ஆண்ட தமிழன் என்ற இன்வெறி எல்லைகளைக் கடந்து மலையகத் தமிழர்களின் வாழ்வுர்மைக்கான முழக்கங்களையும், முஸ்லீம் மக்களையும் இணைக்கும் இப் போராட்டம் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு இடையேயான ஒற்றுமைக்கான நுளை வாசல்.
அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாயை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு உரிய தீர்வை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாரி சாரியாக கோத்தாபாயவின் காட்டுமிராண்டி அரசின் அனுசரணையுடன் நடைபெறும் நில அபகரிப்பு, மலையக மக்களின் நாளாந்த வாழ்வுரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதல், முஸ்லிம் மக்களின் அடிப்படை இருப்பிம் கேள்விக்கு உள்ளாக்குதல் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய இப் பேரணி சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியலுக்குப் புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளது. பேரின வாத அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்கியிருந்த தமிழ் – முஸ்லிம் மக்களின் போராட்டங்கள் ஊடான ஒன்றிணைவு எதிர்காலத்தில் சிங்கள மக்களின் முற்போக்குப் பிரிவுகளையும் ஒன்றிணைக்க வாய்ப்புக்கள் உள்ளன.
சட்ட வரைமுறைகளைப் பயன்படுத்தியும், தனது போலிஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தியும், வழமைபோல குண்டர் படைகளைப் பயன்படுத்தியும் இலங்கைப் பேரினவாத பாசிச அரசு மிரட்டியும் போராட்டம் தொடர்கிறது.
பேரணி முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி நகர்கின்றது.
அங்கு இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்பின்னர், அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரணி புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், கிளிநொச்சி ஊடாக வவுனியா நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், பேரெழுச்சிப் பேரணியானது கிளிநொச்சி, வவுனியா சென்று மன்னார் ஊடாக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிகண்டியில் நிறைவடையவுள்ளது.