எதிரான செயற்பாடு முக்கியமானதாகலாம். இவற்றுள் எந்தவொரு முரண்பாடும் பிறவற்றைவிடச் சமூக முக்கியமுடையதாகவும் அதனைக் கையாளாமல் பிற முரண்பாடுகளைக் கையாள இயலாதபடியும் அமையுமானால் அந்த முரண்பாட்டைப் பிரதான முரண்பாடாகவோ உடனடியான முரண்பாடாகவோ கொண்டு செயற்பட வேண்டிய தேவை ஏற்படுகிறது.

வர்க்க முரண்பாட்டை அடிப்படையானதாகக் கொண்ட மாக்சிய லெனினியர்கள் உலகெங்கிலும் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் நிறவாத எதிர்ப்புப் போராட்டங்களையும் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டங்களையும் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். அல்லது அவற்றுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். பாலடிப்படையிலான ஆதிக்கத்திற்கெதிராக மார்க்சியர்களது குரல் எப்போதுமே வலுவானதாக இருந்து வந்துள்ளது.

இது எவ்வாறு இயலுமாகிறது? தேசியவாதிகளோ, தலித்தியவாதிகளோ, முதலாளியப் பெண்ணியவாதிகளோ ஏன் தம்முடைய குறிப்பான ஒடுக்குமுறை தவிர்ந்த பிற ஒடுக்குமுறைகளைக் கண்டுகொள்ள மறுக்கிறாரகள்? ஏன் சிலவற்றை ஏற்கிறார்கள்? இங்கே தான் அடையாளஞ் சார்ந்த உலக நோக்கின் முக்கியத்துவம் புலனாகிறது. பின்னவீனத்துவத்தின் பேரால் பொதுமைப்படுத்தல் ஏன் மறுக்கப்படுகிறது என்பது புலனாகிறது.

தனியே ஒரு அடையாளஞ் சார்ந்தே சமூக முரண்பாடுகளைப் பார்ப்பது அந்த அடையாளத்திற்கு உட்பட்ட அனைவரதும் நலன் சார்ந்ததல்ல என்பதையே இன, மத, சாதி அடையாளங்களின் அரசியலும் முதலாளியப் பெண்ணிய அரசியலும் உணர்த்தியுள்ளன. அடையாளங்களைத் தனித்தனியாகவோ சேர்த்தோ வலியுறுத்துகிற சக்திகள் அந்த அடையாளங்கட்கும் அப்பாலான வேறு அடையாளம் ஒன்றை மனதிற் கொண்டே அவ்வாறு வலியுறுத்தக் கூடும் என்பதை நாம் மறக்காலாது. அதாவது, ஈற்றில் வர்க்க நலன்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன என்பது தான் உண்மை. அவ் வர்க்க நலன்கள் பெருமளவும் ஒடுக்கும் வர்க்கம் ஒன்றினது நலன்களாக இருந்து வந்துள்ளதையும் நாம் காணுகிறோம்.

தொழிலாளி வர்க்க அரசியல் தனியே தொழிலாளர் நலனை மட்டும் முதன்மைப்படுத்தி பிற சமூக ஒடுக்குமுறைகளைப் புறக்கணிக்கும் என்றால் அது தொழிற்சங்கவாத அரசியல் போற் சீரழிய நேரும். மாக்சியம் தொழிலாள வர்க்கத்தை முக்கியப்படுத்தியது, அதனால் மட்டுமே முழுச் சமூகத்தையும் விடுவிக்க இயலும் என்ற அடிப்படையிலேயாகும். எனவே தான், மாக்சியம் தனது விருத்திப் போக்கில் கொலனிய விரோத, ஏகாதிபத்திய விரோதப் போராட்டங்களை ஆதரித்தது. மாக்சியர்கள் அவற்றில் பங்கு பற்றியுள்ளனர். தலைமை தாங்கிப் போராடியும் உள்ளனர். இடதுசாரிச் செல்வாக்குள்ள தேசிய விடுதலைப் போராட்டங்கள் பிற சமூக ஒடுக்குமுறைகளைக் களைவதற்கான வழிகளையும் வகுத்துள்ளன.

அடையாள அரசியல் என்பது தெளிவான அரசியல் அடிப்படையில் அமையாத போது தோல்விக்கும் ஆதிக்க வர்க்கங்களை வலுப்படுத்துவதற்கும் துணை போகிறதை நாம் காண்கிறோம். மாறாக அதன் அரசியலின் அடிப்படை தெளிவாக உள்ளபோது அது குறிப்பிட்ட அடையாளங்கட்கும் அப்பாற சமூக விடுதலைக்கும் சமூக நீதிக்கும் பங்களிக்கிறது.

அடையாள அரசியல் ஒரு குறிப்பிட்ட சமூக அடையாள நலன்கட்குத் தன்னை வரையறுக்கும் போது தன்னைத் தனிமைப்படுத்துகிறது. அந்த அடையாளத்துக்குரியோர் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உட்படுவதற்கான அடிப்படை முரண்பாடுகளை அது ஆராயும் போது, அதன் அணுகுமுறை வேறுபட்டதாக அமைகிறது. அதன் போராட்டம் நீதிக்கான பிற போராட்டங்களுடன் இணைகிறது.

மாக்சிய லெனினியத்தின் சிறப்பு என்னவென்றால், அடையாள அரசியலை அதன் அடையாளச் சிறையினின்று விடுவித்து நீதிக்கான பிற போராட்டங்களுடன் அதை இணைக்க வழிகாட்டும் ஆற்றலை மாக்சிய லெனினியமே வரலாற்றிற் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளமையாகும்.

Exit mobile version