இடையிடையே அதிமுக கும்பலின் மீது வருமான வரித் துறையை ஏவி விட்டதன் மூலம் பாஜக அவ்வப்போது தனது அடிமை அதிமுக கும்பலை மிரட்டி வந்தது. அப்போது அவர்கள் போட்ட வழக்குகள் எவையும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. அதே போன்று கொடநாடு கொலை வழக்குகளும் ஊற்றி மூடப்பட்டன. இதற்கு மேலும் இன்றைய கொரோனா காலம் வரை அதிமுக கும்பல் அடித்த கொள்ளையும் ஊழலும் எழுத்தில் அடங்காது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொன்னது போல இவர்கள் கொரோனா காலத்திலும் கொரோனா கோடிஸ்வரர்களாக உருவெடுத்து விட்டனர்.
இதனடையே திவாகரன் கும்பல் சசிகலா ஆசியுடன் தனி ஆவர்த்தனம் செய்ய முற்பட்ட போது அந்த கும்பலுக்கு பாடம் புகட்டும் வண்ணம் 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை, சோதனைகளை பல்வேறு இடங்களில் நடத்தியது.
தற்போது சசிகலா விடுதலை ஆகப் போகிறார். அவர் வெளிவந்து எடப்பாடி ஓபிஎஸ் கும்பலுக்கு ஒரு இடையூறாக இருக்குமளவு செல்வாக்கு இல்லை என்றாலும் ஒரு செக்மேட் வைக்க வேண்டும் என்பதற்காக தற்போது சசிகலா கும்பலின் 2000 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கம் செய்துள்ளது வருமான வரித்துறை.
மோடி அரசு 2016-ம் ஆண்டு ஊழல் மற்றும் கருப்பு பணம், கள்ள நோட்டுக்களை ஒழிக்கப் போவதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது. இதனால் ஊழலும் ஒழியவில்லை, அச்சில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் திரும்ப வந்துவிட்டன, ஒரு சிறு அளவைத் தவிர. மாறாக சில நூறு இந்திய மக்கள் செத்துப் போனதும், சிறு தொழிகள் அழிந்ததும், பல கோடி மக்கள் வாழ்வாதாராத்தை இழந்ததும்தான் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஆகப்பெரும் வேதனை மற்றும் சாதனை.
அந்த நேரத்தில் பாஜக பிரமுகர்கள் பலர் பல மாநிலங்களில் தங்களிடமுள்ள மதிப்பிழந்த பல கோடி ரூபாய்களை இரவோடு இரவாக மாற்றி விட்டனர். அதே போன்று சசிகலா கும்பலும் தன்னிடம் உள்ள நோட்டுக்களை மாற்றி சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பினாமி பெயர்களில் வாங்கியிருக்கிறார். பல நூறு பாஜக பிரமுகர்களின் பினாமி மோசடிகளை கண்டு கொள்ளாத வருமான வரித்துறை சசிகலா கும்பலை குறிவைக்க காரணம் அதிமுக அடிமை ஆட்சியின் மீதான தனது கடிவாளத்தை இறுக்கி வைப்பதுதான்.
அந்த வகையில் 2017-ம் ஆண்டில் சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மொத்தம் ஐந்து நாட்கள் இந்த சோதனை நீடித்தது. அப்போது சசிகலா கும்பல் 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி, 1,500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த விவரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் 2019-நவம்பரில் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியது. தொடர்ந்து 2020 செப்டம்பர் ஒன்றில் 300 கோடி ரூபாய் சொத்துக்களையும், தற்போது கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் நிலம் ஆகிய சொத்துக்களை உள்ளிட்டு 2000ம் கோடி ரூபாய் சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியது. என்ன தலை சுற்றுகிறதா? பிடிபட்ட சொத்துக்களே இத்தனை கோடி என்றால் பிடிபடாத சொத்துக்கள் எத்தனை மடங்கு இருக்கும்?
ஏனெனில் இப்படி சுற்றி வளைத்து சொத்துக்களை மடக்கிய பிறகும் சசிகலா கும்பலின் ஜெயா டிவியோ, தினகரனின் தொழில்களோ எவையும் முடங்கி விடவில்லை. இத்தனைக்கு பிறகும் அவர்கள் பில்லியனர்தான்.
ஜெயா சசி கும்பல் 90-களின் ஆரம்பத்தில் இருந்து தமிழகத்தை சூறையாடியிருக்கிறது. அந்த ஊழல் மோசடி சொத்துக்கள் இன்றளவும் சசிகலா கும்பலின் கையில்தான் இருக்கிறது. ஒரு தேர்தல் உத்திக்காக மட்டுமே மோடி அரசின் வருமான வரித்துறை சசிகலா கும்பலின் சொத்துக்களை முடக்குவதாக நாடகமாடுகிறது.
மக்கள் சொத்துக்களை சூறையாடிய இந்த கும்பலின் சொத்துக்களை மக்களே நேரடியாக மீட்காத வரை இவர்கள் அடங்க மாட்டார்கள்!
– வரதன்