Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமும் சுய நிர்ணைய உரிமை கோரும் போலித்தனமும்!

vikki_1வட மாகாண அரசு என்ற ஒற்றையாட்சி நிர்வாகக் கூறின் அரசியலை ஒரு புறத்தில் தலைமையேற்று நடத்தும் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையின் யாப்பு மாற்றத்திற்கான முன் மொழிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த முன் மொழிவு அதன் முன்னோட்டத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமை தொடர்பாகக் குறிப்பிட்டாலும், அரசியல் அமைப்பு ஏற்ப்பாடுகளுக்கான முன் மொழிவில் சுய நிர்ணைய உரிமை குறித்துப் பேசாமல் வெறுமனே ஒற்றையாட்சியின் கீழான சமஷ்டி முறைமையையே முன்வைத்துள்ளது.

மானில சுயாட்சியைக் கோரும் தமிழ் மக்கள் பேரவையின் முன்மொழிவு அதன் முன்னுரையிலிருந்து முற்றாக முரண்படுகிறது. முன்னுரை தேசியவாதிகளைத் திருப்திப்படுத்தவும் அதன் முன்மொழிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இலங்கை அரசையும் திருப்திப்படுத்தவும் முன்வைக்கப்பட்டுள்ளது.

சுயநிர்ணைய உரிமை என்று ஆரம்பித்துவிட்டு முன்மொழிவின் 21 வது பிரிவில் சுய நிர்ணைய உரிமைக்கு முற்றுமுழுதாக எதிரான பிரிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

” மாநில அரசாங்கம் ஒன்று சமஷ்டியில் இருந்து பிரிவதற்கான மாநில நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்றும் அவ்வாறான பிரிவு உடனடியானதொன்று என மத்தியின் தலைவர் திருப்திப்படுமிடத்து,

அவர் அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்தலாம். அவ்வாறு பிரகடனப்படுத்துமிடத்து ஆளுநர் நிறைவேற்று அதிகாரங்களையும் மற்றும் முதலமைச்சரினதும் மாநில அமைச்சரவையினதும் அதிகாரங்களையும் அந் நிலமைகளுக்கு ஏற்றவாறு, கையகப்படுத்தலாம்.” என்று 21 வது பிரிவு கோருகிறது.
மிகவும் தந்திரமான முறையில் சுய நிர்ணைய உரிமை தேவை என ஆரம்பித்த முன் மொழிவு அதனை நிராகரித்து இலங்கைப் பேரினவாதிகளைப் பலப்படுத்தும் துருப்புச் சீட்டையும் முன்வைத்துள்ளது. அதாவது மத்திய அரசின் நடவடிக்கைகளில் உடன்படாது, மானில அரசு பிரிந்து செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என மத்திய அரசு கருதுமானால் மானில அரசை மத்திய அரசு கலைத்துவிடலாம் என்ற உரிமையை இந்த முன்மொழிவு வழங்கியுள்ளது.

வழமை போல அறிக்கைப் போர் நடத்திவிட்டு இலங்கை அரசின் ஊதுகுழல் போன்று செயற்படும் மானில அரசின் தலைவர் விக்னேஸ்வரனின் நேர்மையற்ற ஏமாற்று வித்தையை இந்த முன்மொழிவு மற்றொரு தடவை படம்போட்டுக் காட்டுகிறது.

முஸ்லீம் மக்களின் தனித்துவத்தையும், வட கிழக்கில் வாழும் சிங்கள மக்களின் முழுமையான வாழ்வுரிமை ஆதாரங்களையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பது போன்ற சில நல்ல விடையங்களை இந்த முன்மொழிவு கூறினாலும், 21 வது பகுதியில் கூறப்ப்பட்டுள்ள அதன் போலித்தனம் அதன் நம்பகத் தன்மை முழுவதையும் சிதறடித்துவிடுகிறது.

அடிப்படையில் மானிலங்களுக்கான அதிகார சபை ஒன்றைக் கோரும் இம் முன்மொழிவின் அனைத்துப் பிரிவுகளும் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழேயே செயற்படுகின்றது.

விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண சபை தனது நிர்வாகத்தின் கீழ் இலங்கை அரசையும் மீறி தமிழ்ப்பேசும் மக்களின் அழிவிற்குத் துணை சென்றுள்ளது. சுன்னாகத்தைச் சுழவரவுள்ள ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு அழிக்கப்பட்டதை இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொண்ட போது அதனை மூடிமறைத்து அழிப்பை நடத்திய நிறுவனத்திற்கு துணை சென்ற வட மாகாண சபையின் தலைவருக்கு தமிழ் மக்களின் நலனில் என்ன பற்று என்ற கேள்வி பலரின் மத்தியிலும் தொக்கு நிற்கிறது.

தவிர, வலப்பாடு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு மக்கள் கடற்தொழிலை விட்டு வெளியேறு நிலை ஏற்பட்ட போது கூட வட மாகாண சபை வாழாவிருந்து தனது அதிகாரவர்க்க விசுவாசத்தை வெளிப்படுத்திக்கொண்டது.

சம்பந்தனின் தலைமையில் தீர்வைப் பெற்றுக்கொள்வோம் என்று விக்னேஸ்வரன் கூறும் அதேவேளை சம்பந்தனுக்கு எதிராகவே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது என விக்னேஸ்வரனின் ஆதரவாளர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள தீர்வுத் திட்டமும் தனது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

பெருந்தேசியக் கட்சிகளின் தீர்மானங்கள் போலவே வடக்கில் பாராளுமன்ற அரசியல் வாதிகள் பல்வேறு திட்டங்களை முன் மொழிந்துள்ளனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம் அதன் அதியுச்ச வடிவமாகும்.

இவர்களின் தீர்வுத்திட்டத்தை இலங்கை அரசு நிராகரித்தால் அடுத்த கட்ட நடவடிக்கை மௌனமாக இலங்கை அரசை ஆதரிப்பதே என்பதைத் தவிர இக் குழுவினரிடம் எந்தக் குறிப்பான வேலைத்திட்டங்களும் இல்லை.

திட்ட வரைபு மக்கள் மத்தியில் முன்வைத்து மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்கிறார். அதன் ஆரம்பமே நுட்பமான முறையில் மாற்றப்படுள்ளது. சரி, மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட வரைபு மாற்றங்கள் ஏற்படுமானால் அதனை இலங்கை அரசு நிராகரிக்குமானால் யார் மக்களை அணிதிரட்டிப் போராடுவது? அதற்கான வேலைத்திட்டம் என்ன?? விக்னேஸ்வரன் குழு அதற்குத் தயாரா???

தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுத் தலைமையின் தேவை வாக்குப் பொறுக்கும் அரசியலுக்கு அப்பால் எழுந்துள்ளது. அதற்கான சாத்தியங்கள் சுன்னாகம் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மற்றும் ஏனைய முக்கிய போராட்டங்களில் வாக்குப் பொறுக்கும் தலைவர்களின் பங்களிப்பின்றி நடைபெறும் வேளைகளில் தென்படுகின்றது. அவ்வாறான மாற்றுத் தலைமையின் தோற்றத்தைத் தடுத்து போலி நம்பிக்கைகளை மிகவும் நுட்பமான வகையில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் விதைக்கும் இக்குழுக்கள் குறித்து மக்கள் அவதானமாகவிருக்க வேண்டும்.

Exit mobile version