Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அகதிகள்:அதிகார வர்க்கத்தின் குரூர விருப்பம்-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

 
உலகம் முழுவதும் தீராத பிரச்சினைகளோடு வாழ்கிறவர்கள் யார் தெரியுமா? அகதிகளே. அகதி என்றாலே அலைச்சல், துயரம், பிரச்சினை, பசி , வறுமை  என்பவற்றின் கூட்டுருவாக்கம்தான். அல்லது இந்தத் துன்பியல் வாழ்க்கையின் தொகுக்கப்பட்ட அடையாளமே அகதி. 

இந்த அகதிகள் இரண்டு வகையில் உருவாகின்றனர். ஒன்று இயற்கை அனர்த்தங்களின் வழியாக. அடுத்தது அரசியல் காரணங்களுக்காக. அல்லது, அரசியல் காரணங்களின் வழியாக.

இலங்கையில் இரண்டு காரணங்களாலும் அகதிகள் உருவாகியிருக்கிறார்கள். இலங்கையில் வாழுகின்ற எல்லாச் சமூகத்தினரும் அப்படி அகதிகளாகியிருக்கிறார்கள். வெள்ளப்பெருக்கு, புயல், சுனாமி போன்ற இயற்கைக் காரணங்கள்.

அதைப்போல அரசியற் காரணங்களாலும் சகல தரப்பினரும் அகதியாகியிருக்கிறார்கள் – அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில் அரசியல் ரீதியாக அகதியாக்கப்படுவோரின் நிலை இன்னும் மோசமானது. அரசியல் காரணங்களின் வழியாக உருவாகும் அல்லது உருவாக்கப்படும் அகதிகள் பழிவாங்கப் படுகிறார்கள். பகைமையின் புள்ளியில் நிறுத்தப்படுகிறார்கள்.

அல்லது எதன் விளைவாக அகதியானாலும் அரசியல் காரணங்களின் அடிப்படையில் அகதிகளை அணுகுவதனால் – பகைக் கண்ணோட்டத்தில் அணுகப்படுவதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானவையாக இருக்கின்றன.

எந்த வகையில் அகதிகளாகியிருந்தாலும்  அவர்கள் அரசியல் ரீதியாகவே அணுகப்பட்டுள்ளனர். இப்போதும் அரசியல் ரீதியாகவே அகதிகளின் பிரச்சினை கையாளப்படுகிறது.

சிங்களச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அகதியானால் ஒரு விதமாக – அரசாங்கத்தின் அனுசரணைகள் அதிகமாக இருக்கும்படியாக பார்க்கப்படுகிறது. விரைவாக அந்த மக்கள் அகதி நிலையில் இருந்து இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். இதற்கான பொறிமுறைகள் வேகமாகச் செயற்படுகின்றன.
இந்த அகதிகளுக்கான பராமரிப்புகள், மீள் கட்டுமானங்கள், புனரமைப்பு, மறுவாழ்வுத் திட்டங்கள், உதவிகள், நட்ட ஈடுகள் எல்லாம் சிறப்பாகவும் விரைவாகவும் நடந்தேறுகின்றன.

ஆனால், தமிழ், முஸ்லிம் மக்கள் அகதியானால் அது இரண்டாம் பட்சம், நாலாம் பட்சம் என்ற மாதிரியே பாராமுகமாக, இழுத்தடிக்கப்படும் ஒரு விவகாரமாக இருக்கிறது.

தமிழ் மற்றும் முஸ்லிம் அகதிகள் ஆண்டுக் கணக்காக அகதி நிலையிலேயே பராமரிக்கப்படுகிறார்கள். அகதிகளைப் பராமரிப்பதை விடுத்து, அகதி நிலையைப் பராமரிக்கும் பொறிமுறை வளர்ச்சியடைந்திருக்கிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் அகதிகள் இன்னும் முறையான நட்ட ஈட்டைப் பெறாதவவர்களாகவும் ஒழுங்கான மறுவாழ்வில் இணைக்கப்படாதவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படியே தமிழர்களும்.

இதைப்போல விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த பிறகு, புலிகளின் அச்சுறுத்தல் நீங்கய பின்னும் இன்னும் வடபகுதியில் இருந்து வெளியேறிய முஸ்லிம்கள் வடக்கே ௲ தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை. அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பக்கூடிய ஏற்பாடுகள் அங்கே செய்யப்படவுமில்லை.

இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஏகப்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அமைச்சர்கள், அரச அதிகாரிகள், அரசியற் பிரமுகர்கள் எல்லோரும் கலந்து கொண்டு ஏராளமாகக் கதைக்கிறார்கள். திட்டமிடல்கள், வாக்குறுதி வழங்கல்கள், காலக்கெடு விதிப்புகள் எல்லாமே நடக்கின்றன.

ஆனால், புத்தளத்தில் அகதி முகாம்கள் இன்னும் பெருகிக் கொண்டே போகின்றன. அங்கேதான் வடக்கின் முஸ்லிம்கள் வெயிற் காய்கிறார்கள்.
இதைப்போலவே வடக்கிலும் கிழக்கிலும் இருந்து 1980 களின் நடுப்பகுதியில் இருந்து அவ்வப்பொழுது வெளியேறிய தமிழர்களும் இன்னும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள்.

இந்த அகதிகளைப் பற்றிய சரியான புள்ளி விவரம்கூட யாரிடமும் கிடையாது. அகதிகள் தாங்கள் அகதிகளா என்பதையே ஏறக்குறைய மறந்து, லும்பன்களாகவும் சேரிப்புறத்து ஆட்களாகவும், எல்லா நம்பிக்கைகளையும் இழந்து ஏதோ போகிற போக்கில் வாழ்கிறவர்களாகவும்; ஆகிவிட்டார்கள். இப்படியானவர்கள், ஏறக்குறைய ஐம்பதாயிரத்துக்கும் எழுபதாயிரத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்று முன்னர் தொண்டர் நிறுவனமொன்றில் பணியாற்றிய ஒருவர் சொல்கிறார். 

சிங்கள மக்களில் யாருமே நீண்டகாலமாக அகதியாக இருந்ததில்லை. ஆனால், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாகவே இருக்கிறார்கள். இன்னும் வரையறுக்க முடியாத காலத்துக்கு அவர்கள் அகதிகளாகவே இருக்கக் கூடிய சாத்தியங்களே காணப்படுகிறது.

உயர்பாதுகாப்பு வலயங்களும் இராணுவ வலயங்களும்தான் இந்த அகதிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டியவை. ஆனால், உயர் பாதுகாப்பு வலயங்களுக்கான காரணங்களின் பெறுமானம் வரவர அதிகரித்துக் கொண்டே போகிறது. அதைப்போன்றே, இராணுவ வலயங்களின் உருவாக்கமும் அதிகரித்துக் கொண்டுசெல்கிறது. இவை அகதிகளை நிரந்தரமாகவே வைத்திருக்கப் போகிறதோ என்றுகூட எண்ண வைக்கின்றன.

தவிர, கிழக்கில் இறுதியாக நடந்த யுத்தத்தின்போதும் வன்னிப் போரின் விளைவாகவும் அகதியானவர்களைப் பராமரிக்கும் விதத்தில் காட்டப்படும் பாரபட்சங்கள், பாராமுகங்கள் எல்லாம் மிகவும் மோசமானவையாக இருக்கின்றன.
இந்த அகதிகளுக்கு வழங்கப்படுகின்ற அரிசி, கோதுமை மா, எண்ணெய் போன்ற பொருட்களே தரமற்றிருக்கிறது. அளவுகள் மாறுபடுகின்றன. இதைப்பற்றிய யாரிடம் முறையிடுவது? யார் இதற்கான தீர்வைக் காண்பது?

இவ்வளவுக்கும் ஐ. நா. அமைப்பின் துணை நிறுவனமான உலக உணவுத்திட்டத்தின் மூலமாகவே இந்த உலர் உணவுப் பொருட்கள் மக்களுக்கு ௲ அகதிகளுக்கு – வழங்கப்படுகின்றன.

உலக உணவுத்திட்டம் நிதியை வழங்கும். ஆனால், அந்த நிதிக்குரிய பொருட்களைக் கொள்வனவு செய்வது, உள்ளுர்ப்பணியாளர்களே. அதனால், அவர்கள் பெரிய மாஜின் ஒன்றை வைத்து தரமற்ற பொருட்களைக் கொள்வனவு செய்து, அதிக விலையைக் கணக்குக் காட்டுகிறார்கள் என்று தொண்டு நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் உள்வீட்டு விசயத்தைச் சொல்லித் துக்கப்படுகிறார்.

ஒரு பக்கத்தில் அரசாங்கத்தின் பாரபட்சங்கள். தமிழ் – முஸ்லிம் அகதிப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் இல்லாத நிலை. அதைப்பற்றியே சிந்திக்காத போக்கு. இதற்கு ஆதரவழிப்பதாக தமிழ் முஸ்லிம் கட்சிகளின் பாராமுகம். அல்லது அரசியற் தேவைகளுக்காக இந்த அகதிகளின் பிரச்சினையை தூக்குவதும் பின்னர் கிடப்பில் போடுவதுமான ஒரு தந்திரக்கையாளல்.

இனவொதுக்கல் முறையை அரசியல் பாரம்பரியமாகக் கொண்ட அரசாட்சியில் இதெல்லாம் சாதாரணமானவையே. அதேபோல பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசியலைப் பற்றிய பிரக்ஞையற்ற அரசியல் முன்னெடுப்புகளிலும் இவை சாதாரணமான விசயங்களே.

ஆனால், அப்படி பாரபட்சம், நீதியின்மை, அடிப்படை உரிமை மீறல்கள் போன்றவற்றால் பிற சமூகங்கள் பாதிக்கப்பட்டால், அதைத் தடுப்பதும் அதற்கெதிராகக் குரல் கொடுப்பதும் சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும்.
இலங்கையில் அகதிகள் விவகாரத்தோடும் அகதிகளுக்கான பணிகளோடும் பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பணியாற்றியிருக்கின்றன. இப்போதும் அவை பணியாற்றி வருகின்றன. அப்படியானால், அவற்றின் பதிவுகளும் அனுபவங்களும் என்ன சொல்கின்றன?

சிலவேளை இந்த விவகாரத்தில் தலையிட்டால், அதை இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்க்கக்கூடும் என்று இந்த அமைப்புகள் கருதியிருக்கலாம். இந்த அமைப்புகளின் விதிமுறையும் ஏறக்குறைய அப்படித்தான் இருக்கிறது. ஆனால், இதை உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடாக் கொள்கை என்று கூற முடியாது. இது மனிதாபிமானப் பிரச்சினை. மனித உரிமைப் பிரச்சினை. எனவே நேரடியாகத் தலையிடாமல், மறைமுகமான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுப்பதற்கு இந்த அமைப்புகள் முயலவேண்டும்.

மனிதாபிமானப் பிரச்சினை என்றபடியால்தானே இந்த அமைப்புகள் இந்த மக்களுக்கு உதவுகின்றன. எனவே மனிதாபிமான அடிப்படையிலும் மனித உரிமைகளின் அடிப்படையிலும் இவற்றை இந்தச் சர்வதேச தொண்டர் அமைப்புகளும் ஐ.நா வும் பிற மனித உரிமை அமைப்புகளும் கவனத்திற் கொண்டு செயற்படுவது அவசியம்.

தாங்கள் கொடுக்கின்ற அரிசி, பருப்பு, கோதுமை மாவையே ஒழுங்காக, சனங்களுக்குப் பிரயோசனப்படுகிற மாதிரிக் கொடுக்கிறார்களில்லை. அப்படியிருக்கும்பேர்து, அகதிகளின் ஒட்டுமொத்தப்பிரச்சினையைப் பற்றியா இவர்கள் கதைக்கப் போகிறார்கள்? என்று கேட்கிறார்கள் நீண்டகால அகதியொருவர்.

இது அகதிகளின் நம்பிக்கையீனத்தையும் மன உளைச்சலையும் வெளிப்படுத்தும் கூற்றாகும். இந்த அகதிகள் அரசாங்கத்தின் மீதும், அரசியற் கட்சிகளின் மீதும் சர்வதேச சமூகத்தின் மீதும் நம்பிக்கை இழந்திருக்கின்றனர.
இப்போது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய செய்திகள் அகன்ற பரப்பைப் பிடித்திருக்கின்றன. இந்த விசாரணைகளுக்கு முக்கியத்துவமும் அவசியமும் உண்டு. ஆனால், இதற்கும் அதிக அவசியத்தையும் அவசரத்தையும் அதிக வலுவையும் கொண்டது அகதிகள் தொடர்பான விவகாரம்.
அகதிகள் உயிரோடு இருப்பவர்கள். நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கொண்டவர்கள். நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உரியவர்கள். என்பதால், அகதிகளின் பிரச்சினை முக்கியபிரச்சினையாகும்.

முட்கம்பிவேலிகளுக்குள் தடுக்கப்பட்டிருக்கும்போதுதான் அகதிகளுக்குப் பிரச்சினை என்றில்லை. இப்பொழுது அவர்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் கொண்டு வந்து குடியமர்த்தப்பட்டிருக்கும்பொழும் அகதிகளுக்குப் பிரச்சினைகள் உண்டு. கல்வி, தொடர்பாடல், வீட்டுவசதி, தொழில், போக்குவரத்து, மருத்துவம் என்ற அடிப்படைத் தேவைகளே பிரச்சினைக்குரியனவாக இருக்கின்றன. இது மனிதாபிமானப் பிரச்சினை. வாழ்வாதாரப் பிரச்சினை. வாழ்க்கைப்பிரச்சினை. அடிப்படை மனித உரிமைப் பிரச்சினை.

இந்தப் பிரச்சினைகள் ஒன்றல்ல இரண்டல்ல. அவர்களிடமிருந்த அடிப்படை வசதிகளும் வளங்களும் மீள் நிலை செய்யப்படும் வரையில் அவர்கள் அகதிகள்தான். அந்த மீள்நிலையை உருவாக்கும் வரை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இந்த அகதிகள் விவகாரத்தில் பொறுப்பும் பங்கும் உண்டு.

இந்த மீள் நிலைக்குத்தான், புனரமைப்பும், மறுவாழ்வும், நட்டஈடும், மீள் கண்டுமானங்களுமாகும். ஆனால், அவை செய்யப்படவில்லை.
ஆகவே சட்ட ரீதியாகவே இது தவறான செயல். மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால் இது பெரும் பிழையான நடவடிக்கை. ஆனால், போர்க்குற்றங்களுக்கு அதிக கவனத்தை அளிக்கும் சர்வதேச சமூகமும் தமிழர்களும் அகதிகளின் பிரச்சினைகளுக்கு அதிகளவு கவனத்தைக் கொடுப்பதில்லை.

போர்க்குற்ற விசாரணைக்கு நிகரான வலுவைக் கொண்ட உயிருள்ள மனிதர்களின் வாழ்க்கை மற்றும் அடிப்படை மனித உரிமை விவகாரம் இது. என்றபோதும் உலகம் இதன்மீது கவனத்தைக் குவிக்காதது ஏன்? நாமும்தான்.
இவ்வாறு நமக்கு முன்னே இருக்கும் ஒரு தலையாய பிரச்சினையின் மீது, மக்களின் முடிவற்ற அவலத்தின் மீது நாம் கவனத்தைக் குவித்து, அந்தப் பிரச்சினையின் தீர்வுக்கு முயற்சிக்கவில்லை என்றால், அதற்குரிய குற்றவாளிகளாக நாமே இருப்போம்.

அகதிகள் என்பது சிதைந்த வாழ்வை உருவாக்கும் காரணிகளே. அவ்வாறு சிதைந்த வாழ்க்கையை உருவாக்கவே அரசாங்கமும் ஆட்சியாளர்களும் விரும்புகின்றனர்.

அதிகார வர்க்கத்தின் இந்த குரூர விருப்பத்துக்கு எதுவரையில் எல்லோரும் ஒத்துப்போவது? இது பான் கீ மூனின் தரப்புக்கும் சேர்த்துத்தான்.
 

 

Exit mobile version