Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்

விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை தமிழ் மக்கள் கதறியழுது கண்ணீர் மல்கி வழியனுப்பிய காட்சி கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கதறியழுதவர்களை துரோகிகள் என புலம்பெயர் முகநூலில் பஞ்ச் பேசி தமது ‘தேசிய’ உணர்ச்சியை பொரிந்து தள்ளினார்கள். இதன் மறுபக்கத்தில் இராணுவ அதிகாரி இரத்தினப்பிரிய உலகமகா மனிதாபிமானியாக இன்னும் ஒரு குழு மக்களோடு சேர்ந்து கசிந்து கண்ணீர் மல்கியது. இவை இரண்டிற்கும் இடையில் இன்னொரு உண்மை இச் சம்பவங்களின்பின்னால் உறைந்து கிடப்பதை சில ஊடகங்கள் மறைத்தன, மற்றும் சில தமது பிரதியெடுக்கும் திறனை மேலும் வளர்த்துக்கொண்டன.

உண்மையில் நடந்தது இதுதான்:

வன்னி இனப்படுகொலை முடிவின் பின்னர் முன்னை நாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் சிவில் பாதுகாப்பு ஆணையம் (civil security department(CSD))என்ற இராணுவ அமைப்பு ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் இணைத்துக்கொண்டது.

சீ.எஸ்.டி இன் பொறுப்பதிகாரியாக கேணல் பந்து ரத்னப்பிரிய நியமிக்கப்பட்டார். இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அச்சத்தின் காரணமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் இணைந்துகொள்ளவில்லை, அங்கு வழங்கப்பட்ட கவர்ச்சிகரமான ஊதியம் காரண்மாக காலப்போக்கில் பல முன்னை நாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் இணைந்துகொண்டனர். சீ.ஸ்.டி திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் நிரந்தர அரச உத்தியோகத்தர்கள் ஆக்கப்பட்டனர். 31 ஆயிரம் ரூபா ஊதியம் வழங்கப்படுகிறது. இரண்டு வகையான வேலைகள் வழங்கப்படுகின்றன, முதலாவதாக முன்பள்ளி ஆசிரியர்கள். இரண்டாவதாக பண்ணைத தொழிலாளர்கள். வேலையாட்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களில் பலர் முன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள்.

இத்திட்டத்தில் இணைக்கப்பட்டவர்களின் தொகை சரியாகத் தெரியாவிட்டாலும், ஊடகங்களின் தகவல்களின் அடிப்படையில் அண்ணளவாக 3500 பேர் இருக்கலாம் எனத் தெரியவருகிறது இவர்களில் சீ.எஸ்/டி முன்பள்ளிகள் 600 வரையிலானவை. மிகுதி வலையக் கல்விப்பணிப்பாளரின் கீழ் இயங்குகிறது. வலையக் கல்விப்பணிப்பாளரின் கீழ் இயங்கும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான ஊதியம் மூவாயிரம் ரூபா, அதேவேளை சீ.எஸ்.டி ஆசிரியர்களுக்கு முப்பத்தோராயிரம் ரூபா.

இக் கணக்கின் அடிப்படையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இராணுவத்தால் நடத்தப்படும் பண்ணைகளில் வேலைசெய்கிறார்கள்.

இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில காலங்களுக்கு உள்ளாகவே வேலையாட்களின் பொறுப்பாளர்கள் ஊடாக இராணுவ அதிகாரி ரத்னப்பிரிய தனது சொந்தத் திட்டத்தை முன்வைக்கிறார். அதன் அடிப்படையில் விரும்பியவர்கள் வேலைக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே 31 ஆயிரம் ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அந்த 31 ஆயிரத்தில் பத்தாயிரத்தைப் பொறுப்பாளரிடம் இரகசியமாக ஒப்படைக்க வேண்டும்.

ஏறக்குறைய ஆயிரம் பேர் வரையிலானவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு, மாதம் முடிவில் பத்தாயிரத்தைத் தமது பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு பண்ணையில் வேலை செய்வதற்குப் பதிலாக வேறு வேலைகளில் இணைந்துகொண்டார்கள். இப்போது அவர்கள் இலவசமாக 20 ஆயிரமும் அதைவிட வேறு வேலைகளில் கிடைக்கும் ஊதியத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.

ஆக, அரசாங்கம் ஊதியமாகக் கொடுக்கும் பணத்தில் 1000×10000 = 10,000,000 ரூபா ரத்தினப்பிரியவின் கீழ் இயங்கிய மாபியக் கொள்ளைக்கூட்டத்திற்குக் கிடைத்தது. இராணுவ அதிகாரிக்கு நெருங்கிய முன்னை நாள் போராளியான பொறுப்பாளர் ஒருவர் சில காலங்களிலேயே பல மில்லியன்கள் பெறுமதியான மாடிவீடு ஒன்றைத் தனக்காக உருவாக்கிக்கொண்ட சம்பவத்தை சீ.எஸ்.டி ஊழியர் ஒருவர் நினைவுபடுத்தினார்.

2017 ஆம் ஆண்டு மாசி மாதம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில் சீ.எஸ்.டி பண்ணைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வேலையாட்களின் வரவு போதிய அளவு இல்லாமல் இருந்ததால், சில காலம் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் ரத்னப்பிரியாவின் மாபியக் குழுவின் கைகளிலேயே சீ.ஏஸ்.டீ. ஒப்படைக்கப்பட்டது.

இவை அனைத்திற்கும் மேலாக ரத்னப்பிரிய மிகவும் சாதுரியமான வியாபாரி, தனது குழுவிற்கு மாதம் பத்தாயிரத்தை ஒப்படைக்கும் ஊழியர்களுக்கு எலும்புத்துண்டுகளை வழங்கி அவர்களை தனது எல்லைக்குள் வைத்துக்கொண்டார். ஒவ்வொரு மாதமும் கலை கலாச்சார நிகழ்ச்சிகள், விருந்துபசாராம் போன்றவற்றை நடத்தி கலகலப்பான சூழலை ஏற்படுத்தினார். அவரது குழு கொள்ளையடிக்கும் பணத்தில் தவறி விழும் பணமே இதற்குப் போதுமானதாகவிருந்தது.

இந்த வருட ஆஆரம்பத்தில் மீண்டும் விழித்துக்கொண்ட ரத்னப்பிரியவின் தலைமையகம் மீண்டும் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தது. அவ்வேளையில் தாம் பண்ணை வேலையாட்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதாலேயே வேலை நேரம் குறைந்துவிட்டதாக பொய்க் கணக்கு ஒன்றைச் சமர்ப்பித்த ரத்னப்பிரிய, பத்தாயிரம் ‘டீல்’ வேலையாட்களை தற்காலிக இராணுவப் பயிற்சிக்கு வருமாறு அழைத்தார். இது தொடர்பான செய்தி இனியொருவில் வெளியாகியிருந்தது. இதன் பின்னணியில் சந்தேகம் கொண்ட சீ,எஸ்,டீ தலைமையகம் ரத்னப்பிரியவை இடமாற்றம் செய்துவிட்டது.

இதுவே இன்றைய சம்பவங்களின் பின்னணி.

இனி, கடந்த பல வருடங்களாக வேலைக்குப் போகாமல், இராணுவ அதிகாரியின் கண்காணிப்பு இல்லாமல், இடைக்கிடை களியாட்ட நிகழ்வுகளுக்கு மட்டுமே சென்றுவந்துவிட்டு 20 ஆயிரம் ரூபாவை இலவசமாகப் பெற்றுக்கொண்டவர்களின் நிலை என்னாவது?

பல வருடங்களாக 20 ஆயிரம் இலவசத்தோடு இணைந்த புதிய வாழ்கைக்குப் பழக்கபடுத்திக்கொண்ட ஊழியர்களின் கதி இனி எனாவது? தமது முழு வாழ்க்கையையும் மீழமைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுவே அவர்களின் கண்ணீருக்குக் காரணம். தவிர, கண்ணீர் விட்டால், அதிகாரியின் இடமாற்றம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையும் அவர்களிடமிருந்தது.

ஆக, இராணுவ அதிகாரி தியாகியோ, மக்கள் துரோகிகளோ இல்லை.

இவை அனைத்திற்கும் மேலாக, இராணுவம் என்பது அரசின் ஒடுக்குமுறைக்கருவி. அதுவும் இலங்கை இரணுவம் பேரினவாதத்தால் நச்சூட்டப்பட்ட இயந்திரம். இதனை ஆழமாகப் புரிந்துகொண்டு புரட்சிகரச் சிந்தனையை நோக்கி மக்களை வழிநடத்த அரசியல் தலைமைகள் கிடையாது. புலம்பெயர் நாடுகள், முகநூல்,தமிழ் நாடு, மிஞ்சிப்போனால் பாராளுமன்ற அரசியல்வாதிகள் என்ற எல்லைக்குள் முடக்கப்பட்யடு முடமாக்கப்பட்ட அரசியல் மக்களைத் துரோகிகளாக்குவது புதிதல்ல.

Exit mobile version