விளக்கம்
புளொட் நேசன் தொடர்பாக நான் சென்ற கேள்வி பதிலில் அளித்திருந்திருந்த பதில் உண்மைக்குப் புறம்பானதாக, உண்மையை மறைப்பதாக இருப்பதாக சில நண்பர்களும், தோழர்களும் என்னிடம் தெரிவித்தார்கள். இது தொடர்பாக பின்னோட்டங்களும் வந்துள்ளன. இன்று கனடாவில் இருக்கும் நேசனை அறிந்தவர்களுக்கு என் பதில் நகைப்புக்கிடமானதாக மாறிவிட்டதாக சொன்னார்கள். என் தொடர்பான நம்பகத்தன்மையின்மையை இவ்வாறான பதில்கள் அளித்துவிடும் எனவும் சுட்டிக்காட்டினார்கள். நன்றி நண்பர்களே, தோழர்களே
இன்றைய நேசன் பற்றி நண்பர்கள் சுட்டிக்காட்டும் இலங்கை தூதரகத்துடனான தொடர்பு, இலங்கைஅரசு ஆதரவு நிலை, கனடாவில் அவரது வன்முறை இவை பற்றி நானும் அறிந்துள்ளேன். 1985 ஆண்டுக்குப் பின் நேசனுடன் எனக்கு எந்தவித தொடர்புகளும் இருந்ததில்லை. எனவே 1983 – 1985 ஆம் ஆண்டு கால நேசனைப் பற்றிய எனது மனப்பதிவுகளை கொண்டே நான் பதிலளித்தேன்.
மட்டக்களப்பில் போடியார்கள் என்பவர்கள் யார்? போடியார் மரபு அங்கு இப்போது உள்ளதா? யாழ்ப்பாணத்தை விட மட்டக்களப்பில் பெண்களுக்கு உரிமைகள் கூடுதலாக உள்ளதாக சொல்கிறார்களே. மேலும் மட்டக்களப்பில் கம்யூனிச கட்சிகள் ஏன் வளரவில்லை. தயவு செய்து இவற்றிற்கு பதில் தரவும்.
வாசன்
மட்டக்களப்பில் நிலங்களை மிகக் கூடுதலாக தன்னகத்தே கொண்ட நிலவுடைமையாளர்களே ”போடியார்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். மட்டக்களப்பு நிலப்பிரபுத்துவ, நிலமானிய சமூகத்தில் ஓர் கால கட்டத்தில் இவர்களே சமூகத்தின் அரசியல், பொருளாதார விதிகளை உருவாக்குகின்றவர்களாக ஆளுமை பெற்றிருந்தார்கள். ஆனால்; போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருகைக்குப் பிற்பாடு இவர்களுடைய ஆளுமை இருத்தல் குறைக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. காரணம் இப்போடியார்கள் போத்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் அந்நிய அதிகார ஆதிக்கத்திற்கு எதிராகப் போர்கொடி தூக்கியதன் காரணமாக இவர்களின் நிலவுடைமைகள், சொத்துக்கள் காலத்திற்கு காலம் இவ் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் பறிமுதல் செய்யப்பட்டு பல போடிமார்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். ஆங்கிலேயரின் வருகையின் போது இவர்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக ஆங்கிலேயரோடு மட்டக்களப்புக்கு வந்த கிறிஸ்தவ மிசனெறிகளும், அவர்களுக்குத் துணையாக வந்த ஆங்கிலம் படித்த கிறிஸ்தவ சமூகத்தினரும் இந்த மட்டக்களப்பு போடியார்களின் அதிகாரத்தை குறைத்ததில் பெரும்பங்காற்றினர். போடியார்களிடம் இருந்த பெருந்தொகையான நிலங்கள் ஆங்கிலேயரால் பறிக்கப்பட்டு கிறிஸ்தவ மிசனெறிகளுக்கு வழங்கப்பட்டதோடு, மிகக்குறைந்த விலையில் இவர்களின் காணிகள் பறிக்கப்பட்டு யாழ்ப்பாண கிறிஸ்தவ ஆதிக்க சமூகத்தினருக்கு வழங்கப்பட்டது.
இதன் காரணமாக போடியார்கள் அரசியல், பொருளாதார வலுவிழந்து காலப்போக்கில் இன்று ஒரளவு மறைந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். மட்டக்களப்பில் பலர் தங்கள் பெயர்களில் போடியார் என்ற பதத்தை கொண்டிருந்தாலும், கடந்த காலங்களைப் போன்று அவர்களிடம் பாரிய நிலச்சொத்துக்கள் இல்லையென்றே நான் நினைக்கிறேன் எனினும் போடியார் மரபு ஒரளவு தொடர்கிறது. இன்றைய மட்டக்களப்பில் பெரும் நிலச்சுவாந்தர்களாக இருப்பவர்கள் கிறிஸ்தவ மிசனெறிகளும் அவர்களோடு வந்த நபர்களுமே.
பெண்கள் உரிமை பற்றியது
பெண்உரிமை என்பது அதிகப்படியான வார்த்தையென்றே நான் கருதுகிறேன். மட்டக்களப்பு சமூகம் ஏனைய சமூகங்களைப் போன்று ஆண் மையம் கொண்டதாகவே அமையப் பெற்றிருக்கிறது. எனினும் ஏனைய பிரதேங்களை விட பெண்களுக்கான சொத்துரிமைப் பாதுகாப்பு என்பது மட்டக்களப்பில் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் போடியார் மரபு உருவாக்கிய மரபுவழி சமூகச்சட்டங்களே. இது ”முக்குவர் சட்டம்” என அங்கு சொல்லப்படுகிறது. இச்சட்டத்தில் தாய்வழிச்சமூக முறைமைகள் பேணப்படுகின்றன. குறிப்பாக நிலங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் பெண்களுக்கு கூடுதலாக அளிக்கப்படுகிறது. இதனால் பெண்களின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு ஒரளவு பேணப்படுகிறது. இன்று ”முக்குவர் தேசவழமைச் சட்டம்” காலவதியாகிவிட்டது.
யாழ் தேசவழமைச் சட்டத்தை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சட்ட வடிவமாக்கியது போன்று மட்டக்களப்பு போடிமார்களால் அம்முக்குவர் தேசவழமைச்சட்டத்தை நிலை நிறுத்த முடியவில்லை, காரணம் ஆங்கிலேயர்ளோடு இருந்த முரண்பாடுகளும், இயல்பாகவே இவர்களுக்கு ஆங்கிலமொழி மீது இருந்த வெறுப்பும், இதனால் ஏற்பட சட்ட ஆங்கிலப்பற்றாக்குறையும் முக்குவர் தேசவழமைச்சட்டத்தை ஆங்கிலேயர்கள் காலத்தில் சட்டப்பதிவாக்க முடியாமல் செய்துவிட்டது.
கம்யுனிசக்கட்சி பற்றி
உண்மையில் கூலி விவசாயிகளும் தொழிலாளர்களும் யாழ்ப்பாணத்தை விட மட்டக்களப்பிலேயே அதிகமாகவுள்ளனர். ஒரு பலமான இடதுசாரி தொழிலாளர் சங்க அமைப்பொன்று அங்கு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் தோற்றம் இல்லாமலேயே போய்விட்டது. 1960களில் கேரளாவிலிருந்து இடதுசாரி தொழிற்சங்கத்தை சேர்ந்த தோழர் கிருஷ்ணன் குட்டி என்பவர் மட்டக்களப்பில் தொழிற்சங்க அமைப்புக்களை உருவாக்குவதற்காக வந்ததாகவும், மட்டக்களப்பில் நீண்டகாலம் தங்கி பல முயற்சிகளை மேற்க்கொண்டும் தொழிற்சங்க அமைப்பு- இடதுசாரிகருத்துக்களை உருவாக்க முடியாமல் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதைப்பற்றிய அரசியல் சமூக ஆய்வுகள் அவசியம் தேவை. விஜ்ய் போன்ற அரசியல், சமூக ஆய்வாளர்கள் இதனைக் கவனத்தில் கொள்வது ஆரோக்கியமானது.
முன்னிலை சோசலிச கட்சி பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?
பிறேம் பரீஸ்
இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற அனைத்து தேசிய இன மக்களுக்குமான விடுதலையை, சமத்துவத்தை, சுதந்திரத்தைக் கோரும் ஓர் இடதுசாரி அமைப்பின் உருவாக்கத்தை நாம் வரவேற்றே ஆக வேண்டும். இந்த அடிப்படையில் இலங்கையில் உருவாகி இருக்கும் இலங்கை முன்னிலை சோசலிச கட்சியை நாம் பார்க்க முடியுமா என்பதுதான் இன்றைய கேள்வி.
கடந்த காலத்தில் இன ஐக்கியத்தைப் பேசி, ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களுக்குமான சமஉரிமை என்ற கோசத்தை முன்வைத்து உருவான ஜேவிபி இன் வரலாற்றையும், அது எவ்வாறு இனவாத அரசியலை தீவிரமாக கடைப்பிடித்தது என்பதையும் நாம் அறிவோம். அவ்வாறான தாய்கட்சியான ஜேவிபியிலிருந்து அதிகாரப்போட்டியின் காரணமாகப் பிரிந்து, அதே அரசியலோடு தமிழ்மக்களைக் கவரும் வண்ணம் சில “தயாரிப்பு” களுடன் உருவானவர்கள்தான் இவர்கள். இவர்களின் அடிப்படை நோக்கமே பாரளுமன்ற கதிரைகளை கைப்பற்றுவதே அன்றி வேறொன்றும் இல்லை
இவர்களின் தாய்க்கட்சியான ஜேவிபியோடு எனக்கு தனிப்பட்ட அநுபவங்கள் உண்டு.1980 களில் இடதுசாரிக் கருத்துக்களால் கவரப்பட்ட நாங்கள் ரோகண விஜவீராவும், லயனல் போபேக்கேயும் பேசிய தேசிய ”இனங்களின் சுயஉரிமை கோட்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம்; அதேநேரம் ஐக்கிய இலங்கைக்கு தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்போம்” என்ற கோசத்தில் கவரப்பட்டு ஜேவிபியில் குறிப்பிட்ட காலம் அரசியல் வேலைகளைச் செய்தவர்கள் நாங்கள். எனினும் அக்கட்சி இனவாத அரசியலையே அதன் அடித்தளமாக கொண்டிருப்பதைக் நாம் கண்டு அதிலிருந்து வெளியேறினோம்.
அக்காலத்தில் ஜேவிபி கொண்டிருந்த தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைக் கூட இவர்கள் ஏற்றுக் கொள்ள தயாரில்லை. அதிகாரப்பரவலாக்கத்தையே இவர்கள் நிராகரிக்கின்றார்கள். ”இனவாதத்திற்கு எதிரான போராட்டம்” என்பது யாருடைய இனவாதத்திற்கு எதிரானது என்பதை இவர்கள் வரையறுக்க வேண்டும். ஒரு ஒடுக்கின்ற பேரினவாத இனச் சமூகத்திலிருந்து உருவாகுகின்ற இவர்கள் முதலில் செய்ய வேண்டியிருப்பது தாம் சார்ந்த இனத்தில் படிந்திருக்கும் இனவாத கருத்துக்களுக்கு எதிராகவும் தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் ஐக்கியத்தையும், அவர்கள் குறித்த உரிமைகள் பற்றிப் பேசுவது முக்கியமாகிறது. ஆனால் இவர்களால் தமிழ் சமூகத்தில் இனஐக்கியம், சமத்துவம் பேசுகின்றார்களே அன்றி சிங்கள மக்கள் மத்தியில், இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற ஏனைய தேசிய இனங்களின் உரிமை பற்றி எதுவுமே பேசுவதில்லை. இதுதான் இவர்களின் தாய்கட்சியிடம் பயின்று வந்த ”தேர்ந்த” அரசியல் தந்திரம். மார்க்சியத்திற்கு லெனின் வழங்கிய பெருங்கொடை ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைக்கோட்பாடான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது. ஆனால் மார்க்சியர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைக் கொள்கை அளவில் கூட ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
என்னைப் பொறுத்தவரை; என்னிடம் இவர்கள் பற்றி சில சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாதாகவுள்ளது. இவர்கள் இலங்கை, மேற்குலக நாடுகளின் “தயாரிப்பு”க்களோ என நான் சந்தேகம் கொள்கிறேன். முள்ளிவாய்காலுக்குப் பின் இலங்கையில் புதிய விடுதலைச்சிந்தனைகள் தமிழ் பிரதேசங்களிலும், தென்னிலங்கையிலும் உருவாகாமல் இருப்பதற்கு இவ்வாறான ”இடதுசாரி அமைப்பு” என்ற போர்வையோடு அமைப்பின் தோற்றம் “ஒரு சிலருக்கு” தேவைப்படுகிறது. அந்த தேவையைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையோ இது எனத் தெரியவில்லை.
வடக்கில் மிகத்தீவிரமாக ”தமிழ்தேசிய இனவாதம்” பேசுகின்ற குமார் பொன்னம்பலத்தின் புத்திரரான கஜேந்திரகுமாருக்கு மறைமுகமாக மகிந்தாவின் ஆதரவு இருப்பது போல, இவர்களுக்கும் உண்டோ தெரியவில்லை. வட கிழக்கில் இவர்களின் செயற்பாடும் இவர்களிடம் இருக்கும் தாராள பொருளாதாரமும் சந்தேகத்திற்குரியவையே. ”நான் அடிப்பது போல் அடிப்பேன், நீஅழுவது போல் அழு” எனும் சொல்லாடல் தான் எனக்கு இங்கு நினைவுக்கு வருகிறது.
புளட் உட்கட்சி போராட்டத்தை தாங்கள்தான் நடாத்தியதாக ரெசோவைச் சேர்ந்த ஒரு சிலர் சொல்கிறார்கள். அதேவேளை உட்கட்சிபோராட்டத்தை சுப்பையா (கெளரிகாந்தன்) போன்றோர் நடாத்தியதாக இன்னொரு சாரார் சொல்கிறார்கள். கெளரிகாந்தன் பற்றி மிக மோசமான குற்றச்சாட்டுக்களை இன்னொரு சாரார் சொல்கிறார்கள். அசோக் அவர்களே உங்கள் கருத்தென்ன?
கணேஸ்
புளொட் அமைப்பின் உட்கட்சிப்போராட்டத்தை, தளமாநாட்டை நடத்தியத்தில் தளத்தில் இருந்த அனைத்து தரப்பினருக்கும் பங்குண்டு. உதாரணமாக புளொட் உடன் விசுவாசமாக செயற்பட்ட இராணுவ பிரிவிலிருந்து தளத்தில் இராணுவப் பொறுப்பிலிருந்த சின்ன மென்ரிசுக்கு கூட பங்குண்டு. எனவே ஒரு சிலர் தாங்கள் தான் நடத்தியதாக கூறுவது அதிபிரசங்கித்தனமே. குறிப்பிட்ட ஒருசிலர் புளொட்டின் உட்கட்சிபோராட்டத்தை தாங்கள் நடாத்தியது என்று சொல்வதற்கூடாக உட்கட்சிபோராட்டத்தின் வலுவை, அதன் கனத்தை கொச்சைப்படுத்துகின்றார்கள். இது இவர்களுக்கு புரிவதில்லை.
அதேநேரம் உட்கட்சிப் போராட்டத்தை முன்நகர்த்தியதில் தமிழ் ஈழமாணவர் அமைப்பு (ரெசோ), தொழிற்சங்க அமைப்புக்களுக்கும் பாரிய பங்குண்டு. குறிப்பாக ரெசோவைச் சேர்ந்த குருபரன், தீபநேசன், தனஞ்சயன், தமிழ், மகிழ்ச்சி, சுகந்தன், கலா போன்றவர்களையும் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராஜன், ஐபி என்ற மூர்த்தி போன்றவர்களும், செல்வி, நந்தா , வனிதா போன்றவர்களையும் கவனம் கொள்ளலாம். இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், உட்கட்சிப்போராட்டத்தை- தளமாநாட்டை நடாத்துவதில் தீவிரமாக பக்கபலமாக நின்ற தொழிற்சங்க அமைப்பு பற்றி; தமிழ்ஈழமாணவர் பேரவை (ரெசோ) பற்றி பேசுகின்றவர்கள், இம் அமைப்புக்களுக்கு பொறுப்பாக இருந்த என்னைப் பற்றியோ, தளமாநாட்டை நடாத்துவதற்கு உறுதுணையாக இருந்த அன்றைய தளப்பொறுப்பாளர் குமரனைப் பற்றியோ ஒரு மூச்சுக் கூட விடமாட்டார்கள்! இதுதான் இவர்களின் ”நரித்தன” அரசியல் என்பது!.
கெளரிகாந்தன் தொடர்பாக பிற்காலங்களிலும், இன்றும் பல்வேறு அபிப்பிராயங்களும், குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. கெளரிகாந்தன் தொடர்பாக முரண்படும் தோழர்கள் நண்பர்கள் இன்றும் உள்ளனர். அவர் பற்றி அவர்கள் வைக்கும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை நான் மறுதலிக்கவில்லை அதை ஏற்றுக் கொள்கிறேன். அவை தொடர்பாக என்னிடமும் விமர்சனங்களுண்டு.
ஆனால்; அதேநேரம், உணர்ச்சிகளோடும், தீவிரத்தோடும் இருந்த புளொட்டின் உட்கட்சி போராட்டத்தை; தத்துவார்த்த போராட்டமாக நகர்த்திச் செல்ல ஊக்கமும்- வடிவமும் கொடுத்தவர் கெளரிகாந்தன் என்பதை யாரும் மறுக்க முடியாது. இராணுவ மயக்கவர்ச்சி கொண்டு 1983ல் இருந்த புளொட் டை சித்தாந்த ரீதியாக,இடதுசாரிக் கருத்தியலில் வழிநடாத்தியதில் தோழர் தங்கராசாவுக்கும் , தோழர் கெளரிகாந்தனுக்கும் பெரும் பங்குண்டு. வட கிழக்கில் நான் தொழிற்சங்க அமைப்புக்குப் பொறுப்பாக இருந்த போதிலும், அந்த அமைப்புக்களை அரசியல் மயப்படுத்தியதில் கெளரிகாந்தனுக்குப் பெரும் பங்குண்டு. புளொட்டினுடைய தோழர்கள் கூலி விவசாயிகளிடமும், கூலித் தொழிலாளர்களிடமும் மிகப் பின் தங்கிய ஒடுக்கப்பட்ட கிராம மக்களிடமும் சென்று, வேலை செய்வதற்கான அரசியல் தத்துவார்த்த பலத்தை, அதன் செயல் ஊக்கத்தைக் கொடுத்தவர் கெளரிகாந்தன் என்றே சொல்வேன். தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இடது சாரி இயக்கங்களோடும், தோழர்களோடும் நாங்கள் அரசியல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட போது அவ்வுறவுகளுக்கு பக்க பலமாகவும், இரு சாராரும் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பின் உறுப்பினராகவும் கெளரிகாந்தன் இருந்து முக்கிய பங்களித்தார் என்பதை நாம் மறுத்துவிடவோ மறந்து விடவோ முடியாது.
புளொட்டுக்கு பின்னாலான கெளரிகாந்தன் தொடர்பான அரசியல் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளுக்கு, தவறுகளுக்கு ஒருவரின் கடந்த கால அரசியல் செயற்பாட்டை, அதன் முக்கியத்துவத்தை புறக்கணிப்பது ஆரோக்கியமானதல்ல என்றே என்று நான் கருதுகின்றேன்.
it seems that uma has been killed by RAW. Whats their purpose behind the killing?? Even though uma helped RAW to colonize Maldives he was killed be them. why? RAW managed to handle LTTE till the end for their own purpose why not PLOTE.
Thamari
உமா மகேஸ்வரனின் கொலையில் இந்திய உளவுத்துறையான ”றோ” சம்பந்தப்பட்டிருக்கும் என்று நான் நம்பவில்லை. புளொட் தொடர்பாக ஆரம்ப காலம் தொட்டே இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்பது வேறுவிடயம். அதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் உண்டு .