இவ்வாறான சுரண்டல்கள் சில ஈழத் தமிழர்களை பல்தேசிய நிறுவனங்களை நடத்த உதவியிருக்கிறது. இந்த நிறுவனங்களைத் தமிழர்களின் காவலர்கள் என்று தமிழினவாதிகள் பிரச்சாரம் செய்த்வரும் சூழலில் சுரண்டல் நியாயமானதே என்ற பொதுப்புத்தி சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுவருகிறது.
பிரித்தானியாவிலேயே ஊதியம் கேட்டவர்கள் மீது வெறித்தனமாகத் தாக்குதல் நடத்திய பல்தேசிய நிறுவனங்கள் இன்று மக்களின் காவலர்களாகக் காட்டப்படுகின்றனர். அது தமிழர்களின் முன்னேற்றம் என்று பிழைப்புவாதிகள் பரப்புரை செய்கின்றனர். புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிகாரத்திலுள்ளவர்களையே தமிழினவாதிகள் பாதுகாக்கின்றனர் என்பதால் தமிழ்த் தேசியம் ஒடுக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுகிறது.இத் தேசியப் போலிகள் தமிழ் அதிகார வர்க்கத்தைப் பாதுகாப்பதற்காகவே தமிழர்கள் குறித்துப் பேசுகின்றனர்.
பிரித்தானியவை நோக்கிக் கனவுகளோடு வரும் தமிழ் இளைஞர்களுக்கு அந்த நாட்டில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை. சில வேளைகளில் பிரயாணச் செலவிற்கே போதாத ஊதியத்திற்காக தமிழ் முதலாளிகளிடம் அடிமைகள் போன்று வேலைசெய்யும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர். மாணவர்களுக்கான வேலை செய்யும் உரிமையை அரசு நிராகரித்து வருவதைப் பயன்படுத்திக்கொள்ளும் வியாபாரிகள் அவர்களை அடிமைகளாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
பெண்கள் பாலியல் வதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பல மணிநேரங்கள் தொடர்ச்சியாக வேலை வாங்கிக்கொள்ளும் வர்த்தகர்களின் நடவடிக்கைகளால் மாணவர்கள் உடல், உள நலம் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஈழத் தமிழர்களில் அவலங்களை முன்வைத்துப் புலம் பெயர் நாடுகளில் பிழைப்பு நடத்தும் தமிழ்த் தலைமைகள் என்று கூறிக்கொள்ளும் கொள்ளையர்கள் புதிதாகப் புலம்பெயர்பவர்களைக் கண்டுகொள்வதில்லை.