இலக்கிய சந்திப்பு இலங்கை அரச ஆதரவாலர்களால் கைப்பற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவது உங்களுக்கு அதிர்ச்சியை தரவில்லையா? இது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
கரன்
சமீபகால புகலிட இலக்கிய சந்திப்புக்களை அவதானம் கொள்பவர்கள் சில காட்சிகளை தங்கள் கவனத்தில் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறோம். ஒரு ஐனநாயக இருத்தலுக்கான சுதந்திர வெளியாக அமையப்பெற்றிருந்த இந்த இலக்கிய சந்திப்பு ; சமீபகாலத்தில் உள்ளீடு செய்த முன்னாள் புலிகளும், இன்னாள் அரச ஆதரவாளர்களுமான ராகவன், நிர்மலா போன்றவர்களின் அரசியல் ஆடுகளமாக எவ்வாறு உருமாறியது என்பதை மிகச் சுலபமாக புரிந்த கொள்ள முடியும்.
இவ்வாறான ஐனநாயக அமைப்புக்களை சிதைத்து, தங்கள் நலன் சார்ந்த அணிகளாக மாற்றும் இவர்களின் ‘’வித்தைகளுக்கு’’ ஒரு பாரம்பரிய வரலாறே உண்டு எனலாம் !.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இருண்ட காலம் என்றால், அவை ஆயுத இயக்கங்களின் குறிப்பாக, புலிகளின் வருகைக்கு பின்னாலான காலத்தையே நாம் குறிப்பிட முடியும். இக் காலங்களில் மக்கள் மத்தியில் காணப்பட்ட கலை- கலாச்சார- பண்பாட்டு இயக்கங்கள், தொழில் சங்கங்கள், சிவில் உரிமை அமைப்புக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு அவர்களின் ஐனநாயக செயல்பாடுகள் ஒடுக்கப்பட்டு அனைத்தும் புலிகள் இயக்கத்தின் துணை அமைப்புக்களாக வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டன. சுதந்திரமான தனித்துவமான சிந்தனை மரபுகள் சிதைக்கப்பட்டு, இவற்றை பேணிய பேசிய மனிதர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளையும் புலிகள் விட்டுவைக்கவில்லை. புலிகளின் கருத்தியல் பிரச்சார அணிகளாக இவை ஆக்கப்பட்டன.
புலிகளின் இந்த அராஐக போக்கை எதிர்த்த, நிராகரித்த ஒருசில அமைப்புக்களை ; புலிகள் தங்கள் அரசியல் கருத்தியல் நலன் சார்ந்த நபர்களை உள்ளீட வைத்து, அவ் அமைப்புக்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி ; தங்களுக்கு சாதகமான அணிசேர்க்கை ஒன்றை உருவாக்குவதன் மூலம் தங்கள் மேலான்மை அதிகார வட்டத்திற்குள் கொண்டுவந்தனர். இவ் விடயத்தில் புலி சார்ந்த நபர்களின் உள்ளீட்டு நடவடிக்கைகள் பல பல தந்திரோபாய – துரோக நடவடிக்கைகளை கொண்டிருந்தன. இவ் அமைப்புக்களில் இருந்த நபர்கள் பண பலத்தாலும், அவர்களின் பலவீனங்கள் கண்டறிந்து, அவற்றிற்கு தீனி போடுவதன் மூலமும் இவ் அமைப்பு உறுப்பினர்கள் வாங்கப்பட்டு ; அமைப்புக்கள் சீர்குலைக்கப்பட்டு, புலிகளின் உப கிளைகளாக ஆக்கப்பட்டன. வடகிழக்கு பகுதிகளில் இருந்த சுதந்திரமான அனைத்து அமைப்புக்களுக்கும் இவ்வாறுதான் புலிகளால் சாவு மணி அடிக்கப்பட்டது.
அதனது தொடர்ச்சியான வரலாற்றை புலம்பெயர் சூழலிலும் நாம் அனுபவித்தோம். 1980களில் பிற்பாடு, புலிகளினாலும் ஏனைய ஆயுத அமைப்புக்களினாலும் இலங்கை பேரினவாத அரசினாலும் துரத்தி அடிக்கப்பட்டு புலம்பெயர்ந்து இங்கு வந்தவர்கள் உருவாக்கிய பல்வேறு கலை- இலக்கிய அரசியல் தளங்கள் ; புலிகளின் நயவஞ்சக ஊடுருவலினால் தங்கள் அமைப்புக்களாக ஆக்கப்பட்டது என்பதை நாம் கண்டே வந்துள்ளோம்.
இதிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரே அமைப்பு புகலிட இலக்கிய சந்திப்பென்றே கூறவேண்டும். இன்று அதற்கும் முன்னாள் புலிகளால் சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது. அன்று புலிகளால் முடியாமல் போன காரியத்தை இந்த முன்னாள் புலிகள், இன்னாள் ‘’இலங்கை அரச விசுவாசத்திற்காக’’ இலக்கிய சந்திப்பை காவு கொடுத்துள்ளனர். இவர்கள் எப்பொழுதும் தங்களுடைய இருத்தலுக்காக, அரசியல் நலன்களுக்காக எந்த துரோகத் தனங்களையும் செய்யக்கூடிய நபர்களாகவே புலிகளின் பாசறையில் இருந்து பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். புலிகளின் காலத்தில் புலிகளுக்கு எத்தனை விசுவாச நபர்காளாக இருந்தார்களோ ; அதே விசுவாசப் பண்புகளை இன்றைய இலங்கை பேரினவாத அரசுக்கு காட்டும் போக்கை இவ் புகலிட இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்வதன் மூலம் மீண்டும் எமக்கு காட்டியுள்ளனர்.
சுந்தரம் (சிவ சண்முகமூர்த்தி) புலிகளால் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார். ? இக் கொலையில் ஈடுபட்டது பிரபாகரனா? இக் கொலையை நியாயப்படுத்தி அறிக்கைவிட்டதில் சில புத்திசீவிகளுக்கும் பங்கு இருந்ததாக ஒரு கதை உண்டு உண்மையா?
SHAN
சுந்தரம் கொலை செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் பிரபாகரனுக்கு இருந்தன. புலிகளின் ஆரம்பகாலத்தில் புலிகள் அமைப்பு சுத்த இராணவ கண்ணோட்டத்தோடும், தனிநபர் கொலைக் கலாச்சாரத்தோடுமே உருவாகியிருந்தது. இதனுடைய அனைத்து அதிகாரங்களையும் கொண்ட நபராக பிரபாகரனே இருந்தார். புலிகள் அமைப்பு கொலை, கொள்ளை வெறும் சுத்த இராணுவ கண்ணோட்டத்திற்கு அப்பால், அரசியல் சார்ந்த ஒரு அமைப்பாக உருவாகவேண்டுமென சுந்தரம் போன்றவர்கள் தீவரமாக இருந்தார்கள். அத்தோடு பிரபாகரனின் தன்னிச்சையான அரசியல் அற்ற இராணுவ செயல்பாடுகளை சுந்தரம் அக்காலத்தில் கடுமையாக விமர்சித்துவந்ததோடு பிரபாகரனை புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றுவதன் மூலமே புலிகள் அமைப்பை சரியான அரசியல் திசைவழி நோக்கி நகர்த்த முடியுமென்பதிலும் மிகவும் உறுதியுடையவராக இருந்துள்ளார்.
அதன்பின் புலிகளிலிருந்து சுந்தரத்தின் வெளியேற்றமும் – காலப்போக்கில் புளொட் அமைப்பின் தோற்றமும், ‘’புதிய பாதை’’ பத்திரிகை தொடங்கப்படுதலும் நிகழ்கின்றது.
புதிய பாதையில் தமிழர் விடுதலைக்கூட்டணியினதும், அமிர்தலிங்கத்தினதும் சந்தர்ப்பவாத கருத்துக்களும், அரசியலும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்பட்டு விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்தது. இக் காலத்தில் பிரபாகரன் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் , அமிர்தலிங்கத்தினதும் ‘’அடியாளாகவே’’ இருந்தார். எனவே சுந்தரத்தை இல்லாதொழிப்பதன் அவசியம் பிரபாகரனுக்கும், தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த சில “மனிதர்களுக்கும்” இருந்தது. இதன் வெளிப்பாடே சுந்தரத்தின் படுகொலையாகும்.
இக் கொலையை நியாயப்படுத்தி யாழ்பாணத்தில் துண்டுப்பிரசுரம் ஒன்று அக் காலத்தில் வெளியிடப்பட்டதாக நான் அறிந்துள்ளேன். சமீபத்தில் இப் பிரசுரம் பற்றி ‘காலச்சுவடு’ சஞ்சிகையில் என்.எல்.எப்.ரி யைச் சேர்ந்தவரும், தோழர் விசுவானந்ததேவனின் நண்பருமான ரவி அருணாசலம் என்பவர் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். நண்பரே அதனை நீங்கள் வாசிப்பதன் ஊடாக உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள முடியுமென நினைக்கின்றேன்.
அக் குறிப்பு…
ஆனால் அது நடந்து ஒரு கிழமைக்குள்ளாகவே ஒரு சிலரிடம் அது அடங்கிப்போயிருந்தது. அந்த ஒரு சிலர் தங்கள் நலன் கருதித் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்திருந்த தமிழ் புத்திஜீவிகள். அவர்களில் ஒருவரான நிர்மலா (அப்போது நிர்மலா நித்தியானந்தன்) ‘இந்தக் கொலை செய்யப்பட வேண்டியதுதான். ஆனால் அச்சகத்தில் வைத்து அதைச் செய்திருக்கக் கூடாது’ என்று எனக்கும் தோழர் விசுவிற்கும் சொன்னார். இன்னுமொரு தமிழ் புத்திஜீவி ‘துரோகத்தின் பரிசு’ என்று தலைப்பிட்டு அப்படு கொலையை நியாயப்படுத்தி விடுதலைப்புலிகளின் பெயரில் துண்டுப்பிரசுரம் எழுதிக் கொடுத்தார். ஆனால் அதே புத்திஜீவிகள்தாம் ஜனநாயகத்தின் பெயரிலும் கருத்துச் சுதந்திரத்தின் பெயரிலும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தபடி சிங்கள பௌத்த பேரினவாத அரசைக் கட்டித் தழுவிக் கபட நாடகம் ஆடுகின்றார்கள்.
‘அச்சகத்தில் வைத்துச் செய்திருக்கக் கூடாது’ என்று நிர்மலா சொன்னதன் காரணம் அதே சித்திரா அச்சகத்தில் நிர்மலாவின் நண்பரான நுஃமான் சேர் மொழிபெயர்த்த பலஸ்தீனக் கவிதைகள் நூல் அச்சிடப் பட்டுக்கொண்டிருந்தமையே. தமிழ் மக்களின் அரசியலிலும் பார்க்க நுஃமான் சேரின் நட்பு முக்கியப்பட்டிருக்கிறது நிர்மலாவிற்கு. ‘இவர்களும் மனிதர்களே’ என்ற வாக்கியத்துடன் இதைக் கடந்து அப்பால் போவோம்…..
http://www.kalachuvadu.com/issue-155/page72.asp
(மேற்கண்ட ரவி அருணாசலத்தின் இக் குறிப்பில் சிறு தவறு இருப்பதாக நினைக்கின்றேன். சுந்தரம் சித்திரா அச்சகத்திற்கு சென்றமைக்கான காரணம் ; அங்கு தமிழ்ஈழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (PLOT) புதுவருட வாழ்த்து மடல் அச்சிடப்பட்டுக்கொண்டிருந்தது. அதனைப் பார்வையிடவே அங்கு சென்றிருந்தார்.)
சமீபகாலமாக பேஸ்புக்கில் சக்கடத்தார் கந்தவனம் என்ற புனைபெயரில் ஒழிந்துகொண்டு இனியொரு , சபாநாவலன், ஸ்ரீரங்கன், உங்கள் மீதும் மற்றும் பலர் மீதும் ஒருவர் அவதூறுகளை பரப்பி வருகிறாரே. இப் பெயருக்குள் ஒழிந்திருப்பவரை உங்களுக்கு தெரியுமா? இச் செயலை எப்படிப் பார்கிறீர்கள்?.
உதயன்
நண்பரே நீங்கள் மேலே குறிப்பிடும் ‘’சக்கடத்தார் கந்தவனம்’’ என்னும் மாபியா முகமூடியும் இப்படிப்பட்டவரே. இவ் முகமூடிக்குள் ஒழிந்திருக்கும் அநாமியை நாம் அறிந்தே உள்ளோம். மிக மோசமான அரசியல் கலாச்சாரத்தையும், பண்பையையும், நடத்தைகளையும் கொண்ட நோர்வேயில் வசிக்கும் ‘’நியூட்டன்’’ என்பவரே அந்த நபராவார். இவரும், இவரோடு சேர்ந்த ஒரு கும்பலும் முகப்புத்தகத்தினுள் முகமூடிகளோடு நுழைந்து ‘’முன்னிலை சோசலிச கட்சி’’ என்னும் அமைப்புத் தொடர்பாக ஆரோக்கியமான விமர்சனங்களை, கருத்துக்களை, எதிர் வினைகளை முன்வைப்பவர்கள் மீது மிக கீழ்மையான காழ்ப்புணர்ச்சிகளை, புனைவுகளை கட்டமைத்து பிரச்சாரப்படுத்துவதை முழுநேரத் தொழிலாக செய்துவருகின்றனர். இந்தப் புனைபெயர் முகமூடிகளின் பின்னால் சூத்திரதாரியாக செயல்படுபவர் ‘’இரயாகரன்’’ என்பதனையும் நாம் அறிந்தே உள்ளோம். இவர்களுக்கு அனுசரனையாக முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர் என சொல்லிக் கொள்ளும் ‘’பழ.றிச்சட்’’ என்ற நபரும் செயல்படுகின்றார்.
இத்தகைய ‘’மாபியா முகமூடிக் கலாச்சாரம்’’ முகப்புத்தகத்தினுள் ஆரோக்கியமான உரையாடல்களை செய்யமுடியாமல் தடுத்துவிடுகின்றது. வன்முறை என்பது உடல்சார்ந்த நிகழ்வாக ஒருபுறம் இருக்கும்போது, இந்தக் கும்பலின் வன்முறை இவற்றிற்கு அப்பால் கருத்தியல் தளத்தில் நிகழ்த்தப்படும் வன்முறை என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாகின்றது.