Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 08

அசோக் யோகன், சென்றவருடமென நினைக்கிறேன், கீற்று இணைய தளத்தில் நீங்கள்எ ழுதிய கட்டுரை ஒன்றில் ஜெர்மனியில் இயங்கும் I.N.S. D என்ற தன்னார்வ அமைப்பு பற்றி தோழர் S.V R.யாரிடம் நீங்கள் எழுப்பிய கேள்விகளை ஜெயமோகன் தனது இந்துத்துவ வலசாரி அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதை அவதானித்திருப்பீர்கள். ஜெயமோகனின் அரசியலுக்கு உங்கள் கட்டுரை பயன்பட்டதைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீ ர்கள்.
சங்கரன்

நண்பரே , ஜெர்மனியை தளமாகக் கொண்டு இயங்கும் எவாஞ்சலிகா அகாதமியா மற்றும் ஐ என் எஸ் டி தன்னார்வ அமைப்பு தொடர்பாக எஸ்.வி. ராஜதுரையிடம் நான் எழுப்பிய கேள்விகளை ஜெயமோகன் தனது வலதுசாரி அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திருப்பதை நானும் அவதானித்தேன். ஜெயமோகனின் இந்த அரசியல் சதிகளுக்கு எனது கட்டுரை பயன்படுத்தப்பட்டது அறிந்து நானும் அதிர்ச்சியும் வேதனையும் கொண்டேன்.

எஸ்.வி.ராஜதுரையும், இன்று ஐ. என் .எஸ் டியில் செயல்படுபவர்களும் ஒரு காலகட்டத்தில் என்னோடு நட்பு கொணடிருந்தவர்கள். அவர்களின் இன்றைய தவறான அரசியல் செயல்பாடுகளும், தன்னார்வ நிறுவன உறவுகளும் இலங்கைச் சூழலில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டிருந்தமையால் நான் அவர்கள் மீது மேற்கொண்ட அரசியல் விமர்சனமே அக் குறிப்புக்களாகும். அவற்றை ஜெயமோகன் தன் அரசியலுக்கு பயன்படுத்தியது ஆரோக்கியமானதல்ல.
ஜெயமோகனின் இந்த செயல்பாடு நேர்மை அற்ற – அரசியல் கயமைத்தனம் கொண்டதாகவும் எஸ்.வி.ராஜதுரையின் ஆளுமையை சிதைக்கும் தீயநோக்கம் கொணடதாகவும் அமையப்பெற்றுள்ளது என்பதே எனது அரசியல் பார்வையாகும்.

ஜெயமோகன் இந்திய ஒற்றுமை , இறையாண்மை ,தேசபக்தி என்று பேசுகிற ஆர் எஸ் எஸ். இந்துத்துவ சாயல்கொண்டவர் என்பதுவே எனது புரிதலாகும். இந்த அடிப்படைகளில் இருந்து இடதுசாரிகளை குறிப்பாக எஸ்.வி.ராஜதுரை அவர்களை இந்திய தேசவிரோதிகளாக்கும் ஜெயமோகனின் அரசியல் திட்டத்தின் பகுதியே அவரது குற்றச்சாட்டு அரசியலின் உள்ளடக்கம்.

ஐ. என் .எஸ். டி செயற்பாட்டாளர்களுடனான எஸ்.வி.ராஜதுரையின் உறவு அரசியல் உடன்பாட்டின் அடிப்படையிலானது அல்ல, மாறாக வெறும் நட்பு என்பதன் அடிப்படையிலானது என்றுதான் இன்று நான் நம்புகின்றேன். ஐ என் எஸ் டி யில் செயல்படும் சிலருடனான தனிப்பட்ட நட்பின் அடிப்படையிலேயே அவர் திருவனந்தபுரம் மாநாட்டில் கலந்து கொண்டார் எனவும் நினைக்கின்றேன். ஐ.என்.எஸ்.டி யுடன் அவர் நேரடி உறவு கொண்டிருந்தார் என்றோ அதன் நிதியைப் பகிர்ந்து கொண்டார் என்றோ நான் நம்பவில்லை. அ.மார்க்ஸ் அறிந்திருந்த அளவு ஐ .என் .எஸ் .டி யினரின் அரசியலையும், நிதி ஆதாரங்களையும் அறிந்திருக்கின்ற வாய்ப்பு எஸ்.வி. ராஜதுரைக்கு இல்லாமலும் இருந்திருக்கும் எனவும் நான் கருதுகின்றேன்.

ஜெயமோகன் “சித்தரிக்கின்ற” போன்று எனது கட்டுரையில் நான் முன்வைத்திருந்த கேள்விகள் எஸ்.வி.ராஜதுரைக்கு மட்டுமேயானது அல்ல , அக் கேள்விகளை நான் திருவனந்தபுரம் மாநாட்டில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களான தமிழ்ச்செல்வன் , ஆதவன் தீட்சண்யா போன்றோரை நோக்கியும் முன்வைத்திருந்தேன். இதற்கான எனது காரணம் திருவனந்தபுரம் மாநாடு மகிந்த அரசின் ஆதரவு நிலைபாட்டைக் கொண்டிருந்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது எனும் அவதானமே.

எஸ்.வி.ராஜதுரை ஈழவிடுதலையை ஆதரித்தவர் எனும் அளவில் திருவனந்தபுரம் மாநாட்டில் கலந்து கொண்டது ஒரு அரசியல் பிறழ்வு . இதனை எஸ்.வி. ராஜதுரைக்கு நான் சுட்டிக்காட்ட விரும்பியதே எனது ஐ.என்.எஸ்.டி தொடர்பான கட்டுரையின் நோக்கமாகும். மற்றபடி ஜெயமோகனைப் போல் எஸ்.வி.ராஜதுரையை அரசியல் ரீதியில் ஒழித்துக்கட்டுவதற்காக, அவரின் ஆளுமைச் சிதைவு நோக்கிய குற்றச்சாட்டு அல்ல எனது விமர்சனம்.

இலங்கைப் பிரச்சினையில் ஐ.என்.எஸ்.டி தொடர்பான எனது கட்டுரையை இந்தியச் சூழலில் எஸ்.வி.ராஜதுரைக்கு எதிராகப் பாவிப்பதற்கான ஜெயமோகனின் தார்மீகத்தையும் நான் கேள்விக்குட்படுத்த விரும்புகின்றேன்.

இலங்கையில் பாலியல் வல்லுறவு நிகழ்த்திய இந்திய ராணுவத்துக்கு ஆதரவாகப் பேசியவர் ஜெயமோகன். (மகிந்த ராஜபக்சே அரசின் தீவிர ஆதரவாளரும், இனப்படுகொலையை நியாயப்படுத்தி புலம்பெயர் சூழலில் மகிந்தாவுக்காக தரகு அரசியல் செய்யும் பிழைப்புவாதியான நோயல் நடேசனின் அழைப்பின்பேரில் ஆவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து திரும்பியவர் ஜெயமோகன் என்ற நினைவு தவிர்க்க முடியாமல் இந்நேரத்தில் எழுகின்றது.) இப்படிபட்ட ஜெயமோகனின் அரசியலுக்கும் அவரது வலதுசாரி இந்துத்துவ அறத்துக்கும் எனது உலகப் பார்வைக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை.

எஸ்.வி.ராஜதுரை தொடர்பான ஜெயமோகனின் அனைத்து எழுத்துக்களையும் நான் வாசித்தேன். இப்போது ஜெயமோகன் பேசுகின்ற போன்று அதில் எவ்வித தார்மீக அறமும் இல்லை. எஸ்.வி.ராஜதுரை மீதான வன்மம் பல இடங்களில் அவரது கட்டுரைகளில் வெளிப்படுகின்றது. இன்றைய எஸ்.வி.ராஜதுரையின் வாழ்வை தனது விரல் நுனிக்குள் வைத்துக்கொண்டு மிரட்ட நினைக்கும் ஒரு பாசிச மன வக்கிரகம் அதில் தென்படுகின்றது.

கெடுபிடி போர்க்கால மனநிலை ஒன்று உண்டு. இடது சாரிகளுக்கு எதிராக சிஐஏ நிகழ்த்திய கலாச்சார போர் மனநிலை அது. இன்று சிஐஏக்கு மாற்றாக அதனை ஆர்.எஸ்.எஸ் நீலகண்டன் தனது “உடையும் இந்தியா” எனும் நூலில் “மிக அழகாக”அரங்கேற்றுகின்றார். எஸ்.வி.ராஜதுரை தொடர்பான விவாதத்திற்கு ஜெயமோகன் நீலகண்டனின் நூலை மிகவும் சாதுரியமாகவும், கபடத்தனமாகவும் பயன்படுத்துவதிலிருந்தே ஜெயமோகனின் அரசியலை புரிந்துகொள்ள முடிகின்றது.

இந்துத்துவவாதிகளுக்கு என்றும் முதல் எதிரிகள் மார்க்ஸ்சியவாதிகளும் இடதுசாரி செயல்பாட்டாளர்களும்தான். எஸ்.வி.ராஜதுரை மீதான ஜெயமோகனின் தாக்குதல் என்பது அத்தகையதுதான் என்றே நான் கருதுகின்றேன். எஸ்.வி.ராஜதுரையுடன் எனக்கு அரசியல் முரண்பாடுகளும் பிணக்குகளும் உண்டு. அதே அளவு அவருடன் உடன்பாடுகளும் அவரது படைப்புக்கள் மீது பெருமதிப்பும் உண்டு.அவரிடம் எனக்கு எதிர்காலத்தில் பகிர்ந்துகொள்ள முரண்பாடுகளும் உடன்பாடுகளும் நிறையவே உண்டு. ஆனால் ஜெயமோகனோடு பகிர்ந்து கொள்வதற்கு உடன்பாடுகள் எதுவுமே இல்லை. முரண்பாடுகளே உண்டு.

எஸ்.வி.ராஜதுரை மீதான எனது அரசியல் விமர்சனத்தை தனது தரப்பு ஆதாரமாக ஜெயமோகன் பாவிக்க நினைப்பது அவரது அரசியலுக்கு என்னை பயன்படுத்த நினைப்பது போன்றது. இந்த கபட அரசியலை ஜெயமோகன் தவிர்த்துக்கொள்வது அவசியமென நினைக்கின்றேன். எனது விமர்சனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கத்திலிருந்து வரும விமர்சனமாகும். ஜெயமோகனின் குற்றச்சாட்டின் அரசியல் இலங்கை இந்திய அரசுகளின் சார்பாளர்களின் பக்கவிளைவு.

இலக்கிய சந்திப்பு நடைபெறும் ஒவ்வொரு தடவையும் இலக்கிய சந்திப்பைப் பற்றி கேவலமாக எழுதி வதந்தி பரப்பி வந்த பாரீஸ் ரயாகரன் லண்டனில் நடக்கவிருக்கும் 40வது இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற விரும்புவதாக வேண்டி விண்ணப்பம் அனுப்பியுள்ளாராமே உண்மையா? இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
VASANTHAN

இலக்கிய சந்திப்புத் தளம் ஜனநாயக மயப்பட்டது. இங்கு சுதந்திரமான கருத்து வெளிப்பாடே அதன் அடிப்படையானது. எனவே இலக்கிய சந்திப்பு கருத்துச் சுதந்திரத்திற்கான தளம் என்பதனால் இரயாகரன் கலந்துகொள்வதில் எந்தவித ஆட்சேபமும் இருக்கமுடியாது. இரயாகரன் இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் உரிமையை மதிக்கின்ற அதே வேளை, நீங்கள் சொல்வதுபோல் இவர் இலக்கிய சந்திப்பு தொடர்பாக தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த கருத்துக்களை- வதந்திகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியதும் அவசியமாகின்றது.

இவர் இதுவரை காலமும் இலக்கிய சந்திப்புப் பற்றி எழுதிய – வதந்தி பரப்பிய நாசகார கருத்துக்களுக்கு பதில் அளிக்கவேண்டியது இவரின் தார்மீகக் கடமையாகின்றது .

புகலிட இலக்கிய சந்திப்பை இல்லாதொழிக்க இரயாகரன் காட்டிய முனைப்பு புலிகளைவிட அதிகமானது. இலக்கிய சந்திப்பு செயல்பாட்டாளர்களான கலைச்செல்வன், புஸ்பராஜா , சபாலிங்கம், பரா போன்றவர்களைப்பற்றி நச்சுத் தனம் கொண்ட வதந்திகள் இரயாகரனின் இணையத் தளத்தில் பரவிக் கிடக்கின்றன.

நண்பரே நீங்கள் சொல்வதுபோல் ஒவ்வொரு முறையும் இலக்கிய சந்திப்பு நடைபெறும் காலங்களிலெல்லாம் இரயாகரனின் காழ்ப்புணர்ச்சி ‘’வசைபாடல்’’ ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

இலக்கிய சந்திப்பில் கலந்துகொள்ளும் பெண்கள் பாலியல் ரீதியில் பயன்படுத்தப்படுவதாக மனவக்கிரம் கொண்டு பலமுறை எழுதியவர் இரயாகரன். இத்தோடு இணைக்கப்பட்டுள்ள இரயாகரனின் இக் கட்டுரையில் கூட இந்த வக்கிரம் கொட்டப்பட்டுள்ளது. இலக்கிய சந்திப்பு – சபாலிங்கம் -டொமினிக் ஜீவா போன்றவர்களைப் பற்றிய இரயாகரனின் பாசிச மனோ நிலைக் கொடூர எண்ணங்களை இந்த எழுத்துக்கள் ஊடாக காணமுடியும். இவை சில உதாரணங்கள் மட்டுமே.இவரின் இணையத்தளத்தில் நிறையவே இவை உலாவுகின்றன.

(குறிப்பு: தன்னிடமிருக்கும் ஹற்றன் நாசனல் வங்கி பணத்தை யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் போராட்டத்திற்கு தான் கொடுத்ததாக இரயாகரன் எழுதியதுபோன்று, இலக்கிய சந்திப்பில் கலந்துவிட்டு ; ‘’இலக்கிய சந்திப்புக்களுக்கு’’ தன்னிடமிருக்கும் வங்கிப் பணத்தை கொடுத்ததாக அன்பர் இரயாகரன் நாளை எழுதினாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை நண்பர்களே !!!.)

மலடாகிப் போன வக்கற்ற வக்கிர இன்ப நுகர்ச்சி, இலக்கிய விபச்சாரம் :பி.இரயாகரன்

 பாராளுமன்றம் பன்றிகள் கூடிக் குலாவும் சகதியாக இருக்குமளவுக்கு அதன் பிரதிநிதிகள், ஊழல், லஞ்சம், விபச்சாரம், சாதிச் சங்க அரசியல், நிற அதிகாரம், ரவுடித்தனம், கடத்தல், திருட்டு, உழைப்பை உறிஞ்சும் அட்டைகள் என்று சமுதாயத்தின் இழிந்து போன அனைத்து சமுதாய விரோதிகளும் கூடி புரண்டு எழும் நாற்றத்தால் அழுகிக் கிடக்கின்றது. இந்தப் பாராளுமன்றங்கள் எப்படி மக்களுக்கு விரோதமாக இருக்கின்றதோ, உலகத்தில் உள்ள கழிசடைகள் எல்லாம் ஜனநாயகத்தின் பெயரில் கூடுமிடமாக இருக்கின்றதோ, அது  போன்று தான் புலம் பெயர் இலக்கியச் சந்திப்பும் இருக்கின்றது என்றால் மிகையாகாது.
புலம் பெயர் இலக்கியச் சந்திப்பு ஏன் நடத்துகின்றார்கள் என்று கேட்டால் அதற்குக் கூட பதிலளிக்க முடியாத வகையில், சமூக நோக்கம் சிறிதும் அற்றவையாகி வக்கற்றுப் போய் மலடாகியுள்ளது. கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் பின்பும், சமூகத்தின் நோக்கத்தில் உண்மையையோ, நேர்மையையோ கொண்டிருப்பதில்லை. மலடாகிப் போன மலட்டுத் தனத்தில் வக்கற்றவர்களாகி உயிர்ப்பற்ற வம்புகளின் இன்ப நுகர்வில் காலத்தையும், சமூகத்தையும் இட்டு வக்கரித்து பிதற்றுவதே இதன் பொழுது போக்கு. காழ்ப்பு உணர்வுகள், சதிகள், திட்டமிட்டே தாக்குவது, முதுகு சொறிவது, குறுகிய நோக்கில் சாதி மற்றும் சமுதாயத்தில் எதாவது ஒன்றை இட்டு, சமூக நோக்கமின்றி முன்னிலைப்படுத்தி அதில் குளிர் காய்வது, பெண்ணியம் பேசிய படி கலந்து கொள்ளும் பெண்களை ஆணாதிக்க வடிவில் இழிவாக கொச்சைப்படுத்துவதும் பயன்படுத்துவதும், தமது உப்புச் சப்பற்ற பல பக்கக் கட்டுரைகளை பைபிள் மாதிரி, எழுதியதை ஒப்புவிப்பதை நோக்கமாக கொள்வது, விவாதங்கள் நடத்த முடியாத அளவுக்கு அறிவற்ற குருட்டுத்தனத்தில் இருந்து வீம்பு பண்ணுவது, எங்கள் அறிவுத் தேடலை பன்முகப்படுத்துகின்றோம் என்ற வம்பு வாதங்களின் பின்பு ஓணான் போன்று தமது நிறம் மாற்றும் வக்கற்ற தன்மைக்கு விளக்கம் அளிப்பது, நேரடி வன்முறை என்று, சமுதாயத்தை இட்டு அலட்டிக் கொள்ளாமல், போதைவஸ்து கடத்தியவர்களும், ஜனநாயக படுகொலைகளை நியாயப்படுத்தியவர்களும், உற்றர்ரும், உறவினரும், நண்பர்களும், இலக்கியம் சமுதாயத்துடன் தொடர்பற்றது என்று சமுதாயத்தில் இருந்து விலகி வக்கற்று பீற்றுபவர்களும் என்று பல வண்ண சமூக இழிவுகள் சேர்ந்து, யதார்த்தத்துக்கு புறம்பாக தமது வம்புத் தனங்கள் மூலம் சீரழிந்து கிடக்கின்றனர்.

இலங்கை இந்தியாவில் வாழும் மலட்டு இன்ப நுகர்ச்சி இலக்கிய நீட்சைகள், டிஸ்கோ நடனக்காரிகள் போல் உரிந்துவிட்டு ஆடும் “சுதந்திர” “ஜனநாயக” வேஷைத்தனத்தில் தலைகால் தெரியாமல் குதித்தாடுகின்றனர். இந்த வெளிநாட்டு பயணக் குலுக்கல் மற்றும் தமது தெரிவில் தமது குறுகிய வக்கற்ற திடீர் மலட்டு அதிர்ச்சி கோசங்களை உச்சரித்து, கூப்பிட்டவரை உச்சி குளிர வைக்கும் நபர்களை முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். அனைத்துக்கும் பணத்தை ஆதாரமாக, அடிப்படையாக கொள்ளுகின்றனர். இந்தியா, இலங்கையில் இருந்து பிழைப்புவாத பிரமுகர்களை கூப்பிடுவதே ஜனநாயக புரட்சியாகவும், புலம் பெயர் இலக்கியமாகிப் போனது ஆச்சரியமானது அல்ல. இது சாதி பார்த்து, பிரமுகத்தனம் பார்த்து, மார்க்சிய எதிர்ப்பின் அளவு கோல் பார்த்து, இதில் எது தமது  வக்கற்ற அரசியல் மலட்டு பிழைப்பவாத பிளவு அரசியலுக்கு சாதகமானது என்று கணிப்பிட்டே, தமது குலுக்களில் கூட மோசடி செய்கின்றனர்.
இந்தியாவில் இருந்து இலங்கை வரை இந்த குலுக்கல் விரவிப் பரவுகின்றது. ஏகாதிபத்திய பாலியல் நோயால் வக்கிரம் பிடித்த ஆணாதிக்க கழிசடை நாயகன் சாருநிவேதாவின் ஐரோப்பிய இலக்கிய வக்கற்ற மலட்டுச் சுற்றுப் பயணமும் (பார்க்க பெட்டிச் செய்தியை), இலங்கையில் இருந்து வந்த டொமினிக் ஜீவா என, வக்கற்ற இரு மலட்டு எதிர் அணி சார்ந்து இலக்கியச் சந்திப்பின் கோஷ்டி கானத்தில் கலந்து கொண்டனர். இது போன்றே சில மாதத்துக்கு முன் நடந்த பெண்கள் சந்திப்பிலும் நடந்தது. புலம் பெயர் இலக்கிய நடத்தை என்பது, இலங்கை இந்தியாவில் வக்கற்றுப் போன பிரமுகர்களின் தயவிலான கோஷ்டி கானத்தில் புலம் பெயர் இலக்கிய வானில் பாடப்படுகின்றது. இந்த வக்;கற்றவர்கஙளின் இன்ப நுகர்ச்சி எப்போதும் சந்திப்புகளின் இறுதியில் அருந்தும் மதுவில் புளுத்து வெளிப்படுவது வழக்கம்;. இங்கு வன்முறை, சாதி வக்கிரம், நிற வக்கிரங்கள், ஆணாதிக்க கொப்பளிப்புகள் உச்ச வெறியில் உளறும் போதும் தலைகால் தெரியாது பீறிடுவதே புலம் பெயர் இலக்கியத்தின் உச்சமாகும்.

புலம் பெயர் வக்கற்ற மலட்டு இலக்கியத்தின் நியாயப்படுத்தலை படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் பெயரில் பூசி மெழுகுகின்றனர். புலம் பெயர் இலக்கிய சஞ்சிகை சரி, இலக்கியச் சந்திப்பு தொடங்கியவர்களும், தொடங்கிய சமூக நோக்கம் சீரழிந்த போது, பலரை அதில் இருந்து ஒதுங்க வைத்தது. இந்த இலக்கியச் சந்திப்பு தொடங்கியதுக்கும் சபாலிங்கத்துக்கும் எந்தவித உறவு ஒட்டோ கிடையாது. சபாலிங்கம் கடைந்தெடுத்த வகையில், புதிதாக வந்த அகதிகள் சார்ந்து நியாயமற்ற வகையில் அவர்களை மூலதனமாக்கிய ஒரு வியாபாரி தான். இங்கு அல்லல்பட்டு வந்த அகதிக்கு நியாயமான வகையில், பணம் பெற்று உதவிய சமூகவாதியல்ல. சமூகப்பற்று என்பது இந்த அகதிகளை மனிதநேயத்துடன் அணுகுவதும், அவர்களிடம் இயன்றதை மட்டும் பெற்று உதவுவதுமே. ஆனால் இதற்கு மாறாக பணத்தை கறந்ததன் மூலம், அவரின் சொந்த வாழ்வை மேம்படுத்தும் ஊடகமாக இந்த அகதிகள் இருந்தனர். இலங்கையில் இருந்து வரும் அகதிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தவர், அவர்களிடம் வியாபாரியாக நடந்தவர், புலம்பெயர் மற்றும் சமூகம் பற்றி இலக்கியத்தில் மனிதாபிமானியாக, சமூகப் பற்றாளனாக இருந்தார் என்று பசப்புவது உண்மைக்கும், நேர்மைக்கும் மாறானது. இரட்டை நடத்தைகள் சமூக உறவில் சாத்தியமானது அல்ல. மனித உரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தில் பணம் பெற்று, இலங்கை அரசின் பாதுகாப்பு பெற்று வெளியிடும் வெளியீடுகளை, மொழி பெயர்த்து ஏகாதிபத்திய அரசியல்வாதிக்கு விசுவாசமாக விநியோகித்து, ஏகாதிபத்திய கைக்கூலியாகி புலம் பெயர் இலக்கியவாதியாகியவர். இவர் படுகொலை செய்யப்பட முன்பு மிக குறுகிய காலமே, இந்த இலக்கியச் சந்திப்புகளுக்கு சென்று வந்தவர். ஆனால் புலம் பெயர் இலக்கிய செயற்பாட்டால் தான் கொல்லப்பட்டார் என்பது அப்பட்டமான சோடிப்பும் மோசடியுமாகும். அது சரி இந்த இலக்கிய பிரமுகர் என்ன இலக்கியத்தை புலம் பெயர் சமூகத்துக்கு தந்துள்ளார்! அதில் எது சார்ந்த குறிப்பாக கொல்லப்பட்டார்! வக்கற்றுப் போன மலட்டு எந்த இலக்கியவாதியும் வைக்க முடியாத மர்மமான இலக்கியமாம் அவர் இலக்கியம்!
இலக்கிய சந்திப்பிலும், வெளியிலும் கோஷ்டி சேரும் வக்கற்றவர்கள், இலக்கிய சந்திப்பு புலிகளின் அராஜகத்துக்கு எதிரானது என்றும், அதனால் தான் புலிகள் இதை விரும்பவில்லை என்றும் பலவிதமாக தாலிக்கு முடிச்சுப் போடுகின்றனர். புலிகளின் அராஜகத்துக்கு இலக்கியச் சந்திப்பு எதிரானது என்பது எந்தவிதமான அரசியல் அடிப்படையோ, அதை இதுவென்று சொல்ல எந்தவிதமான அடிப்படையும் ஆதாரமும் கிடையாது.
புலியெதிர்ப்புக் கோசத்தின் கீழ் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தையே மறுத்து, இலங்கை அரசின் கைக்கூலியாக கோட்பாட்டிலும், நடைமுறையிலும் கோசம் போடுவது வக்கரித்துக் கிடக்கின்றது. எல்லாவற்றுக்கும் புலியெதிர்ப்பு ஊடாக நியாயப்படுத்தி, ஜனநாயக வேடம் போடுவதன் மூலம், பெரும் தேசிய வெறியர்களாக பவனிவருவதில் இலக்கியச் சந்திப்பு வக்கரித்து வெதும்பிக் கிடக்கின்றது. மறுபுறத்தில் புலியெதிர்ப்பில் புலிகளின் ஜனநாயக விரோத நடத்தைகளை தனித்துவமாக்கி, அரசியல் விபச்சாரம் செய்வது மலட்டு தனத்தில் ஒரு வடிவமாகியுள்ளது. இந்த மலட்டுத்தனத்தைத் தான், எம் மண்ணில் நடந்த உன்னதமான ஜனநாயக போராட்டமாக காட்ட முனைவது நிகழ்கின்றது. உதாரணமாக எக்ஸில், முஸ்லிம் சிறப்பு இதழ் வெளியிட வக்கற்றுப் போன மலடுகளை அழைக்கின்றனர். புலிகள் முஸ்லிம் மக்களை ஒரே நாளில் ஈவிரக்கமின்றி குறுகிய குறுந்தேசிய வெறியில், அவர்களின் வாழ்விடத்தை விட்டு துரத்திய மனித விரோத நடத்தைகளை குறிப்பாக்கி, அதை குறுகிய  சிங்கள பெரும் தேசிய இனவாதம் சார்ந்து, புலியெதிர்ப்பு கோசம் போட வக்கற்றவர்களை அழைக்கின்றனர். முஸ்லிம் மக்களையிட்டு, அவர்களின் விடுதலை மீது அக்கறை கொள்பவன், தமிழ் மக்களையிட்டும் அக்கறை கொள்ளவேண்டும்;. இங்கு இரட்டை வேடம் இருக்க முடியாது. எக்ஸில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்த படி (இதை எழுத்தில் வைக்க வக்கற்றவர்கள்), அதை கொச்சைப்படுத்தியபடி தான், முஸ்லிம் மக்களை பற்றி மூக்கால் அழுது சிறப்பு இதழ் வெளியிட முனைகின்றனர். உண்மையில் இதைத் தான் புலிகளுக்கு எதிராக பெரும் தேசிய சிங்கள இனவாதமும் செய்கின்றது. மறுக்க முடியுமா? பெரும் தேசிய இன வாதம் சிறு தேசியத்தை ஒடுக்கும் போது, இங்கு தமிழ், முஸ்லிம், மலையகம் என அணுகுமுறையில் அவற்றுக்கிடையில் வேறுபட முடியாது.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8523:2012-07-01-19-59-20&catid=267:-28-03-2001&Itemid=76

Exit mobile version