Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

T.M.சௌந்தரராஜன் – எங்கள் முற்றத்து மல்லிகை : T.சௌந்தர்

hqdefaultதமிழ் திரை இசையில் ஓங்கிக்குரல் எடுத்துப் பாடும் பரம்பரையில் உதித்து , சிறந்த பல பாடல்களைப் பாடி , நம் உள்ளங்களை கவர்ந்த திரு.T.M.சௌந்தரராஜன் [ 1922 – 2013 ] அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
மிகவும் வறிய குடுபத்தில் பிறந்த அவர் புகழ் பெற்ற தியாகராஜபாகவதரின் பாடல் முறையை பின்பற்றி பாடகராக வளர்ந்தார்.ஆனாலும், அவர் திரையுலகில் அறிமுகமான 1950 களின் போது ஓங்கி குரல் எடுத்துப் பாடும் முறைக்கு மாற்றாக மெல்லிசை வடிவத்திற்க்கான புதிய முறை அறிமுகமாகிக் கொண்டிருந்தது.C.S .சுப்பராமன் அதன் முன்னோடியாக விளங்கினார்.

இருப்பினும் ஓங்கிக் குரல் எடுத்தப் பாடும் முறையை பலரும் பின்பற்றியே வந்தனர்.
1950 களில் வெளிவந்த
இதயகீதம் 1950 [ இசை: எஸ்.வீ.வெங்கட்ராமன் ]
ன்முடி 1950 [ இசை: ஜி.ராமநாதன் –
மந்திரிகுமாரி 1950 [ இசை: ஜி.ராமநாதன் ] –
ஓர் இரவு 1951 இசை; R.சுதர்சனம் –
சர்வாதிகாரி 1951 [ இசை: எஸ்.தட்சினாமூர்த்தி ] –
பாதாளபைரவி 1951 [ இசை: கண்டசாலா ]-
தேவதாஸ் 1952 [ C.S .சுப்பராமன் ]-
சண்டி ராணி 1952 [ C.S .சுப்பராமன் ]
போன்ற படங்களில் மெல்லிசைக்கான முயற்சிகள் முளைவிடத் தொடங்கின.

பாடல் இசையமைப்பு அணுகுமுறையில் மாற்றம் தோன்றியது என்பது பாடும் முறையிலும் மாற்றங்களை வேண்டியது.ஓங்கி குரல் எடுத்து உச்சஸ்தாயியில் பாடும் முறைக்கு மாற்றாக , குறைந்த சுருதியிலே பாடும் ஒரு முறை மெல்ல அறிமுகமானது.அதற்க்கான ஒலிப்பதிவு தொழில்நுட்ப அறிமுகமும் வாய்ப்பாய் அமைந்தது.

அந்த முறையில் பாடுவது ஒரு நவீன பாணியாக [ New Style of Singing ] கருதப்பட்டது.அது ஹசல் இசை , ஹிந்தி திரை இசையின் தாக்கத்தால் உருவானது.முகமது ரபி , முகேஷ் போன்றோரின் பாடல்கள் புகழ் பெற்று விளங்கின.

தமிழ் திரைப்படங்களிலும் இசையமைத்துப் புகழ் பெற்ற தெலுங்கு இசையமைப்பாளர்களான ஆதிநாரயணராவ் , பெண்டலாயா நாகேஸ்வரராவ் ,வீ.தட்சிணாமூர்த்தி ,எஸ்.ராஜேஸ்வர ராவ் போன்ற இசை மேதைகள் மென் இசையின் கைகளை மெதுவாகப் பிடித்து கொண்டு வந்தார்கள்.

மெல்ல நுழைந்த மெல்லிசையின் நாயகர்களாக A.M.ராஜா , கண்டசாலா பிரபல்யமானார்கள் . 1950 களில் வெளி வந்த பாடல்களைக் கேட்பவர்கள் இதனை எளிதாக அறிந்து கொள்ளலாம்.தமிழ் உச்சரிப்பை பெரிதாக அலட்டிக் கொள்ளாலாமல் கண்டசாலாவை பாட வைத்ததென்பது அதற்க்கு சாட்சியாய் உள்ளது.

T.M.சௌந்தரராஜன் சார்ந்த சௌராட்சிய சமூகத்தினர் சிலர் திரைத்துறையில் இருந்ததன் தொடர்பால் எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு என்ற இசை மேதையின் தொடர்பு அவருக்குக் கிடைத்து.இசைமேதை ஜி.ராமனாதனின் தொடர்பும் கிடைத்தது.

ஆனாலும் தமிழ் திரையில் முதல் பின்னணி பாடகராக புகழின் உச்சியிலே திருச்சி லோகநாதன் இருந்த காலம்.” புது வசந்தமாமே வாழ்விலே” – [“அபிமன்யு -1948 ] , “மனம் போல வாழ்வு ஏது “- [சிங்காரி 1950 ] போன்ற பாடல்கள் வெளி வந்து புகழ் பெற்ற காலம்.

ஒரு புறம் மெல்லிசை பாடுவதற்கு ஏ.எம்.ராஜா ,கண்டசாலா ,T.A.மோதி போன்றவர்கள் , மறுபுறம் திருச்சி லோகநாதன் , T.R.மகாலிங்கம் போன்ற ஆற்றல் மிக்க , ஈடினையற்ற பாடகர்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்த காலம்.

ஏழிசைமன்னர் M.K .தியாகராஜ பாகவதரைப் போல பாடிக்காண்பித்து ஜி.ராமநாதனின் அபிமானத்தை பெற்றிருந்த T.M.சௌந்தரராஜனை , ஜி.ராமநாதன் , தான் இசையமைத்த மந்திரி குமாரி [ 1950 ] படத்தில் அவரது குரல் அமைப்புக்குப் பொருத்தமென எண்ணி , இனம் தெரியாத ஒரு உழவன் பாடுவதாக அமைந்த

” அன்னம் இட்ட வீட்டிலே கன்னக் கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள் மண்ணாய் போக நேருமே “

என்று நாட்டுப்புற பாங்கில் அமைந்த பாடல் ஒன்றை பாட வைத்தார்.அந்தப் பாடல் ஓரளவு அவரை அறிமுகம் செய்தது.ஆனாலும் அந்த படத்தின் புகழ் மிக்க பாடல்களான “வாராய் நீ வாராய் ” உலவும் தென்றல் காற்றினிலே ” [ [மந்திரிகுமாரி- 1950 ] போன்ற பாடல்களைப் பாடியவர் திருச்சி லோகநாதன் அவர்களே.

T.M.சௌந்தரராஜன் குரல் நாட்டுப்புற பாடலுக்குப் பொருத்தமானவர் என நினைத்தார்கள்.பின் 1951 இல் தேவகி படத்தில் ” தீராத துயராலே ” , மலைக்கள்ளன் படத்தில் ” எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ” என்று எம்.ஜி.ஆருக்கு முதல் Solo பாடினார்.

வளையாபதி [1952] படத்தில் எஸ்.தட்சிணாமூர்த்தி இசைஅமைப்பில் அவருக்கு முதல் ஜோடிப்பாடல் கிடைத்தது. ” குலுங்கிடும் பூவில் எல்லாம் ” , ” குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன் ” என ஜமுனாராணியுடன் இணைந்து பாடினார்.இந்த இரண்டு பாடல்களிலும் அவர் தனக்கு வாகாக அமைந்த குரலில் பாடாமல் கண்டசாலாவின் சாயலில் பாடியிருப்பார்.அந்தமான் கைதி [ 1952 ] என்ற திரைப்படத்தில் T.கோவிந்தராஜுலு [ T.G.லிங்கப்பாவின் தந்தை ] என்ற இசையமைப்பாளரின் இசையில் கண்டசாலாவும் ,பி.லீலாவும் இணைந்து பாடிய ” வண்ண மலர் தன்னைக்கண்டு ” , ” வாழ்வின் ஜீவன் காதலே ” போன்ற புகழ் பெற்ற பாடல்களைக் கேட்டவர்கள் இதனை ஏற்றுக் கொள்வர்.

அங்கொன்றும் , இங்கொன்றுமாய் பாடிவந்த T.M.சௌந்தரராஜன் ,சிவாஜிக்கு முதன் முதலில் கூண்டுக்கிளி [ 1954] படத்தில் ” கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளியாக்கி விட்டு ” என்று தொடங்கும், ,ஆற்றல் மிக்க எழுத்தாளரான விந்தனின் பாடலைப் பாடும் வாய்ப்பைப் பெற்றார்.அந்த வாய்ப்பை வழங்கியவர் இசைமேதை கே.வீ.மகாதேவன்.
காட்டு மரங்களில் மறைந்திருக்கும் சூரிய ஒளி , இலை இடுக்குகளில் அங்கொன்றும் இங்கொன்றும் , மின்னுவது போல இருந்த சூழ் நிலையில் சிவாஜி கணேஷன் நடித்த தூக்குத் தூக்கி [ 1954 ] படத்தில் பாடும் வாய்ப்பைப் பெற்றார்.இது கடுமையான எதிரிப்பின் மத்தியிலேயே அமைந்தது.

அவர் பாடுவதை கடுமையாக ஆட்சேபித்தவர் சிவாஜி கணேசனே! சிவாஜி நடித்த பராசத்தி[ 1952 ] அமோக வெற்றி பெற்றதால் புகழின் உச்சிக்குச் சென்ற சிவாஜி , தனக்கு பராசக்தியில் பின்னணி பாடிய “சி.எஸ்.ஜெயராமன் தான் பொருத்தம் , கண்டவர்களை எல்லாம பட வைத்து கெடுக்க வேண்டாம் ” என்று கூறி விட்டார்.தயாரிப்பாளர்கள் முதலில் ஒப்பந்தம் செய்த பாடகர் திருச்சி லோகநாதன். எட்டுப் பாடல்களுக்கும் தலா 500 ரூபாய் என்று அவர் கேட்க , இல்லை மொத்தமாக ஒரு தொகை தருகிறோம் என்ற தயாரிப்பாளரின் கருத்தில் உடன்பாடில்லாமல் விலகியதுடன் “மலிவாகப்பாட வேண்டும் என்றால் T.M.சௌந்தரராஜன் என்ற மதுரைப் பாடகரைப் பாட வையுங்கள் ” என்று கூறி விலகிவிட்டார்.

சிவாஜியும் பிடிவாதமாக் மறுத்த நிலையில் ஜி.ராமநாதன் முன் வந்து ” பாட்டைக் கேளுங்கள் , பிடிக்காவிட்டால் மாற்றி விடுவோம் ” என்று கூற , சமாதானமான சிவாஜி ஒலிப்பதிவு செய்த மூன்று பாடலகளையும் கேட்டார்.

முதலாவது பாடல் ” சுந்தரி சௌந்தரி நிரந்தரியே ” , பின் ” பெண்களை நம்பாதே ” என்று பாடல்களைத் தொடர்ந்து, ” ஏறாத மலைதனிலே ” என்ற பாடலைக் கேட்ட சிவாஜி ,உற்சாசகமடைந்து சௌந்தரரஜனை மிகவும் பாராட்டி எல்லாப் பாடலகளையும் பாட அனுமதித்தார்.

அந்தப் படத்திற்குப் பொருத்தமாக பாடல்கள் அனைத்தும் நாட்டுப்புறப்பாங்கில் இருந்ததால் தான் ஜி.ராமநாதன் அந்த வாய்ப்பைக் கொடுத்தார் போலும்.ஏற்க்கனவே மந்திரிகுமாரியில் அந்தவகைப்பாடலையே பாடியிருந்தார்.

ஆயினும் அதே படத்தில் அவர் எம்.எஸ் ராஜேஸ்வரியுடன் இணைந்து பாடிய ” கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த ” என்ற ஒரு காதல் பாடல் இன்றளவிலும் இனிமையாக ஒலிக்கின்ற ஆபேரி ராகப்பாடலாகும்.தூக்குத்தூக்கி படத்தின் வெற்றி அவரை ஒரு பாடகனாக அங்கீகரித்தது.நாட்டுப்புற பாடல்கள் மட்டுமல்ல பலவகைப்பாடல்களையும் தன்னால் பாட முடியும் என நிரூபித்தார்.

ஒரு படம் வெற்றி அடைந்தால் தமிழ் சினிமா உலகில் என்னென்னவெல்லாம் கூத்து நடக்கும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அப்படிப்பட்ட “வெற்றிப படங்களை ” காலம் குப்பை மீதில் எறிந்து விட்டாலும் அந்தப் பாடல்கள் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கின்றன.அதனை இசையமைத்தவர்களும் ,பாடலகளை எழுதியவர்களும் ,அவற்றைச் சுவைபடப் பாடியவர்க்ளுமே அதனைச் சாதித்தவர்கள்.ஆனாலும் இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்றொரு எழுதப்படாத நியதி மைய்யமிட ஆரம்பித்தது.

எம்ஜியார்,சிவாஜி என்ற இரு புகழ் பெற்ற நடிகர்களின் படங்களில் பாடி கதா பாத்திரங்களின் உணர்வுகளை தனது கம்பீரமான குரலால் தூக்கி நிறுத்தினார் T.M.சௌந்தரராஜன்.சிவாஜி ரசிகர்கள் அவரது குரல் சிவாஜிக்குதான் பொருத்தம் என்றும் , எம்ஜிஆர் ரசிகர்கள்
அவரது குரல் எம்ஜிஆருக்குதான் பொருத்தம் என்றும் கொண்ட்டாடினர்.அதில் ஓரளவு உண்மையிருந்தாலும் , பாடவேண்டிய பாடல்களை இசையமைப்பாளரின் கட்டளைக்கு ஏற்ப அவர் தனது பாணியிலேயே பாடினார் என்று தான் சொல்ல வேண்டும்.அதை ரசிப்பவர்கள் தங்கள் மன நிலைகளுக்குப் பொருத்தமாக எடுத்துக் கொண்டனர்.

நல்ல தங்காள் படத்தில் ” பொன்னே புது மலரே பொங்கி வரும் காவிரியே ” , பெண்ணரசி[ 1955 ] படத்தில் ” வென்றது சூழ்ச்சி என்று எண்ணாதேடா ” , கற்ப்புக்கரசி [ 1957] படத்தில் ” காயமே இது மெய்யடா இதில் கண்ணும் கருத்தும் வையடா ” , சதாரம் [1956] படத்தில் ” நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே ” – , -[ கைராசி ] படத்தில் ” கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ -” கொஞ்சும் சலங்கை[ 1960] படத்தில் ” காதல் கீதம் கேட்குமா என் கவலை எல்லாம் தீருமா ” போன்ற பிற பாடல்கள் பலவும் எம்ஜிஆருக்கும் ,சிவாஜிக்கும் பாடியவை அல்ல.இங்கே சொன்ன பாடல்கள யாவும் ஜெமினி கணேசனுக்குப் பாடியவை.

அது மட்டுமல்ல எஸ்.எஸ்.ராஜேந்திரன் , ரவிச்சந்திரன் , ஜெய்ஷங்கர் போன்ற நடிகர்களுக்கும் பல வெற்றிப் பாடல்களைப் பாடினார்.
-” எழியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தி -” [தை பிறந்தால் வழி பிறக்கும் ] ,” ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே ” [ முதலாளி ], ” சொன்னாலும் வெட்கமடா ” [ முத்துமண்டபம் ] , ” ஆண்கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக ” [ சாரதா ] , ” கண்ணிலே அன்பிருந்தால் ” [ ஆனந்தி ] போன்ற பல பாடல்களை எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்காக பாடியதை உதாரணமாகக் கூறலாம்.

ஆனாலும் 1960 களில் இது முற்றிலும் இறுகி புகழின் உச்சிக்குச் சென்ற இரு திலகங்களின் குரலாக டி.எம்.எஸ் அவர்களே ஒலித்தார்.

“ஏழிசை மன்னன் “என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதரின் உற்ற நண்பரான ஜி.ராமநாதன் ,1950 களில் அவரைப் பின்பற்றி பாடி வந்த இளைஞரான டி.எம்.எஸ் அவர்களை அரவணைத்துக் கொண்டார்.தான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் வாய்ப்புக்களை வழங்கினார். பாகவதரைக் கொண்டு அவர் பாடுவித்த “மன்மத லீலையை வென்றார் உண்டோ ..” என்ற பாடலின் ராகமான சாருகேசியில் சௌந்தரராஜனை ” வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறவே ” என்று பாட வைத்து அந்த ராகத்திற்கு இன்னுமொரு சிறந்த பாடலைத் தந்தார்.

இந்த மாதிரியான செவ்வியல் கலந்த மெல்லிசைப்பாடல்களில் [ Semi – Classical Songs ] அற்ப்புதங்களை நிகழ்த்திய ஜி.ராமநாதனின் காலத்தில் சாகா வரம் பெற்ற பாடலகளைப் பாடித் தன்னை வளர்த்துக் கொண்டார் டி .எம்.எஸ்.

ஜி.ராமநாதன் பாடல்களை இசையமைக்கும் போது சிக்கலான சங்கதிகளை போடுவதுடன் , அவற்றைச் சரியாகப் பாடும் படியும் வற்ப்புறுத்துவாரராம்.அவர் பாடும் போதும் அவ்விதமே பாடுவார் என்பதை நாம் அவர் பாடலில் கேட்டிருக்கிறோம்.அவர் போடும் மெட்டை சுருதி சுத்தமாகப்பாட வேண்டும்.பாடகர்கள் தங்களுக்கு இசைந்தவாறு பாட முடியாது.அவர் எப்படிப்பட்ட பாடகர் என்றாலும் அது தான் முடிவு.

அம்பிகாபதி படத்தில் ஜி.ராமநாதன் இசையமைத்த அற்ப்புதமான பல விருத்தப்பாடல்களைத் தனது தெளிவான குரலில் இனிமையாகப் பாடினார் டி.எம்.எஸ் .ராகங்களை ஊனமிளக்கச் செய்து , அவலப்படுத்தாமல் , அதன் உயிர்க்கூறுகளைக் காண்பித்து , தனது குரல் ஆளுமையை நாட்டிய அற்புதக் கலைஞர் டி .எம் .எஸ்.

அம்பிகாபதி படத்தில் இடம் பெற்ற சில விருத்தப்பாடல்க்ளைத் தருகின்றேன்.

குலோத்துங்கன் சோழனின் சபையில் அம்பிகாபதியும் ,அவனது தந்தை கம்பரும் , ஒட்டக்கூத்தர் பாடுவதாகவும் அமைந்த பாடல்கள் தன்னிகரற்றவை.

பாடல் 1 :
“சோறு மணக்கும் சோநாடா ” என்று நாட்டை ராகத்தில் கம்பன் பாடுவதாக ஒரு பாடல். அந்தப் பாடலை வீ.என்.சுந்தரம் என்கிற அருமையான் , கம்பீ ரமான குரல் வளமிக்க கலைஞர் ஆரம்பிப்பார்.அதனைத் தொடர்ந்து ,

” வெல்க நின் கொற்றம் மன்னா ” என்று ஒட்டக்கூத்தர் [சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்] சகானா ராகத்தில் இனிமை குழைப்பார்.அதனைத் தொடர்ந்து அம்பிகாபதி [ நம் ஹிரோ சௌந்தரராஜன் ] மோகனத்தில் கர்ஜிப்பார்.மேல் சொன்ன இருவரும் மன்னனைப் புகழ்ந்து பாட அம்பிகாபதியோ , மன்னனைப் புகழாமல் , அந்த மன்னனின் புகழுக்காக மடிந்த போர் வீரர்களையும் ,அவர்களது குடும்பததவர்க்ளையும் புகழ்ந்து பாடும் பாடலால் மன்னன் கோபமடையும் காட்சி.

அந்த பாடலின் இந்தப் பகுதியை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.அந்தபாடலில் பட்டுக்கோட்டையாரின் சமுதாயக் கண்ணோட்டம் அழகாகத் தெரியும். பாடல் இது தான்.

” வரும் பகைவர் படை கண்டு மார்தட்டிக் களம் புகும்
மக்களை பெற்றோர் வாழ்க
மணம் கொண்ட துணைவர்க்கு விடை தந்து வேல் தந்த
மறக் குலப் பெண்கள் வாழ்க
உரம் கொண்டு போராடி உதிரத்தில் நீராடி
அறம் காத்த உள்ளம் வாழ்க
திறமான புகழ் கொண்ட திடமான தோள்களும்
செயல் வீரர் மரபும் வாழ்க “

மோகனராகத்தில் மெய்சிலிர்க்கும் வகையில் டி.எம்.எஸ் அவர்கள் பாடியிருப்பார்.அதுமட்டுமல்ல

” அம்புலியைக் குழம்பாக்கி ” என்ற கரகரப்பிரியா ராகப் பாடலிலும் அற்ப்புதமான சங்கதிகளை தியாகராஜ பாகவதர் பாணியில் பாடியிருப்பார்.

“அமராவதியே என் ஆசை கனியமுதே “[ கேதாரம் ], ” அந்தமே உமற விந்த மாமலரில் ” -[ ராகமாலிகை ] போன்ற விருத்தப் பாடலகளை மிக சிறப்பான ராகங்களில் ராமநாதன் இசையமைக்க டிஎம்.எஸ் தன்னிகரற்று பாடினார்.

இந்தப் பாடல்கள் மட்டுமல்ல அம்பிகாபதி படத்தின் உச்சமான பாட்டான ” சிந்தனை செய் மனமே ” என்ற கல்யாணி ராகப் பாடல் கல்யாணி ராகத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.இவ்விதம் தூய்மையான் ராகங்களில்,எழில் மிகுந்த ,இன்ப விருப்பைத் தூண்டுகின்ற , தனிச் சிறப்பு வாய்ந்த பாடல்களை கம்பீரமாகப் பாடுவதில் தனது திறமையைக் காண்பித்த அதே வேளை காதல் பாடலகளையும் பாடும் கலையை ராமநாதனின் இசைப்பட்டறையில் பயின்றார்.

சோக உணர்வை வெளிப்படுத்தப் பயன் படும் முகாரி ராகத்தில் ” வாடா மலர் தேனே ” என இன்பம் பொங்கி பிரவகிக்கும் காதல் உணர்வுகளை பி.பானுமதியுடன் இணைந்து உணர்வின் ஆழங்களை வசீகரிக்கும் வண்ணம் பாடியிருப்பார்.கேட்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் அது.அது ராமநாதம் அல்லவா !

அம்பிகாபதி படத்தில் இடம் பெற்ற ” மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே ” என்ற மாண்டு ராகப் பாடல் ஜி.ராமநாதனின் மேன்மையை , மேதகு ஞானத்தை பறை சாற்றும் பாடல். இதை பாடியவர்கள் அருமையாகப் பாடியதால் தான் ஜி.ராமாந்தனின் புகழ் இன்றும் ஓங்கி நிற்கிறது.

T.M .சௌந்தரராஜன் என்ற இசை சிற்பத்தை செதுக்கியவன் பெருந்தச்சன் ஜி.ராமநாதன்.

அம்பிகாபதி, மதுரை வீரன், உத்தமபுத்திரன், காத்தவராயன் , சமய சஞ்சீவி, வணங்காமுடி …. என ஜி.ராமநாதன் இசையமைத்தபடங்களின் பாடல்களைப் பாடிப் பழகுபவர்கள் எந்த விதமான பாடல்களையும் பாடும் தகுதி பெறுவார்கள்.ஏனெனில் அவ்வளவு அருமையான சங்ககதிகள் அவற்றில் இருப்பதால், பாடுபவர்களுக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும்.

பின்னாளில் சௌந்தரராஜன் அநாயாசமாக பல பாடல்களைப் பாட ஜி.ராமனாதனின் பயிற்சி உதவி இருக்கிறது என்பதை சௌந்தர்ராஜன் அவர்களே ஒத்துக்கொண்டிருக்கின்றார்.

” மூச்சைத் தம்பிடித்து நான் பாடும் போது ” டேய் மூச்சை விட்டு பாடடா ! செத்துப் போய் விடுவாய் ” என்று ஜி.ராமநாதன் சொல்வார்..” என்று ஒரு செவ்வியில் கூறியிருந்தார் டி.எம்.எஸ்.

ஜி.ராமநாதன் இசையில் அவர் பாடிய தனிப் பாடல்கள் சில:

பொன்னே புது மலரே பொங்கி வரும் காவிரியே -படம் : நல்ல தங்காள்
ஓங்காரமாய் விளங்கும் நாதம் – படம் : வணங்காமுடி
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே – சதாரம்
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் – நான்பெற்ற செல்வம்
வாழ்ந்தாலும் ஏசும் – நான் பெற்ற செல்வம்

ஜி.ராமநாதனின் காதல் பாடல்கள் சில

பொங்கி வரு புது நிலவு பொன் மேனி பாவையே – படம் :சதாரம் இணைந்து பாடியவர் பி.பானுமதி
நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே – படம் : மதுரைவீரன் – இணைந்து பாடியவர் ஜிக்கி
மோகனப் புன்னகை பெய்திடும் நிலவே படம் : வணங்காமுடி இணைந்து பாடியவர் பி,சுசீலா
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே – படம் : உத்தமபுத்திரன்
அன்பே அமுதே அருங் கனியே – படம் : உத்தமபுத்திரன் -இணைந்து பாடியவர் பி,சுசீலா
கண்களால் காதல் காவியம் – படம் : சாரங்கதார – இணைந்து பாடியவர் ஜிக்கி
நிலவோ அவள் ஒளியோ படம் : அருணகிரிநாதர் – இணைந்து பாடியவர் பி,சுசீலா
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ – பட்டினத்தார்
இதய வானிலே உதயமானது படம் : கற்ப்புக்கரசி – இணைந்து பாடியவர் ஜிக்கி
பூவா மரமும் பூத்ததே – நான் பெற்ற செல்வம் – இணைந்து பாடியவர் ஜிக்கி
இன்பம் வந்து சேருமா – நான் பெற்ற செல்வம் – இணைந்து பாடியவர் ஜிக்கி

ஜி.ராமநாதன் இசையில் மட்டுமல்ல,எஸ்.வீ .வெங்கட்ராமன் ,எஸ்.எம்.சுப்பையா நாயுடு, பெண்டலயா நாகேஸ்வரராவ் போன்ற பல
இசையமைப்பாளர்களிடமும் அற்ப்புதமான பாடல்களைப் பாடினார்.

கண்ணுக்குகுள்ளே உன்னை பாரு – படம் :மரகதம் இசை:எஸ்.எம்.சுப்பையா நாயுடு
புன்னகை தவழும் மதி முகமோ – படம் :மரகதம் இசை:எஸ்.எம்.சுப்பையா நாயுடு
கண்ணில் வந்து மின்னல் போல – படம்:நாடோமன்னன் – இசை:எஸ்.எம்.சுப்பையா நாயுடு
கனவின் மாயா லோகத்திலே – படம் :அன்னையின் ஆணை இசை:எஸ்.எம்.சுப்பையா நாயுடு
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் – படம்:மன்னிப்பு இசை:எஸ்.எம்.சுப்பையா நாயுடு
விழி அலை மேலே செம்மீன் போலே – படம்:மருத நாட்டு வீரன் படம் :மரகதம் இசை:எஸ்.வீ .வெங்கட்ராமன்
அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது – படம்:மருத நாட்டு வீரன் படம் :மரகதம் இசை:எஸ்.வீ .வெங்கட்ராமன்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் – படம்:இரும்புத் திரை இசை:எஸ்.வீ .வெங்கட்ராமன்

இது போன்ற கணக்கற்ற பாடல்களை நாம் வரிசைப்படுத்தலாம்.

ஜி.ராமநாதனின் யுகத்தில் நுழைந்த டி.எம்.எஸ் மெல்லிசை யுகத்தின் நாயகர்களான விஸ்வநாதன் ராமூர்த்தி இசையில் புதிய பரிணாம் பெற்றார்.

1955 இல் வெளியான குலேபகாவலி படத்தில் ” அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம் ” என்ற பாடலை மெல்லிசைமன்னர்களின் இசையில் முதன் முதலில் பாடினார்.அவர்கள் இசையில் தொடர்ந்த தலை கொடுத்தான் தம்பி படத்தில் ” ஒன்று சேரா இரு துருவம் இன்று ஒன்றாய் சேர்ந்ததும் அவனாலே ” போன்ற உணர்ச்சி மயமான பல பாடல்களைப் பாடினார்.மகாதேவி படத்தில் ” குறுக்கு வழியில் வாழ் வு தேடிடும் ” – ” தாயத்து தாயத்து ” என என்ற பட்டுக்கோட்டையின் கருத்தாளம் மிக்க பாடலையும்
” சேவை செய்வதே ஆனந்தம் ” என்று எம்.எஸ்.ராஜேஸ்வரியுடன் இனிமையான காதல் பாடலையும் பாடினார்.

கதாநாயகர்கள் பாடும் லட்சியப்பாடலகளை அவர் பாடிய பாங்கும், அவற்றில் அவரது குரல் காட்டிய கம்பீரமும் , ஆண்மையும் இன்றும் வியக்கத் தக்கதாகவே இருக்கிறது.அந்த வகை பாடல்களில் அவர் ரீங்காரமிட்டார்.அந்த வகைப் பாடல்கள் சில.

சும்மா கிடந்த நிலத்தை கொத்தி – நாடோடி மன்னன்
தூங்காதே தம்பி தூங்காதே – நாடோடி மன்னன்
சத்தியமே லட்சியமாய் செல்லடா – நீலமலைத்திருடன்
அச்சம் என்பது மடமையடா – மன்னாதி மன்னன்
சமாதானமே தேவை – மருத நாட்டு வீரன்
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா – அரசிளங் குமரி
ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு – அரசிளங் குமரி
வலியோர் சிலர் எளியோர் தமை – மணிமகுடம்

தமிழ் திரை இசையின் மெல்லிசை முகிழ்த்த 1960 களின் முன்னணிப் பாடகராக வளர்ந்த டி.எம்.எஸ் இரண்டு முன்னணி நடிகர்களின் குரலானார்.தங்களுக்கு தெரியாத துறைகளில் நடிகர்கள் மூக்கை நுழைக்கும் ” கிரகம் ” தமிழ் சினிமாவைப் பிடித்ததும் இந்தக் காலம் தான். அந்தக் கிரகம் தமிழ் மக்களைப் பிடித்து ஆட்டியது.

அது மட்டுமல்ல தன்னுடைய பாடல்களை ரசிகர்கள் , நடிகர்களின் பாடலாக அடையாளம் கண்டதை அவர் பெருமையாக நினைத்தாலும் , சில் சமயம் அதை ஏற்க அவர் மனம் ஒப்பவில்லை.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதற்கு எதிரான கருத்துக்களை அவர் மறைத்ததும் இல்லை.அவை சில சமயம் அளவு மீறிப் போனதும் உண்டு.அப்படியான உளவியல் சிக்கலை அவருக்கு ஏற்படுத்தினார்கள் என எண்ணத் தோன்றுகிறது.அவருடைய பாடல்கள் குறிப்பிட்ட நடிகர்களின் வெற்றிக்கு உதவியதை யாரும் எளிதில் மறுத்து விட முடியாது.

இசை ரசிகர்கள் அவரின் மேற்ப்படி கருத்துக்களை, கருத்தில் கொள்ளாமல் அவரது பாடல்களை விரும்பி ரசித்தார்கள்.சென்ற இடமெல்லாம் அவரை வரவேற்றார்கள்.

1960களில் பலதரப்பட்ட இசையமைப்பாளர்களிடமும் பல நல்ல பாடல்களை பாடினாலும் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி , திரை இசைத் திலகம் கே.வீ.மகாதேவன் போன்றவர்களின் இசையில் அதிகம் பாடினார்.இதுவே சௌந்தரராஜனின் பொற்காலம் ஆக விளங்கியது.இந்தக் காலத்தில் வெளிவந்த

நான் பேச நினைப்பதெல்லாம் ,
கொடி அசைந்ததும் காற்று வந்ததா ,
வாராதிருப்பாளோ வண்ண மலர் கன்னி அவள் ,
அத்திக்காய் காய் காய்
தூங்காத கண் என்ற ஒன்று
பசுமை நிறைந்த நினைவுகளே
இரவும் நிலவும் மலரட்டுமே
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
பாட்டுக்குப் பாட்டெடுத்து
சிரித்து சிரித்து என்னை சிறையில் வைத்தாய்
மான் அல்லவோ கண்கள் தந்தது
ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய கர்வம் அவரிடம் நிறையவே இருந்தது.அதற்குரிய ஆற்றலும் , திறமையும் அவரிடம் இருந்தது.ஐந்து, ஆறு பாடல்களைப் பாடி விட்டு தங்களைத் தாங்களே பீற்றிக்கொள்வதையும், இசை நிகழ்ச்சிகளில் நடுவராக அமர்ந்து கொண்டு, நன்றாகப் பாடும் சிறுவர்களை அங்கே “ச” சரியாக விழவில்லை , இந்த இடத்தில் “நி” சரியாக விழவில்லை என்று மிரட்டும் கொடுமைகளை நாம் சகித்துக் கொண்டிருக்கும் கொடுமையான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இன்னுமொரு குற்றச்சாடு அவர் மீது உண்டு.அதாவது வேறு பாடகர்களை அவர் பாராட்டுவதே இல்லை என்பது, அனால் அவர் பல பேட்டிகளில் தனக்கு பிடித்த பாடகர் ஜேசுதாஸ் என்று பல முறை சொல்லியிருகின்றார்.

சிறந்த பாடகராக விளங்கிய சௌந்தரராஜன் அவர்கள் நல்ல , இனிமையான பக்திப் பாடல்களுக்கு இசை அமைத்தவர் என்பது பலரும் அறியாத செய்தி.
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் – ராகமாலிகை : ஆனந்தபைரவி , ரஞ்சனி , கல்யாணி , பாகேஸ்வரி
உள்ளம் உருகுதைய்யா உன்னடி காண்கையிலே – ராகம் ஆபேரி

1970 களில் இருந்து தமிழ் சினிமாவின் ஒரு தொய்வு நிலையும் , புதிய பாடகர்களின் அறிமுகமும் நிகழ்ந்து இளையராஜாவின் வருகையும் அமைந்தது.ஆரம்ப காலத்தில் இளையராஜா டி.எம்.எஸ் இணைவு பல நல்ல பாடல்களை வழங்கின.

அன்னக்கிளி உன்னைத் தேடுதே [ சோகம் ]
தேன் மல்லிப்பூவே [ தியாகம் ]
சிந்து நதிக்கரை ஓரம் [ நல்லதொரு குடும்பம் ]
ஐம்பதிலும் ஆசை வரும் [ நல்லதொரு குடும்பம் ]
எந்தன் பொன் வண்ணமே [ நான் வாழ வைப்பேன் ]
நேரமிது நேரமிது [ ரிஷிமூலம்]
தோரணம் ஆடிடும் மேடையில் [ வெற்றிக்கு ஒருவன் ]
முத்தமிழ் சரமே இளங் குயில் [ வெற்றிக்கு ஒருவன் ]
அந்தப்புரத்தில் ஒரு மகராணி [ தீபம்]
பேசாதே வாய் உள்ள ஊமை நீ [ தீபம்]
அம்மா நீ சுமந்த பிள்ளை [அன்னை ஓர் ஆலயம் ]

இளையராஜாவுடன் கருத்து முரண்பாட்டால் சினிமாவில் வாய்ப்புக்கள் குறைந்தாலும் இறக்கும் வரை தன இசை ரசிகர்களின் அழைப்புக்கு இணங்க உலகமெங்கும் இசைக் கச்சேரிகளை நடாத்தி வந்தார்.

பால்ய வயதில் எம்.ஜி.ஆர் [அவர் தான் எங்கள் SUPERMAN ,SPIDERMAR ] படம் பார்ப்பதிலும் , பாட்டுப் பாடுவதிலும் எனக்கு அலாதிப் பிரியம்.எம்ஜிஆர் பாடினார் என்றே நினைத்திருந்தாலும் எனது குடும்பத்தவர்கள் இசையைப பற்றி , பாடகர்கள் பற்றி அதிகம் பேசுபவர்களாக இருந்ததாலும் எம்ஜிஆர் பாடல்களைப் பாடிய சௌந்தரராஜன் அவர்களைப் பற்றி அறிந்திருந்தேன்.அவர் ரசிகனானேன்.ஏ.எம்.ராஜா , கண்டசாலா ,ஸ்ரீநிவாஸ் போன்றோரின் பாடல்களை ரசிக்கும் எனது மாமாவோடு இவரைப் போல வருமா என்று விவாதம் நடாத்தியதும் ஞாபகம் இருக்கிறது.

எனினும் எனது பதின்ம வயதுகளில் ” அதிசய ராகம் ஆனந்த ராகம்” , ” தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு ” போன்ற பாடல்களில் இனம் தெரியாத லயிப்பு ஏற்ப்பட்டது.குறிப்பாக அதிசய ராகம் பாடல் மிக தாக்கம் ஏற்ப்படுத்தியது.பின் ” மலரே குறிஞ்சி மலரே ” , ” தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன் மழை கொண்ட மேகம் ” போன்ற பாடல்கள் கவர்ந்தன.பாடியவர் பற்றி பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை..பின்னர் தான் தெரிந்தது நம் ஊரையே கலக்கியடித்த செம்மீன் பாடலான ” கடலின் அக்கறை போனோரே ” பாடலைப் பாடிய ஜேசுதாஸ் என்பது. பின் எனது டீன் ஏஜ் வயதில் ஜேசுதாஸ் பாடல்கள் முழுமையாக என்னைக் கவர்ந்தன.

இந்தக் காலத்தில் நானும் நண்பர்களும் Volley Ball விளையாடுவோம்.பழைய பந்தை வைத்து விளையாடுவதால் அது அடிக்கடி பழுது பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி விடும்.நமது பக்கத்து ஊரில் ஒரே ஒரு சப்பாத்துப் பழுது பார்க்கும் கடை இருந்தது.அந்தக் கடையில் வேலை செய்பவர் தான் அதன் உரிமையாளர் .அவர் எனது தந்தைக்கு நன்கு அறிமுகமானவர். எனது அப்பா சிறந்த Volley Ball விளையாட்டு வீரர் என்பதும் எனது பெரியப்பா சிறந்த பாடகர் என்பது ம் அநதக் கடைகாரரர் அறிந்திருந்தார்.

அவசரமாகத் தைய்யல் விட்டுப் போன பந்தை அவரிடம் நண்பர்கள் கொண்டு சென்றால் உடனே செய்து தரமாட்டார்.அனால் நான் போன சில சமயங்களில் உடனே தைத்துத் தந்திருக்கின்றார்.அவ்விதம் நான் போகும் போதெல்லாம் இசையைப் பற்றி நிறைய என்னோடு கதைப்பார்.

என்னுடைய புதிய ரசனை மாற்றத்தைப் பற்றி நான் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தேன்.அவரும் சௌந்தரராஜனின் ரசிகர் .நான் எனது பக்க ரசனையை துடுக்காகவும் , விதந்தோதிப் பேசியதையும் கேட்டு சற்றுக் கவலை கவலையடைந் அவர் சொன்ன சில வார்த்தைகள் என் மனத்தில் ஆழப்பதிந்தன.

” தம்பி ! ரோஜா பூ அழகானது தான். நல்ல வாசம் தான் ! ஆனால் எங்கள் முற்றத்து மல்லிகை , மல்லிகை தானே தம்பி ! ” என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த போது , அவரது காலுக்கருகில் இருந்த வானொலிப் பெட்டியில் இருந்து ” காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் ” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.அவர் என்னைப் பார்த்து ” எப்படி ” என்பது போல கண்ணைக் காட்டினார்.

கம்பீரமும், இனிமையும் , அழகும் நிறைந்த அவரது குரலில் வெளிவந்த பல பாடல்கள் நம் நெஞ்சத்து மகிழ்வை நிலையாக்கி , எங்கள் வாழ்வோடு கலந்து விட்டவை என்பதை நான் சொல்லி இசை ரசிகர்கள் அறிய வேண்டிய நிலையில் இல்லை.

ஆம்,T.M.சௌந்தரராஜன் அவர்கள் எங்கள் முற்றத்து மல்லிகை.

Exit mobile version