Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 07

சோபாசக்திக்கு:

குறிப்பு :01

ஹற்றன் நஷனல் வங்கி பணம் சம்பந்தமான ஆதாரங்களை இரயாகரனே தனது பதிவுகளில் வழங்கியுள்ளார். அதன் அடிப்படையிலேயே எம் கேள்விகளை- குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றோம். இது பற்றி, கேள்வி பதில் -பகுதி 04ல் விபரமாக எழுதப்பட்டுள்ளது.

மக்களின் அவலங்களையும் அழுகுரல்களையும் தமது சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் வழியை முள்ளிவாய்க்கால் அழிவுகளின் பின்னரே அதிகமாகக் கேள்விப்படுகிறோம். ஒரு வகையில் அதன் ஆரம்பமாக ஹட்டன் நஷனல் வங்கிக் கொள்ளைப்பணம் அமைந்தது எனலாம். இலங்கை வரலாற்றில் அதிகமாகக் கொள்ளையிடப்பட்ட பணத்திற்குப் பொறுப்பாகவிருந்த ஒரு நபர் அதற்கு என்னவானது என்பது தொடர்பாகத் தெளிவுபடுத்த மறுப்பது ஏன்?.
நாம் தனிப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கை விவரங்களைக் கோரவில்லை. புலிகளிடம் கேட்பது போன்றே இரயாகரனிடமும் கேட்கிறோம். புலிகளின் முக்கிய பிரமுகர்கள் பல பணத்தை பல வழிகளில் மூலதானமாக்கியுள்ளதாக சந்தேகம் எழுப்புகிறோம். இரயாகரனின் கணக்குக் காட்டப்படாத பணமும் அவ்வாறே தனிப்பட்ட தேவைகளுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுப்புகிறோம். இதனைத் தெளிவுபடுத்தும் பணி எம்மைச் சார்ந்தது இல்லை. இரயாகரனுடையது. அவர் பருமட்டான கணக்கு விபரத்தை முன்வைத்தாலே சந்தேகங்கள் எழாது. இது இரயாகரனுக்கு மட்டுமல்ல புலிகளுக்கும் பொருந்தும்.

நீங்கள் உங்கள் நண்பர் ரயாகரனின் உரிமைகள் மீது அக்கறையுள்ளவராக இருந்தால், மக்கள் பணத்தின் கணக்குவிபரங்களை முன்வைக்கக் கோருங்களேன். எம்மைக் கடிந்துகொள்வதில் பயனில்லை. அவர் விபரங்களை தெளிவாக விபரங்களை முன்வைத்தால் நாம் அவதூறு செய்கிறோம் என்று நிரூபணமாகிவிடுமல்லாவா?

மக்களின் கோடிக்கணக்கான பணங்களை புலிகளும், புலிகளின் பினாமிகளும் தங்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளமை பற்றி நாம் கேள்விகளை, குற்றச்சாட்டுக்களை, விமாசனங்களை எழுப்புகின்றோம். எந்த ஆதாரத்தின் அடிப்படையில்?

மக்களின் பணத்தை கொள்ளை கொண்ட மக்கள் விரோதிகள்- மோசடிப் பெயர்வழிகள் ஆதாரங்களை வைத்துக் கொண்டு முதலீடுகளை-பணத்தை பதுக்குவதில்லை. அதற்காக புலிகளின் முதலீடுகள் பொய் என்றோ புனைவென்றோ ஆகிவிடுவதில்லை.

மேலும் எம்மால் கேள்விக்கு உள்ளாக்கப்படும் “நபர்” ‘’கள்ள மெளனம்’’ சாதிக்க, எம் கேள்வியின் நியாயத்தின் வீச்சம் கண்டு, பயம் கொண்டு, அந்த ‘’நபரை’’ காப்பாற்றுவதன் மூலம் தங்களின் ‘’மக்கள் விரோத அரசியலை’’ காப்பற்றிவிட முடியுமென நினைக்கும் சில ‘’நபர்களின்’’ செயல்பாடுகளை நாம் என்னவென்னபது? இதுதான் மக்கள் விரோத அரசியலின் கூட்டிணைவு என்பதோ ! .

குறிப்பு :0 2

இரயாகரனுக்கு எனது எழுத்துக்களிலிருந்து நீதி கிடைக்க வேண்டும் என்று உங்களுக்கு மனிதாபிமானம் பிறந்தபோது தான் எட்டு வருடத்தின் முன்னைய ‘’பிளாஸ்க் பாக்’’ எனக்கு ஓடியது. தவிர சம்பவம் பற்றி எனக்கு அக்கறை கிடையாது. நீங்கள் குற்றம் சுமத்திய அப்பாத்துரையோடு சமரசம் செய்து கொண்டு நண்பராகி விட்டீர்கள். அவர் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆக, சம்பவம் தொடர்பான எனது அக்கறை என்பதைத் தவிர ; அது கையாளப்பட்ட முறைமை என்பதே எனது குறிப்பின் தொனிப்பொருள். அதே ‘’முறைமை’’ மீண்டும் மீட்டப்படுகிறது என்பதைக் காட்டவே முன்னைய சம்பவத்தைக் குறிப்பிட வேண்டியதாயிற்று.

ஒரு பெண் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று என்னிடம் கேட்காமல் அந்தப் பெண்ணிடமே நீங்கள் கேட்டிருந்தால் பெண், அதுவும் இந்தியத் தமிழ்ப் பெண் என்ற அடிப்படையில் உங்களுக்குப் பதில் கிடைத்திருக்கும். இதே கேள்வியை உங்களிடம் நான் கேட்டுத் தொலைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது சோபா ; பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வழக்குப் போடலாம் எனக் கருதும் நீங்கள், பாதிக்கப்பட்ட இரயாகரனுக்காக நீங்கள் ஏன் வழக்குப் போடமுடியாது?

இலங்கையில் கிராமங்களில் கூட குடும்பங்களிடையே இவ்வாறான சிக்கல்கள் உருவாகுவது வழமை. ஆனல் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்ற பொதுப் புத்தி சாதாரண மனிதாபிமானியிடம் கூட காணப்படும் ஒன்று. இப்போது வரைக்கும் அது ‘’மெய்யா- பொய்யா’’ என விவாதித்து பெண்கள் ஒடுக்கப்படும் சமூகம் ஒன்றில் அவரைத் தெருவுக்கு இழுக்கிறீர்களே, அதுதான் உங்கள் பாலியல் வன்முறையின் உச்சம்.

உங்களுக்குப் ‘’புரவலர்கள்’’ இருப்பதற்கான ஆதாரம் கேட்கிறீர்கள் சோபா!. நீங்கள் தலித்தியம், பின் நவீனத்துவம் போன்ற இத்தியாதிகளைத் துறந்துவிட்டு சட்டத்துறையில் இறங்கியுள்ளீர்களோ என சந்தேகம் ஏற்படுகிறது. இனி, சட்டத்துறையில் இறங்கியதற்கான ஆதாரத்தைக் கேட்டுத் தொலைத்துவிடாதீர்கள்.

சோபாசக்தி, உங்களுக்கும் – எனக்குமான உரையாடல் தொடரப்படவேண்டியது அவசியமாகின்றது. பேசியவை- பேசப்படாதவை பற்றி நாம் பேசவேண்டும். வெறும் சம்பவங்களின் கோர்வைகளாக எம் உரையாடல் தொடர்வதை தவிர்த்து சம்பவங்களின் பின்னாலான ‘’அரசியலை’’ கோட்பாட்டுத் தளத்தில் அணுக விரும்புகின்றேன். இதன் மூலமே மக்கள் நலன் சார்ந்த அரசியலை நோக்கி இவ் உரையாடலை நகர்த்திச் செல்ல முடியுமென நினைக்கின்றேன்.

எனினும் இத் தொடரில் இவற்றை தொடர்வது எம் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் வாசகர்களுக்கும் உவப்பற்ற – இடைஞ்சலாக இருப்பதாக விசனம்- அதிருப்தி கொள்கின்றனர். எமது உரையாடல் ‘முக்கியம்’ எனினும் அவற்றின் அரசியல் முன்வைக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றனர். அவற்றை இப் பகுதியில் தவிர்க்கும்படி கோருகின்றனர். இந்த கேள்வி பதில் தொடரை விரைவில் பூர்த்தி செய்யலாமென நினைத்துள்ளேன். இதன் தொடர்ச்சியாக நம் உரையாடலை இத் தளத்திலேயே தொடங்குவோம். அதுவரை சற்று அவகாசம் கொள்வோம்.

அசோக் தங்களிடம் இரண்டு சமபவங்களை கேட்க விரும்புகின்றேன் சம்பவங்கள் நடைபெற்ற போது நீங்கள் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக இருந்தீர்கள்.. 1.மட்டக்களப்பு சிறை உடைப்பு 2. மட்டக்களப்பு கச்சேரி துப்பாக்கி கொள்ளை. இந்த இரண்டு சமபவங்களையும் PLOT செய்ததா ? உண்மைகளை விபரங்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

தயாளன்

சிறை உடைப்பைப் பற்றி முதலில் பேசுவோம்.

இச் சிறை உடைப்புக்கு முக்கிய உதவிகரமாக இருந்தவர்கள் சிறைக் காவலர்கள்தான். அவர்களின் உதவியின்றி இது சாத்தியப்பட்டிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக கிருஸ்ணமுர்த்தி (புளொட்டில் இணைந்து பி.எல்.ஒ பயிற்சி பெற்ற தோழர் பிரசாத்.) அவர்களின் பங்களிப்பும் செயற்பாடும் மிக மிக முக்கியமானது. அத்தோடு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்னனி (ஈ.பி.ஆர்.எல்.எப் ) தோழர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடும் குறிப்பி டத்தக்கது.

மட்டக்களப்பு சிறையிலிருந்த தோழர்கள் வேறு சிறைக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக நாம் அறிந்தோம். எனவே விரைவாக தோழர்களை அங்கிருந்து வெளியில் எடுக்கவேண்டிய அவசிய நிலை எங்களுக்கு உருவாகியது. அந் நேரத்தில் எங்களிடம் எந்தவித ஆயுதங்களும் இருக்கவில்லை. எனவே ஆயுதங்களை அவசரமாக பெறவேண்டி தோழர் காந்தன் (ரகுமான் ஜான் ) பின் தளத்திற்கு சென்றார். அவரின் வருகையை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தோம். ஒருநாள் இரவு வெறுங்கையோடு காந்தன் வந்துசேர்ந்தார்.

( இக் காலங்களில் நான் கடுமையான பொலிஸ் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தேன். எனவே எங்கள் வீட்டில் உறங்காமல் அன்றிரவு நண்பனின் வீட்டில் தங்கினோம். அன்று அதிகாலை என் வீடு பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டது. அந்தளவிற்கு மோசமான சூழ்நிலையே அன்றிருந்தது.)

ஆயுதமற்ற நிலை எங்களை சோர்வுக்குள்ளாக்கியது. இது எங்களுக்கு பலத்த ஏமாற்றமாக அமைந்திருந்தது. இந்த நேரத்தில் ஈ பி ஆர் எல் எப் தோழர்களும் சிறையுடைப்பு சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடுவதாக அறிந்தோம். அவர்களோடு தொடர்புகளை கொண்டோம். ஈ பி ஆர் எல் எப் தோழர்கள் தங்களிடம் ஆயுதம் இருப்பதாக கூறினார்கள். ஆனால் அவர்களிடமும் ஆயுதங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை காணமுடியவில்லை.

(யோகராஜா என்றொரு ஈ பி ஆர் எல் எப் தோழர் கல்முனையில் இருந்தார். அவர் தன்னிடம் இயந்திர துப்பாக்கி இருப்பதாக என்னிடம் கூறினார். எங்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உருவாகியது. அதைவிட எனக்கு ஒரே ஆர்வம் அந்த துப்பாக்கியை பார்த்துவிடவேண்டுமென்று. புகைப்படங்களில் மாத்திரமே இயந்திர துப்பாக்கியை நான் பார்த்திருக்கின்றேன். எனவே இதைப் பார்க்க தோழரைத் தேடி பல தடவை சென்றும் கண்ணால் அதை பார்க்கவே முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது தோழர் எமக்கு ‘’கரடிவிட்டார்’’ என்று.)

அதன் பின் நாங்கள் சில இடங்களிலிருந்து சாதாரண துப்பாக்கிகளை பறிமுதல் செய்தோம்.( பறிமுதல் என்பது கௌரவ வார்த்தை!!!) அத் துப்பாக்கிகளை சிறிய வடிவமாக்கினோம். இன்னும் கடும் தேடுதலுக்குப் பிறகு பிரயோசனமற்ற கைத் துப்பாக்கிகள் சில கிடைத்தன. அவற்றில் ஒன்றிரண்டு வேலை செய்யும் .
பால் ரின்னை வெடி மருந்து நிரப்பி “பாம்” செய்தோம். அவற்ரைக் கொழுத்துவதற்கு தீப்பெட்டி , லையிற்றர். இவைகளே மட்டக்களப்பு சிறையுடைப்புக்கான எமது ‘’பெரும் ஆயுதங்கள் !’’.

அத்தோடு இந் நேரத்தில் தோழர் மாசிலாமணியை பங்களிப்பை நினைவு கூறுவது மிக அவசியம். அவர்தான் சிறைச்சாலை கதவு திறப்புக்களை செய்து உதவியவர். அவரின் இந்த உதவியின்றி சிறைச்சாலை கதவுகளை திறந்திருக்க முடியாது.

நான் பொலீசாரினால் கடுமையாக தேடப்பட்டுக் கொண்டிருந்தமையால் சிறை உடைப்பு சம்பவத்தில் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. தோழர்களே சென்றார்கள். (குறிப்பாக தோழர்கள் வாசுதேவா, ஈஸ்வரன், சங்கர், ஜீவா, கணன், கராட்டி அரசன், சசி, விஜீ போன்றோர் முக்கியமானவர்கள். ) ஈபிஆர்எல்எப் தோழர்களும் துணை நின்றார்கள். இவர்கள் எல்லோருடைய ஒத்துழைப்போடுதான் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடைபெற்றது.

காந்தியம் அமைப்பு வவுனியா போன்ற எல்லா இடங்களிலும் தடைசெய்யப்பட்டிருந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதன் சேவை ஓரளவு நடைபெற்றது. பாலர் பாடசாலைகள் இயங்கின. இச் சிறையுடைப்பு நடவடிக்கைகளில் மற்றும் சிறைகளிலிருந்து வெளியேறிய தோழர்களின் போக்குவரத்திற்காக காந்திய வாகனங்கள் பயன்பட்டதனால் காந்திய நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டு காந்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன காந்தியத்தில் வேலை செய்த பலரும் பொலீஸ் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பது வரலாறு.

பின் தளத்தில் இச் சிறையுடைப்பு சம்பந்தமாக புளொட்டும் ஈ பி ஆர் எல் எப் உம் தனித்தனியாக உரிமைகோரி ‘’அறிக்கைப்போர்’’ நடாத்தினர். இதனால் மனக் கசப்புக்களும் இடம்பெற்றன. இதன் தாக்கம் யாழ்பாணத்திலும் எதிரொலித்தது.

இதில் சம்பந்தப்பட்ட இரு அமைப்புக்களும் புரிந்துணர்வு அடிப்படையில் தோழமையோடு இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்க முடியும். ஆனால் நிலப்பிரபுத்துவ – ‘’உடமை கொள்ளும் சமூக மன’’ கட்டமைப்பையும், அதன்சார் வர்க்க நிலையின் எச்ச சொச்சங்கள், தனித்த அதிகார ஆளுமை ஆசை, கதாநாயக விம்பம் போன்றவற்றின் பிடியின், அகப்படலில் சிக்குண்ட இரு அமைப்புத் தலைமைகளும் இதற்கு தயாராக இருக்கவில்லை. இந்த அறிக்கை போர்களுக்கு அன்றைய நிலையில் எமக்கு நம்பிக்கை தரக்கூடிய சக்திகளாக இருந்த தோழர்களும் துணை போனது எமக்கு வேதனையைத் தந்தது. இந்த அறிக்கைப் போர் தோழமையோடு இருந்த ஈபிஆர்எல்எப் தோழர்களுக்கும் எங்களுக்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி, பரஸ்பரம் நம்பிக்கையின்மையையும் உருவாக்கி விட்டது. இந்த விடயத்தினால் நான் தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டேன்.

மட்டக்களப்பு சிறையுடைப்பை தெரிந்தவன், அதனோடு சம்பந்தம் கொண்டவன் என்ற அடிப்படையில் இந்த அறிக்கைப் போர் எனக்கு உடன்பாடானதாக இருக்கவில்லை.

(சமீபத்தில் டேவிட் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை -உரையாடலை ஒளிப்பதிவு செய்தோம். அதில் டேவிட் ஐயா சிறையுடைப்பு சம்பந்தமான மிகவும் சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்தார். சுமார் 6 மணித்தியாலம் கொண்ட இந்த ஒளிப்பதிவு மிக முக்கியமான ஆவணமாகும்.)

‘’சிறை உடைப்பு’’ என்பதைவிட ‘’சிறை திறப்பு’’ என்ற சொல்லாடலே பொருத்தமாக இருக்க முடியுமென நினைக்கின்றேன்.

2. மட்டக்களப்பு கச்சேரி துப்பாக்கி கொள்ளை. :

மட்டக்களப்பு கச்சேரி துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் திட்டம் எங்களுக்கு இருந்தது. இதற்கான வரைபடம், ரெக்கி, ஏனைய அவதானிப்பு நடவடிக்கைகளை தனிப்பட்ட நண்பர் ஒருவர் செய்திருந்தார். சிறையுடைப்பு நடைபெற்றதினால் நாங்கள் கடுமையாக தேடப்பட்டோம். சில தோழர்கள் மட்டக்களப்பைவிட்டு வேறு இடங்களுக்கு தலைமறைவாகிப் போனார்கள். இதனால் கச்சேரி விடயம் செய்வது சாத்தியம் இல்லாமல் இருந்தது.

இந்தநேரத்தில் நானும் சில தோழர்களுமே மட்டக்களப்பில் மிஞ்சியிருந்தோம். வாசுதேவாவும், ஈஸ்வரனும் சிறைத்தோழர்களோடு சென்றிருந்தார்கள். அக் காலத்தில் எமது நண்பர்கள் சிலர் மட்டக்களப்பில் தனி இயக்கம் தொடங்குவது பற்றி விருப்பத்தோடும் திட்டத்தோடும் இருந்தார்கள். சிறையுடைப்பிற்கு பின் இவர்களின் தனி இயக்கத் திட்டம் மீண்டும் உயிர்ப்பித்தது. எங்களால் செய்ய முடியாமல் கைவிடப்பட்ட மட்டக்களப்பு கச்சேரி துப்பாக்கி பறிமுதல் திட்டத்தை இவர்கள் செய்ய திட்டமிட்டார்கள். இதற்கான வரைபடம் ரெக்கி பார்த்தவர் இவர்களின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். .

நண்பர்களால் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு அது எனது கிராமத்தில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டது. துப்பாக்கிகள் வைக்கப்பட்ட இடம் எனது கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தெரிய அவர் பலரிடம் சொல்லி துப்பாக்கிகளை தோண்டி எடுத்து தங்கள் தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். நண்பர்கள் சென்று பார்த்தபோது அங்கு எதுவுமே இல்லை. மொத்தம் 52 துப்பாக்கிகள். பின் விபரம் கண்டுபிடித்து எனது நண்பர்கள் கிராமத்தவர்களின் வீடு சென்று கேட்டபோது அவர்கள் கொடுக்க மறுத்து விட்டார்கள். இதனால் என் ஒத்துழைப்பை கோரினார்கள். நான் நேரடியாக செல்லவேண்டிய நிலை உருவானது. இதன் பின்னால் உள்ள அபாயத்தை விளங்கிக்கொள்ளாமல் வீடுகளில் வைத்திருந்தார்கள்.

நிலமையை விளங்கப்படுத்தி துப்பாக்கிகளை பெற்றுவந்தோம். இதன் பின் பொலிசாருக்கு விடயம் தெரிந்து நாங்கள் மிகக் கடுமையாக தேடப்பட்டோம். நண்பர்களும் நானும் வெவ்வேறு திசைகளில் தலைமறைவானோம்.

இந் நேரத்தில் எனது கிராமத்தில் வேறொரு இடத்தில் வைக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவேண்டிய அவசிய நிலை ஏற்பட்டது. என்னால் கிராமத்திற்கு போகமுடியாத சூழல். நண்பர்களாலும் போகமுடியாத நிலமை. பிரச்சனை அற்ற, பொலீசாருக்கு சந்தேகம் வராத ஒருவரை கிராமத்திற்கு அனுப்பி விபரம் சொல்லவேண்டிய நிலை.

என் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி சிவராமின் உதவியை நாடினேன். சிவராமை எனக்கு முன்னரே தெரியும். மட்டக்களப்பு ‘’வாசகர் வட்டத்தின்’’ ஊடாக எனக்கு அறிமுகமானவர். எனது கிராமத்தில் நாங்கள் ‘’இளந்தளிர் வாசகர் வட்டம்’’ ஒன்றை நடாத்தி வந்தோம். இதற்கூடாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தினோம். நாங்கள் நடாத்திய இலக்கிய கருத்தரங்குகளில் சிவராம் பேச்சாளராக கலந்துகொண்டிருந்தார். எனவே பழக்கமான சிவராமை எனது கிராமத்திற்கு அனுப்பி நண்பர்களை சந்திக்க வைத்து விபரம் கூறச் செய்தேன்.

இவ் கச்சேரி துப்பாக்கி பறிமுதல் நடந்தது பற்றி பின் தளத்தில் கேள்விப்பட்ட புளொட் தலைமை இதனைச் செய்தது புளொட் என அறிக்கைவிட்டது. இது தவறான புரிதலின் அடிப்படையில் நடந்தது. புளொட் செய்வது பற்றிய திட்டமிருந்ததினால் ‘புளொட்தான் செய்திருக்கும்’ என்ற அனுமானத்தில் இவ் அறிக்கை வெளியிட்டதாக பின்னர் சொல்லப்ட்டது.

காலப்போக்கில் இயக்கம் தொடங்க நினைத்த நண்பர்கள் பாதுகாப்பு காரணம் கருதி தமிழ் ஈழவிடுதலைப் புலிகளோடு இணைந்தார்கள். அதன் பின் நண்பர்களை தமிழ் ஈழவிடுதலைப் புலிகளாக நான் சந்தித்தேன். அவர்களிடமிருந்த நட்பு, நேசம் அனைத்தும் காலவதியாகி நண்பர்கள் வேறுபட்டு நின்றார்கள். புலிகளின் பாசறை அவர்களுக்கு நிறைய ‘’வஞ்சகங்களை’’ கற்றுக் கொடுத்திருந்தது.

ஒரு தடவை என் நண்பன் ஒருவனை சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் தற்செயலாக சந்தித்தேன். முழுமையாக மாறியிருந்தான். மட்டக்களப்பில் நிறையப் பேருக்க ‘’வெடி’’ வைக்கவேண்டுமென்றான்.
அதில் நானும் ஒருவன் என்றான். நான் சந்தோசமாக வாழ்த்துக்கூறி முன்னாள் நண்பனிடமிருந்து விடைபெற்றேன்.

இப் பதிவுகளில் குறிப்பிடவேண்டிய முக்கிமான நண்பர்கள், தோழர்கள் சிலரின் பெயர்களை அவர்கள் நாட்டில் இருப்பதன் காரணமாக அவர்களின் பாதுகாப்பு கருதி தவிர்த்துள்ளேன்.

(சம்பவங்களை சுவைபடக் கூறல் ஒரு கலை. அதற்கு திறமையும், தேர்ச்சியும் வேண்டும். இவ்விடயத்தில் நான் பூச்சியமே !. இதனால் சம்பவங்களை “சம்பவங்களாக” கூற மாத்திரமே என்னால் முடிந்திருக்கிறது.)

Exit mobile version