Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளால் தடைசெய்யப்பட்ட பாடல் ஜெசிக்கவைத் தேசியவாதியாக்கியது: வியாசன்

jesicaகோப்ரட் மயமான புலம்பெயர் தமிழ் உணர்வு சாம்பாரகி விஜய் தொலைக்காட்சி வழியாக வழிந்தோடுகிறது. சாம்பாரை அள்ளிப் பருகிய பக்தர் கூட்டம் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்கள் ஊடாக வாந்தியெடுக்கின்றனர். ரூபட் மெடொக் என்ற மேற்கு நாட்டு ஊடக மாபியாவின் இலாபத்திற்காக நடத்தப்படும் ஸ்ரார் தொலைக்காட்சி வலையமைப்பின் ஓர் அங்கமான விஜய் தொலைக்காட்சி நடத்திய சுப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் இராண்டாவதாகத் தெரிவு செய்யப்பட்டதற்காக ஜெசிக்காவை புலம் பெயர் தேசியத் தலைவியாக்கிவிட்டார்கள் தமிழ் உணர்வுக் கோமாளிகள்.

குறுநில மன்னர்கள் சிம்மாசனத்திலிருந்து ஆணையிடுவது போல சீ.ஐ.ஏ இன் பேஸ் புக்கில் அரசாட்சி நடத்தும் உணர்வாளகளில் ஊதிப்பெருத்த ஒன்று தூங்கிக் கிடந்த தமிழ் இனத்தை ஜெசிக்கா தட்டியெழுப்பிவிட்டார் என்கிறது. ‘தேசியத் தலைவருக்குப் பிறகு’ ஜெசிக்கா சுய நலமில்லாமல் மக்களுக்காகப் பாடுபடுகிறார் என்றது மற்றொரு உணர்ச்சிப் பிழம்பு.

பிரபாகரன் வாழ்ந்த போது புலிகளால் தடைசெய்யப்பட்ட திரைப்படம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’. 2002 ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் புலிகள் அதிகாரத்திலிருந்த பகுதிகளில் தடை செய்யப்பட்டிருந்தது. அத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஒலிக்க அக்காலப்பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. திரைப்படத்தில் இடம்பெற்ற ‘விடைகொடு எங்கள் நாடே’ என்று ஆரம்பிக்கும் பாடலைப் பாடி வெற்றிபெற்றதே ஜெசிக்கா என்ற குழந்தையின் ‘தேசிய’ உணர்விற்குக் காரணம் என்கிறார்கள்.

அதிலும் பிரபாகரானல் தடைசெய்யப்பட்ட பாடலைப் பாடிய ஜெசிக்காவை தேசியவாதியாக்கிய பிரபாகரனின் விசில்களின் உணர்வு சாம்பாரல்லாமல் வேறென்ன?

பொதுவாக ஒரு பாடகரின் பாடும் முறை மற்றும் குரல் வளம் ரசிகர்களுக்கு விருப்புடையதாக இருந்தால் அவரையும் அவரின் பாடலைச் சுற்றியும் ஒரு கூட்டம் தோன்றிவிடும். அந்தப் பாடல் பாலியல் வக்கிரங்களுன் வன்முறையும் நிறைந்த பாடல்களானாலும் கூட்டம் சேர்ப்பதற்குத் தடையில்ல்லை. இது தான் கலை வியாபாரிகளின் தந்திரம். பாடலின் உள்ளடக்கம் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இலாபம் திரட்டுவதற்காக  அவர்கள் படுத்துகினும் போத்திகிவார்கள், போத்திகினும் படுத்துகிவார்கள்.

கலை என்பது மக்களுக்கானதா அல்லது கலை என்பது கலைக்கானதா என்ற விவாதங்கள் நடைபெற்ற காலம் ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் கலை என்பது வியாபாரத்திற்கானது என்றாகிவிட்டது.

சர்ச்சைகளை உருவாக்கி, விவாதங்களைத் தோற்றுவித்து அப்பாவி மக்களை சமூகத்தைப் பற்றிச் சிந்திக்க விடாமல் தொலைக்காட்சிக்கு முன்னால் இருத்தி வைத்திருக்கும் தந்திரம் விஜை தொலைக்காட்சியினுடையது.

இத்தந்திரத்திற்குப் அப்பாவிகள் ஒரு புறம் பலியாக மறுபுறம் தேசியப் பிழைப்புவாதிகள் அதனைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மக்களை உணர்ச்சி வயப்படுத்துவதற்கு சுப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் மிகவும் கீழ்த்தரமான தந்திரங்களைப் பயன்படுத்துவார்கள். போட்டியாளர்களின் நோயாளிகளான உறவினர்களை மேடையில் காட்சிப் பொருளாக்கிக் கண்ணீர் வடிப்பார்கள். அங்கவீனமானவர்களை விற்பனை செய்து ரூபட் மெடக்கிற்குப் இலாபம் சேர்ப்பார்கள்.

அந்த வரிசையில் ஈழத் தமிழர்களின் அவலங்களையும் வியாபாரமாக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிளை விரித்துள்ள விஜய் தொலைக்காட்சி என்ற பண்பாட்டுச் சிதைப்புக் கருவி புலம்பெயர் தமிழர்களின் சந்தாக்களைப் பெற்று ரூபெட் மெடொக்கை மேலும் பணக்காரன் ஆக்குவதற்கு ஈழத் தமிழர்களின் அவலமும் பயன்படுகிறது.

இசை ஆர்வமுள்ள குழந்தை ஜெசிக்காவிடமிருந்து கருத்துக்களை எதிர்பார்க இயலாது. தனது திறமையை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டார். அவ்வளவு தான்.

அதற்குப் பின்னணி இசை கொடுத்த தேசியக் கோமாளிகளே இங்கு குற்றவாளிகள். அவர்கள் தான் ஊடக மாபியா ருபட் மெடொக்கின் மறைமுக அடிமைகள்.

ஈழத் தமிழர்களின் தனித்துவமான கலை கலாச்சாரம் பண்பாட்டு வடிவங்களை அழித்துத் துவைத்து சல்லடை போட்டு சிதைப்பதில் விஜய் தொலைக்காட்சி மட்டுமல்ல ஏனைய தென்னிந்தியக் குப்பைகளும் பங்காறுகின்றன. ஒடுக்கப்படும் மக்களின் உயரிய புரட்சிகரக் கலை வடிவங்கள் மக்களுக்கானவயே. ரூபெர் மெடொக்கிற்கானவை அல்ல.

சுப்பர் சிங்கரில் ஜெசிக்கா வெற்றி – தோற்றது யார்? : வியாசன்

 

Exit mobile version