Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பூனையாகிய நான்… : தக்ஷிலா ஸ்வர்ணமாலி

கவிதை பற்றிய மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

ஆதி முதல், யுத்த களத்துக்கு நெடுந்தூரம் பயணம் செய்யும் போர் வீரர்கள், வழியில் பூனையைக் கண்டால், அருகிலொரு மக்கள் குடியிருப்பு இருக்கிறதென அறிந்து கொண்டனர். பூனைகள் எப்போதும் மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவை. அவ்வாறே பெண்களையும் கருதுகின்றனர். பெண்களையும் பூனைகளுக்கு ஒப்பிடுகின்றனர்.

பெண்களிடம் கூறப்படும் ‘பூனைக் குட்டியைப் போல அழகாக இருக்கிறாய்’, ‘பூனை நடை’, ‘பூனையைப் போல மிருது’, ‘பூனையைப் போல மின்னும் கண்கள்’ போன்ற வர்ணனை வார்த்தைகளைப் போலவே ‘பூனையின் குறுக்குப் புத்தி’, ‘மாறிக் கொண்டேயிருக்கும் பூனைக் குணம்’ ‘பூனையைப் போல சோம்பேறி’, ‘பூனையைப் போல பாவனை’ போன்ற வசவு வார்த்தைகளும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து அவர்களை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

பெண்கள் பூனைகளாகின்றனர்; பூனைகள் பெண்களாகின்றனர். ஆண்களின் சந்தர்ப்பங்களும், உணர்வுகளுமே அதையும் தீர்மானிக்கின்றன. கீழுள்ள கவிதையின் தலைப்பை ‘அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அக உணர்வு’ எனக் கருதினாலும், கவிதையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் அவர்களுக்கும் எப்பொழுதும் பொருந்தக் கூடியன. இக் கவிதையை பெண்ணின் மன உணர்விலிருந்து வாசித்துப் பார்க்கலாம். பெண்களை வெறுப்பவர்கள், தாம் இஷ்டப்பட்ட பிராணியைத் தலைப்பிலாக்கி, கவிதையோடு பொருத்தி வாசித்துக் கொள்ளலாம்.

- எம்.ரிஷான் ஷெரீப்

சிங்கள மொழிக் கவிதை

பூனையாகிய நான்…
– தக்ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது
உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் அழ இயலாது

உங்களிடம் கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன எனினும்
உங்களிடம் என்னால் அவற்றைக் கூறி விட இயலவில்லை
உங்களைப் போலவே எனக்கும் வலிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் பசிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும்
உங்களைப் போல என்னால் அவற்றுக்கெதிராக போராட இயலவில்லை

உங்களைப் போல என்னால் உரிமைகளுக்காகப் போரிட இயலவில்லையெனினும்
உங்களைப் போலவே நானும் துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டேயிருக்கிறேன்
உங்களைப் போல என்னால் அவற்றை வர்ணித்துக் கூற இயலவில்லையாதலால்
உங்களை விடவும் நான் நேர்மையாக இருக்கிறேன்

******

கவிஞர் பற்றிய குறிப்பு

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி : சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதி வரும் பெண் கவிஞர். ஒரு ஆசிரியையாகக் கடமையாற்றி வரும் இவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு சிறுவர் இலக்கியப் பிரதிகள், இரண்டு சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல் என இதுவரையில் பத்து தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.
Exit mobile version