கேள்வி: தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு புகலிடத்தில் புதிது புதிதாக அமைப்புக்கள் தொடங்கப்படுகின்றன.இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
-தவராசா
தொடங்கப்படும் ஒவ்வொரு அமைப்புக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேண்டி ; அமைக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை. தனிநபர்களின் அடையாள விருப்புக்களின் தனிப்பட்ட நலன்சார்ந்த தேவைகளின் அடிப்படையிலேயே தனிநபர்களினால், அவர்களின் நலன் சார்ந்து இயங்கும் சில நபர்களையும் கூட்டிணைத்து இவை தொடங்கப்படுகின்றன. அதற்கு அப்பால் இதனுடைய பெறுமதிகள் எதுவமில்லை.
உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட எமது மக்களின் விடுதலைவேண்டி அமைக்கபடும் ஒரு அமைப்பு, ஐனநாயக வடிவங்களை கொண்டதாக இருக்கவேண்டும். இதற்கு முதலில் கடந்த காலங்களில் விடுதலை இயக்கங்களின் தோல்விக்கு பின்னடைவுக்கு காரணமான அமைப்பு வடிவங்கள் பற்றிய மறுபரீசிலனை அவசியம். அத்தோடு விடுதலைக் கோட்பாடுகளை வெறும் சூத்திரங்களாக சொல்லிக் கொண்டு, நிஐவாழ்வில் போலிகளாக வாழ்ந்தவர்கள் இன்றும் அதன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டு ,அமைப்புக் கட்டுபவர்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்படவேண்டும்.
இல்லாவிடின் மக்கள் தொடர்ச்சியாக இவர்களால் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். மக்களின் வாழ்வில் தொடர்ச்சியாய் இவர்கள் தங்கள் பிழைப்புவாதத்தை தொடர்வார்கள்.
ஒரு அமைப்பு ஐனநாயக வடிவத்தோடும், மார்க்ஸ்சிய சிந்தனையோடும், சமூகஒடுக்குமுறைகளுக்கு எதிராக, சுரண்டல் முறைகளுக்கு எதிராக போராட முனையும்போதே மக்கள் நலன் சார்ந்த அமைப்பாக என்னால் கருதமுடியும். அதற்கு அமைப்புக்களை உருவாக்க முனைபவர்கள் மார்க்ஸியத்தின் இயங்கியலை புரிவதோடு வாழ்வில் நேர்மைகொண்டவர்களாக இருக்கவேண்டும்.
கேள்வி: யாழ்ப்பாண மேலாதிக்கத்திற்கு எதிராக மட்டக்களப்பில் யாழ் அகற்றிச் சங்கம் தொடங்கிய வரலாறு உண்மையா?
–குமரன்.
1960களில் மட்டக்களப்பில் வந்து வர்த்தக முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண வர்த்தகர்களில் பெரும்பாண்மையோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் சிறுவியாபாரிகளாக கிராமங்கள் தோறும் வியாபாரத்தை தொடங்கினார்கள்.இது அதுவரை காலமும் மட்டக்களப்பு மக்களை சுரண்டிக் கொண்டிருந்த யாழ்ப்பாணப் ‘’பெருமுதலாளிகளுக்கு’’ பலத்த தொந்தரவாக இருந்தது.
எனவே இவர்களை அகற்றுவதற்காக இப் பெரும் முதலாளிகள் தமக்கிருந்த அரசியல் உறவுகளையும் இணைத்துக்கொண்டு, ‘யாழ் அகற்றிச் சங்கத்தை’ தொடங்கினார்கள். யாழ்ப்பாண-மட்டக்களப்பு பிரதேச முரண்பாடுகள் இவ்வாறுதான் இவர்களால் ஊக்குவிக்கப்பட்டு பெருப்பிக்கப்ட்டன. இதில் பலர் தங்கள் பிழைப்புக்காக தொடர்ச்சியாக வழிமொழிந்தனர். இன்றும்கூட மிகத் தீவிரமாக பிரதேசவாதம் பேசும் நபர்களின் “பூர்வீகத்தையும்,” அவர்களின் வர்க்கப் பின்னணியையும் ஆராய்ந்தால் இதன் உண்மை விளங்கும்.
எனினும் இதற்கு அப்பால், அரசியல் சமூக பொருளாதார தளங்களில் மட்டக்களப்பிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் பாரிய முரண்பாடுகள் இருந்தன. இந்த முரண்பாடுகளும், புறக்கணிப்புக்களும் அரசியல் -சமூக ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவை.
கேள்வி: புகலிடத்தில் தலித்தியம் கதைப்பவர்கள் இலங்கை பேரினவாத அரசின் கைக்கூலிகளாக இருக்கிறார்களே உங்கள் அபிப்பிராயம் என்ன?
-சிவா – டென்மார்க்
நண்பரே அனைவரையும் இவ்வாறு கூறுவது சரியல்ல. பல நண்பர்கள் இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுப்பவர்களாக, செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் ஒடுக்கப்பட்ட எமது தலித் மக்களின் சமூக விடுதலையில் அக்கறைகொண்டு எம் மக்களின் கல்வி பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். நீங்கள் தலித் முன்னணியைச்சேர்ந்த நபர்களை வைத்துக்கொண்டு பொது முடிவுக்கு வரக்கூடாது. தலித் முன்னணி நபர்களின் பிழைப்புவாதமும் இலங்கை அரசை அண்டிப் பிழைக்கும் வியாபாரத் தனமும் நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் நண்பரே இப்போது இந்தப் பிழைப்புவாதிகள் எம்மைப் போன்றவர்களை பிள்ளையானுக்கும், இலங்கை அரசுக்கும் போட்டுக்கொடுக்கும் “ஆள்காட்டிகளாக,” இலங்கை அரசின் ‘‘ புலனாய்வுத் துறையாக ’’ மாறிவட்டார்கள். எமது தலித் மக்களை வைத்து பிழைப்பு நாடத்தும் இந்த வியாபாரிகளை நாம் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தனிநபர்களாக அடையாளப்படுத்த்த வேண்டும்.
கேள்வி: புளொட் நேசனைத் தெரியுமா?. அவர் எழுதிய புளொட் வரலாறு பற்றி உங்கள் கருத்து என்ன?.
-பவன் சுவீஸ்.
நேசனை 1983ம் ஆண்டிலிருந்து தெரியுமென நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் உமா மகேஸ்வரனுக்கு இரண்டு ‘’விசுவாச ரசிகர் மன்ற மையங்கள்’’ இருந்தன. ஒன்று சுழிபுரம் ; மற்றையது கொக்குவில். கொக்குவில் ‘விசுவாச மையத்திலிருந்து’ வந்தவர்தான் நேசன். புளொட்டில் அதிகாரத் துஷ்பிரயோகங்களைச் செய்து, மத்தியதர வர்க்க மனோபாவ சொகுசுகளை அனுபவித்தவர்கள்தான் இவர்கள். அராஜகங்கள், அடாவடித்தனங்கள், கொள்ளை, கொலை என்று உமா மகேஸ்வரன் விசுவாசத்தை மூலதனமாக வைத்து இவர்கள் செய்த அட்டூழியங்கள் அளவற்றவை. புளொட் ‘’மார்க்ஸிய இயக்கமாக’’ தன்னை சொல்லிக்கொண்டபோதிலும் இவர்கள் அரசியலின் அடிச்சுவட்டைக் கூட அறியாதவர்கள். புளொட் ஒரு ‘’வெள்ளாளர் இயக்கம்’’ என்று முத்திரை குத்தப்படுவதற்கு இவர்களின் சா
ஆனால் நேசன் இவர்களில் இருந்து மாறுபட்டவராக, ஜனநாயக பண்பு கொண்டவராக இருந்தார். சுறுசுறுப்பும், உதவும் குணமும் நேசனிடம் தாரளமாக இருந்தன. அதேவேளை அரசியல் ஆழுமை அற்றவராகவும், இருந்தார். எல்லோருக்கும் நல்லவராக இருக்கவேண்டுமென்ற தாராளவாதமும் இவரிடம் இருந்தன. இதனால் இவரை எல்லோரும் பயன்படுத்திக்கொண்டார்கள். குறிப்பாக புளொட்டில் இருந்த கண்ணாடிச் சந்திரன் என்பவரின் தன்னிச்சையான பல நடவடிக்கைகளுக்கு நேசன் பயன்படுத்தப்பட்டார். உதாரணமாக யாழ்- கொட்டடியில் படுகொலை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பொது மக்களின் கொலைக்கும் நேசன் துணைபோனார். இவ்வாறு பல அதிகார துஷ்பிரயோகங்களை பட்டியல் இட முடியும்.
நேசன் தன் காலம் பூராகவும் யாரோ சிலருடைய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுக்கொண்டே வருகின்றார். அவர் அரசியல் தலைமைத்துவ ஆளுமை கொண்டவராக மாறவேண்டும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். நேசன் மற்றவர்களுக்கு பயன்படும் செயல் புகலிடத்திலும் தொடர்கின்றது. அதன் வெளிப்பாடுதான் அவர் எழுதியதாகச் சொல்லப்படும் புளொட் வரலாறு.
இந்த வரலாற்றில் நேசன் நிறைய உண்மைகளைச் சொல்லுகின்றார். அதே நேரம் ஒரு சிலரின் வரலாற்றை மிக திட்டமிட்டு மறைத்து கொச்சைப்படுத்துகின்றார். இவ்வாறான செயலுக்கு நேசன் பொறுப்பில்லையென்றும் ; ஒரு சிலர் தங்களின் அரசியல் லாபத்திற்காக, சிலபேர்களோடு கொண்ட தனிப்பட்ட முரண்பாட்டிற்காக, அந்த நபர்கள் மீது சேறுபூசியதாகவும், நேசன் சொல்லியவற்றை திரிவுபடுத்தி எழுதியதாகவும் ஒரு செய்தி உண்டு. (சேறு பூசப்பட்டவர்களில் அடியேனும் ஒருவன்). இதனால் நேசன் எழுதிய வரலாறு நம்பகத் தன்மை அற்று, வெறும் காழ்ப்புணர்ச்சி கொண்ட வரலாறாக தோல்வி கண்டுவிட்டது. இதனால் நேசன் கூறிய உண்மையான விடயங்களும் பெறுமதியற்று நம்பகத்தன்மையற்றதாகிவிட்டது. சுயவரலாறு என்பது சுய விமர்சன பரீசீலனையோடு உண்மையோடும், நேர்மையோடும் எழுதப்படவேண்டும். அந்தத் தகுதி நேசனிடமிருந்தும் “கூடாத நட்பினால்” கைநழுவ விட்டுவிட்டார். இவ்வாறுதான் என்னால் சொல்லமுடியும்.
தொடரும்….