Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுப்பர் சிங்கரில் ஜெசிக்கா வெற்றி – தோற்றது யார்? : வியாசன்

பிரித்தானியாவில் தற்காலிகப் பாலுறவோடு மட்டும் திருப்தியடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாவதாகவும் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் குறைந்து செல்வதாகவும் விவாதங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் விவாகரத்து விகிதம் சிறிய அளவில் குறைந்திருப்பதாக பெருமை பேசிக்கொள்ளும் அரசாங்கத்திற்கு சிதைந்து செல்லும் சமூகத்தின் பெரும் பகுதியை நிறுத்த முடியவில்லை.

Kim Kardashian

உலகத்தின் ஒரு பகுதியில் மக்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட அமெரிக்காவில் கிம் காட்டாஷியன் என்ற பெண் தனது ஆண் நண்பருடன் பாலுறவில் ஈடுபட்ட காணொளியை தொலைக்காட்சிகள் எல்லாம் பரபப்பாக ஒளிபரப்புகின்றன. கிம் உம் சகோதரிகளும் அமெரிக்காவிம் ரோல் மொடல்கள் ஆகிவிடுகிறார்கள். மில்லியன்கள் அவர்கள் வசமாகின்றன.

தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் தொண்ணூறு வீத நிர்வாணமாக வீடொன்றொல் ஒரு பெண் அலைந்து திரிகிறார். அவர் யாரோடு எப்போது பாலுறவு வைத்துக்கொள்வார் என்பதை அறிய குடும்பம் குடும்பமாக தொலைக்காட்சிக்கும் முன்னால் காத்திருந்தார்கள்.

சமூக வலைத் தளங்கள், குறுஞ் செய்திகள் என்று தொடர்பு சாதனங்கள் இதனைப் பேசிக்கொண்டன. நாங்கள் தான் அதிகம் செக்சியானவர்கள் ஆக நாமே இப்படியான நிகழ்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என பிரஞ்சுப் பெண் தேசியம் பேசியதை ஒரு பத்திரிகை வெளியிட்டது.

மூன்றாமுலக நாடுகளில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்று மேற்கு மயப்பட்ட நவ தாராளவாதப் பெண்ணியவாதிகள் கூச்சலிடுவதைக் கேட்டிருக்கிறோம். மேற்கில் பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் அடிமைகளாகவே மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் சிறுகக்ச் சிறுக நடத்தப்பட்ட பண்பாட்டு அழிப்பின் ஊடாகவே நடைபெற்றுள்ளது. பண்பாட்டையும் அவற்றின் தொகுப்பான கலாச்சாரத்தையும் கூட்டுணர்வும், உழைப்பும் கொண்ட புதிய நிலைக்கு வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக அவற்றை அழித்துச் சிதைத்துள்ளார்கள்.

அதன் விளைவுகளையே நாங்கள் இன்று காண்கிறோம்.
அறுபதுகளின் இறுதியில் ஐரோப்பா முழுவதும் போராட்டங்கள் தோன்றின. மக்கள் உரிமைக்காகக் குரல்கொடுத்தார்கள். தமது உழைப்பிற்குத் தகுந்த பெறுமானத்தை வழங்க வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம் பல்வேற்ய் தளங்களில் ஐரோப்பாவை அதிரவைத்தது. அப் போராட்டங்களைக் கண்டு அஞ்சிய அதிகாரவர்க்கம் பாலியல் சுதந்திரத்தை அறிமுகப்படுத்துவதன் ஊடாக சமூகத்தின் சிந்தனையை மாற்ற முற்பட்டது. உரிமை கேட்போரைத் தடுப்பதற்கான ஒரு ஆயுதமாக பாலியலைப் பயன்படுத்தியது.

சமூகத்தின் அரைவாசிப் பகுதியான பெண்கள் ஆண்களின் பாலியல் சார்ந்த தேவைகளைப் பூர்த்கிசெய்வதற்கான அடிமைகளாக சமூகத்தின் முன்னர் நிறுத்தப்பட்டனர். அறுபதுகளின் இறுதிப்பகுதியிலிருந்து ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நவ தாராளவாதக் கலசாரத்தின் பிரதான பகுதி யாக இது செயற்பட்டது. மூன்றாமுலக நாடுகளில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்றால் ஐரோப்பிய நாடுகளில் தமது பாலியல் உறுப்புக்களைக் காட்டியே சமூக அங்கீகாரம் பெற முடியும் என்ற நிலைக்குத் அவர்கள் தள்ளப்பட்டனர். சமானிய ஐரோப்பியப் பெண் மார்பங்களையும், தொடைகளையும் மூடிக்கொண்டு விழா ஒன்றிற்குச் சென்றால் வேடிக்கையாகவே அவரைப் பார்ப்பார்கள்.

அதிகாரவர்க்கத்தின் இத்திட்டங்களை கருத்தியல்ரீதியாகச் செயற்படுத்தும் கருவிகளாக ஊடகங்களே செயற்பட்டன.

விஜய் தொலைக்காட்சியை நடத்தும் ஊடக மாபியா ரூபெர்ட் மெடொக்

 

அறுபதுகளிலேயே இதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இக் காலப்பகுதியில் ஊடகத் துறைக்குள் நுளைந்த பல்தேசிய மாபியாக்களுள் பிரதானமாவர் ரூபெட் மெடொக் என்பவர். பிரித்தானியாவில் இவர் நடத்தும் சண் நாளிதழை வழமையாக அலுவலகங்களிலும் வீடுகளிலும், ஏன் பள்ளிகளிலும் கூடக் காணலாம். அந்த இதழின் இரண்டம் பக்கத்தில் முழு நிர்வாணப்படம் ஒன்று வெளிவருவதைப் பற்றி யாரும் அசட்டை செய்வதில்லை.

முதலில் ஐரோப்பிய நாடுகளில் பின்நவீனத்துவம் போன்ற தத்துவங்கள் ஊடாகவும் பின்னர் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மஜிகல் ரியலிசம் என்றும் கலாச்சாரத்தைச் சிதைத்து அவற்றின் தவறான விழுமியங்களை மட்டும் வாழ வைத்த அதிகார வர்க்கம் ரூபட் மெடகொக்கை ஆலமரம் போல வளர்த்துவிட்டது.
மெடொக்கின் பொக்ஸ் தொலைக்காட்சி நேரடியாக நிறவாதம் பேசுவதை எல்லாம் அரசுகள் கண்டுகொள்வதில்லை. பிரித்தானியாவில் ரூபெட் மெடொக் குடும்பம் அரசுகளை மாற்றுவதில் நேரடியான பங்கு வகித்திருக்கிறது.

ஊடகத் துறையில் ஐந்து தசாப்தங்களாக பழம் தின்று கொட்டை போட்ட மெடொக் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை திரடிவைத்துக்கொள்வார்.. தான் விரும்பும் தலைவர்களை ஆட்சியிலமர்த்த அவர்களைப் பயன்படுத்திக்கொள்வார்.

மெடொக் போன்றவர்கள் ஏற்படுத்திய இவ்வாறான எல்லாச் சிதைப்பு நடவடிக்கைகளும் இன்றைய ஐரோப்பியச் சமூகத்தை உருவாக்கியுள்ளது. அதன் வளர்ச்சி தடுக்கப்பட்டு பாலியல் வக்கிரமும் பண வெறியும் கொண்ட சமூகமாக மாற்றப்பட்டுள்ளது.

இதே மெடொக் இந்தியாவில் தோற்றுவித்த தொலைக்காசியின் பெயர் தான் விஜய்.

தமிழ் நாட்டில் நடத்தப்படும் சுப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோ என்ற மூடி மறைக்கப்பட்ட உணர்ச்சி வியாபாரத்தின் ஊற்றுமூலமே விஜய் தொலைக்காட்சி தான்.

குழந்தைகளை வைத்து உணர்ச்சி வியாபாரம் நடத்தும் இந்த நிகழ்ச்சி இன்று புலம் பெயர் நாடுகளிலும் பிரபலம். லண்டனில் தனது அலுவலகத்தை வைத்திருக்கும் விஜய் தொலைக்காட்சி ஒடுக்குமுறை காரணமாக இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்வை ஆக்கிரமித்துள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கலாச்சாரம் என்று அறிமுகப்படுத்துவது கூட இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே.

சுப்பர் சிங்கர் தொடர் ஒன்றில் பாலியல் வக்கிரங்களோடு கூடிய பாடலைப் பாடிய ஒரு பச்சிழம் குழந்தையை நோக்கி, தேவையான பாவங்களோடும் ‘பீலிங்’ உடனும் அந்தப்பாடலைப் பாடியிருப்பது தம்மை அசத்தியிருப்பதாக நடுவராக வந்த சினிமாப் பாடகர் ஒருவர் கூறியதற்கு மக்கள் கைதட்டிக் ஆர்ப்பரித்தார்கள். இன்றைய விஜய் தொலைக்காட்சி எதிர்கால கிம் கட்டாஷியன்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

அரைகுறை ஆங்கிலத்தையும், அரைகுறைத் தமிழையும் கலந்து மொழியின் ஆளுமையை அழித்துச் சிதைத்து நச்சுக் கலவையாக அப்பாவிகளிடம் வழங்கும் இத் தொலைக்காட்சி கச்சிதமாக பண்பாட்டின் அழுகிய பகுதிகளைப் பாதுகாத்து அதன் முன்னேறிய பகுதிகளைச் சிதைக்கிறது.

சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தமிழர்கள் அல்லாதவர்களை சிலரை ஆரம்பத்தில் தெரிவு செய்த விஜய் தொலைக்காட்சி தமிழின வாதத்தைத் தூண்டியது. இனிமேல் தமிழர்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என விஜய் தொலைக்காட்சிக்கு தமிழினவாதிகள் சமூக வலைத் தளங்களில் இலவசப் பிரச்சாரம் செய்தார்கள். அதாவது கலாச்சாரத்தைச் சிதைக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு தமிழ் உனர்வின் பெயரால் இலவசமாகப் விளம்பரம் செய்து கொடுத்தவர்கள் தமிழர்களே.

இதெல்லாம் மெடொக் குழுமத்தின் அறியப்பட்ட தந்திரோபாயங்கள் என்பதை அறிந்துகொள்கின்ற அளவிற்கு பார்வையாளர்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் அல்ல. நேற்று நடைபெற்ற சுப்பர் சிங்கர் நிகழ்வில் 4.5 மில்லியன் வாக்களார்கள் வாக்களித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் உணர்வு என்றே வாக்களித்துள்ளனர். இத் தமிழ் உணர்வை மிகவும் நுட்பமான வகையில் தூண்டிவிட்டு வியாபாரமாக்கிக் கொண்டது விஜய் ரிவி. ஒரு புறத்தில் அதிகாரவர்க்கத்தின் பண்பாட்டுச் சிதைப்பும் மறுபுறத்தில் இலாபவெறியும் தமிழ் உணர்வின் துணையோடு வெற்றி பெற்றிருக்கிறது. தோல்வியுற்றிருப்பது மக்களின் சமூக உணர்வும் தமிழர்களின் பாரம்பரியமும்!

கனடாவில் பிறந்த ஈழத் தமிழ்க் குழந்தையான ஜெசிக்கா வெற்றி பெற்றுள்ளார் என்பதை முக நூலில் ஈழத் தமிழர்கள் பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது? தென்னிந்திய சினிமாக் குப்பைகளில் பொறுக்கியெடுக்கப்பட்ட பாலியல் அடிமைத்தனத்தை இசையோடு பாடுவதில் என்ன பெருமை?

லண்டனில் பிறந்து தனது சொந்தப்பாடல்கள் ஊடாக சமூகத்தை பற்றிக் கொஞ்சமாவது பேசும் மாயா இவர்களை விட ஆயிரம் மடங்கு மேல். தமிழ் என்பதால் வாக்களிக்கிறோம் என்று விஜய் தொலைக்காட்சிக்கு இலவச விளம்பரம் தேடிக்கொடுத்தவர்கள் ஒரு தடவை நிகழ்சிகளை உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள் குழந்தைகள் தட்டித்தவறி ‘நன்றி’ சொன்னாலும் நடுவர்கள் ‘தாங்சு’ தான் சொல்வார்கள்.

விஜய் தொலைக்காட்சியின் கலாச்சார அழிப்பு இந்திய உளவுத்துறையின் துணையுடன் தான் நடைபெறுகிறதா என்பதற்கான ஆதாரங்கள் நேரிடையாக இல்லை. ஆயினும் உண்மையில் அதுவும் ஒரு காரணமாகவிருந்தால் வியப்பில்லை.

இவற்றிற்கு எதிராக பண்பாட்டின் மற்றுமொரு பகுதியப் பாதுகாப்பதாக் கூறிக்கொள்ளும் இந்துத்துவ ஆதிக்க வெறியர்களும், தமிழின வெறியர்களும் இவற்றை வளர்பதற்காகவே மறை முகமாகப் பயன்படுகின்றனர்.
சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடும் மக்கள் கூட்டத்தின் புலம்பெயர் குழந்தைகளின் மக்கள் பற்றும் சமூக உணர்வுமே புதிய உத்வேகம் மிக்க சமூகத்தை நாளை உருவாக்கும். -விஜய் தொலைக்காட்சிகளும் இத்தியாதிகளும் உருவாக்கும் சமூகம் அருவருப்பான வியாபார வெறிகொண்ட சமூகமாகவே அமையும்.

மெடொக்கினதும் தென்னிந்தியாவினதும் குப்பைகளை நிராகரித்து நமது வாழ்வின் அவலங்களைக் கூறும் புதிய கலாச்சாரம் தோற்றுவிக்கப்பட வேண்டும். இவற்றிற்கெல்லாம் தொலைக்காட்சிகள் தேவையில்லை துண்டுக் காகிதங்களே போதும்.

Exit mobile version