எப்போதும்
நூறு நூறு மனிதர்கள் சூழகூத்தும்
கும்மாளமுமாய்…
திருவிழா சன சமுத்திரத்தில்
வேடிக்கை பார்த்து பார்த்து
நடந்து செல்லும்
சிறு குழந்தைபோல
நகர்ந்து சென்றது
என் இளமை காலம்…
இன்று கூறிக்கொள்ள என்று
என்னுடன் கூட எதுவும் இல்லை…
இந்த தனிமையும்
இரைச்சல் நிறைந்த நிசப்தமும்
நத்தை வேகத்தில் நகரும் நேரமும்
வாழ்வின்
வாசலில் வந்து நின்றவாறு
உபாதைகளால்
வியாக்கியானங்கள் கூறும்
புது புது வியாதிகளும்
இவ்வாறுதான்
இன்றைய என் நாட்கள்…
மனம் விட்டு பேச
மனிதர்கள் என்னருகில் இல்லை
பேசாமல் இருந்து இருந்து
நாக்கு அண்நாக்குடன்
ஒட்டி கொண்டு விட்டது
பேச வேண்டும்
என்றதோர் தீரா பசி
உணர்வையும் உயிரையும்
அணு அணுவாய் கொல்கிறது
ஏதோ நினைவுகளில்
உறைந்து போயிருந்த என்னை
கால்களை உரசி உரசி
வெளியில் வருமாறு அழைக்கிறாள்
எனது ரோஷி…
இந்த குளிருக்குள்
ஒவ்வொரு காலை பொழுதும்
ரோஷியுடன் ஒன்றாய் நடை பயிலல் என்பதே
எனக்கு என்று இன்று மீதமிருக்கும் சந்தோசம்
.
ரோஷி முன்னால் நடக்க
அவள் சடை அழகையும் நடை அழகையும்
பார்த்து இரசித்தவாறு பின் தொடர்கிறேன்
பாதையில் எதிர்ப்படும்
இளையவர்களில் இருந்து
என்னொத்த வயோதிபர்கள வரை
ரோஷியை பார்த்து பார்த்து
விழிகளை தொலைக்கின்றனர்
விழிகளால் பேசியும்
ஆசை அடங்காத ஓர் சிலர்
அவள் முதுகில் தடவி
நலம் விசாரிக்கின்றனர்
கூட வரும் என்னை
ஏனோ எவரும்
கண்ணெடுத்தும் பார்க்கவில்லை
மனிதருடன் பேசும்
மனமுள்ள மனிதர்கள் எல்லாம்
கடந்த காலத்துடன் கரைந்து போயினரா…
மனதிற்குள் வெடிக்கும்
எனது துயரத்தை கேட்டு
ஆறுதல் கூற
எவரும் இங்கு இல்லை
என்ற ஓர் எண்ணம்
என்னையும் அறியாமல்
கண்கள் இரண்டையும்
கண்ணீர்த்துளிகளால் மறைத்து
பாதையில் என்னை இடற வைக்கிறது
பாவம் ரோஷி
எனது பரிதாப நிலையறிந்து
சுற்றி சுற்றி குரைத்து பார்க்கிறாள்
எனக்கு உதவுமாறு…
எவரும் அங்கு வரவில்லை…
பேசவே வராதவர்கள்
கரம் பற்றி தூக்க வருவாரா…
நானே மெல்ல எழுந்து
மெல்ல மீண்டும் நடக்க ஆரம்பிக்கிறேன்
நானிருக்கும் வயோதிப இல்லத்தை நோக்கி.