Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘பேட்டை ரவுடி’ சுமந்திரனின் இருப்பின் பின்புலம்

sumanthiranதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘பேட்டை ரவுடி’ சுமந்திரன் என்ற பாராளுமன்ற உறுப்பினர் என்றால் அதனைப் பலரும் மறுக்கமாட்டார்கள். இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளுள் தனது சொந்தக் கருத்திற்காக மக்களையும் ஊடகங்களையும் கூட சுமந்திரன் மிரட்டிய சம்பவங்கள் பலவற்றைக் காணலாம். தென்மராட்சி பிரதேச சபையின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 19.09.2016 அன்று நடைபெற்ற வேளையில் அங்கு கருத்துத் தெரிவித்த பொது மக்களை மிரட்டிய சுமந்திரன் அவர்களை வெளியேற்றுவோம் எனக் கூறியுள்ளார்.

கேரை தீவுப் பிரதேசத்தில் உப்பளம் அமைக்கும் திட்டம் குறித்து ஆராயப்பட்ட போது, அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் தொடர்பாக விவசாயிகளும் மீனவரகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என பொதுமக்கள் சார்பில் ஒருவர் கருத்துத் தெரிவித்த அதே வேளை திட்டத்தினால் ஏற்படும் பின் விளைவுகள் தொடர்பாக அப்பாவி மீனவர்கள் எதிர்ப்புப் பதாகைகளைத் தாங்கியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களது கருத்துக்களையும் கேட்குமாறு ஒருவர் கோரிக்கைவிடுத்த போது, சுமந்திரன் அவரை மிரட்டிய அதிகாரவர்க்க திமிர் அவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கைக்குரிய தெருச்சண்டியன் என மீண்டும் நிரூபித்துள்ளது.

‘இங்கு எடுக்கும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். தீர்மானங்கள் எதுவும் மாற்றப்படுமாக இருந்தால் அது பாரிய விளைவை ஏற்படுத்தும். மற்ற இணைத் தலைவர்களைப் போன்று நான் செயற்பட மாட்டேன். உங்களுக்கு எதிராக ஒழுக்காறு நடவடிக்கை எடுக்கப்படும், அது ,மாவட்டச் செயலாளராகக்கூட இருக்கலாம்’ என உரத்த குரலில் பொது வெளியில் மிரட்டிய சுமந்திரனுக்கு எதிராக அங்கு கருத்துத் தெரிவிக்க யாரும் இருக்கவில்லை. தவிர அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுமந்திரன் அதிகாரவர்க்கத்தின் நம்பிக்கைக்குரிய அடியாள்! அமெரிக்க அரசு இலங்கை முழுவதையும் ஆக்கிரமிப்பதற்காக ஏற்படுத்திய சமரசத்தில் ரணிலும் மைத்திரியும் தெற்கின் பிரதிநிதிகள் என்றால் சுமந்திரனும் சம்பந்தனும் வடக்கின் பிரதிநிதிகள்.

உத்தியோகபூவர்க் கூட்டடங்களில் கூட கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் சுமந்திரனுக்கு எதிராகவே ஒழுக்காற்று  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாண மேலாதிக்க நிலப்பிரபுத்துவ சாதித் திமிர் தலைக்கு மேல் ஏற அத் திமிரின் மற்றொரு குறியீடான வன்முறையை மக்கள் மீது பிரயோகிக்கும் சுமந்திரனுக்கு எதிரான அரசியல் முன்வைக்கப்படுவதே இன்றைய காலத்தின் கட்டாயம். அடுத்த தேர்தலில் வாக்குப் பொறுக்க வரும் போது கூட தனக்கே வாக்குகள் கிடைக்கும் என்ற சுமந்திரனின் திமிருக்குக் காரணம் அவர் சார்ந்த சீரழிந்த வாக்குப் பொறுக்கும் அரசியலுக்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியல் இல்லை என்பதே காரணம்.

இன்று சுமந்திரன் மற்றும் சம்பந்தனை அவர்கள் இருவரும் கூறுவது போன்றே அமெரிக்க ஏகாதிபத்திய அரசு இயக்கிவருகிறது. இலங்கை அரசையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சமரச அரசியலுக்குள் கொண்டுவந்த அமெரிக்க அரசு எதிர்க்கட்சி அற்ற சர்வாதிகார ஒற்றைப் பரிமாண அரசை உருவாக்கியுள்ளது. இங்கு மக்களின் நலன் என்பது இரண்டாம்பட்சம், முன்னிலைப்படுத்தப்படுவது அமெரிக்கா மற்றும் அதன் தரகுகளான இலங்கை அதிகாரவர்க்கம்.

இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையில் பௌத்த சிங்களப் பெருந்தேசிய வாதமே அடிப்படைக் கோட்பாடாக உள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் அரசிற்கும் அதிகாரவர்க்கத்திற்கும் எதிரான போராட்டங்கள் தோன்றும் போதெல்லாம் அவர்களைப் பேரினவாத நச்சூட்டி சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிராகத் திசை திருப்புவதே இலங்கை ஆளும் வர்க்கத்தின் சமூக சமரசத்திற்கான அரச அமைப்பு. ஆக, தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் விடுதலையடைந்தால் மட்டுமே சிங்கள மக்கள் கூட இலங்கை அரசின் ஒடுக்குமுறையை உணர்ந்துகொள்வார்கள். ஆக, தமது எதிர்காலத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமிழ்ப் பேசும் மக்கள் பிரிந்துசெல்லும் உரிமையைப் பெற்றுக்கொள்வது அவசியமானது.

தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கு எதிராகவும் சமூக மாற்றத்திற்கு எதிராகவும் யாழ்ப்பாண நிலப்பிரபுத்துவ பின் தங்கிய மனோபாவம் கொண்ட அநாகரீகமான பிரதிநிதி சுமந்திரன் இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சுமந்திரன் என்ற தனி மனிதனும் அவர்சார்ந்த கட்சியும் இலங்கை பின் தங்கிய அதிகாரவர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்றால் அதன் மறுபக்கத்தில் மக்கள் பற்றிக்கொள்ள மாற்றுத் தலைமைகள் கிடையாது, சுமந்திரனின் எதிர்த்தரப்பிலுள்ள ஏனைய தலைமைகள் சுமந்திரனுக்கு ஈடான பிற்போக்கு மனோபாவம் கொண்ட மக்கள் பற்றற்ற வாக்குப் பொறுக்கிகள். பாராளுமன்றம் செல்வதற்காக வாக்குகளைத் திரட்டிக்கொள்ளும் தந்திரோபாயங்களை பல்வேறு வழிகளில் தேடிக்கொள்ள முற்படும் இக் குழுக்களும் சுமந்திரனைப் போன்றே மக்கள் விரோத அரசிலை முன்வைக்கும் நிலையில் மக்களுக்கு மாற்று வழிகள் கிடையாது, இந்திய இராணுவத்தின் துணைக்குழுத் தலைவன் சுரேஷ் பிரேமச்சந்திரனோடு இணைந்து வாக்குப் பொறுக்குவதற்காக உதிரிகளாக மக்களை இணைத்து நடத்த முற்படும் குழுக்களின் அருவருப்பு அரசியல் சுமந்திரன் போன்ற தெருச் சண்டியர்களை வாழ வைக்கிறது.

இது இரண்டு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது,

ஒரு புறத்தில் ஒரே வடிவிலுள்ள சமூகப்பற்றற்ற வாக்குக் கட்சிகளை நிராகரிக்கும் மக்கள் சுமந்திரனை அங்கீகரித்தாலே போதுமானது என்று நம்பும் அபாயம் காணப்படுகிறது, அதன் மறுபக்கத்தில் இந்த இரண்டு தெரிவிற்கும் எதிராக பேரினவாதிகளைத் தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொள்ளும் நிலை தோன்றும். ஆக, இன்று வடக்குக் கிழக்கில் உறுதியாகப் புடம்போடப்பட்ட மக்கள் சார்ந்த அரசியல் அவசியமாகிறது. அதற்கான வழிகளை ஜனநாயக முற்போக்கு சக்திகள் தேடிக்கொள்ளாதவரை சுமந்திரன் போன்ற ஜனநாயக விரோதிகளின் இருப்பு தவிர்க்கமுடியாதது.

Exit mobile version