Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அர்னாப் கோஸ்வாமியின் உரிமைக்கு வரிந்து கட்டும் உச்சநீதிமன்றம் !

நீதிபதிகள் டி. ஒய். சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி அடங்கிய இந்திய உச்சநீதிமன்ற அமர்வு, அர்னாப் கோஸ்வாமியை இடைக்கால பிணையில் விடுதலை செய்யுமாறு உத்திரவிட்டிருக்கிறது.

பாஜக-வின் கோயாபல்ஸ் ஊடகமான ரிபப்ளிக் டிவியின் உரிமையாளரும், ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி தனது வலதுசாரி கூச்சலுக்காக இழிபுகழ் பெற்றவர். உண்மையான நாட்டுப்பற்றாளர்கள் இவர் பார்வையில் தேச துரோகிகள். சாதி மத வெறியர்களோ இவருடைய செல்லப் பிள்ளைகள்.

மும்பையில் அலங்கார நிபுணர் அன்வே நாயக்கிற்கு அர்னாப் கோஸ்வாமி பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதை அடுத்து அதிகார பலம் கொண்ட அர்னாப்பை எதிர்த்து ஏதும் செய்ய இயலாத அன்வே நாயக் கடந்த 2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் பொருட்டு மகாராட்டிரா போலிசால் அர்னாப் கோஸ்வாமி கடந்த நவம்பர் நான்கு தேதியன்று கைது செய்யப்பட்டார். கூடவே இவரது நிறுவனத்தைச் சேர்ந்த பெரோஸ் ஷேக் மற்றும் நிதீஸ் சர்தாவும் கைது செய்யப்பட்டனர்.

நவம்பர் 18 வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்ரேட் நீதிபதி உத்திரவிட்டார்.  இதை எதிர்த்து அர்னாப் தரப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. அதை மறுத்த நீதிமன்றமோ முறையாக செசன்ஸ் நீதிமன்றத்தில் பிணை கேட்குமாறு உத்திரவிட்டது. இதனால் பொங்கியெழுந்த அர்னாப் தரப்பு உடனே உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றத்தில் இத்தகைய வழக்குகளோ இதற்கான இடைக்கால பிணையோ யாருக்கும் எளிதில் கிடைத்து விடாது. ஆனால் மோடி மீடியாவின் சக்கரவர்த்தி என்பதால் அர்னாப்பின் வழக்கை அதி முக்கிய வழக்காக எடுத்து விசாரித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

மும்பை உயர்நீதிமன்றத்தின் பிணை மறுப்பு உத்திரவின் மீது அதிருப்தியை வெளியிட்ட உச்சநீதிமன்ற அமர்வு, தனிநபர் சுதந்திரம் பாதிக்கும் போது அரசியல் சாசனத்தின் படி செயல்படும் நீதிமன்றம் அப்படி செயல்படவில்லை, உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தின் செயல்பாட்டின் மீது மகிழ்ச்சி அடைய வில்லை என்றெல்லாம் கூறியிருக்கிறது.

தற்கொலை செய்து கொண்ட அன்வே நாயக்கிற்கு தனி மனித உரிமை இல்லை. எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட வரவரராவ் சிறையில் கொரோனா தொற்று வந்து அவதிப்படுகிறார். எண்பது வயதைத் தாண்டிய அவர் நினைவிழந்த நிலையில் சிறையில் வைத்து துன்புறுத்துகிறது மோடி அரசு. அவருக்கு இல்லாத தனி நபர் உரிமை அர்னாப்பிற்கு மட்டும் விசேடமான இருக்கிறது போலும். இதே போல நகர இயலாத பேராசிரியர் சாய்பாபா, பழங்குடியன செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமி போன்றோரையெல்லாம் சிறையில் அடைத்து விட்டு பிணை மறுக்கும் உச்சநீதிமன்றம் ஒரு அண்டப் புளுகரான அர்னாப்பின் விடுதலைக்கு வரிந்து கட்டிக் கொண்டு வருகிறது.

“ஒரு மாநில அரசு தனிநபர்களை குறிவைக்குமானால், அதை தட்டிக் கேட்பதற்கு உச்சநீதிமன்றம் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று நீதிபதி சந்திரசூட் முழங்குகிறார்.

இந்த நாட்டில் சாதாரண குடிமக்களுக்கோ, இல்லை மக்களுக்காக பாடுபடும் சமூக செயற்பாட்டாளர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை. அர்னாப் போன்ற ஆளும் வர்க்க கோயாபல்ஸ்களுக்கு மட்டுமே அந்த உரிமை என்பதை உச்சநீதிமன்றத்தின் இந்த அவசர விசாரணை உலகிற்கு எடுத்துரைக்கிறது.

Exit mobile version