Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் சிறுவிமர்சனக் குறிப்பு : மு.பொ

01

அண்மைக்காலத்தில் தமிழ் இலக்கிய உலகில் பெரும் வாதப் பிரதிவாதங்களுக்குள்ளாகி இருப்பது, பெருமாள் முருகனால் எழுதப்பட்ட ‘மாதொருபாகன்’ என்னும் நூலாகும். 2010ல் வெளிவந்த இந் நூல் நான்கு வருடங்களுக்குப் பின்னர் திடீரென பலரின் கவனத்துக்குள்ளாகி, பிரச்சினைக்குரிய விஷயமாக மாறியிருக்கிறதென்றால் அதன் பின்னால் கலை இலக்கிய ரசனைக்கு அந்நியமான கைகள் பல இயங்கி இருக்கின்றன என்பதே காரணம் எனலாம். தமிழ்நாட்டிற்கு சென்று வந்த நண்பர் அந்தனி ஜீவா இந் நூலைத் தான் பெற்றுக்கொள்வதற்குப்பட்ட கஷடத்தையும் அதன் பின்னணியையும் விளக்கினார். இந் நூல் பற்றி தமிழ்ச்சங்கத்தில் உரையாற்றிய நண்பர் மதுசூதனன் நான் மேலே குறிப்பிட்ட கலை இலக்கிய ரசனைக்கு அந்நியமான, ஆனால் தமிழ் “ பண்பாட்டை ” பேணுகின்ற கைகள் பற்றியும் விரிவாக விளக்கினார்.

இந் நாவலின் ஆங்கில மொழி பெயர்ப்பை படித்தவர்களாலேயே பிரச்சினை உருவாகிற்று. இந் நாவலைப்படித்த அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள், இந் நூலில் கையாளப்படும் கருப்பொருள் இந்தியப் பண்பாட்டை, குறிப்பாக தமிழர் பண்பாட்டை கொச்சை படுத்துவதாகவும் அதனால் இந் நூல் தடை செய்யப்பட வேண்டியது மட்டுமல்லாமல் இந் நூலை எழுதியவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் அமெரிக்காவிலிருந்து டில்லிக்கு செய்தியனுப்பி அங்கிருந்து அதை தமிழ் நாட்டுக்குத் திருப்பிவிட்டதன் விளைவே இத்தனை வாதப்பிரதிவாதங்களுக்கும் காரணமாயிற்று.

இதன் விளைவு, பெருமாள் முருகனின் எழுத்துலக வாழ்வு முடிவுக்கு வந்தது. அவர் தன் பிள்ளைகள், மனைவி ஆகியோரை காப்பாற்றும் பொருட்டு எடுத்த பிரதிக்ஞை அவர் எழுத்துலக வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதை அவரது வார்த்தைகளில் கூறுவதானால் “பெருமாள் முருகன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இப்பொழுது இருப்பவர் வெறும் பெ. முருகனே” என்பதாகும்.

02

இந்தனைக்கும் காரணமான, பெருமாள் முருகனால் தன் நாவலில் கையாளப்பட்டுள்ள கருப்பொருள் தான் என்ன என்று கேட்பது நியாயமானதாகும். கதையோடு கதையாக, கலைத்துவமாக ஓடவிடப்படும் கருப்பொருள் நாமக்கல் பகுதியில் உள்ளதிருச்செங்கோட்டுச் சிவன் கோவிலைச் சூழ்ந்துள்ள மக்களிடையே புரை யோடிப்போய் புதையுண்டுள்ள ஐதீக நம்பிக்கையே. அது ஆண்டுதோறும் உயிர்த்தெழுந்து, அம்மக்களின் அவ்வப்போதைய தேவைகளுக்காக எல்லா புனிதங்களையும் துறக்கவைத்து சுதந்திரம் வழங்கும் ஓர் ஐதீகம். இன்னும் தெளிவாகச் சொல்வதனால் நாம் ‘ புனிதம் ’ என்று போதித்துக்காப்பாற்றும் சகலதையும் துறக்கவைத்துச் சுதந்திரம் வழங்கும் தொன்மம்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை

இங்கே திருச்செங்கோட்டு அர்த்தநாரீஸ்வரர் (மாதொருபாகன்) ஆலயத்தைச் சூழ்ந்து வாழும்கிராமத்துமக்கள் மத்தியில் புரையோடிப் புதையுண்டு போன, ஆனால் ஒவ்வொரு வைகாசித்தேர் திருவிழாவின் போதும் உயிர்த்தெழும் அந்த ஐதீக நம்பிக்கைதான் என்ன என்பதை அறிவதற்கு நாம் முதலில் ‘மாதொருபாகன்’ கூறும் கதையை சுருக்கமாக அறிந்து கொள்வது அவசியமாகும். இக்கதை இடம்பெறும் காலகட்டம் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு சற்று முந்தியதாகும். அதன் பின்னர் இந்த ஐதீகங்கள் என்ன நிலையில் உள்ளன என்பது இரண்டாம் பட்சமானது.

மாதொருபாகன் நாவலில் வரும் கதாபாத்திரங்களான காளியும் அவன் மனைவி பொன்னாவும் இளம் தம்பதிகளாயினும் அவர்களுக்கு குழந்தைப் பேறில்லாமையே பெரும் குறையாக முன்னிற்கிறது. தொண்டுப்பட்டி காளியின் கிராமம். அங்கு விவசாயம் செய்துவாழும் இவர்கள் வளமாக வாழ்ந்தாலும் குழந்தைப் பேறில்லாத காரணத்தால் தம்மக்கள் மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகின்றனர். சுபகாரியங்களுக்கு இவன் மனைவி முன்நிற்க முடியாதவாறு தடுக்கப்பட்டு அவமரியாதைக்குள்ளாகுகின்றாள். அந்த அவமரியாதை அவள் கணவனான காளி மீதும் படிய அவனும் வேதனையால் வதைப்படுகிறான். ஆண்டு ஒன்றா, இரண்டா?

பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை எதுவும் இல்லாது போனதால் இனிமேல் பொன்னா தனக்கு குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கையையே இழந்து விடுகிறாள். ஒருமுறை ஒரு சுப நிகழ்ச்சியில் அவளுக்கு நேர்ந்த அவமரியாதையை தாங்க முடியாது போன அவள், வீட்டுக்கு வந்து கணவன் மேல் ஆத்திரத்தைக் கொட்டுகிறாள். “எனக்கொரு குழந்தை வேணும்! எனக்கொரு குழந்தை தா” என்று அவனோடு சண்டை போடுகிறாள். இவ்வாறு அவள் ஆத்திரங் கொள்ளும் சமயங்களில் அவளை மீட்டெடுத்து சுமுக நிலைக்கு வரச்செய்வதென்பது ஒரு அசாத்தியமான காரியந்தான்.

அப்படியானால் ஒரு குழந்தையை அவர்கள் தத்தெடுத்து வளர்த்தால் என்ன? காளி இது பற்றி மனைவியோடு கதைத்திருக்கின்றான். ஆனால் பொன்னா அப்படியெல்லாம் வளர்ப்பதை விரும்பவில்லை. தத்தெடுத்து வளர்ப்பதால் தமக்கு அவர்கள் கிராமத்து மக்களால் சூட்டப்பட்ட வரட்டன், வரட்டி (மலடன்,மலடி) என்ற பட்டப்பெயர் போய் விடுமா? அவள் மனக்கிடக்கை அது. ஆனால் காளியோ குழந்தை இல்லாவிட்டால் என்ன? நாங்கள் சந்தோசமாத்தானே இருக்கிறோம் என்று மனதைத் தேற்றிக் கொண்டான். ஆனால் பொன்னாவோ இதனால் வருந்திக் கொண்டே இருந்தாள்.

அப்படியானால் இதற்கொரு தீர்வில்லையா?

இவ்வாறு இப்பிரச்சினை முற்றியபோதுதான் காளியின் தாயாரும் பொன்னாவின் தாயாரும் இது பற்றிக் கூடிக்கதைக்கின்றனர். அவர்கள் கதையில் திருச்செங்கோட்டு அர்த்தநாரீஸ்வரர் (மாதொருபாகன்) தேர்த்திருவிழாவின் கடைசி பதினான்காம் நாள் இரவு – திருச்செங்கோட்டு மலை உச்சியிலிருந்து கீழ் இறங்கிவந்த தெய்வங்கள் திரும்பி மலைக்கு போவதற்கு முன்னிரவு – இடம் பெறும் நிகழ்வு பற்றிய ஐதீக நம்பிக்கையே அவர்கள் கதையில் அடிபடுகிறது.

அன்றிரவு கன்னிப் பெண்கள் தவிர ஏனையோர் அனைவரும் குறிப்பாக பிள்ளைப் பேறில்லாத இளம் பெண்கள்,கடவுளின் குழந்தைக்காக அன்றிரவு அங்கே செல்வர். அதாவது குழந்தைப் பேறில்லாது இருக்கும் பெண்கள் அன்றிரவு கோயிலுக்குக் சென்று, அங்குவரும் ஆடவர் எவனோடாவது கூடி அவனோடு உடலுறவு வைத்துக் கொள்வர். அதன்மூலம் அவள் கருத்தரித்தால், அது’ சாமிதந்த குழந்தையாக’ கருப்படும். அப்படி பெண்கள் குழந்தை பெற்றதால்தான் அவ்வூர்ப்பகுதிகளில் ‘சாமி குடுத்த குழந்தை’ ‘சமிக் குழந்த’ என்ற பேரோடு பலர் வாழ்கின்றனர். இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்ன வெனில், அன்றிரவு குழந்தை பேற்றின் நோக்கோடு கோயிதுக்குச் செல்லும் பெண்கள், அங்கே கோயிலில் காணும் ஆடவர்அனைவ ரையும் அவர்கள் என்ன நிலையில் இருந்தாலும் சாமியாகக் கண்டு சாமியோடு கூடுவதாகவே கருதவேண்டும் என்பதே எழுதாத சட்டமாகும்.

இதையே பொன்னாவினதும் அவள் கணவன் காளியினதும் பெற்றார் பிள்ளையில்லா பிரச்சினைக்கு தீர்வாவக் கொள்கின்றனர். ஆனால் அவளை பதினான்காம் நாள் தேர்த்திருவிழா இரவன்று அங்கே கூட்டிச் செல்வதற்கு அவள் கணவன் அனுமதிப்பானா என்பதே கேள்வி.

ஏற்கனவே இவைபற்றி அறிந்திருந்த காளி தன் மனைவியைச் சோதிப்பதுபோல் “நீ கோயிலுக்கு போக விரும்புகிறாயா ?” என்று அவளிடம் கேட்டான். அதற்கு அவள் “நீங்க விரும்பினால் போவேன்” என்று சொன்னதும் அவன் இடிந்துபோய் மௌனமானான். அவள் மறுப்பாள் என்று எண்ணிய அவனுக்கு இது பேரிடியாக இருந்தது. அவனது மௌனம் அவளை அச்சுறுத்திற்று. இது பற்றி அவள் தனது அண்ணா முத்துவிடம் கூறிய போது அவன் தனது மைத்துனனும் ஆத்மார்த்த நண்பனுமான காளியை அதற்கு இசையச் செய்வதாகக் கூறினான்.

இதை முத்து காளியிடம் கூறவே அவன் அடியோடு மறுத்துவிட்டான். ஆகவே இதற்காக அவனோடு தர்க்கிக்காது அமைதியாக வேறுவழியைக் கையாள்கிறான் முத்து. தங்கை பொன்னாவை பெற்றாரோடு அன்றிரவு தேர்த்திருவிழாக்கு கோயிலுக்குப்போகுமாறு சைகை செய்தவிட்டு அவள் கணவன் காளியை வெகுதூரத்திலுள்ள இடத்துக்கு கூட்டிச் சென்று கள்ளும் சாராயம் சாப்பாடும் கொடுத்து அவனை அங்கேயே தூங்க வைத்து இவனும் சேர்ந்து தூங்கிவிடுகிறான். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி அவள் பெற்றோருடன் கோயிலுக்கு போகிறாள். அங்கே அவள் தனக்கு தெரியாத முகமாகத் தெரிந்த ஒருவனோடு சென்று கூடுகிறாள்;

03

இப்படி காளியின் மனைவி பொன்னா செய்தது சரியா? “இப்படி பிள்ளை பெற்றுக் கொள்வதை விட செத்துப் போகலாம்” என்ற கொள்கையுடைய காளிக்கு மனைவி செய்தது துரோகம் எனலாமா? இந்தச் சந்தர்ப்பத்தில்தான் நாம் புராணங்களுக்குள் (ஆலவா) புகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. புராணம் என்றும் ஐதீகம், பாரம்பரியக் கதைகள் என்றும் அழைக்கப்படுபவற்றை இன்று தொன்மம் என்று அழைக்கின்றோம். இன்று ஏதாவது மரபுடைப்புகள் நேரும் போது அதை நியாயப்படுத்துவதற்கு அல்லது அதற்கான பிற்புலங்களைத் தேடுவதற்கு நாம் புராணங்களுக்குள் புகவேண்டி வருகிறது. பாமர மக்களின் விளிம்பு திலைக்கு தள்ளப்பட்ட நம்பிக்கைகள் உயிர்ப்புடைவையாய் வரவேற்கப்படும் இன்று இது அவசியம்.

கீழைத்தேயப் புராணங்களான மகாபாரதம், இராமாயணம் ஆகியவை மேற்குலகின் கிரேக்க புராணங்களோடு தொடர்புடையவையாய் இருப்பது கண்கூடு. “மாதொருபாகனில் வரும் பொன்னா பாத்திரத்தின் மரபுடைப்புக்கு ஆதாரமாக மகாபாரதத்தில் வரும் குந்தி, அவளின் சகலி மாத்திரி ஆகியோரைக் காட்டலாம். கன்னியாய் இருக்கும் போதே துருவாச முனிவர் கொடுத்த மந்திரத்தை பரீட்சிக்கப்போய் சூரியபகவானோடு கூட வேண்டிய நிர்ப்பந்தம் குந்திக்கு ஏற்படுகிறது. அதன் விளைவாய் பிறதவன் தான் கர்ணன். பின்னர் தன் கணவன் பாண்டுவின் அனுமதியோடு தர்மன், பீமன் , அர்ச்சுனன் ஆகியோரை பெற்றுக் கொள்கிறாள். அவ்வாறே மாத்திரியும் குந்தி கொடுத்த மந்திரத்தால் அஸ்வினி சகோதர்களைக் கூடி நகுல சகா தேவர்களைப் பெற்றுக் கொள்கின்றாள். இவ்விருவரும் தமக்கு பிள்ளை இல்லாது போகும் குறையை தம் கணவனின் அனுமதியோடு இவ்வாறு தான் திர்த்துக் கொள்கின்றனர்.இதிலிருந்து ‘மாதொருபாகனில் பொன்னா செய்தது வேறானதா?

கோயிலுக்கு போய்க் கொண்டிருக்கும் போது பொன்னாவின் பிரார்த்தனை பின்வருமாது அமைகிறது. “இந்தமுறை எனக்கு வழிகாட்டா விட்டால் அந்த உச்சியில் இருந்து வீழ்வதைத்தவிர வேறு வழியில்லை. இன்று சாமி பார்க்க வருகிறேன். என்னால் உன்னைக் கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். நீ தான் உதவ வேன்டும். என் கணவன் முன்போல் துடுக்காக தலை நிமிர்ந்து நிற்கவே இதைச் செய்கிறேன்” என்ற அவள’ தன் உள்ளாந்திரத்லதக் கொட்டுகிறாள். இதைக் காளி அறிவானா?

மற்றும் மகாபரதத்தில் வரும் பாஞ்சாலி பற்றியும் அவளது பிறப்புப் பற்றியும் வித்தியாசமான வியாக்கியானங்கள் சொல்லப்பட்டாலும் அவள் ஐந்து ஆண்களோடு கலவியில் ஈடுபட்டுத்தான் ஐந்து பிள்ளைகளையும் பெறுகிறாள். துரியோதனன் கர்ணன் ஆகியார் அவளை பரத்ரை எனத்துற்றினாலும் பாண்டவர்கள் அவளில் எந்தக் குறையும் காணவில்லை. ஆண்களின் மேன்மையான நடத்தையாகப் இது பார்க்கப்படுகிறது.

இன்னொரு உதாரணம் இராமாயணத்தில் எவ்வாறு இராவணன் சீதையைக் கடத்திக் கொண்டு போய் தன் நாட்டில் சிறைவைக்கிறானோ அவ்வாறே கிரேக்க தேசத்துப் பெண்ணான ஹெலன் என்பாளின் அழகில் மயங்கிய ட்றோய் நகர இளவரசன் பரீஸ், அவளை அவள் கணவன் இல்லாத போது கடத்திக் கொண்டு வந்து ட்றோய் நகரில் வைத்து அவளோடு வாழ்கிறான். இதனால் எப்படி இராமாயணத்தில் இராமனுக்கும் இராவணனுக்கு மிடையே போர் மூழ்கிறதோ, அவ்வாறே கிரேக்க தேசத்து ஸ்பாட்டா நகரத்து மன்னனான மெனலோசுக்கு அதாரவானவர்களுக்கும் ட்றோய் நகரத்து பரீஸ் மன்னனுக்கு ஆதரவானவர்களுக்கு மிடையே பெரும்போர் முழகிறது. நீண்டு கொண்டுபோன இப்போர், கிரேச்கர்களுக்கு வெற்றியாய் முடிகிறது. ஹெலன் மீட்கப்படுகிறாள். பரீஸ் மன்னனோடு கூடி வாழ்ந்த மனைவியை மீட்டெடுத்த கணவன் மெனலோஸ், அவளது நிராதரவான நிலையைக் கண்டு இரக்கமுற்று அவளை மன்னித்து தன்னோடு ஏற்றுக் கொள்கிறான். ஆனால் இராமனோ ஊர்வாய்க்குப் பயந்து சீதையை அக்கின்ப் பரீட்சைக்குள் தள்ளி துன்புறுத்துகிறான்.

இவற்றின் மத்தியில் ‘மாதொருபாகனில்’ வரும் பொன்னாவின் கணவன் காளி என்ன செய்கிறான்?

04

அவன் இராமனாகவே கீழ் இறங்குகிறான்.

அவன் மனைவியை தன் சொத்தாகவே காண்கிறான். அந்தப் பார்வையிலிருந்து விடுபடுவதற்கான அறிவோ பிற்புலமோ இல்லாதது அவன் குறையாகாது. முத்துவோடு சேர்ந்து கள்ளும் சாராயமும் குடித்துவிட்டு அங்கேயே தூங்கிப் போன காளி, தொண்டுப்பட்டியில் தனது வீட்டில் விழித்தெழுவது போலவே அதிகாலையிலேயே எழுந்தவனுக்கு பொன்னா தேவைப்பட்டாள். உடனே இவன் அவளைத்தேடி வீட்டிக்கு ஓடுகிறான்.

காளி, தனது கிராமத்தில் உள்ள திருச்செங்கோட்டு மாதொருபாகன், காலம் காலமாக தேர்த்திருவிழாவின் பதினான்காம் நாள் இரவு, திறந்துவிடும் விடுதலைப் பேர்விழா பற்றி அறிந்திருந்தாலும் அதன் ஆழங்கள் பற்றி அறியான். அன்றைய இரவு அங்கு செல்லும் அணைவரும் நன்மை தீமை என்கிற இருமையைக் கடந்து சாமியார் ஆகும் பேர்நிலை விழா அது என்பது பற்றி அவனுக்குத் தெரியுமா? தெரியாது. அவனது மன நிலையே அங்கு செல்லும் அனேகரின் மன நிலையுமாகும். ஆனால் அதற்காக அர்த்தநாரிஸ்வரர் வழங்கும் விடுதலைப் பெருவிழா கெட்டுவிடாது. காரணம், கடைசி ஒருவராவது அந்தப் பேர்நிலையில் ஒன்றியவராய் சென்றால் அந்த விழா கௌரவிக்கப்படுகிறது, என்பதே அதன் கருத்தாக இருக்கும் என நாம் யூகிக்கலாம்.

காளியின் மனைவி பொன்னா அவ்வாறுதான் அங்கு சென்றாள்

சாமியாராகிய உருவேறிய நிலையிலே சென்றாள்

இவைபற்றி எதுவும் தெரியாத காளி ஓட்ட மும் நடையுமாப் போய் வீட்டை அடைகிறான். அங்கே அவனது வீட்டுப்படலை பெரிய பூட்டுபோட்டு மூடிக்கிடக்கிறது. பலமாகத்தட்டுகிறான். படலையின் நீக்கல்களில் விழியைச் செருகி பார்க்கிறான். வீட்டில் பொன்னாவோ அவளின் தாயாரோ இருப்பதற்கான. எந்த ‘சிலமனும்’ இல்லை.

அவனுக்கு எல்லாமே சட்டென விளங்கிவிடுகிறது.
எல்லாரும் கோயிலுக்கும் போய்விட்டார்கள்!

பொன்னாவும் எனக்குச் சொல்லாமல் போய்விட்டான். நான் நம்பியிருந்த அவளுமா என்னை

எமாற்றிவிட்டாள்! துரோகி.!

துயரின் உச்சத்தின் கேவலமான தூஷண வார்த்தைகளால் தூற்றிய காளி, ‘ஹோ’ வெனப் பெருங்குரல் எடுத்து அழுகிறான்;, பிதற்றுகிறான்;. அப்போது பொன்னாவின் இதிகாச வழிகாட்டிகளாக நான் காட்டிய குந்நியும், மாத்திரியும் பாஞ்சாலியும், ஹெலனும் காளியின் அடிவயிற்றின் ஆழத்திலிருந்து, அருவருப்புற்று வாந்தியெடுக்க வெளிறிப்போய் உயிரற்ற ஜடங்களாய் வந்து விழுகின்றனர் போல் எனக்குப்படுகிறது.

இத்துடன் கதை முடிவுறுகிறது.

அண்மையில் தமிழில் வெளிவந்த நாவல்களில் மதொருபாகன் தனித்துவமான கலைத்துவத்தோடு நிமிர்கிறது.

Exit mobile version