Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உடல்களை வைத்துக் ‘கொண்டாடப்பட்ட’ செஞ்சோலைப் படுகொலை நினைவு நாள்!

sencholai3இலங்கைப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறை கலாச்சார, பொருளாதார, மொழி ஒடுக்குமுறையாகவும் நிலப்பறிப்பாகவும் இன்றும் தொடர்கிறது. முன்னைப் போலன்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி நிகழ்ச்சி நிரலைப் பூர்த்திசெய்யும் நோக்கில் அதன் துணையுடன் சிறுபான்மைத் தேசிய இனங்கள் சிதைக்கப்படுகின்றன. வடக்கும் கிழக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்கள் என்பதற்கான அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் சூறையாடலால் பல் வேறு பிரதேசங்கள் குறிவைத்து நாசப்படுத்தப்படுகின்றன.

இவை போன்ற அனைத்து அழிவுகளுக்கு எதிராக இலங்கை அரச பாசிசத்தால் பாதிக்கப்படும் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும், மக்களையும் அணிதிரட்டி திட்டமிட்ட போராட்டங்களை நடத்துவதற்கு இலங்கையில் அரசியல் தலைமைகள் இல்லை. அதற்கான வெற்றிடத்தை வாக்கு வங்கி அரசியலை முன்னெடுக்கும் குழுக்கள் நிரப்பிக்கொள்கின்றன.

தமது வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்ள மக்களை உணர்சிவசப்படுத்துவது எப்படி என்பதைத் திட்டமிடுவதிலேயே அரசியல் கட்சிகள் தமது காலத்தை விரையமாக்கிக்கொள்கின்றன.

ஒரு தேசம் இரண்டு நாடு என எழுமாறான முழக்கத்தை முன்வைத்துக் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப் பொறுக்கும் பந்தயத்தில் தோற்றுப்போன தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று செஞ்சோலைப் படுகொலை நினைவு நாளை நடத்தியிருக்கிறது.

எப்போதும் மீண்டும் நடக்கலாம் என்று இன்றும் மக்கள் அச்சம் கொள்ளும் இராணுவ ஒடுக்குமுறையின் கோரமான குறியீடாகக் கருதப்படும் செஞ்சோலைப் படுகொலை நினைவு நாளை மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ‘கொண்டாடியிருக்கிறது’.

எழுச்சிகுப் பதில் உணர்ர்சிப் பரவசத்தை அங்கு காணக்கூடியதாகவிருந்தது.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 61 பாடசாலை மாணவிகளை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பொது நூலகத்திற்கு அருகில் நடைபெற்ற போது 64 உடல்கள் போன்று வெள்ளை நிறத் துணிகளால் சுற்றப்பட்ட உருவங்களை வைத்து உருவேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தமது குடும்ப உறுப்பினர்கள் மரணித்திருந்தால் இந்த வாக்குப் பொறுக்கி அரசியல் வாதிகள் அவர்களின் உடல்களை நினைவுறுத்தும் வகையில் சடங்குகளை நடத்துவார்களா?

தமிழ்த் தேசியமும் உணர்ச்சி முழக்கங்களும் தீர்மானங்களும் மட்டுமே இலங்கை அரசிற்கு எதிரானது என நம்பவைக்கப்பட்ட அவலம் மிக்க சூழலில் யாழ்பாணத்தின் ஒரு பகுதியையே அழிப்பதற்குத் துணை சென்ற விவசாய அமைச்சரான ஐங்கரநேசன் என்ற நபர் இந்தக் கொண்டாட்டத்தில் முக்கிய அதிதியாகக் கலந்துகொண்டார்.

இன்றும் எரியும் பிரச்சனையாகத் தொடரும் சுன்னாகம் நிலக்கீழ் நீரை மாசுபடுத்திய அழிவில் ஈடுபட்ட நிறுவனத்தைக் காப்பாற்றிய ஐங்கரநேசன் போன்றவர்களைக் காப்பாற்ற செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளையும் கூடத் துணைக்கழைக்க வேண்டுமா?

இன்று இலங்கை அரசின் ஊது குழலாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்திருப்பதற்கு இக் கட்சிகள் துணை செல்கின்றன.

இவை அனைத்தையும் மீறி புதிய மக்கள் சார்ந்த அரசியல் தலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும்.

Exit mobile version