உலக முழுவதிலும், குறிப்பாக ஐரோப்பாவின் உள்ளேயும் சேடமிழுத்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்தைத் தற்காலிகமாகத் தூக்கி நிறுத்துவதற்கு மூன்றாவது உலகப் போருக்காக உலகம் தயார்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
முதலாளித்துவத்தின் கோரப்பிடியிலிருந்து ஜனநாயகத்தை மீட்பதற்கு இன்று மக்களுக்கும் சமூகத்தின் முன்னேறிய பிரிவினரும் வழி தேடிக்கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் போராட்டங்கள்தையும் எழுச்சிகளும் மறுபடி ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
கடற்படைத் தளம் அமைக்கும் திட்டம் உண்மையானால் அமெரிக்க அடியாட்கள் போன்று செயற்படும் தமிழ்த் தேசியக் கட்சிகளும், இலங்கை ரனில்-மைத்திரி அரசும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை.
உலகை யுத்தத்திற்குத் தயார்படுத்தும் அமெரிக்காவின் பார்வை தெற்காசியப் பிராந்தியத்தில் இலங்கை மீது தீவிரமாகப் பதிந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காகவே மகிந்த ராஜபக்சவைத் தயார்படுத்திய அமெரிக்க அரசு பன் கீ மூன் தென் கொரிய வெளி நாட்டமைச்சராகப் பதவி வகித்த வேளையில் அவர் ஊடாகராஜபக்சவிற்கு பெரும் தொகைப் பணத்தை வழங்கியது. 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னய காலத்தில் இலங்கை சென்ற பன் கீ மூன், ராஜபக்ச உருவாக்கிய தன்னர்வ நிறுவனமான ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட என்ற தன்னார்வ நிறுவனத்திற்குப் பல மில்லியன்களை வழங்கினார். அதுவே ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்பட்டது. பின்னர் அமெரிக்காவில் வசித்த கோத்தாபய மற்றும் பசில் ராஜபக்சக்கள் இலங்கை சென்று வன்னி இனப்படுகொலையைக் கச்சிதமாக முடித்துக்கொடுத்தனர்.
அதன் பின்னான காலப்பகுதியில் அமெரிக்காவின் உளவாளிகளாக உள்வாங்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ராஜபக்சவைத் தண்டிக்கப் போவதாக ஐ.நாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஆடிய நாடகம் இன்று வெளித்தெரிய ஆரம்பித்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பணிக்கப்பட்ட இனப்படுகொலை என்ற செயற்பாட்டையும் மீறி ஆட்சியில் தொடர விரும்பிய ராஜப்கச அதன் புதிய முகவர்களான மைத்திரி – ரனில் போன்றோரால் பிரதியிடப்பட்டனர்.
ஆக, முழு இலங்கையும் அமெரிக்காவின் நவ காலனிய அடிமை நாடாக மாற்றப்பட்டுள்ளது. இச் சூழல் அமெரிக்காவின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான இராணுவ மயமாக்கல் திட்டத்திற்கு இலகுவான வழிகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
ஆக, ‘நல்லாட்சி’ என்ற தலையங்கத்திலும், தேசியம், சர்வதேச மயமாக்கல் என்ற தலையங்கங்களில் நடத்தப்படும் எகாதியபத்தியச் சுரண்டலுக்கும் இராணுவ மயமாக்கலுக்கும் எதிரான மக்கள் இயக்கங்கள் தோன்றும்வரை அழிவுகள் தவிர்க்கமுடியாதவை.