Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்முறையில் ஈடுபட்ட வாக்குப்பொறுக்கிகளும் விக்னேஸ்வரனின் பொறுப்பு வாய்ந்த அறிக்கையும்

kilinochiகுறைந்தபட்ச ஜனநாயக சூழல் ஏற்படும் போதெல்லாம் மக்களைப் பலம் மிகுந்தவர்களாக அணிதிரட்டுவது என்பது மக்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையாகும். அவ்வாறான ஜனநாயகச் சூழலை வன்முறையாக்கி அரசபடைகளின் பிரசன்னத்தை அதிகரிப்பதும் அரச ஒடுக்குமுறைக் கருவிகளை திட்டமிட்டு வரவழைப்பதும் அரச ஒடுக்குமுறையாளர்களையே பலமடையச் செய்யும்.

தமிழ்ப் பேசும் மக்களுக்கு உறுதியான பலம்வாய்ந்த அரசியல் தலைமை அற்ற நிலையில், மக்கள் திரள் அமைப்புக்களாக அணிதிரட்டப்படாத உதிரிகளாகக் காணப்படும் அரசியல் சூழலில் குறைந்தபட்ச ஜனநாயக அமைப்புக்களைப் பயன்படுத்திக்கொண்டு பலத்தை உருவாக்குவதே இன்று எமது கடமை.

இலங்கைப் பொலீஸ் படுகொலை செய்த பல்கலை கழக மாணவன் நடராஜா கஜனின் பிறந்த மண்ணான கிளிநொச்சியில் இன்று வெற்றிகரமான பணிப் புறக்கணிப்பு மற்றும் கடையடைப்பு என்பன மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. நேற்று முன்தினம் திடீரென பாடசாலை மாணவர்களை வாகனங்களில் ஏற்றி வந்து கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் முன் குவித்து மாணவர்கள் போராட்டம் எனக் காட்டிய  கிளிநொச்சி எம்.பி.சிறீதரனின் அடியாள் படைகள் நடத்திய அடாவடித்தனத்தின் தொடர்ச்சியாக இன்றும் சில சம்பவங்கள் நேற்றும் சில சம்பவங்கள் நடைபெற்றன.

வீதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட பொலிசார் சிலர் வாகனம் ஒன்றை நிறுத்திய வேளையில் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியதில் ஒரு பொலிஸ் காயமடைந்துள்ளார்.

கடையடைப்பு நிறைவடையும் நேரத்தில் நடைபெற்ற இத் தாக்குதலைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படைப் பொலிஸ் அங்கு குவிக்கப்பட்டது.

மக்களின் அமைதியான போராட்டங்கள் பொதுவான அரசியலை நோக்கி மக்களை அணிதிரட்டுவதற்கான நுளைவாசலாக அமையலாம். இங்கு தனி நபர் தாக்குதல்களும், உணர்ச்சிவசப்படுத்தல்களும் இலங்கை அரசின் நோக்கங்களுக்குத் துணை செல்வதாகவே அமையும்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரச்சாரக் கருவியாக வன்முறைகளை அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் போட்டிபோட்டுப் பயன்படுத்திக்கொள்ள முற்படுவது போன்ற தோற்றப்பாடு காணப்படுகிறது.
இந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அறிக்கை பொறுப்புவாய்ந்ததாகக் காணப்படுகிறது. வழமைக்கு மாறாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் “எமது உணர்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளை நாங்கள் எம் மனதில் நிறுத்தியே நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளமை பாராட்டுக்கு உட்படுத்தப்படவேண்டிய நடவடிக்கை.

இலங்கை ஆளும் வர்க்கத்தின் சிங்கள பௌத்த பேரினவாதக் கருத்தியல் ஆளுமை செலுத்தும் ஒற்றையாட்சி அதிகாரத்தை எதிர்கொள்ள மக்களை அணிதிரட்டுவதும், புதிய மக்கள் சார்ந்த அரசியல் தலைமையை உருவாக்குவதும் இன்று ஒவ்வொருவரதும் கடமை; வாக்குப் பொறுக்குவதற்காக இலங்கை அரசைப் பலப்படுத்துவதல்ல.

Exit mobile version