பல்கலைக்கழகச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலை அனுமதிக்க முடியாது! மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க தமுஎகச மாநிலக்குழு கருத்தரங்கில் வலியுறுத்தல்!
எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய “வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்” என்கின்ற நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுநிலை பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை அமைப்பான ஏபிவிபி என்கிற மாணவர் அமைப்பு கொடுத்த புகாரின்பேரில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணி தன்னிச்சையாக அந்தப் பாடத்தை பாடத்திட்டத்திலிருந்து நீக்கி இருக்கும் செய்தி இன்று ஊடகங்களில் வெளியானது. இதற்கு கல்வியாளர்கள் , மாணவர் அமைப்புகள், எழுத்தாளர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இணைய வழியாக கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கல்வியாளர் வே.வசந்திதேவி, மக்களவை உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி, சு.வெங்கடேசன் , பத்திரிகையாளர் ஃப்ரண்ட் லைன் விஜயசங்கர் , மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் மு.நாகராசன், இந்திய மாணவர் சங்க மாநிலச்செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். கண்டனக் கூட்டத்தை அமைப்பின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஒருங்கிணைத்து நடத்தினார். கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது:
முனைவர் வே. வசந்திதேவி:
நான் 1992 முதல் 98 வரை அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினேன். அப்போதும்கூட சில குறுக்கீடுகள் இருக்கத்தான் செய்தது. ஆனால் இப்போது இருப்பதைப் போல கல்வித் திட்டத்திற்குள் புகுந்து அதை மாற்றச் சொல்வது போன்ற குறுக்கீடுகள் அப்போது இல்லை. கல்வித் திட்டத்தில் ஒரு பாடத்தை சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் ஒரு நடைமுறை உள்ளது. ஆட்சிமன்றக் குழு, நிலைக்குழு, சிண்டிகேட் குழு ஆகியவை முடிவு செய்தால்தான் எதையும் செய்ய முடியும். ஆனால் இவை எதையும் கலந்து கொள்ளாமல் துணைவேந்தர் செயல்பட்டிருப்பது, ஒரு மதவாதக் கும்பல் சொன்னவுடனேயே பாடத்திட்டத்தை நீக்கி இருப்பது பல்கலைக்கழக அமைப்புக்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். அறிவின் ஊற்றுக்கண்ணான பல்கலைக்கழகங்களின்மீது தாக்குதலை நடத்துவது சரியல்ல. இது எத்தனை பெரிய அவமானம் … தலைகுனிவு? தமிழகத்தைப் பற்றி உலகெங்கும் இருக்கும் கல்வியாளர்கள் என்ன நினைப்பார்கள்? ஒரு பல்கலைக்கழகம் ஒரு காவி கும்பலின் புகாருக்கு இப்படி அடிபணிந்து விடுவது சரியானதுதானா? அங்கு வேலை பார்க்கும் பேராசிரியர்களுக்கு இது அவமானம் இல்லையா? இது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல. அப்புறம் எதற்காக அதை நீக்க வேண்டும். ஒரு அற்புத இலக்கியத்தை படிக்கிற வாய்ப்பை மாணவர்கள் இழந்துவிடக் கூடாது. தடை செய்வதால் எந்த புத்தகத்தையும் சமூகத்திடமிருந்து விலக்கி வைத்துவிட முடியாது. அது பரவிக் கொண்டுதான் இருக்கும்.
பழங்குடிகள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள், இயற்கை வளங்கள் கார்ப்பரேட் கொள்ளைக்கு உள்ளாவது, பழங்குடி மக்களை வேட்டையாடுவது எனத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் அநியாயத்தை இந்தப் புத்தகம் அம்பலப்படுத்துகிறது. இந்தத் தாக்குதல் ஆரம்பத்திலேயே தடுக்கப்பட வேண்டும். தமிழகம் ஒரு போதும் இதை அனுமதிக்கவே கூடாது. மாணவர் இளைஞர் இயக்கங்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.
கனிமொழி கருணாநிதி எம்.பி:
மாணவர்களின் கேள்வி கேட்கும் சிந்தனையை தடை செய்வதுதான் இவர்களின் நோக்கம். அதற்காக ஜாதியையும் மதத்தையும் தூண்டிவிட்டு எந்த கருத்தையும் யாரும் சொல்லக்கூடாது விவாதமே நடத்தக்கூடாது, அப்படி செய்தால் எங்கள் மனம் புண்பட்டுவிடும் எனத் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் இந்தப் புத்தகத்தை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வைத்திருப்பது. எத்தனையோ சர்வாதிகாரிகள் பல புத்தகங்களை தடை செய்திருக்கிறார்கள். ஆனால் அதனால் அந்த புத்தகங்களை தடுத்துவிட முடிந்ததில்லை. தமிழ்நாட்டில் கூட சமீபத்தில் அதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் . சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக குரல் கொடுப்பவர்கள், அதற்காகப் போராடுபவர்கள், போராடும் மக்களின் குரலாக இருப்பவர்கள் ஆகியோரை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக நாம் இருந்துவிட முடியாது. அவர்கள் உருவாக்க நினைக்கிற இந்தியாவை இந்து ராஷ்டிரத்தை உருவாக்கிட முடியும் என்று வெற்றியின் உச்சியில் நின்று கொண்டு இப்பொழுது தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதைப் புரிந்துகொண்டு ஒரு போர்க்களத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. இதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி முறியடிக்க வேண்டும்.
மாரியப்பன், எஸ்.எப்.ஐ:
நாட்டின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் இதுவரையிலும் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத ஏபிவிபி என்கின்ற காவி கும்பல் சொன்னதைக் கேட்டு தான்தோன்றித்தனமாக துணைவேந்தர் இந்தச் செயலில் இறங்கியுள்ளார். இந்துத்துவ கும்பல் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு கல்வித் துறையின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு கேரளாவில்கூட இதுபோன்ற ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஆனால் அங்கிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு அவர்களின் கோரிக்கை ஏற்காமல் உறுதியாக இருந்தது. அத்தகைய உறுதி தமிழகத்தில் இருக்கிற எடப்பாடி அரசுக்கு இல்லை. 10 பேர் கூட இல்லாத ஒரு அமைப்பு கொடுத்த மனுவுக்காக பயப்படுகிற அரசாக இந்த அரசு இருக்கிறது. பல்கலைக்கழகத்தின் தனித்தன்மையை இழக்க அனுமதிக்கக்கூடாது. தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட வேண்டும் . இந்துத்துவ கும்பலின் இதுபோன்ற செயலுக்கு பணிந்து போவது ஒரு அறிவார்ந்த சமூகத்திற்கு ஆபத்தானதாகும். தமிழக அரசு உடனே மீண்டும் பாடத்திட்டத்தில் அருந்ததி ராயின் புத்தகத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேராசிரியர் நாகராஜன்:
பல்கலைக்கழகங்களுக்கு என்று ஜனநாயகத்தன்மை உள்ளது. அதனை காப்பாற்ற வேண்டும் . பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் எல்லா முடிவுகளும் ஆட்சிமன்ற குழு, நிலைக்குழு சிண்டிகேட் மூன்றும் சேர்ந்துதான் முடிவு எடுக்க வேண்டும் . ஆனால் அத்தகைய நடைமுறை இந்த விஷயத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அது ஒரு தேச விரோத நூல் என்றால் அரசாங்கமே தடை செய்யலாமே? ஆனால் ஒரு துணைவேந்தருக்கு பாடத்திட்டத்திலிருந்து ஒன்றை நீக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த நடைமுறை நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இன்று வரையிலும் துணைவேந்தரின் முடிவுக்கு சிண்டிகேட் ஒப்புதல்வல் தரவில்லை. எனவே நமது போராட்டத்தின் மூலம் துணைவேந்தரின் இந்த உத்தரவை தடுத்து நிறுத்த முடியும். நமது பாடத்திட்டத்தின் மீது கை வைக்கும் இந்துத்துவ கும்பலின் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். துணைவேந்தர் தாமாகவே ஒரு குழுவை போட்டு முடிவை எடுத்து அமல்படுத்தி இருப்பது பல்கலைக்கழக ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும். அரசு தலையிட்டு மீண்டும் பாடத்திட்டத்தில் அந்நூலை சேர்க்கவேண்டும்.
பத்திரிகையாளர் விஜயசங்கர்:
கல்வி நிலையங்களில் பேச வருபவர்கள் யார் என்பதைக்கூட இவர்கள் கண்காணிக்கிறார்கள். அறிவுப்பூர்வமாக சிந்திப்பதோ அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்பதோ இவர்களுக்கு ஏற்புடைய செயலல்ல. நாட்டின் ஒட்டுமொத்த அறிவுத்திறனையும் சுருங்கிவிடும் ஆபத்தை இந்துத்துவ கும்பல் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சிந்திக்க முடியாத, கேள்வி கேட்க முடியாத, அறிவியல் சிந்தனையற்ற, தங்களின் இந்து ராஷ்டிராவுககு தேவையான ஒரு தலைமுறையை உருவாக்குவதுதான் இவர்களின் நோக்கம். இதனால்தான் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலும் மூக்கை நுழைக்கிறது.
தமிழகத்திற்கு என ஒரு பாரம்பரியம் இருக்கிறது . அந்த எதிர்ப்புணர்வு பாரம்பரியத்தை முன்னெடுத்து இவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
சு.வெங்கடேசன் எம்.பி:
மதுக்கூர் ராமலிங்கம்:
பல்கலைக்கழகத்தில் என்ன பாடம் இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கும் அதிகாரத்தை ஏபிவிபியிடம் தமிழக அரசு கொடுத்துவிட்டதா? மாணவர்களுக்கு அனைத்து சிந்தனைகளையும் சொல்லித்தர வேண்டும் . இந்த புத்தகம் இயற்கை வளங்களை எப்படி எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை சொல்லுகிறது . எனவே அதனை தடுக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். கல்வியை காவிமயமாக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இந்த புத்தகத்திற்கு மாணவர்களோ, பேராசிரியர்களோ எதிர்ப்பு தெரிவிக்காத போது அதை நீக்கியது கண்டிக்கத்தக்கது. இது கல்வி நிலைய ஜனநாயகத்தை பாதிக்கும். தமிழக அரசு உடனே இதில் தலையிட்டு மீண்டும் அந்த புத்தகத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
ஆதவன் தீட்சண்யா:
இவ்வாறு அவர்கள் பேசினர்.
பின்னர் நூலை பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க வலியுறுத்தும் தீர்மானத்தை மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா முன்மொழிந்து பேசினார். 400க்கும் மேற்பட்டோர் கண்டன கூட்டத்தில் கலந்துகொண்டனர். நாறும்பூநாதன் நன்றி தெரிவித்தார்.
தொகுப்பு:
கருப்பு கருணா,
துணைப் பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச.
+++
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
தமுஎகச மாநிலக்குழு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அருந்ததிராயின் நூல் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து 2020 நவ12 அன்று இணையவழியில் நடந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
உலகால் கவனிக்கப்படும் இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய். இவர் எழுதி அவுட்லுக் பத்திரிகையில் 2010 மார்ச்சில் வெளியாகி, பிறகு Waking with the Comrades என்ற தலைப்பில் வந்த புத்தகம் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் முதுகலை ஆங்கிலம் படிக்கும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக படிக்கப்பட்டு வந்த பாடத்தை முற்றிலும் பல்கலைக்கழக விதிகளுக்கு உட்படாமல் துணைவேந்தர் தன்னிச்சையாக நீக்கியதை இந்தக் கருத்தரங்கம் கண்டிக்கிறது.
பழங்குடி மக்களின் வாழும் உரிமைக்கு எதிராக, இயற்கை வளங்களைச் சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக அந்தப் பழங்குடிகள்
நடத்தும் போராட்டத்தை அம்மக்களோடு தங்கி நேரடி சாட்சியாக மிக உயர்ந்த தரவுகளோடு அருந்ததி ராயால் எழுதப்பட்ட நூல் அது. முதுகலை என்கிற ஓர் உயர் படிப்பு படிக்கும் மாணவர்கள் பல்வேறு விதமான சிந்தனைப் போக்குகளை அறிவதும் கல்வியின் ஒரு பகுதிதான் என்ற தெளிவோடுதான் (Board of studies) பாடநூல் தேர்வுக்குழு போன்ற பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட குழுக்கள் பாடங்களைத் தேர்வு செய்கின்றன. மேலும், முதுகலை ஆங்கிலம் படிக்கும் மாணவர்களுக்கு புக்கர்பரிசு வென்ற அருந்ததி ராய்போன்றவரின் மொழித்திறனை கற்பதும் அவர்களது திறன் வளரப் பயன்படும்.
இப்படி பல்வேறு காரணங்களால் தேர்வாகி, இந்தக் கல்வி ஆண்டில் மாணவர்களால் படிக்கப்பட்டுவரும் பாடத்தை- செனட், சிண்டிகேட் போன்ற அதிகாரம் படைத்த குழுக்களில் விவாதிக்காமல் துணைவேந்தர் நீக்கியது தவறு.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான ஏபிவிபி ABVPன் மதரீதியான தலையீட்டை ஏற்று செயல்பட்ட துணைவேந்தர் கல்வியை, பல்கலைக்கழக வளாகத்தை காவியாக்க துணைபோவதை கண்டிக்கிறோம்.
உடனடியாக தமிழக அரசும் உயர்கல்வித் துறையும் தலையிட்டு அருந்ததி ராய் எழுதிய Waking with the comrades நூலை திரும்பவும் பாடமாக வைக்க பல்கலைக்கழகத்துக்கு ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு ஆணையை வெளியிடுவதே இப்பிரச்னையில் ஆசிரியர், மாணவர், கலை இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து போராடும் நிலையைத் தவிர்க்கும் என்பதையும் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
– முன்மொழிந்தந்தவர்:
நந்தலாலா,
மாநில துணைத்தலைவர், த.மு.எ.க.ச.
____________________________________________
நன்றி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்