Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 06

குறிப்பு – 0 1

புகலிட ஈழ எழுத்தாளர் சோபாசக்தி அவர்கள் தன்னுடைய முகப் புத்தகத்தில் என் ‘’கேள்வி பதில்’’ தொடர்பாக “ஏதோ” எழுதியிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். நிதி மோசடி , நிதி ஆதாரம், அரசு சாரா நிதி நிறுவனங்கள் பற்றியெல்லாம் நான் எழுதும்போதெல்லாம் சில ‘‘நபர்களுக்கு’’ பதட்டமும், கோபமும் ஏற்படுவது இயல்பாய் போய்விடுகின்றது. என் எதிரே பாரீசில் வாழும் சோபாசக்தியின் “தினசரி வாழ்க்கை” முறையை நேரில் காண்பவன் நான் என்பதால் நிதி தொடர்பான விமர்சனங்களால் சோபாசக்தி ‘’பதட்டம்’’ அடைவதில் எந்தவித வியப்பும் இருக்கமுடியாதுதானே !.

ஒரு காலத்தில் சோபாசக்தியின் வாசகன் நான். இன்று அந்நிலை மாறிவிட்டது. சோபாசக்தியையும், அவர் எழுத்துக்களையும் ஒரு பொருட்டாகவே நான் மதிப்பதில்லை. தன்னுடைய இருத்தலுக்காக எல்லாவித “எல்லைகளையும்” கடக்கக்கூடிய , ‘’புலிகளை எதிர்கின்ற- இன்னொரு புலிதான்’’ சோபாசக்தி என்பதே என் புரிதல் ஆகும். புலிகளின் பாசறையில் பயின்று வந்த எல்லா “வஞ்சகங்களையும்” தன்னகத்தே நிரம்பப் பெற்றவராகவே இவர் இருக்கின்றார். இதனால் புலிகள் மீதான என் பயம் சோபாசக்தி தொடர்பாகவும் தொடர்கிறது.
உதாரணத்திற்கு ஒருவிடயத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

சில காலங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.

பரிசில் அரவிந் அப்பாத்துரை என்றொரு எழுத்தாளர் உள்ளார். இவர் சோபாசக்தியின் சகோதரியின் சிநேகிதியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அப் பெண் அவரிடமிருந்து தப்பிவந்து தங்களிடம் முறையிட்டதாகவும் சோபாசக்தி மிகவும் ‘’தேர்ந்த துயரத்தோடு’’ எங்களிடம் கூறினார். ஒரு ‘’பெண்ணிய காப்பாளனுக்குரிய’’ கோபம், ஆத்திரம் ,துயரம் கொண்டவராக அவர் எங்களுக்கு காட்சி கொடுத்தார். நாங்களும் “பெண்ணிய காப்பாளர்கள்” என்பதை நிரூபிக்கவேண்டுமானால் இதை நம்பியே ஆகவேண்டிய நிலைக்கு கொண்டுவரப்பட்டடோம்.

அரவிந் அப்பாத்துரையின் பாலியல் பலாத்காரம் தொடர்பாக காரசாரமான கண்டன அறிக்கை சோபாசக்தியால் எழுதப்பட்டு “பெண்ணிய காப்பாளர்கள்” நாங்கள் எல்லோரும் கையெழுத்திட அது உலகம் பூராகவும் பறந்தது. சில மாதங்களுக்குப்பின் உண்மை வெளிப்பட்டது. சோபாசக்திக்கும் அரவிந் அப்பாத்துரைக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாட்டினால் சோபாசக்தி தீட்டிய ‘’சதிப் புனைவே’’ இதுவென்று.

புலிகள் ஒருவரை அழிக்கவேண்டுமானால் எத்தகைய வகைப்பட்ட “ஆயுதங்களையும்” பயன்படுத்த தயங்குவதேயில்லை. சோபாசக்தியும் அதன் தொடர்ச்சியே அன்றி வேறு ஒருவரல்ல. இதனாலேயே நான் புலிகள் மீதான பயத்தையும் இவர் மீதும் கொள்ள காரணமாக அமைந்துவிடுகின்றது.

இதைவிடக் கொடுமையானதும், அருவருப்பானதுமான சோபாசக்தியின் இன்னொரு முகத்தையும் சில காலங்களுக்கு முன் நாம் தரிசித்துள்ளோம். புகலிடத்தில் ஒரு பெண்ணை பழிவாங்கவும், அவமானப்படுத்தவும் எனத் திட்டம் இட்டு அப் பெண்ணோடு தான் ‘’உடலுறவு’’ கொண்டதாக அறிக்கை சமர்பித்ததை நாம் மறந்துவிடமுடியாது.

இந்த கேடுகெட்ட அயோக்கியத்தனங்களை ஆதரிக்கவும், ஊக்கப்படுத்தவும் சோபாசக்திக்கு பல ‘’புரவலர்கள்’’ இருக்கும்வரை சோபாசக்தி இந் நிலையை இப்படியே தொடர்வார். நாம்தான் தள்ளி நிற்கவேண்டும். இதனாலேயே சோபாசக்தி பலமுறை என்னோடு “சொறிந்த” போதிலும் நான் அவற்றிற்கு பதிலளிப்பதை தவிர்த்தே வந்ததேன்.

குறிப்பு – 0 2

சென்ற ‘’கேள்வி பதிலில்’’ பின்தள உட்கட்சிப்போராட்டம் பற்றிய பதிவில் தோழர் சண்முகலிங்கம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இதைத் தொடர்ந்து சண்ணின் மரணச் செய்தியும் என்னை வந்தடைந்தது. என் நினைவும், சண்னின் மரணமும் சமநிலையில் நிகழ்ந்தது எனக்கு மனக் கவலையையும், அதிர்ச்சியையும் தந்தது. சண்முகலிங்கத்தை நான் 1981 ன் தொடக்க காலங்களிலிருந்தே ஞாபகம் கொள்கின்றேன். அவருக்கும் எனக்குமான உறவு நீண்டது- சுவாரசியமானது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுதலைக்குப்பின் இந்தியாவுக்கு சென்ற பின்னால் சண்னுடனான என் உறவுகள் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. எனினும் நான் பின்தளம் செல்லும்போதெல்லாம் சண்னை சந்திப்பேன். சண் இலங்கையின் சீனசார்பு கம்யூனிச கட்சியிலிருந்து தமிழ்பேசும் மக்களின் சுய நிர்ணய கோரிக்கையின் நியாயப்பாட்டை உணர்ந்து புளொட்டினுள் வந்தவர்களில் ஒருவர். அத்தோடு ‘ஐனதா விமுத்தி பெரமுன’ என்ற J.V.P யோடும் உறவுகளை வைத்திருந்தவர். காந்திய அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளராக இருந்தவர். பின் தளத்தில் இடம்பெற்ற புளொட்டின் உட்கட்சிப்போராட்டத்தில் காத்திரமான பாத்திரத்தை வகித்தவர்.

சண் கனடாவுக்கு புலம்பெயாந்து வந்த பின்பும் கூட அவருடைய அரசியல் சமூக செயல்பாடுகள் தொடர்ந்தன. கனடா- ‘’தேடகம்’’ தமிழ்ஈழ விடுதலைப் புலிகளினால் தீக்கிரையாக்கப்பட்டபோது அதற்கெதிரான சண்னின் கண்டனங்களும், செயல்பாடுகளும், தேடகத்தை மீள் நிர்மாணிப்பதில் அவரின் பங்களிப்பும் பதிவு செய்யப்படவேண்டியது. சண் பன்முக ஆற்றல் கொண்டவர். தேடகத்தினரால் தயாரிக்கப்பட்ட இருமொழி நாடகமான ‘’ The D.M.O ‘’ என்ற நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று தன் புலமையை வெளிப்படுத்தியவர். தேடகத்தின் உறுப்பினராக இருந்து மானிட மேம்பாட்டுக்காகவும், சமூக விடுதலைக்காகவும் சண் அற்றிய பங்களிப்பு நினைவு கூறப்படவேண்டியது.

பாரிசிக்கு நான் வந்த பின்பு சண் இரண்டு தடவை இங்கு வந்துள்ளார். வரும்போதெல்லாம் நாங்கள் சந்திப்பதும் ‘நக்கலும்- நளினமும்’ நிறைந்த சண்னின் உரையாடலை கேட்பதிலும், பழைய நினைவுகளை மீட்பதிலும் நேரங்கள் கழியும். சண் சிறப்பான விபரச் சேகரிப்பாளர். ஒன்றைப்பற்றி, ஒருவரைப்பற்றி சண்னின் சேகரிப்பு பெறுமதி மிக்கதாக இருக்கும். (சில நேரங்களில் இது ‘வில்லங்கத்தனமாகவும்’ அமைந்துவிடுவதும் உண்டு. அரசியல் – சிந்தாந்த கோட்பாடுகளுக்கு அமைய அவரிடமிருந்து பெரும் தகவல்களை தரம் பிரித்துக்கொள்ளவேண்டியது அவரவர் பொறுப்பு)

பாரீஸ் வந்திருந்தபோது நண்பனும் தோழனுமாகிய கலைச்செல்வனை சந்திப்பதற்காக முதல் நாள் ரெலிபோனில் கலைச்செல்வனோடு உரையாடிவிட்டு அன்று இரவு நானும், சண்னும் நீண்ட நேரத்திற்குப் பின் படுக்கைக்கு சென்றோம். சென்ற சிறிது நேரத்தில் அதிகாலையில் ரெலிபோன் மணி அலறியது. அதிகாலையில் ரெலிபோன் மணி அலறும்போதெல்லாம் எனக்கு ஒருவித பயம் கலந்த உணர்வு ஏற்படுவதுண்டு. அம்மாவின் மரணச் செய்தியும் இவ்வாறே வந்தது. பல நண்பர்களின் மரணச் செய்தியும் இப்படியேதான் என்னை வந்தடைந்தது. தொடரும் இந்த மனநிலையோடு ரெலிபோனைத் தூக்கியதும் கலைச்செல்வனின் மரணம் பற்றிய செய்தி. நான் உறைந்தே விட்டேன். சண்னுக்கு ஒரே அதிர்ச்சி .

சண், கலைச்செல்வனின் இறுதி மரண நிகழ்வில் உரையாற்றினார். தன் கனடா பயணத்தை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்தார். எங்கள் துயரோடு பங்குகொண்டார். அந் நேரங்களில் சண்னின் இருத்தல் எங்களுக்கு பேருதவியாக இருந்தது.
சண் பல செயல்பாட்டுத் திறங்கள் வாய்க்கப்பெற்றவர். அந் நேரங்களில் நாங்கள் பாரீசில் மாற்று அரசியல் –கலாச்சார- பண்பாட்டுத்தளங்களில் கலந்துரையாடல்களையும், குறும்படங்களையும், புகைப்படக் கண்காட்சியையும் நடாத்திக்கொண்டிருந்தோம். இங்கு நடாத்திய குறும்பட நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக கனடாவிலும் சண் குறும்பட நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணி இதற்கான புதிய வழித்தடம் ஒன்றை அங்கு உருவாக்கினார். புலம்பெயர்ந்த சூழலில் சிறு சஞ்சிகை விற்பனை என்பது அபூர்வமானது. நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் அதனை இலவசமாக கொடுக்கலாமே அன்றி அவர்களிடமிருந்து பணம்பெறுதல் என்பது முடியாத காரியம் . ஆனால் சண் எனது “அசை” சிற்றிதழை கனடாவில் விற்பனை செய்து அதற்குரிய பணத்தை முழமையாக அனுப்பியவர் என்பதிலிருந்தே அவரின் சமூக அக்கறையையும், செயல்பாட்டுத் திறனையும் நாம் விளங்கிக்கொள்ளமுடியும்.

கடைசி காலங்களில் சண்னுக்கும் எனக்குமான உறவு சற்று ‘மனவருத்தம் கொண்டதாக’ அமையப்பெற்றிருந்தது. சண், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் கொடூரமான மனித உரிமை மீறல்களையும், கொலைகளையும் மிகத் தீவிரமாக வெளிப்படையாக துணிந்து எதிர்த்த ஒரு மானுட விடுதலைப்போராளி என்பதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடுகளும் கிடையாது. அதன் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் ‘’அரசு – பாராளுமன்றம்’’ என்ற ஐனநாயக அமைப்பு வடிவத்திற்குள் ஒழிந்திருந்து, புலிகளின் கொடூரமான கொலைகளைவிட அதிகொடுமைகளை, இனப்படுகொலைகளை செய்த ஒரு பேரினவாத ஒடுக்குமுறை அரசின் மீது அவர் கொண்டிருந்த ‘மென்மையான அரசியல் ஆதரவு போக்கு’ எனக்கு கடும் விமர்சனத்திற்குரியதொன்றாகவே கடைசிவரை நீடித்திருந்தது.

இன்று சண் இல்லை. ஒரு சகாப்தத்திற்கு முன் மரணம் பற்றிய பயம் எம்மிடம் இருந்ததில்லை. இதனைவிட்டு ‘அனைத்தையும்’ நாம் சிந்தித்தோம். இன்று அவ்வாறு இருத்தல் என்பது யதார்த்தம் அற்றதாய்விட்டது. தோழர்கள்- நண்பர்கள் ‘வரிசைக்கிரகமாக’ பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள். நாமும் ‘நினைவுக் குறிப்புக்களை’ எழுதிக்கொண்டிருக்கின்றோம். நாளை எமக்கும் ஒரு நண்பர் அல்லது ஒரு தோழர் எழுதக்கூடும்.

பிளாட் அமைப்பு அழிவடைய தமிழ் சமுகம் மத்தியில் ஏலவே நிலவி வந்த சமூகச் சிந்தனைகள் பிரதேச சமுக வேறுபாடுகளுடன் அமைப்பில் நிலவிய சமச் சீரற்ற தொடர்பாடல்கள் என்பவற்றுடன் பின் தளத்தில் நிலை கொண்டதால் “ரா” அமைப்பின் ஊடுருவலும் காரணமாக இருந்ததா?

S.G. Ragavan

புளொட் அமைப்பின் தலைமை சக்திகளின் தவறான போக்குகளே புளொட் சீர்குலைவதற்கு காரணமாக அமைந்ததேயன்றி தமிழ் சமூகத்தில் நிலவி வந்த சாதிய முரண்பாடுகளோ, பிரதேச வேறுபாடுகளோ அல்ல என நினைக்கின்றேன்.
. புளொட் யாழ்ப்பாண சமூகத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அமைப்பல்ல. அது முழுக்க முழுக்க உழைக்கும் மக்களின் விடுதலையை வேண்டி உருவாக்கப்பட்டடிருந்தது. இதன் களப்பணிகள் 1983 யூலைக் கலவரத்திற்கு பின்பே யாழ்குடாநாட்டினுள் தீவிரப்படுத்தப்பட்டது. புளொட்டின் மத்திய குழுவில் பெரும்பாண்மையானோர் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் உள்ளவர்களே.

புளொட்டினுடைய கொள்கைப் பிரகடனம் இன்றளவும் என்னைப் பொறுத்தவரை முற்போக்கானதாகவும், மார்க்சிய வழிப்பட்ட தீர்வுகளை வலியுறுத்துவனவாகவும் அமைந்திருக்கின்றன. ‘’அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்’’ என்ற புளொட்டின் அடிப்படைக் கோசமே அதற்குச் சான்று. தேசிய ‘விடுதலைப்போராட்டத்திற்கு ஊடாக வர்க்கப்போராட்டம்’ என்ற சித்தாந்த- செயப்பாட்டு- போராட்ட வடிவம் இதன் வெளிப்பாடே. அனால் இவை அனைத்தும் எழுத்துக்களாகவும், கீழ் அணித் தோழர்களின் கனவாகவும் இருந்ததேயன்றி இவற்றின் மீது எந்தவித அக்கறையுமற்ற நபர்களாகவே அதிகார ஆசை பிடித்த தலைமைகள் இருந்தன.

1983 யூலைக்குப் பின் யாழ்ப்பாணத்திலும் அரசியல் வகுப்புக்களும், அரசியல் மயப்படுத்தலும், களப்பணியும் தீவிரமாக உருவாகிக்கொண்டுவந்தன. இதன் காரணமாக அரசியல் கல்வியூட்டல் பிரதேச வேறுபாடுகளை , சாதிய முரண்பாடுகளை களைவதிலும், அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான – அதனை நோக்கிய வேலைத் திட்டங்களாகவும் உருப்பெற்றன. அன்றைய கால வெளியீட்டு பிரசுரங்களை அவதானித்தால் இதனை புரிந்துகொள்ளமுடியும். ‘’நிர்மாணம்’’ என்ற அரசியல்- சித்தாந்த- கோட்பாட்டு விமர்சன இதழ் சாதியம் தொடர்பாக பல்வேறு கட்டுரைகளை விவாதங்களை பிரசுரித்துள்ளது. தோழர்கள் ‘சாதிய தற்கொலையும்’, ‘பிரதேச வாத தற்கொலையும்’ செய்துகொண்டவர்களாகவே அன்றைய காலங்களில் காணப்பட்டனர். எனவே புளொட்டின் அழிவுக்கு இவற்றை காரணங்களாக சுட்டிக்காட்டுதல் தவறென்றே நான் நினைக்கின்றேன். பின் தளத்தைப்பொறுத்தவரை புளொட்டின் பயிற்சி முகாம்களில் எந்தவித பிரதேச வேறுபாடுகளோ, சாதிய முரண்பாடுகளோ இருந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை.

ராகவன், புளொட்டின் அழிவுக்கு றோவின் ஊடுருவல் காரணமாக இருந்ததா என கேட்டுள்ளீர்கள். அதை என்னால் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. புளொட்டிற்கும், இந்திய அரசுக்குமான உறவு ஆரம்பம் தொட்டே முரண்பாடு கொண்டதாகவே இருந்தது. இந்தியா எல்லா இயக்கங்களுக்கும் வழங்கிய இராணுவப் பயிற்சி முதலில் புளொட்டிற்கு வழங்கப்படவில்லை. பலத்த முயற்சிகளின் பின்புதான் வழங்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட எண்ணிக்கையோடு. இந்திய அரசு புளொட்டை சந்தேகக் கண்கொண்டே பார்த்தது. இதற்கு புளொட்டில் இருந்த தோழர்களின் மாவோசிய ஆதரவு நிலைப்பாடும், தென் இலங்கை இடதுசாரி தோழர்களின் உறவும், இந்தியாவில் நக்சல்பாரி தோழர்களின் தொடர்பும் ஒரு காரணமாக அமைத்திருந்தது. அத்தோடு ‘’வங்கம் தந்தபாடம்’’ புத்தக வெளியீடு, ஏனைய புளொட்டின் வெளியீடுகளில் காணப்பட்ட மார்க்சிய- மாவோசிய கருத்துக்கள் இந்தியாவிற்கு- றோவுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. மேலும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஏனைய அமைப்புக்களின் ‘‘முறையீடுகளும்’’ காரணமாக இருந்தன.

பின்தள மாநாட்டின் பின் நாங்கள் புளொட் என உரிமை கோரியபோது, நாங்கள் மாவோசிய ஆதரவாளர்கள் என்றும், இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்றும் உமாமகேஸ்வரன் பக்கதிலிருந்து ஒரு கதை உருவாக்கப்பட்டிருந்தது . இதுவும் நாங்கள் புளொட் என உரிமைகோருவதற்கு தடையாக இருந்தது.

மேற்கூறிய விடயங்களை முன்வைத்து ‘’றோ ‘’ திட்டமிட்டு புளொட்டை சீர்குலைத்திருக்கலாம் என்ற முடிவுக்கும் நாம் வரமுடியும். ஆனால் இந்த “முடிவு” எந்தளவுக்கு ஆதார பூர்வமானதாக இருக்க முடியுமென்பது ஆய்வுக்குரியது.
புளொட்டின் அழிவுக்கு காரணமாக நான் கருதுவது புளொட்டின் உள்ளக அதிகார போக்குகளும் அதன்வெளிப்பாடுகளாய் அமைந்த செயல்பாடுகளுமே. எனினும் இது பற்றி முழுமையாக ஆராயப்படவேண்டும். இக் ‘கேள்வி -பதில்’ பகுதியில் இது சாத்தியமற்றதென்றே நான் நினைக்கின்றேன்.

ஈஸ்வரன் பின்னாளில் மீண்டும் பிளாட் (DPLF ) அமைப்பில் இணைந்தாரா? மலையக மக்கள் முன்னணி, தலைவர் சந்திரசேகரனுக்கு ஆதரவாக இருந்த சமயம் இலங்கை படை புலன் ஆய்வாளர்களால் கடத்திச் செல்லப் பட்டு காணாமல் போகச் செய்யப் பட்டாரா? ஈஸ்வரன் பற்றிய தகவல் என்ன?

S.G. Ragavan

ஈஸ்வரன் பின்தள மாநாடு முடிந்து தளம் (இலங்கை) சென்றபின் எந்தவித அரசியல் ஈடுபாடும் கொள்ளவில்லை. தலைமறைவு வாழ்வையே அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. மலையகத்தில் சில காலம் தலைமறைவாக இருந்தார். இக் காலங்களில் மலையக மாணவர்களுக்கு ரியூசன் வகுப்புக்களை நடாத்தினார். எந்தவித கட்சிகளோடும் அவருக்கு உறவு இருக்கவில்லை.பின் சுவீஸ் புலம்பெயர்ந்து 1995ல் அவருக்கு ஏற்பட்ட முளைநரம்பு அடைப்புக் காரணமாக காலமானார்.

Exit mobile version