சுய நிர்ணைய உரிமைக்கான தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டத்தை இனவாதமாக மாற்றி இன்று தமது வாக்கு வங்கியையும் பணப்பையையும் நிரப்பிக்கொள்ளும் இக் குழுக்கள் ஜெயலலிதா குறித்துத் தெரியாதவர்கள் அல்ல.
நான்கு தசாப்தப் போராட்டத்தின் அரசியல் தவறுகளால் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அப்பாவித் தமிழர்களும் அவர்கள் மத்தியிலிருந்து தோன்றிய போராளிகளும், மீண்டும் புதிய போராட்ட அரசியலை நோக்கி அழைத்துவரப்பட வேண்டியவர்கள். அவர்கள் பாராளுமன்ற அரசியல்வாதிகளின் வாக்குவங்கியை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் பகடைக்காய்கள் அல்ல.
தேர்தல் அரசியலில் ஜெயலலிதா அதிகாரவர்க்கத்தின் நேர்மையான பிரதிநிதி. இந்திய அதிகாரவர்க்கமும் அந்த நாட்டின் பல்தேசிய வர்த்தக முதலைகளுமே ஜெயலலிதாவின் அரசியலைப் பாதுகாத்துப் பணம் வழங்கியவர்கள். தமிழகம் ஜெயலலிதாவாலும் அவரைச் சுற்றியிருந்த மாபியாக் கும்பல்களாலும் சூறையாடப்பட்ட போது அவருக்கு நம்பகமான அதிகாரவர்க்கமே அவரைப் பாதுகாத்தது,
தான் சார்ந்த அதிகாரவர்க்க ஆதிக்க சாதியினருக்கே கல்வி சொந்தமென நீதிமன்றம் வரை சென்று வாதாடிய ஜெயலலிதா, இந்திய அதிகாரவர்க்கத்தின் உறுதியான பிரதிநிதி.
தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் மீது போலிஸ் படையை ஏவி காட்டுமிராண்டித்தனமான கொலைகளை நடத்தியவர்.
சாராயக் குதங்களிலிருந்து கிடைக்கும் வருவாய்க்காக தமிழகமெங்கும் டாஸ்மார்க் விற்பனை நிலையங்களை நட்டுவைத்த ஜெயலலிதா, அபிவிருத்தி என்ற பெயரில் உள்ளூர் உற்பத்தியை நிர்மூலமாக்கி, பல்தேசிய நிறுவனங்களை ஆலமரமாக வளர்த்துவிட்டவர்.
ஈழ அகதிகளுக்கு தான் மரணிக்கும் வரை குறைந்த பட்ச மனிதாபிமான உரிமைகளைக் கூட வழங்க மறுத்தவர். சிறப்பு முகாம்களில் தஞ்சம் கோரி வந்தவர்கள் இன்னும் அவலம் நிறைந்த தனிமை வாழ்வை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். பலர் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இறுதி வரை ராஜீவ் காந்தி கொலை சந்தேக நபர்களை விடுதலை செய்வது தேசியப் பாதுகாப்பிற்கு பாதமானது என எண்ணியவர். அதற்காக நீதிமன்றம் சென்றவர்.
ஈழத் தமிழர்களின் பிரச்சனை என்பது விடுதலை புலிகள் அவர்களைக் கேடையமாகப் பயன்படுத்துவதே என வாதிட்டவர். தனக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து என்பதால் அந்த இயக்கத்தைத் தடைசெய்யக் கோரியவர்.
அதிகாரவர்க்க மமதையும், அதன் மீதான விசுவாசமும் இணைந்த உறுதி அருவருபான ஆணவமே தவிர மக்கள் பற்று அல்ல. ஒடுக்கும் அதிகாரவர்க்கத்திற்கு, அநீதிக்கும் எதிராகக் குரல்கொடுத்து மடிந்துபோன வீரப்பெண்களுக்கு மத்தியில் அப்பலோ என்ற ஐந்து நட்சத்திர மருத்துவ மனையில் மக்களின் பணத்தோடு மரணித்துபோன ஜெயலலிதா கடைந்தெடுத்த கோழை.
எம்.ஜீ.ஆர் உருவாக்கிய தலைமை வழிபாடு, சினிமாக் கவர்ச்சி அரசியல் என்ற அடிப்படைகளோடு இந்திய அதிகார வர்க்கத்திற்கு அடிபணியும் திறனும் உள்ளடங்கியதால் அந்த அதிகாரவர்க்கத்தினால் நேசிக்கப்பட்டவர்.
ஈழப் போராட்டத்திற்கும் தமிழ் நாட்டில் வாழும் ஈழ அகதிகளுக்கும் தனது இறுதிக்காலம் வரை எதிரியாகவே தன்னை வரித்துக்கொண்ட ஜெயலலிதாவிற்கு நாடுகடந்த தமீழீழக் குழு அஞ்சலி நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.
அந்த கேலிக்கூத்திற்கு அப்பால் சில அரசியல் தலைவர்களின் கோமாளித்தனமான ‘ மொழிகள்’ கீழே:
ஈழத்தின் காப்பரணாக திகழ்ந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலிகள் – சிறிதரன் எம்பி.
ஈழத்தமிழர்களுக்காக ஓங்கியொலித்த குரல் அமைதியாகிவிட்டது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
தமிழர்களுக்கு இடர் நேர்ந்தபோதெல்லாம் அபயக்கரம் நீட்டியவர் – சரவணபவன் எம்.பி.
வால் வெள்ளி ஒன்று அரசியல் வானில் பளிச்சென்று நின்று பின்னர் திடீரென மறைந்து விட்டது – சீ.வீ.விக்னேஸ்வரன்
இலங்கை தமிழ் மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தார் – இரா. சம்பந்தன்
தமிழர்களுக்காக போராடிய வீர பெண்ணின் மரணம் தமிழர்களுக்கு பேரிழப்பு – விஜயகலா
ஜெயா மறைவால் தீராத கவலையில் தமிழ் பேசும் மக்கள் – அமைச்சர் ஹக்கீம்