ஆரத் தழுவுகின்றன அகதிகளை
யுத்தங்களின் ரகசியங்கள் புரியாத
அப்பாவி மக்களின் மனங்கள்
அப்பழுக்கற்ற நேயத்தின் பிரவாகத்தில்
ஜனநாயகம் தருகிறோம்
நல்லாட்சி அமைக்கிறோம் – போலி முழக்கங்கள்
புறந்தள்ளி
மனித தன்மை வாழ்வதற்காய்
மக்களின் மீள் சேர்க்கை ஆரம்பமாகின்றது – இனி
சிறு பொறிகள் பெருந் தீயாகும்
தம்மை போல் அச்சமற்று
தம்மை போல் பசியற்று
தம்மை போல் மகிழ்ந்து
தம்மை போல் வாழ்ந்து போகட்டும்- வானம் போல்
விரிந்த மென்மை மனங்கள்
கண்ணீரை மட்டுமா துடைக்கும்
செந்நீரையும் அவையே நிறுத்தும்!
நெடுந்தூரங்களில் இருந்து
பாதங்கள் கொப்பளிக்க
நடந்து வந்தவர் வருக
பசியும் தாகமும் வருத்த
கண்கள் ௶ஞ்சையாகி
மயங்கி சோர்ந்தவர்
வருக
மனிதம் மீதான நேசிப்பில்
களங்கமற்ற இதயங்கள்
கரங்களை நீட்டி வரவேற்கும்
பிறப்பதற்கு முன்னரே
தாயின் கருவறைக்குள்ளேயே
அகதியானவர் வருக
பிறந்து சில மணித்துளிகளுள்
அகதியானவர் வருக
அனாதையானவரும் வருக
நிலத்தை இழந்தவர் வருக
அதன் மீதான அனைத்தையும் இழந்தவர்
மூச்சை இழக்கு முன் வருக
குருதியும் கண்ணீரும் பெருகிட
கடல்களில் தரைகளில்
சிதறிடும் மரணத்தை – இனி
நெடு நேரம் பொறுத்திடார்
அடக்கப்படுதலினதும் கொல்லப்படிதலினதும்
அடையாளங்களாய்
முள் வேலிகள் விரிவடைகின்றன
முள்ளி வாய்க்காலில் தொடங்கி
பனி உறையும் தேசங்களின் எல்லைகள் ஈறாக
கரங்களும் மனங்களும் இணையும்
தீ மூண்ட நெஞ்சினராய்
வெகுண்டெழும் மக்கள் கூட்டம்
வரலாற்றுப பாதையில்
திசை திரும்பி பயணிக்கும்
அன்றைய நாளில்
அடக்கும் அதிகாரம் அகதியாகும்!
சுதந்திரம் என்பது என்னவென்றும்
நல்லாட்சி என்பது என்னவென்றும்
பாடங்கள் புகட்டும் அந்த
விடியலே விரைக!