இலங்கை போன்ற பாசிசமும் பேரினவாதமும் அரசாளும் நாடுகளில் மட்டுமல்ல புலம்பெயர் ஐரோப்பிய நாடுகளில் கூட ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்பத்தில் அவதூறுகளாகவும் வதந்திகளாகவும் மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல்கள் பின்னதாக கொலை மிரட்டல்களாகவும் இணைய ஊடகங்களை முடக்கும் நிலைக்கும் வளர்ந்து சென்றன.
ஊடகங்களில் மக்கள் சார்ந்த கருத்துக்களை முன்வைக்கின்றவர்கள் ஒரு வகையான அச்சத்துள் வாழ வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கை அரசு மட்டுமல்ல தமிழர்கள் மத்தியில் தமது அதிகாரத்தை நிலை நிறுத்த விரும்புகின்ற குழுவினரும் கூட இவ்வாறான தாக்குதல்களை தலமையேற்று நடத்தினர்.
2010 ஆம் ஆண்டில் இலங்கை அரச சார்பு ஊடகமான டான் தொலைக்காட்சியின் உரிமையாளரை பணக் கையாடல் வழக்கு ஒன்றில் தமிழ் நாடு போலிஸ் கைது செய்த வேளையில், இனியொருவின் ஆசிரியர்களாக இருந்த இருவர் இணைந்து குகநாதனைக் கடத்தியதாக அவதூறு பரப்பப்பட்டது. இந்த அவதூறை ஆரம்பித்து வைத்தவர் பிரான்சில் வசிக்கும் ரயாகரன் என்பவர். ஒரு குறித்த காலம் முழுவதும் இனியொரு மீதும் அதன் ஆசிரியர்கள் மீதும் இலங்கை அரச சார்பு இணைய ஊடகங்கள் இத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தன.
தொலை தூரத்தில் புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கையில் உடக சுதந்திரம் இல்லை என வெற்றுக் கூச்சல் போடும் எந்தப் புலம்பெயர் ஊடகங்களும் இத் தாக்குதலுக்கு எதிராகக் குரலெழுப்பாத நிலையில் தமிழ் நாட்டிலிருந்து நடத்தப்படும் மக்கள் ஊடகமான வினவு தலையிட்டதன் பின்னர் இத் தாக்குதல் முடிவிற்கு வந்தது.
இதன் பின்னர் தமிழர்களைத் தலைமையாகக் கொண்ட பல்தேசிய வர்த்தக நிறுவனமான லைக்காவின் இலங்கை அரச தொடர்புகள், இலங்கை அரசுடனான ஊழல்கள் தொடர்பாக இனியொரு தொடர்ச்சியாக பல ஆக்கங்களைப் பதிவு செய்தது.
அவ்வேளையில் இனியொரு ஆசிரியர் ஒருவர் மீதான கொலை மிரட்டல் தொடர்பாக பிரித்தானியப் போலிசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னதாக கடந்தவருடம் ஓகஸ்ட் மாதம் லைக்கா நிறுவனம் தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்ட இணைய ஊடகங்களான இனியொரு, லங்காநியூஸ்வெப், ஜேவிபி நியூஸ் போன்றவை மீது தாக்குதல் நடத்தப்பட்டு முடக்கப்பட்டன. ஜேவிபி நியூஸ் குறித்த செய்தியை நீக்கியதைத் தொடர்ந்து அதன் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட, லங்கா நியூஸ்வெப் மற்றும் இனியொரு ஆகியன தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு மேல் முடக்கப்பட்டிருந்தன.
இந்த இடைவெளிக்குள் பல்வேறு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. தொலைபேசிக் குறும் செய்திகள், மர்ம நபர்களின் பின் தொடரல்கள் என்பன தொடர்ந்தன. சமரசத்திற்கான முயற்சிகள் பல இடைத்தரகர்களால் மேற்கொள்ளப்பட்ட போதும் மக்கள் சார்ந்த ஊடகம் என்ற வகையில் லைக்காவுடனான பேச்சுக்களுக்கு இனியொரு உடன்படவில்லை. தவிர, லங்காநியூஸ்வெப் இணையமும் எந்தச் சமரச முயற்சிகளுக்கும் உடன்படவில்லை.
ராஜபக்ச அரசின் ஊடகங்கள் மீதான தாக்குதல்களை தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் மறைந்திருந்து கூச்சல் போடும் இணைய ஊடகங்கள், தமது கொல்லைப்புறத்தில் ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்துக் கண்களை மூடிக்கொண்டன. இவர்களுக்கெல்லாம் இலங்கையில் இருந்திருந்தால் ராஜபக்சவின் புகழ்பாடிகளாக வாழ்ந்திருப்பார்கள். தமக்குத் தொந்தரவு இல்லையென்றால் மக்களின் அவலங்களைப் பயன்படுத்திப் பிழைப்பு நடத்தும் இப் பிரகிருதிகள், நமது சமூகத்தின் சாபக்கேடுகள்.
இவை அனைத்திற்கும் மேலாக இந்த ஊடகங்களின் அரைக் கம்பங்களில் லைக்காவின் விளம்பரங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ராஜபக்சவைப் பார்த்துக் குரைத்துக்கொள்ளும் ஊடகங்களின் கழுத்தில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டிற்கு நிதி வழங்கிய லைக்காவின் கயிறு கட்டப்பட்டிருந்தது.
இப் பிழைப்புவாதம் இத்தோடு நிறுத்தப்படவில்லை. தொடர்ந்தது…. லைக்காவின் வட்டத்திற்குள் நமது காலத்திலும் அடிமைகளாக நடத்தப்படும் மலையக மக்களின் அவலங்களும் இழுத்துவரப்பட்டன. கூலித் தமிழ் என்ற தலைப்பில் மு.நித்தியானந்தன் எழுதிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழா லைக்கா ஆதரவில் நடைபெற்றது.
தமது முற்றத்தில் ஊடகங்களின் வாய்கள் பூட்டப்பட்டிருக்க கூலித் தமிழ் விலைபேசப்பட்டதை இனியொருவில் விஜி கவிதையாக எழுதியிருந்தார்.
இனியொருவில் தனி நபர்களதும், கட்சிகளதும், நிறுவனங்களதும் அரசியல் தொடர்பான விமர்சனங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. அவதூறுகளையும் தனி நபர்களின் சொந்த வாழ்க்கை தொடர்பான விடையங்களும் இனியொருவின் அக்கறைக்கு உட்படுவதில்லை. ஆனால் இனியொரு மீது அவதூறுகளும், தனி நபர் தாக்குதல்களும், கொலை மிரட்டல்களும் விடுக்கப்படுகின்றன. இனியொருவின் கருத்துக்களை எதிர்கொள்ளத் துணிவற்ற கோழைகள் என்பதை அவதூறுகளின் கர்த்தாக்கள் மக்களுக்குச் சொல்கிறார்கள்.
இக் கோழைகளின் கூட்டத்தோடு தம்மை மு.நித்தியானந்தனும் இணைத்துக்கொண்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் இனியொரு மீதும் பிரான்சில் வசிக்கும் தோழர் அசோக் மீதும் அவதூறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஹரோ பகுதியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் இனியொரு ஆசிரிரை ‘நாய்’ என் விழித்த மு.நித்தியானந்தன் லைக்கா வழங்கிய நிதிக்காகக் குரைத்தாரா அல்லது அங்கு பிரசன்னமாகியிருந்த குகநாதனின் ‘பேச்சாளர்’ ரயாகரனைக் குளிர்சிப் படுத்தினாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
தமிழ் சமூகத்தின் பிரமுகப் பிதாக்களில் ஒருவரான நித்தியானந்தன். இனியொரு ஸ்கொட்லாண்ட் யார்ட்டின் பாதுகாப்பில் செயற்படுவதாகவும் வேறு குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட்லாண்ட் யார்ட் ‘நாய்’களுக்கும் பாதுகாப்பு வழங்குவதாக கண்டுபிடித்த நித்தியானந்தன் இன்றும் சென்னையிலிருந்து ‘செந்தோழர்களைத்’ தாக்குவதாகவே கற்பனை செய்துகொள்கிறார் போலும்.
லைக்கா தாக்குதல் நடத்திய போது கண்களை மூடி, காதுகளைப் பொத்தி, வாயில் உள்ளங்கையை வைத்து அழுத்தி காந்திக் குரங்கு வேடமணிந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய பிரமுகர்களும், நித்தியானந்தனின் தாக்குதல்களைக் கண்டுகொள்ளவில்லை.
யாழ்ப்பாணத்தில் சுந்தரம் என்ற போராளி கொலை செய்யப்பட்ட போது துரோகத்தின் பரிசு என்ற பிரசுரம் வெளியிடப்பட்டது. அன்று சுந்தரத்தின் போராடும் சுதந்திரத்தைப் பாதுகாக்க மக்கள் தயார்படுத்தப்படாமை இன்று பல ஆயிரம் மைல்கள் தொலைவில் அரசியல் கொலை செய்யக் கூட்டம் போடுவதில் வந்து நிற்கிறது.