Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கற்பிட்டியில் அகதியாகவிருக்கும் காமிலாவின் நினைவாக….:எஸ். ஹமீத்

fly-lowஇது இருபத்து ஆறாம் ஐப்பசி…
இன்னும் தீரவில்லை ஐயா பசி…!

கைக்குழந்தையை மாரோடணைத்துக்
கவலைகளை நெஞ்சுக்குள் புதைத்துக்
கடல் கடந்த காமிலா உம்மாவின் கால்கள்-
இந்தக் கற்பிட்டி மணல் தொட்டு
இருபத்து ஆறாண்டுகள்
இன்றோடு முடிகிறது…!

ஓர் ஒலிபெருக்கியின் வக்கிர அறிவித்தலில்
ஊரைவிட்டு விரட்டப்பட்டவள்…
துப்பாக்கிகளின் உக்கிர குறிவைத்தலில்
தனதான மண்ணை விட்டுத்
துரத்தப்பட்டவள்…

கழுத்துத் தங்கச் சரட்டோடு
கைக்காப்பு தோடுகளையும்-

கடும் உழைப்பால் சேமித்த காசையும்
அவர்கள் கவர்ந்து கொண்டார்கள்…

அவளின் கொல்லைப் புறத்தில்
ஆடுகளும் கோழிகளும் அனாதரவாயின..
இன்னமும்
திரும்பியிருக்கவில்லை
மேய்ச்சலுக்குப் போன மாடுகள்…!

முற்றத்தின் ஓரங்களில்
முருங்கை மரங்கள் காய்த்திருந்தன…
காய்களைப் பறிக்கக்
காமிலாவுக்கு நேரமிருக்கவில்லை;

கொல்லையில் கொய்யாவும் பப்பாசியும்
கொள்ளையாய்த் தொங்கின..
ஆய்ந்து எடுக்க அவகாசமில்லை…

இரண்டு வாழைகள் ஈன்ற குலைகள்
முற்றிப் பழுக்கும் நிலையிலிருந்தன..
வெட்டி விற்பதற்கு
வேளை இருக்கவில்லை…

மல்லிகையும் மணிவாழையும்
பூத்திருந்தன…வரும்வரை
வாடாதிருக்க-
வழியொன்றும் தெரியவில்லை…

பாரிசவாததில் படுத்துவிட்ட வாப்பாவையும்
அவருக்குப்
பணிவிடை செய்யும் உம்மாவையும்
காலைப் படகொன்றில்
கற்பிட்டிக்கு அனுப்பியிருந்தாள்…

விசாரணைக்கெனச் சென்ற கணவன்
வீடு வருவானென
மூன்று மாதங்கள் முன்னாலவள்
காத்திருந்த கணங்களில் அந்தக்
கரியமிலச் செய்தி வந்தது-
‘கம்பத்தில் அவள் கணவன்
தலை தொங்க மைய்யித்’தென…!

இத்தா முடிய
இன்னும் நாட்களுள்ளன…
எந்த பத்வாவையும்
ஏற்கும் நிலையிலவள்!

இந்து சமுத்திர முதுகேறி
இறங்கினாள் கற்பிட்டியில்-
அபலையாய்…அனாதையாய்…அகதியாய்…!

பெற்றோரின் கப்ருகளின் மேல்
பெருக்கு மரம் முளைத்து விட்டது…

இப்போது காமிலாவின் மகளுக்கு
இருபத்து ஏழு வயது…

சங்கங்கள் தோன்றின…
இயக்கங்கள் எழுந்தன…

ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன….
ஊர்க் கூட்டங்கள் நடந்தன….

அறிக்கைகள் குவிந்தன…
அகிலமும் பறந்தன…

ஆட்சிக் கதிரைகள் மாறின…
அமைச்சுப் பதவிகள் கிடைத்தன…

ஆனால்….
காமிலாவும் மகளும்
காலைக் கக்கூசுக்கு
வரிசையில் இன்னமும்
வாளிகளுடன்…!

இது இருபத்து ஆறாம் ஐப்பசி…
இன்னும் மாறவில்லை ஐயா விதி!

Exit mobile version