எப்போதும் உடைந்து சிதறிவிடும் நிலையிலிருக்கும் ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தை தற்காலிகமாகப் பாதுகாக்கும் முயற்சியில் ஏகாதிபத்திய நாடுகளிடையே முரண்பாடுகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்கா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களான உலக வங்கி, உலக வர்த்தக நிறுவன, உலக சுகாதார அமைப்பு, உலக நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றைப் பயன்படுத்தி மேற்கு நாடுகள் உலகைக் கொள்ளையிட ஆரம்பித்தன. உலகின் ஏனைய நாடுகளைச் சூறையாடுவதற்கு அனைத்து வசதிகளையும் இந்த நாடுகள் பல்தேசிய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தலைமையிலான ஒழுங்கமைப்பைப் பயன்படுத்தி செய்து கொடுத்தன.
இன்று மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த நாடுகளிடையே முரண்பாடுகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
சீனாவின் உலக வங்கியொன்றில் பிரித்தானிய அரசு உறுப்பினராகச் சேர விருப்பம் தெரிவித்தது அமெரிக்காவின் நெஞ்சில் பிரித்தானியா ஒங்கி உதைந்த்து போலிருந்தது.
50 பில்லியன் டொலர் பெறுமானமுள்ள ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி சீனாவின் முதலீட்டில் தங்கியுள்ள வங்கியாகும். பிரித்தானியா மட்டுமல்ல ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இந்த வங்கியில் இணைந்து சினாவுடன் சேர்ந்து ஏனைய ஆசிய நாடுகளைச் சுரண்டுவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றன.
சீன முதலீட்டு வங்கியின் உறுப்பினராகச் சேர்ந்து கொள்வதென பிரித்தானியா அறிவித்ததும் அமெரிக வெள்ளை மாளிகை அதிர ஆரம்பித்தது. தவறான முடிவு என ஒரு வெள்ளை மாளிகை அதிகாரி எரிச்சலடைந்தார். அமெரிக்க ஊடகங்களில் ஆய்வுகள் பிரித்தானியாவைத் திட்டித் திர்த்தன.
கடந்த வருடம் ஓஸ்திரேலியா வங்கியில் இணைந்து கொள்ள முற்பட்ட போது அமெரிக்கா ஈட்டி எறிந்து நிறுத்திவிட்டது. இன்றோ பிரித்தானியாவின் முடிவைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜேர்மனி,இத்தாலி ஆகிய நாடுகள் தாமும் இணைந்து கொள்ளப் போவதாக முடிவை அறிவித்துவிட்டன. இனி ஓஸ்திரேலியா இணைந்து கொள்வதில் தடைகள் இல்லை
இன்று வரைக்கும் அமெரிக்காவின் ஆதரவுடன் ஜப்பான் தலமையில் இயங்கிவரும் ஆசிய அபிவிருத்தி வங்கியே ஆசிய நாடுகளுக்குக் கந்துவட்டிக் கடன்களை வழங்கிவந்தன அதற்குப் போட்டியாகவே சீன ஆதரவு வங்கி முளைத்துள்ளது. தனக்குப் போட்டியாக சீனா நடத்தும் கந்துவட்டிக் கம்பனியில் தனது ஐரோப்பியப் பங்காளிகள் இணைந்து கொள்வதையிட்டு அமெரிக்கா நெற்றிகண்ணால் தீயைக் கக்கிய போதும் பலன் ஏற்படவில்லை.
மத்திய கிழக்கில் இரத்த ஆறை ஓடவிட்டு தேவையான அளவு சுருட்டிக்கொண்டாயிற்று இனி அடுத்த குறி ஆசியா தான் என்று ஆரம்பித்த அமெரிக்க ஆசியா முழுவதும் தனது ஆயுதப்படைகளைக் குவித்து வருகிறது. தெற்காசியாவில் இலங்கை அமெரிக்காவின் மையமாகப் பயன்பட்டு வருகிறது. தனது ஆசியக் கொள்ளையில் ஐரோப்பிய நாடுகளைப் போதிய அளவில் இணைத்துக் கொள்ளவில்லை என்பதும் ஐரோப்பிய நாடுகள் சீனாவுடன் இணைப்பேற்படுத்திக் கொள்வதன் மற்றொரு காரணம்.
ஆசியாவில் அமெரிக்காவிற்கு எதிராக சீனாவுடன் இணையும் ஐரோப்பிய நாடுகளின் முடிவு உலக அரங்கில் புதிய நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் என ஆய்வாளர்கள் புதிய எதிர்வுகூறல்களை முன்வைக்கின்றனர்.
இம்முரண்பாடு திட்டமிட்டதல்ல, தவிர்க்க முடியாதது. அமெரிக்காவின் 50 வருட ஆதிக்கம் புதிய அணிகளாகப் பிளவுறுகின்றது. இப் பிளவின் இடைவெளியில் தோன்றும் ஜனநாயக இடைவெளியில் இக் கொள்ளையர்களுக்கு எதிராக மக்கள் அணிதிரள்வதும் பலமடைவதும் இன்றைய அவசரத் தேவையாகும்.