உள்ளூராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னொரு புறம் யாழ். மாநகரசபை முதல்வருக்கான தெரிவும் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், யாழ். மாநகர சபையின் முதல்வராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரே தெரிவுசெய்யப்படவேண்டும்.அதனை அவர்கள் மற்றயகட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.
யாழ். மாநகரசபை முதல்வர் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி, முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி உட்பட பல கட்சிகள் போட்டியிடவுள்ளன.
ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளிருந்து, ஆறுபேர் மாநகர முதல்வர் கதிரைக்குப் போட்டியிடுகின்றனர்.
இவர்களுள், யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரப் பிள்ளையும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிட மறுத்தாலும், இறுதியில் சம்மதித்துள்ளார்.
அடுத்ததாக, ராஜதேவன், இவர் முன்னாள் மாநகரசபை முதல்வர். வெளிநாட்டில் வசிக்கும் இவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளார்.
அத்துடன், வடமாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரனும் மாநகரசபையின் முதல்வராக வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், ஜெயசேகரனை நியமிப்பதற்கு தமிழரசுக் கட்சியில் சிலர் விரும்பவில்லை.
அடுத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் மற்றும் ஆர்னோல்ட் ஆகிய இருவரில் சொலமன் சிறில் அரசியலில் பிரகாசிக்காதவராகையால், அவர் அனைவராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆர்னோல்டால் அதிக வாக்கினைப் பெறமுடியும். ஆர்னோல்ட் அதிக வாக்குகளைப் பெற்றாலும், அவர் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப் பணி புரிகின்றார். இதனால் இவரை முதல்வராக நியமிப்பதற்கு கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இறுதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் மச்சானான வித்தியாதரனை நியமிப்பதற்கு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு சரவணபவன் கடுமை எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரைச் சமாதானப்படுத்தி வித்தியாதரனை அடுத்த மாநகர முதல்வராக நியமிப்பதற்கு இரா.சம்பந்தன் முயற்சி எடுத்துள்ளார்.
இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் வித்தியாதரன் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.