Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவீரர் தினத்தைத் தலைமை தாங்கி நடத்தியவருக்கு இலங்கை அரசு தடை நீக்கம்!

2012 மாவீரர் தினத்தைக் கொடியேற்றி ஆரம்பித்துவைக்கும் தனம்
2012 மாவீரர் தினத்தைக் கொடியேற்றி ஆரம்பித்துவைக்கும் தனம்

2012 ஆம் ஆண்டு மாவீரர் தினம் கோலாகலமாக நடந்த வேளையில் இனப்படுகொலை நடைபெற்று இன்னும் மூன்று ஆண்டுகளே நிறைவுற்றிருந்தன. மாவீரர் தினம் வெறும் வியாபாரமாகிவிட்டது என்றும், அது புரட்சிகரமான வழிகளில் எழுச்சி நிகழ்வாக மாற்றப்பட வேண்டும் என்றும் இனியொரு… உட்பட மிகச் சில ஊடகங்கள் மட்டுமே குரலெழுப்பின. தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு போராட்டம் புதிய அரசியல் திட்டங்களுடன் புத்தெழுச்சி பெறவேண்டும் என்ற சமூக அக்கறைகொண்டவர்கள் அறைகூவல் விடுத்ததை வியாபாரிகள் கண்டுகொள்ளவில்லை.
பிரபாகரன், புலிக்கொடி என்ற சில அடையாளங்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பல லட்சங்களைத் தமதாக்கிக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். இதற்கு எதிராக மூச்சுவிட்டால் கூட ‘துரோகிகள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுவார்கள்..

பரந்து விரிந்த உலகில் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடிய சமூகம் முப்பது வருடங்களை ஒற்றைப்பரிமாணச் சிந்தனையில் மட்டுமே கடத்தியிருந்தது.

சமூகத்தின் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்ட பிழைப்புவாதிகள் கூட்டம், பிரபாகரன் வாழ்கிறார் என்றது. பிரபாகரனைத் தெய்வமாக வழிபடுமாறு கோரியது. நடைபெற்ற போராட்டமும் அதன் ஒவோரு அடையாளமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்றது. இதனால் மக்களின் எதிர்ப்புணர்வை குறுகிய எல்லைக்குள் முடக்கி அழித்தது.

இதற்கெல்லாம் பிரச்சார வெளியை ஏற்படுத்திக்கொடுத்த வியாபார ஊடகங்களும் அவற்றின் ஆலோசகர் மற்றும் ‘தத்துவார்த்தக் கோமாளிகளும்’ பிழைப்புவாதிகளை அப்பழுக்கற்ற புனிதமானவர்கள் என்றனர். சர்வதேசம் என்று அழைக்கப்பட்ட பலம் மிக்க ஏகாதிபத்திய நாடுகள் மட்டுமே அழிவுகளுக்குக் காரணம் என்றும் ஏனைய எல்லாமே சுமூகமகவே நடைபெற்றன என்றும் மக்களை நம்பக் கோரியது பிழைப்புவாதிகள் கூட்டம்.

பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புதிய சந்ததி போராடக் கற்றுக்கொள்வதை மிகவும் நுணுக்கமாகத் தடுத்து இலங்கை அரசிற்கும் மேற்கு நாடுகளின் உளவுப்படைகளுக்கும் சேவகம் செய்தது தம்மைத் தேசியவாதிகள் என அறிமுகப்படுத்திய கூட்டம்.

தமது கடமையை முடித்துக்கொண்டவர்களுக்கு இலங்கை அரசும், ஏகாதிபத்தியங்களும் கூலியை வெளிப்படையாகவே வழங்க ஆரம்பித்துள்ளன.

2009 ஆம் ஆண்டு வன்னிப் படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் லட்சங்களக மக்கள் தமது பணத்தை அள்ளி வழங்கினர். சிலர் தமது வீடுகளை அடகுவைத்து வங்களில் பணம் பெற்று புலம்பெயர் புலிகளுக்கு வழங்கினர். சிலர் தமது உடமைகளை விற்றனர். சிலர் வங்கிகள் கடன்பெற்றனர்.

இவ்வேளைகளில் பிரித்தானியாவில் பணம் திரட்டுவதற்குப் பொறுப்பாக இருந்தவர் தனம் என்பவர்.
பல லட்சங்கள் தனத்தின் கண்காணிப்பிலேயே முடங்கியிருந்தது.

தனது குரல்வளத்தால் புலிகளின் பிரித்தானியப் பிரிவு என்று அழைக்கப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் (TCC) பாட்டுப்பாடுவதற்காக இணைந்துகொண்டவர் தனம். பின்னர் சாந்தனும் தனமும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமையைக் கைப்பற்றிய கதையே தனியானது.

2009 களில் புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்பட்ட பணம் வன்னியைச் சென்றடையாமல் அதனைச் சேர்த்த பலரின் சொந்தக் கணக்குகளில் முடக்கப்பட்டது. அவ்வேளையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சில மாதங்களின் முன்பதாக தமிழ் மணி என்பவர் பணத்தைக் கையாள்வதற்காக வன்னியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரிடம் கணக்குகளை ஒப்படைப்பதற்கான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே வன்னியில் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது.

அதன் பின்னர் திரட்டப்பட்ட பில்லியன் கணக்கான பணத்தை உரிமை கோருவதற்கு யாரும் வரவில்லை. அப்போது புலம்பெயர் நாடுகளில் பணத்தைச் சுருட்டிக்கொண்டவர்கள் பிரபாகரன் வந்தால் பணம் தருவோம் எனவும் பிரபாகரன் மரணிக்கவில்லை எனவும் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தனர். அப்போதுதான் பிரபாகரன் உயிர்த்தெழுந்தார். பின்னர் அவருக்கு கடவுள் வேடம் அணிவித்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினர்.

போராட்டம் குறித்த எந்த அறிவுமற்ற புலம்பெயர் அப்பாவிகளுக்கு பிழைப்புவாதிகளின் போலிக் கதைகள் மட்டுமே தத்துவம் போதித்தது.

2009 ஆண்டு வரை மக்களிடம் சேகரித்த பணத்திற்கு ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் பொறுப்பாளர் தனமும் இன்றுவரை கணக்குக் காட்டவில்லை.

2012 ஆம் ஆண்டுவரை மாவீரர் தினத்தை ‘கலர்புல்’ லாக நடத்துவதற்கு தனம் தலைமை தாங்கினார். அதன் பின்னர், புலம்பெயர் மக்களின் வாழ்வோடு கலந்திருந்த ஐ.எல்.பி.சி வானொலியைப் பொறுப்பெடுத்து நடத்திய தனம் இன்று புலம்பெயர் அரசியலில் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்.

அத்தோடு பழைய கணக்குகளுக்கான கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

2012 ஆம் ஆண்டில் தனம் தலைமை தாங்கிய மாவீர் நாள் நிகழ்வில் அவரே புலிகளின் கொடியை ஏற்றி ஆரம்பித்துவைத்தார். அந்த நிழல் படம் அப்போது எல்லா ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.

2009 ஆம் ஆண்டு வரை தனம் போன்றவர்களால் ஆயுதமேந்த ஊக்கப்படுத்தப்பட்டவர்கள் இன்று சிறைக்கம்பிகளின் பின்னால் அனாதரவாக விடப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் அமைந்திருக்கும் முல்லைத் தீவு மாவட்டமே இலங்கையின் அதிக வறுமையால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என ஐ.நா அறிக்க்கை கூறுகிறது. பல போராளிகள் ஒரு நேர உணவிற்கே வழியின்றி தெருக்களில் அனாதரவாக விடப்பட்டுள்ளனர். அவர்கள் மூச்சுவிட்டால் கூட புலனாய்வுத் துறை பின் தொடரும். மீண்டும் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படலாம்.

நிலைமை இவ்வாறிருக்க தனம் இலங்கை அரசாங்கத்தால் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் இலங்கை சென்று வருவதற்கிருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இலங்கையில் அவர் தேடப்படுபவரல்ல.

புலிகளின் பணத்திரட்டலுக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட ஒருவர், மாவீரர் தினத்தைப் பல ஆண்டுகளாகத் தலைமை தாங்கி நடத்தியவர், புலம்பெயர் அடிப்படைவாத வானொலியின் உரிமையாளர் என்ற அத்தனை ‘தகமைகள்’ இருந்தும் தனத்தின் மீது இலங்கை அரசு தடை நீக்கியது எப்படி?

புதிய தடைப் பட்டியல்

newlist

முன்னைய தடைப்பட்டியல்

oldlist

Exit mobile version