Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விச ஊசி என்ற வதந்தி : போராளிகள் மீதான திட்டமிட்ட உளவியல் தாக்குதல்!

poisoninjectionதமிழ் பேசும் மக்களின் அவலங்களையும் கண்ணீரையும் பிணங்களையும் வைத்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் முன்னை நாள் விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக இன்றும் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்து வருகிறது. போராளிகளின் நாளாந்த வாழ்க்கையை அச்சமும் விரக்தியும் சூழ்ந்ததாக மாற்றியிருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக பல முன்னை நாள் போராளிகள் விசனம் தெரிவித்துள்ளனர். தமது வாழ்க்கையை விரக்திக்கும் அச்சத்திற்கும் உட்படுத்தி தமது அரசியல் நோக்கத்தையும் வாழ்க்கையையும் வளப்படுத்திக்கொள்ள முனையும் சில விசமிகள் இக் கட்டுக்கதையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

வட மாகாண சபையையும் அதனுடன் தொடர்புடைய சமூகவிரோத சக்திகளுமே இக் கதையின் மூலாதாரம் என மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பேரினவாத பாசிச அரசு முழு மக்கள் மீதும் குறிப்பாகச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதும் தொடர்ச்சியாக நடத்திவரும் நிறுவனமயப்படுத்தப்பட்ட தாக்குதல்களை கண்டுகொள்ளாமல் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் வதந்திகளைக் கட்டவிழ்த்துவிடும் இக் கும்பல்கள் மக்கள் மத்தியிலிருந்து அரசியல்ரீதியாக அன்னியப்படுத்தப்பட வேண்டும்.

இந்த வதந்திகளைச் “சர்வதேச மயப்படுத்தி” தமிழ்ப் பேசும் மக்களையும் அவர்களின் போராட்டத்தையும் நியாயமற்றதாக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளின் ஒருபகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித் உரிமைப் பேரவைக்கு இலங்கைத் தமிழ்ச் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.

எந்தப் புள்ளிவிபரங்களும் ஆதாரங்களும் இன்றிய அந்த மொட்டைக் கடிதத்தின் பின்னணியில் இலங்கைத் தமிழ்ச் சட்டத்தரணிகள் சங்கத்தை தனியாளாக நடத்தும் கொழும்ம்பைச் சார்ந்த புவிகரன் செயற்படுகிறார். விக்னேஸ்வரனின் மிக நம்பிக்கைக்குரிய புவிகரன் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் யாப்பு முன்மொழிவை வரைந்தவர் என விக்னேஸ்வரனால் புகழ்ந்துரைக்கப்பட்டவர்.

இவர் யாழ்ப்பாணத்தில்  நடபெறவிருக்கும் எழுக தமிழா என்ற நோக்கங்களற்ற நிகழ்வின் ஏற்பாட்டாளரர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் பின்புலத்தில் செயற்படும் புவிகரன் கீழ்க் குறிப்பிடப்படும்  போராளிகளைத் தவிர வேறு யாரேனும் போராளிகள் மரணித்திருந்தால் அவர்களில்  ஒருவரின் பெயரையாவது கூறிவிட்டு தனது வதந்தியை நியாயப்படுத்தலாம்.

மரணித்த போராளிகளின் பெயர் விபரங்கள்:

1. சிவகௌரி – கணேசபுரம், கிளிநொச்சி

2. வனசுதர் – மட்டக்களப்பு

3. சசிக்குமார் ( ராகுலன்) – பாரதிபுரம், கிளிநொச்சி

4. ரகுராம் – வி நாயகபுரம், கிளிநொச்சி

5. ஹேமா – பண்டத்தரிப்பு , யாழ்ப்பாணம்

6. சோ.டிகுணதாசன் –  பாண்டியன்குளம், முல்லைத்தீவு

தமிழ் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்திற்கு எதிராக தனது வாழ் நாழ் முழுவதும் செயற்பட்ட விக்னேஸ்வரனின் இன்றைய ஊசி அரசியலின் பின்விளைவுகள்:

1. சமூகத்தில் நாளாந்த வாழ்க்கையை வாழ்வதற்குக் கூட வசதியற்ற முன்னை நாள் விடுதலைப் புலிகள் போராளிகளின் மீதான உளவியல் தாக்குதல்.

2. ஆயிரக்கணக்கான இனப்படுகொலை ஆதாரஙக்ளையும் போர்க்குற்ற ஆதாரங்களையும் அர்த்தமற்றதாக்க துணை செல்லும் பொய்யான தகவல்கள் .

3. போராளிகளை மருத்துவ உதவி என்ற பெயரில் கண்காணிக்கவும் தகவல்களை ஒருமுகப்படுத்தி நாசகார சக்திகளுக்கு வழங்கவும் இது வழிசெய்யும்.

4. முழுச் சமூகத்தையும் அச்ச உணர்விற்கு உட்படுத்தி வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகளின் கைகளில் ஒப்படைக்க உதவிசெய்யும்.

5. போர்க்குற்ற விசாரணையைக் கூட இலங்கை பேரினவாத அரசின் கைகளில் ஒப்படைத்துவிட்டு அங்கு நல்லாட்சி நடக்கிறது என்று கூறும் ஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் மீண்டும் பொய்யான வதந்தி ஒன்றை ஒப்படைத்து இலங்கை அரசை நியாயப்படுத்த முற்படுதல்.

புவிகரனுக்கும் வட மாகாண சபைக்கும், இவை அனைத்தையும் கண்டும் காணாமல் வாழாவிருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள்:

1. முன்னை நாள் போராளிகள் இலாப நோக்கில் போராடியவர்கள் அல்ல. ஒரு குறித்த நோக்கத்திற்காக உயிரைத் தியாகம் செய்யத் துணிந்தவர்கள். அவர்களைப் பயன்படுத்தி உங்கள் அரசியலை நடத்தாதீர்கள்.

2. மக்களை உணர்ச்சிவயப்படுத்தி உங்கள் அரசியல் நோக்கங்களை அடைய முற்படாதீர்கள்.

3. மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிராச்சனைகளிலிருந்து தேசிய இன ஒடுக்குமுறை குறித்த பிரச்சனைகள் வரை அனைத்தையும் முன்வைத்து மக்களை அணிதிரட்ட முற்படுங்கள்.

4. மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளாக சுன்னாகம் நச்சு நீர் பிரச்சனை போன்றவற்றிலிருந்து, நில அபகரிப்பு வரைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களைப் போராடப் பயிற்றுவிக்க முன்னணிச் சக்திகளை இணைத்துக்கொள்ளுங்கள்.

5. சிங்கள மக்கள் மத்தியிலும், மலையக மற்றும் இஸ்லாமியத் தமிழர்கள் மத்தியிலுமுள்ள அரசிற்கு எதிரான சக்திகளை இணைத்துக்கொண்டு இலங்கை அரசைப் பலவீனப்படுத்த முற்படுங்கள். சிங்கள மக்கள் அனைவரையும் உங்கள் இனவாதத்தால் இலங்கை அரசுடன் இணைத்து அதனைப் பலப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளுங்கள்.

6. முன்னை நாள் விடுதலை புலிகளின் போராளிகளை மக்கள் சாந்த அரசியலை நோக்கி அழைத்து வர முற்படுங்கள்.

7. வட மாகாணத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் அரச பணத்தின் ஒரு பகுதியையாவது வாழ்வாதரமற்ற போராளிகளின் அடிப்படை வசதிகளுக்காகப் பயன்படுத்துங்கள்.

Exit mobile version