ஆயுதப் போராட்டம் எங்கு நடந்தாலும் அதற்கான ஆள்பல தேவைக்காக சமூக ஒடுக்குமுறைகள் தணிந்திருக்கும். ஈழப் போராட்ட காலத்திலும் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதீயினரின் பங்களிப்புத் தேவைப்பட்டது. சாதீயம் பெண் ஒடுக்குமுறை போன்றவற்றிற்கு எதிராக ஆயுதப் போராட்டத் தலைமைகள் செயற்பட்டனவாயினும் அதனை முற்றாக அழிப்பதற்கான வர்க்கம் சார்ந்த கோட்பாடுகளை யாரும் கொண்டிருக்கவில்லை. ஆக, புரையோடிப் போயிருந்த சாதிய மேலாதிக்க மனோபாவம், இன்று அதன் புதிய ஆதிக்க எல்லைகளை வகுத்துக்கொள்கிறது.
துரைரத்தினம் போன்றவர்கள் போருக்குப் பின்னான சமூகத்தின் வெளித்தெரியும் பிரதிநிதிகளே என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. அதிலும் புலம்பெயர் சமூகத்தில் சாதிய முரண்பாடுகள் மிகவும் அழுத்தமானதாகக் காணப்படுகின்றன. புலம்பெயர் நாடுகளின் அரசியல் சூழலோடு இரண்டறக் கலந்துவிட முடியாத தமிழர்கள் தமது அடையாளங்கள் அனைத்தையும் பல தசாப்பதங்களுக்கு முன்பிருந்த நிலையிலேயே பேணிவருகின்றனர். ஆக, முழு சமூகத்தின் ஆதிக்க சாதி மனோபாவத்தின் ஒரு உதாரணம் மட்டுமே துரைரத்தினம்.
இவ்வாறான சிக்கல்களை தனிமனிதர்களின் மனோபாவமாக மட்டும் கருதுவது மிகவும் தவறான முடிவுகளுக்கே நம்மை அழைத்துச்செல்லும்.
போருக்குப் பின்னான சாதீய முரண்பாடுகள் ஆழமடைந்துள்ளதைத் தொடர்ந்து தோன்றியுள்ள சூழலில் ஆதிக்க சாதியினரின் எழுச்சி மட்டுமல்ல சாதீய அடையாளத்தைப் பயன்படுத்தி சுயலாபமடையும் குழுக்களின் எழுச்சியும் சமூகத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகளை மறைத்து அதிகாரவர்க்கத்திற்குத் துணை செல்கிறது.
ஆக, துரைரத்தினத்தின் சாதீய வெறி என்பது ரவிகுமாரின் கருத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்துக் குழுக்களுக்கும் பொன்முட்டை போடும் வாத்து.
ரவிகுமாருக்கு ஐ.பி.சி தொலைக்காட்சி வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கியிருப்பதை திருப்பிப் பெற வேண்டும் என்பது இதே முகநூல் காரர்கள் பலரின் கோரிக்கை. ஐ.பி.சி என்பது வியாபார நிறுவனம். அதனைச் சமூகப்பற்றுள்ளதாகக் கருதிக் கோரிக்கை முன்வைப்பது என்பது கேலிக்குரியது. தற்செயலாக ஐ.பி.சி, துரைரத்தினத்தின் விருதைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் அது மக்கள் சார்ந்த நிறுவனம் என்று இவர்கள் அறிப்பார்களா என்ன?