வன்முறையை இந்தியா முழுவதும் கட்டவிழ்த்துவிட தமிழ் நாட்டை ஒரு மாதிரி வடிவமாக கட்டமைக்கும் இந்திய அரசு, உலக மக்களிடமும் இந்தியாவின் இரத்தம் தோய்ந்த முகத்தைக் அறிமுகப்படுத்தியுள்ளது.
முதியவர்கள், குழந்தைகளில் ஆரம்பித்து சட்டத்துறை சார்ந்தவர்கள் வரைக்கும் காரணமின்றியும் சாட்சியின்றியும் கைது செய்து வரும் ஆர்.எஸ்.எஸ் அரசு இன்று -20.06.2018- பின்னிரவில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளது.
துத்துக்குடி – வேதாந்தா போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரான வாஞ்சிநாதன் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் ஆவர்.
காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நீக்கம் தொடர்பான வழக்கில் டெல்லி சென்று வாதிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை திரும்பும் போது சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உலகம் முழுவதுமுள்ள வழக்கறிஞர் கூட்டமைப்புக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
வன்னிப் படுகொலைகள் நடைபெற்று பத்து ஆண்டுகளின் பின்னர் தூத்துக்குடி ‘மாதிரி’ படுகொலைகள் இன்னும் தொடரும் என்பதற்கான முன்னறிவுப்பே இது என்பது தெளிவாகிறது.
ஈழத்தின் 80 ஆம் ஆண்டுகளின் ஆரம்பப் பகுதிகளில் இலங்கைப் பேரினவாத அரசின் செயற்பாடுகளைப் போன்றே இன்றைய தமிழகத்தில் இந்துத்துவ மத்திய அரசு செயற்படுகின்றது. பொன்.இராதாகிருஷ்ணன் போன்ற ஆர்,எஸ்,எஸ் அரசியல் வாதிகளைப் போன்றே வெளிப்படையாக இலங்கை அரசின் ஊதுகுழல்களாகச் செயற்பட்ட அரசியல் வாதிகளை சமூகத்திலிருந்து அகற்றுவதிலிருந்தும் ஆயுதப்படைகளுக்கு எதிரான தனிமைப்படுத்தப்பட்ட தாக்குதல்களுமே அன்றைய மக்களின் தற்காப்பு யுத்தமாக முன்னெடுக்கப்பட்டது.
தமிழகத்தில் இப் போராட்டங்கள் ஆரம்பத்திலிருந்தே மக்கள் போராட்டங்களாக முன்னெடுக்கப்படுவது ஆரோக்கியமான சூழலை முன்னறிவித்தாலும், இந்திய அரசு ஆயுதப்போராட்டத்தை தூண்டிவருகிறது.