Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

`காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன்

பெப்ரவரி 14 இல் உலகெங்கும் காதலர் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் வந்தால் போதும், சிலர் தம்மைக் கலாச்சாரக் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு, அடாவடிகளில் இறங்கி விடுவார்கள். கேட்டால்: “காதலர் நாள் தமிழ்க் கலாச்சாரமன்று, ஆங்கிலேயக் கலாச்சாரம்” எனப் பொங்குவார்கள்; உண்மையில் அவர்களுக்குக் `கலாச்சாரம்` என்ற சொல்லே தமிழல்ல எனத் தெரியாத போது, தமிழ்ப் பண்பாடு எப்படித் தெரியப் போகுகின்றது. அவர்களை அணுகிப் பார்த்தால், அவர்களில் மிகப் பெருமளவானோர் சாதி வெறியர்களாக /மத வெறியார்களாக இருப்பதனைக் காணலாம். ஆண்டு முழுவதும் தமக்கிடையே சண்டை இட்டுக் கொள்ளும் இந்து-இசுலாமிய அடிப்படைவாதிகள் ஒரே புள்ளியில் ஒன்றுபடும் நாளும் இந்த நாளேயாகும். மதம்-சாதி என்பனவே தமிழர்களின் மரபல்ல (சான்று – கீழடி) எனும் போது; இந்த அடிப்படைவாதிகள் பொங்கி எழுவது தமது சாதி-மதங்களுக்காகவேயன்றி, தமிழுக்காகவல்ல என்பது தெளிவாகின்றது. இவர்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டுத் தமிழர் பண்பாடு `காதலர் நாள்` கொண்டாடத்தினை ஏற்றுக் கொள்கின்றதா எனப் பார்ப்போம்.

பழங் காலத்தில் தமிழர்கள் காதலை மட்டுமல்ல காமத்தினையே கூடக் கொண்டாடினார்கள். `காமம்` என்ற சொல் இன்று போல அன்று மறைவான சொல்லன்று. ஐயன் வள்ளுவனே குறளில் குறிப்பிடும் மூன்றாவது பால் காமத்துப் பாலேயாகும் (அறம், பொருள், காமம்). பின்னரான காலப்பகுதியில் காமத்துப் பாலை `இன்பத்துப் பால்` என மாற்றி விட்டார்கள். உண்மையில் அது தவறு. காமம் வேறு, இன்பம் வேறு. இத் தவறு குறித்துப் பாவாணர் முதல் பல அறிஞர்கள் எழுதியுள்ளார்கள்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்

கூடி முயங்கப் பெறின்” : (குறள் 1330)

{காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்; ஊடல் முடிந்தபின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்}

பார்த்தீர்களா! வள்ளுவனே காமம், இன்பம் ஆகிய இரண்டினையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளதனை. காமத்தினால் விளைவதே காதல். முனைவர் இரவி சங்கர் இந்த இரு சொற்களையும் பின்வருமாறு தொடர்புபடுத்துவார்.

# “`கா` = காத்தல் என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்டவையே காதல், காமம் ஆகிய இரு சொற்களும்.

கா-மம்= விழைவு காத்தல் : Desire to Love

கா-தல்= விழைந்ததை, வாழ்வில் கா(த்துக்) கொள்ளல்!: During the Love.

மேலும் காமம் என்பது முறை தவறும் போது, அது கழிநுகர்ச்சி (Lust ) எனப்படுமே தவிர காமமே கழிநுகர்ச்சியன்று.

காமம் என்பது காரணம் (Cause ), இன்பம் என்பது விழைவது (Effect ). “#

எனவேதான் பழந் தமிழர்கள் காதலை மட்டுமன்றிக் காமத்தினையும் கொண்டாடினார்கள்.

சங்க இலக்கியங்களில் காமன் விழா :-

பொதுவாக ஒரு காலத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்களைப் படம் பிடித்துக் காட்டும் கருவியாக இலக்கியங்கள் திகழுவதாகச் சொல்லுவார்கள். அந்த வகையில் சங்க இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன எனப் பார்ப்போம். சங்க இலக்கியங்களில் `காமன் விழா` பெரிதும் சிறப்பித்துக் கூறப்படுகின்றது.குறுந்தொகைப் பாடலிலும் ஒரு செய்தி ` காமன் விழா` தொடர்பாகக் கூறப்படுகின்றது.

மள்ளர் குழீஇய விழவினானும்

மகளிர் தழீஇய துணங்கையானும்

யாண்டும் காணேன் மாண் தக்கோனை

யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த 5

பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே

: குறுந்தொகை 31 : 1-6

மேலுள்ள பாடலில் `கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல் கொண்டாள்,அவர்கள் இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது புனலாடிக் கொண்டிருந்தனர், அப்போது ஆதிமந்தியை காவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது, ஆட்டனந்தி காவிரி நதிக்கரை வழியே தேடிச் சென்றாள், அவள் தேடிச் சென்றபோது, காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது` என்ற செய்தி சொல்லப்படுகின்றது.

கலித்தொகையும் காமன் விழா பற்றிப் பேசுகின்றது. ஆற்றங்கரையில் நடைபெறும் காமன்விழாவில் தலைவன் தன்னுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தலைவி பாடுவதாகப் பின்வரும் பாடல் அமைகின்றது.

கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த_கால்

ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை

மல்கிய துருத்தியுள் மகிழ் துணை புணர்ந்து அவர்

வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ

:கலித்தொகை 35:11-14

{பொருள் – கண்ணுக்குள் நிற்காத அளவு நீர் பெருக, அவரைத் தழுவியபின் நாம் அவரைச் செல்ல விடுத்தபோது, ஒளிபடைத்த நெற்றியையுடையவளே! நம்மிடம் அவர் வருவதாகச் சொல்லிச் சென்றது; பெருகிய நீர்நடுவேயுள்ள ஆற்றுமேட்டில், தாம் மகிழும் துணையான எம்முடன் கூடிக்கலந்து, அவர் வில்லவனான காமன் திருவிழாவில் விளையாடும் காலம் அன்றோ?}

பரத்தையருடன் கூடக் காமன்விழா கொண்டாடப்பட்டுள்ளது.

உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள்

விறல் இழையவரோடு விளையாடுவான்-மன்னோ

: கலித்தொகை 30: 13-14

{ அவரை அடைவதற்குரிய நான் இங்கே அழகிழந்து வாட, காமன் விழாவில் சிறந்த அணிகலன் அணிந்த பரத்தையரோடு விளையாடி மகிழ்ந்திருப்பாரோ!}

பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவனை நோக்கி வருந்தி இளைத்துப் போயுள்ள தலைவியினை, இதோ தலைவன் காமன் விழா கொண்டாடத் தலைவன் வந்துவிட்டதாகத் தோழி ஆற்றும் பாடல் வருமாறு.

இன்னொரு கலித்தொகைப் பாடலையும் பார்ப்போம்.

நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின்

காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என

ஏமுறு கடும் திண் தேர் கடவி 25

நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே

: கலித்தொகை 29: 23-26

{ பொருள்-நாம் இல்லாத தனிமைத் துயருடன், தனிமையில் மனத்தை நடுங்கவைக்கும் இளவேனிற்காலத்தில், காமவேளுக்குரிய விழா நடக்கும்போது கலங்கிப்போவாளே பெரிதும் என்று பகைவர் மயக்கமுறும் வகையில் விரைவாக ஓடும் திண்ணிய தேரினை ஓட்டிக் கொண்டு நாம் விரும்பும் காதலர் நமக்குத் துணையாக இருக்க விரைந்து வருகின்றார்}.

பிற்காலத்தில் இந்தக் `காமன்` என்பவனே `மன்மதன் ` ஆக்கப்படுகின்றான். இதோ கீழுள்ள பரிபாடலைப் பாருங்கள்.

`எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்

தொழில் வீற்றிருந்த நகர்”: பரிபாடல் 18:28

என்று காமவேள் பற்றிப் பரிபாடல் எனும் சங்க இலக்கிய நூல் குறிக்கின்றது . இந்த காமன் தான் பிற்காலத்தில் `மன்மதன்` ஆக்கப்படுகின்றான். இதிலிருந்தே மன்மதன் கையில் வில், மற்றும் அவன் அம்பு விடுதல் போன்ற புராண உருவகப்படுத்தல்கள் பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம். இங்கு காமன் விழாவினை `வில்லவன் விழா` என அழைக்கப்பட்டமை எமது கருத்துக்குக் கூடிய வலுவூட்டும்.

காமன் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இணையர் (காதல் சோடிகள்) தங்கியிருக்க அமைக்கப்பட்ட குடிலினை `மூதூர்ப் பொழில்` மற்றும் `இளவந்திகை` என்ற பெயர்களில் அழைக்கப்பட்டதாகச் சிலம்பு சொல்லுகின்றது . { இந்த நிகழ்வு காதலர்கள் காதலர் நாளை ஒட்டி விடுதிகளுக்குச் சென்று தங்கியிருப்பதனை ஏனோ நினைவுபடுத்துகின்றது.}

மேலே பார்த்த சங்க காலப் பாடல்களில் `காமன் விழா` கொண்டாடப்பட்டதனைத் தெளிவாகப் பார்த்தோம். எக் காலப் பகுதியில் இந்த விழா (காமன் விழா/ காமவேள் விழா) கொண்டாடப்பட்டது என இனிப் பார்ப்போம். பின்வரும் ஆண்டாள் பாடலினைப் பாருங்கள்.

காமன்போதரு காலமென் றுபங்

குனிநாள்கடை பாரித்தோம்,”

: நாச்சியார் திருமொழி (11).

{ எங்களுக்குத் துன்பம் நீங்குமே, காமன் வருகின்ற காலமென்று, பங்குனி நாள் அவன் வரும் வழியில் கடை விரித்தோம்}

மேலும், காமதேவனுக்காக எடுக்கப் பட்ட அந்த விழா, பங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில்) நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழாவிற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர் என்பதை அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் அறியலாம். எனவே மாசி- பங்குனி மாத காலப்பகுதியில் காமன் விழா கொண்டாடப்பட்டமை தெரிய வருகின்றது. இத்தகைய காமன் விழாவே சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவாக உரு மாறியது என்ற கருத்தும் ஒன்றுமுள்ளது. ` இந்திர விழா` (உரு மாறிய காமன் விழா) பின்பனிக் காலத்தில் இடம் பெற்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது [சிலம்பு. 2:14: 106 – 112.] இங்கு `பின்பனிக்காலம்` என்பது இன்றைய மாசி-பங்குனி மாதக் காலமேயாகும்.

சோழ நாட்டில் மட்டுமல்லாமல் பாண்டிய நாட்டிலும் கொண்டாடப்பட்டது. மதுரை நகரில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது.

கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்

வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்

பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்

:(சிலம்பு. மதுரை: ஊர்காண்: 110 – 112)

எனவே காமவேள் விழா தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டுள்ளது.

எனவே மேலே பார்த்த இலக்கியச் சான்றுக ளின்படி மாசி முதல் பங்குனி மாதக் காலப் பகுதியில் ஒரு தொடர் விழாவாகவே காமன் விழா கொண்டாடப்பட்டமை தெளிவாக்குகின்றது. புராணக் கதைகளும் மன்மதனின் ( பெயர் மாற்றப்பட்ட காமன்) பிறந்த நாளாக மாசி மாத முழுமதி (பௌர்ணமி) நாளினையே சொல்லுகின்றன. எனவே இன்றைய வலன்ரைன் நாள் (Valentine’s Day ) கொண்டாடப்படும் காலப்பகுதியினை ஒத்த ஒரு காலப் பகுதியில் கொண்டாடப்பட்ட ஒரு தொடர் விழாவாகவே காமன் விழா காணப்படுகின்றது. பழைய தொடர் விழாக்கள் யாவும் இன்றைய பரபரப்பான உலகில் ஒரு நாள் விழாவாகச் சுருங்கிப் போவது இயல்பானது {எ.கா – தைத்திருநாள் விழா}. அந்த வகையில் உலகுடன் ஒத்து, பெப்ரவரி 14 இல் காதலர் நாளினைக் கொண்டாடுவது தமிழர் மரபுக்கு முரணானதல்ல.

முடிவாகக் காதலர் நாளினைக் கொண்டாடுவது தமிழர் பண்பாட்டுக்கு முரணானதல்ல. மரபுகளுக்கு அப்பால் சாதி+ மத வெறியர்களைக் கடுப்பாக்குவதற்காகவேனும் காதலர் நாளினைக் கொண்டாடலாம். நோய்த் தொற்றுக் காலத்தில் உரிய எச்சரிக்கையுடன் கொண்டாடக் கூடிய நாடுகளில் கொண்டாடுங்கள். எல்லோருக்கும் காதலர் நாள் வாழ்த்துகள்.

Exit mobile version