ஈழப் போராட்டத்தின் எந்த எச்ச சொச்சங்களுமின்றி, போராடி மண்ணோடு மரணித்துப் போனவர்களதும், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தெருக்களில் அனாதரவாக்கப்பட்ட போராளிகளதும் தியாக வரலாறு பாராளுமன்ற தேர்தல் சகதிக்குள் மறைந்துபோனது. வாக்குப் பொறுக்கும் அரசியலின் ஒரு முனை வடக்குக் கிழக்கிலும் மறுமுனை புலம் பெயர் நாடுகளிலும் குடிகொண்டிருக்க ஒவ்வொரு கணமும் அழிவிற்கானதாக மாற்றமடைகிறது.
உலகில் பல நாடுகளில் போராட்டங்கள் அழிவைச் சந்திருக்கின்றன, ஆனல் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் மட்டுமே எந்த வித மாற்றமும் இன்றி பாராளுமன்றம் என்ற பன்றித் தொழிவத்திற்குள் குடிகொண்டுள்ளது.
பரபரப்பு தரும் நாளந்த செய்திகள், இந்திய சினிமாகள், தொலைக்காட்சித் தொடர்கள், வன்முறை, வாழ் வெட்டு போன்றவை மட்டுமே நாளாந்த மக்களின் வாழ்வாகிவிட குறைந்த பட்ச அரசியல் விவாதங்கள் கூட நடப்பதில்லை. சமூகத்தில் தம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கூட தெரிந்துகொள்ளாமல் மக்களை இருளுக்குள் வைத்திருக்க புலம்பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்படும் சமூக வலைத்தள குழுக்கள், ஊடகங்கள், இந்தியத் தொலைக்காட்சிகளின் நாடகங்கள், இந்துத்துவ உள்ளீடுகள் போன்ற செயற்படுகின்றன.
இத்தனை ஆயிரம் மக்களின் தியாகத்தின் பின்னர் புரட்சிகர அமைப்பல்ல, அடிப்படை ஜனநாயக அமைப்புக்கள் கூட தோன்றாமல் பார்த்துக்கொள்ள பாராளுமன்ற வாக்குப் பொறுக்கிகளின் வாக்குறுதிகளும் பயன்படுகின்றன. சரி, இவர்களை அரசியலிலிருந்த அகற்ற வேண்டும் என ஒரு முன்னைநாள் போராளிக்காவது தோன்றியதில்லையா என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்படுகின்றது. விமர்சனம் சுய விமர்சனம் என்ற நமது பண்பாட்டுத் தொடர்ச்சி அழிக்கப்பட்டு மதங்களைப் போன்ற புனித சாயம் பூசப்பட்டதும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
தமிழ்த் தேசிய வீர வசனம் பேசுவதில் நான் பெரிதா நீபெரிதா என்ற போராட்டம் வாக்குப் பொறுகிகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நின்று போய், ஆள் பிடிக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். எங்காவது இடைவெளி கிடைத்தால் பாராளுமன்றதுள் புகுந்துவிடலாம் என்ற அங்கலாய்ப்பும் ஆதங்கமும் அத்தனை “மக்கள் பிரதிநிதிகள்” கண்களிலும் காணக்கிடைக்கிறது.
பேரினவாத ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் அடிப்படை ஜனநாயக உரிமைகள்கூடக் கிடைக்காது என்று எண்பதுகளிலேயே முடிவிற்கு வந்தாகிற்று. வெறும் தனிமனித அதிகாரத்திற்காகவும், உடன்படிக்கைகளுக்காகவும், பணத்திற்காகவும் மட்டுமே பாராளுமன்றம் என்று தெரிந்திருந்தும் மாற்று வழிகளில் இல்லைமயால் மட்டுமே மக்கள் வாக்களிக்கிறார்கள்.
தேர்தலில் ராஜபக்ச குடும்பத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. சிங்கள பேரினவாதம் உச்ச நிலையை அடைந்துள்ளது. நாளை இலங்கையின் அரசியல் யாப்பு அவர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்படலாம். திட்டமிட்ட குடியேற்றங்கள் நடத்தப்படலாம். அடுத்த தேர்தலில் வடக்கில் பெரும்பான்மையாக சிங்கள் மக்களே வாக்களிக்கும் நிலை தோன்றலாம். இவை குறித்தாவது பாராளுமன்றத்திற்கு தெரிவான யாராவது ஒருவராவது பேசியிருக்கிறாரா என்றால் ஏமாற்றமே மிஞ்சும்.
யார் துரோகி, யார் தியாகி என புலம் பெயர் நாடுகளிலிருந்து தீர்மானிக்க முயலும் எஜமானர் குழுக்களுக்கு இதைப்ப்ற்றிப் பேச நேரம் கிடைத்திருகாது.
தான் வஞ்சிக்கப்பட்டுவிட்டேன் என கமராக்களின் முன்னால் கண்ணீர் வடிக்கும் சசிகலா ரவிராஜ் குடும்பம் இலங்கையின் இன்றைய ஆபத்து சூழ்ந்த காலப்பகுதியை எண்ணி சில செகண்ட்களாவது கண்ணீர் வடித்திருக்கலாம்.
அவரது வீட்டை நோக்கிப் படையெடுக்கும் அரசியல்வாதிகள் நாளைய ஆபத்தான எதிர்காலம் குறித்து சில நிமிடங்களாவது தமது நேரத்தைச் செலவிட்டிருக்கலாம். யுத்தம் நடந்த மண் என்பதற்கான எந்த அடையாளமும் இன்றி மயானத்திலிருந்து எழும் கூக்குரல் போல அப்பாவி மக்களின் செவிப்பறைகளை இவர்கள் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
“பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்- தோழர் லெனின்”