இனிய இசையும் இனிய குரலும்
இசையில் வாத்தியங்களுக்குக் கனதியான இடம் கொடுக்கப்பட்டாலும் ,பாடுவதே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது மனிதக்குரலுக்கே உலகெங்கும் முன்னுரிமை வழங்கப்படுவது பொதுப்பண்பாகவும் இருக்கிறது.
மனிதக் குரல்களின் மகத்துவம் என்பதை பாடகர்களின் குரல்களிலும் நாம் தரிசிக்கின்றோம். இனிய இசையுடன் இணைந்து வரும் குரல்கள் அதிகம் கவனம் பெறுவதுடன் ரசிக்கவும் ,போற்றவும் படுகின்றன. இனிமையான குரல்களின் வசீகரம் பாடல்களை புதியதளத்திற்கு உயர்த்தி செல்கிறது.அதனால்தான் மனிதக்குரலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.ஒரு பாடலில் குரலும் ஒரு பகுதிதான் என்ற போதிலும் பாடகர்கள் மட்டும் வெளியில் தெரிவது அதன் முக்கியத்துவத்தின் விளைவால் தான்.
பொதுவாக இசைரசிகர்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது.பாடகர் சிறப்பாகப் பாடினார் என்றால் ” நாதஸ்வரம் போல இருந்தது ” என்று கூறுவதைக் கேட்டிருக்கின்றோம்.அதன் பொருள் என்னவென்றால் அவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதேயாகும்.உண்மையில் வாத்திய இசை சிறந்ததா , மனிதக்குரல் சிறந்ததா ?
வானொலிக்காரர் அந்தக் கேள்வியை மிகவும் பொருத்தமான ஒருவரிடம் தான் கேட்டிருக்கிறார் .ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர வாசிப்பில் மட்டுமல்ல , வாய்ப்பாட்டிலும் சிறப்பு வாய்ந்தவர். அவர் நடித்த ஒரு சில படங்களின் பாடல்களே அதற்கு சான்று பகரும்.நாடகமேடை மரபிலும் பின்னாளில் சினிமாவிலும் வாத்தியங்கள் குறைந்த ஆரம்பகாலங்களில் குரல்களே பிரதானமாக இருந்தன.
இளமையும் இனிமையும் தோய்ந்த குரல்களால் பாடல்கள் புதுமெருகு பெறுகின்றன.ஒருவரின் குரலைத் தனியே கேட்பது ஒருவகை இன்பம் என்றால் இருகுரல்கள் இணைந்து பாடும் போது கேட்பது பேரின்பமாகும்.இனிய குரல்களை அருகருகே வைத்துக் கேட்கும் போது அவை தரும் இசைக்காரவைகள் உள்ளத்தில் அமுதநிலைகளை இன்பத்தெறிப்புகளாக வீசிச் சென்றுவிடுகின்றன.
பல குரலிசைக்கும் தனிச் சிறப்பான இடம் உண்டு. பல குரலிசை [ Choir ] மேலைத்தேய இசையில் தனிக்கலையாக வளர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வெவ்வேறு விதமான குரல்கள் இணைந்து பாடும் போது ஒருவிதமான இனிய உணர்வு என்றால் , ஒரே சாயல்மிக்க குரல்கள் இணைந்து பாடும் போது ஒருவிதமான மேம்பட்ட , மிகுந்த இனிய உணர்வைத் தருவதாகும்.அதனால் தான் தனிப்பாடல்களை விட ஆண் ,பெண் குரல்களில் ஒலிக்கும் ஜோடிப்பாடல்கள் அதிகம் ரசிக்கப்படுகின்றன.அதுமட்டுமல்ல இரு பெண்குரல்கள் இணைந்தாலும் அந்த உணர்ச்சி இன்னுமொரு வகைப்பட்ட இனிமைசார்ந்த நிலையை தரும். அந்தவகையில் தமிழசினிமாவும் பெண்குரல்களை மிகச் சிறப்பாக பயன்படுத்திவந்துள்ளது.
பி.சுசீலாவின் இனிய குரலை வியக்கத்தக்க அளவில் ஜி.ராமநாதன் போன்ற முன்னோடிகளும் ஆங்காங்கே பயன்படுத்தினர்.பி.லீலா போன்ற பாடகிகளுக்கும் ஈடு கொடுத்து பாடும் ஆற்றலை சுசீலா கொண்டிருந்ததையும் நாம் குறிப்பிட வேண்டும்.ஜி.ராமநாதன் போன்ற முன்னோடிகள் போல மெல்லிசைமன்னர்கள் பி.லீலா ,ஜிக்கி போன்றவர்களை சரியாக முறையில் பயன்படுத்தவில்லையோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
வணங்காமுடி படத்தில் ஜி.ராமநாதன் இசையில் பி.சுசீலா பாடிய ” என்னை போல் பெண்ணல்லவோ ” என்ற பாடலில் கனிவும் ,குழைவும் கனிந்துருகும் அழகையும் காண்கிறோம்.இதே உணர்வை வெளிப்படுத்தும் ஒரு பாடலான எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் அன்னையின் ஆணை படத்தில் பி.லீலா பாடிய ” நீயே கதி ஈஸ்வரி ” என்ற பாடலையும் ஒப்பிட்டு பார்க்கும் போது குரல்களின் இனிமையையும் ,கனிந்த விநோதங்ககளை நாம் கேட்கிறோம்.
இரண்டு பாடலும் ஒரே விதமான உணர்வை வெவ்வேறு ராகங்களில் ,அதாவது “என்னை போல் பெண்ணல்லவோ ” தோடி ராகத்திலும், ” நீயே கதி ஈஸ்வரி ” சாருகேசி ராகத்திலும் வெளிப்படுத்தினாலும் மனிதக் குரல்களில் வெளிப்படும் பரிவும் ,அன்பும் நம்மை பரவசப்படுத்துகின்றன.
மேலே குறிப்பிட்ட பாடல்களில் சுசீலாவின் குரலில் கனிவும் ,நெகிழ்வும் வெளிப்படும் போது லீலாவின் குரலில் அதோடு இனிமையும்,கம்பீரமும் எட்டிப்பார்த்து விடுவதையும் காண்கிறோம். தமிழ்திரையில் பெண் பாடகிகள் இணைந்து பல பாடல்களைப் பாடியிருக்கின்றனர்.
இரு விதமான இனிய குரல்கள் இணைந்து பாடுவதற்கு உதாரணமாக இன்னுமொரு பாடலைக் கூறலாம். மணமகள் படத்தில் சி.ஆர் சுப்பராமன் இசையமைத்து எம்.எல்.வசந்தகுமாரியும் , பி.லீவாவும் இணைந்து பாடிய ” எல்லாம் இன்ப மயம் ” என்ற பாடலில் தேர்ந்த பக்குவமும் , தாய்மை அரவணைப்பின் கனிவையும் ,இனிமையையும் வசந்தகுமாரியின் குரலிலும் , தாயின் மாடியிலிருந்து சீறிப்பாயும் சிட்டுக்குருவியின் துடிப்பும் ,அழகும் ,எளிமையும் பி.லீலாவின் குரலில் தித்திப்பதை கேட்கிறோம். எம்.எஸ்.சுப்புலட்சுமி தனது பதினோராவது வயதில் பாடிய “பேராளா ” என்ற பாடல்களிலும் இளங்குரலின் விறுவிறுப்பையும் , தூய்மையையும் காணலாம்.
உறுதியும் , இனிமையும் மிக்க இரண்டு குரல்கள் இணைந்து பாடும் இனிமையான பாடல்களுக்கு நாம் ஜிக்கியுடன் சுசீலா பாடிய சில பாடல்களையும் உதாரணம் கூறலாம்.
01 மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை- உத்தம புத்திரன் [1958 ] – பி.சுசீலா + ஜிக்கி – இசை : ஜி.ராமநாதன்
02 உந்தன் சபையில் எந்தன் விதியை – அக்பர் [1960 ] – பி.சுசீலா + ஜிக்கி – இசை : நவுசாத் அலி
இந்தவகைப்பாடலுக்கு பி.லீலாவும்,ஜிக்கியும் இணைந்து பாடிய ” கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே ” வஞ்சிக்கோட்டை வாலிபன் [1960 ] படப்பாடலைக் கூறலாம்.
வெவ்வேறு விதமான குரல்களின் இனிமை ஒருபுறம் என்றால் , கிட்டத்தட்ட ஒரேவிதமான குரல்களின் இனிமை இன்னுமொருவகையாகும்.குறிப்பாக பி.லீலாவும் ,பி.சுசீலாவும் இணைந்து பாடிய சில பாடல்களில் இருவரது குரல்களும் ஒன்றுக்கொன்று இனிமையில் போட்டி போடுவதைக் காண்கிறோம்.
இரண்டு குரல்களையும் அருகருகே வைத்து கேட்கும் போது அவை தரும் இனிமையையும் ,அந்த இனிமையின் மாயத்தன்மையையும் எண்ணி வியப்பதுடன், இன்பச்சுவையில் தோய்த்து விடும் உணர்வு உண்டாவதையும்
உணர்கிறோம்.குரல்களின் இனிய ஓட்டம் அவை மாயக்குழல்களோ என்ற எண்ணத்தையும் ,குரல்களின் விஸ்தாரத்தையும் சரளமாக அனுபவிக்கவும் வைத்து விடுகிறது.
உயிரோட்டமிக்க மெட்டுக்களில் மிதந்தோடும் சங்கதிகளில் அசைந்தாடுவதும் , மென்மையான துள்ளிக்குதிப்புகளும் பொலிந்து நிற்பதைக் காணலாம்.
.குறிப்பாக சுசீலாவும் பி.லீலாவும் இணைந்து பாடிய சில அபூர்வமான பாடல்கள் பளிங்கில் தெறிக்கும் ஒளி போன்று பிரகாசிப்பவை.இருவரது குரல்களின் நெருக்கமும் , ஒற்றுமையும் ,ஒன்றை ஒன்று விஞ்சுகின்ற இனிமையும், சேர்ந்து ஒலிக்கும் போது ஒன்றுகலந்தாடும் நெற்கதிர்களின் அலை வீச்சு நாட்டியத்தையும், நளினத்தையும் காணும் அழகிய அனுபவமாகும்.
பி.லீலா ,பி.சுசீலா இரண்டு குரல்களிலும் இனிமையானவையாயினும் , பி. லீலாவின் குரலில் கிராமியவாசமும் கலந்திருப்பதை காணலாம். ஜி.ராமநாதன் , மற்றும் முன்னோடி இசையமைப்பாளர்களின் இசையில் பி.லீலா பாடிய பாடல்கள் இதற்கு சான்று பகரும் .ஒரு சோற்றுப்பத்தமாக மதுரை வீரன் [1956] படத்தில் லீலா பாடிய ” குன்றுதோர் ஆடிவரும் குமரவடிவேலன் ” என்ற பாடலை கூறலாம். அந்த தன்மை சுசீலாவிடம் இல்லாததே சுசீலாவின் மெல்லிசைப்பாடல்களில் அதிகம் சோபிக்க கூடியதாக இருந்தது.
பி.லீலாவும்,பி.சுசீலாவும் இணைந்து பாடிய அற்புதமான பாடல்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்.
01 கோடி கோடி இன்பம் பெறவே – ஆடவந்த தெய்வம் [1960] -பாடியவர்கள் : பி.சுசீலா + பி.லீலா – இசை :கே.வி.மகாதேவன்
02 ஜெகம் புகழும் புண்ய கதை – லவகுசா [1964] -பாடியவர்கள் : பி.சுசீலா + பி.லீலா – இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
03 காதல் கடல் கரையோரம் – குறவஞ்சி [1960 ] – பாடியவர்கள் : சி,எஸ்.ஜெயராமன் + பி.சுசீலா + பி.லீலா – இசை :டி.ஆர்.பாப்பா.
இந்தப்பாடலில் இரு பாடகிகள் குரலும் இணையில்லாத ஒற்றுமையாகவும் ,இனிமை பொங்கி நிற்பவையாகவும் இருப்பதைக் காணலாம்.
பிறமொழிகளில் இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் சில:
01 இந்திவர நயனே காக்கிண்டே – திலோத்தமே [1966 ] – பாடியவர்கள் : பி.சுசீலா + பி.லீலா – இசை : ஜி.தேவராஜன் [மலையாளம் ]
02 இல்லத்தம்மா குளிச்சு வரும் போல் – ஓமனக்குட்டன் [1964 ] – பாடியவர்கள் : பி.சுசீலா + பி.லீலா – இசை : ஜி.தேவராஜன்[ மலையாளம் ]
03 ஜல கா காலலாலோ கால கல கல – ஜெகதேவவருநீ கதா [1961 ] – பாடியவர்கள் : பி.சுசீலா + பி.லீலா – இசை : பெண்டலயா நாகேஸ்வரராவ் [தெலுங்கு ]
04 நீனு நமக்கு செய்யா – சத்யா ஹரிச்சந்திரா [1965 ] – பாடியவர்கள் : பி.சுசீலா + பி.லீலா – இசை : டி.ஜி.லிங்கப்பா [ கன்னடம் ]
பி.லீலா ,ஜிக்கி , கே.ராணி போன்ற அன்றைய பாடகிகளின் குரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மிக இனிமையானவை தான்!எனினும் சுசீலாவின் குரலில் ஏதோ ஒரு இனிமை கலந்த சுவை , கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.அது தான் இயற்கையின் அதிசயம்.சங்கீத ஞானமும் ,இனிய குரலும் வாய்ப்பது பெரும் வரப்பிரசாதம்.
பாடல்களின் வடிவங்களையும் ,அதன் நுண்ணிய கமகங்களையும்,குழைந்த இனிமையுடன், சுருதி சுத்தத்துடனும் பாடக் கூடிய வல்லமையும் ஆற்றலுமிக்கவராக இருந்தார் பி.சுசீலா!
இவை எல்லாவற்றையும் விட இயற்கையாகவே திறந்த குரலில் , வாய்விட்டுப் பாடும் பாங்கும் அவரது தனித்தன்மையாகும். இனிமைக்காக குரலை நெறிக்காமல், நசுக்காமல் ,மிமிக்கிரி இல்லாமல் பாடுவது தான் பி.சுசீலாவின் தனிச் சிறப்பு.பொதுவாகவே அந்தக் காலத்தில் எல்லா பாடகிகளும் அவ்விதமேதான் பாடினார்கள் என்பதே உண்மை.
சுசீலாவின் பாடலைப் பாடும் ரசிகைகள் தங்கள் சுயமான குரலை மறைத்து கள்ளக் குரலில் பாடுவதை நாம் கேட்டிருக்கிறோம். இயல்பான குரலில் பாடினால் இந்த இனிமை கிடைக்காது என்பது பலரின் கருத்தாக இருந்ததன் காரணம் சுசீலாவின் குரலினிமையே ! கள்ளக்குரலில் பாடினால் மட்டும் இப்படிப்பாட முடியும் என்ற என்ற எண்ணம் சாதாரண ரசிகர்கள் மத்தியில் ஓரு காலத்தில் இருந்தது.
கிரேக்க நாட்டின் இசைக்குயில் என்று வர்ணிக்கப்படுபவர் நனா மோஸ்கௌரி [ Nana Mouskouri ] என்கிற பெண் பாடகி. இனிமையும் எழுச்சியுமிக்க குரலுக்குச் சொந்தக்காரர்.அவர் கிரேக்க நாட்டில் மட்டுமல்ல , இவரை ஐரோப்பியர்கள் தங்கள் பாடகி என்று கருதுவது போலவே தென்னிந்தியர்கள் பி.சுசீலாவையும் தங்கள் இசையரசியாகக் கொண்டாடுகிறார்கள்.
எல்லா ஐரோப்பிய மொழிகளில் நனா மோஸ்கௌரி யின் பாடல்கள் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படுவது போல பி.சுசீலாவும் தென்னிந்திய மொழிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறார்.பி.சுசீலாவின் இனிய குரலை சீரிய முறையில் புதியபாங்குடன் பயன்படுத்தி புத்தாக்கம் செய்தவர்கள் மெல்லிசைமன்னர்களே..!
அதைத் தொடர்ந்து புதையல் படத்தில் தனித்தும் ,ஜோடியாகவும் பல இனிய பாடல்களை பாடினார்.குறிப்பாக ” தங்க மோகன தாமரையே ” , ஆசைக்காதலை மறந்து போ ” , “சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வர ” போன்ற பாடல்களைத் தனியேயும் , ” விண்ணோடு முகிலொடு விளையாடும் வெண்ணிலவே ” என்ற பாடலை சி.எஸ்.ஜெயராமானுடன் மிக இனிமைமிக்க காதல் பாடலையும் ,” நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகுது ” என்று ஆரம்பிக்கும் நாட்டுப்புறப்பாங்கில் அமைந்த பாடலை டி.எம்.சௌந்தர்ராஜனுடன் ஜோடியாக பாடினார்.
பின்னாளில் அதிகமாக பல ஜோடிப் பாடல்களை டி.எம்.சௌந்தரர்ராஜனுடன் இணைந்து பாடிய சுசீலா, முதன் முதலாக அவருடன் ஜோடியாகப் பாடியது ” நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகுது ” என்ற பாடலே !
ஆரம்ப காலத்தில்,கள்ளம் கபடமற்ற தன்மை மிக்க குரலாக ஒலித்த இனிமை பின்னர் வலிமையும் ,இனிமையும் மிக்கதுமான குரலாக மாறியது. ஒரு பாடலின் இசையமைப்பின் இனிமை என்பது ஒன்று, அதை பாடும் குரல் தரும் இன்பம் இன்னொன்று ! இந்த இரண்டும் ஒன்று கலந்தால் உண்டாகும் அமோகமான அமானுஷ்யம் சுசீலாவிடம் இருந்தது.அவரின் குரலால் பாடல்கள் வளம்பெற்றுவிடுவதே பெரும்பாலும் நடைபெற்றிருக்கிறது.
1950 களில் மெதுவாக நுழைந்த மெல்லிய குரல்கள் 1960 களில் உச்சம் உச்சம் பெறத் தொடங்கின.
1940 மற்றும் 1950 களில் ஒலித்த என்.சி.வசந்த கோகிலம், டி.ஆர்.ராஜகுமாரி, பி.ஏ.பெரியநாயகி , பாலசரஸ்வதி தேவி ,ஏ.பி.கோமளா , வசந்தகுமாரி , ஆண்டாள் ,யூ.ஆர் .ஜீவரத்தினம். டி.வி.ரத்தினம் ,எஸ்.வரலட்சுமி போன்ற தனி சிறப்புகள் மிக்க , பல்வகைப்பட்ட குரல்கள் மெல்லிய குரல்கள் என்ற வரையறைக்குள் அடக்க முடியாதவை.
ஒப்பீட்டளவில் இவர்களிலிருந்து பி.லீலா, ஜிக்கி, கேராணி போன்றோர் மெல்லிய குரல்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தனர்.இவர்களின் குரல்களிலும் ஒவ்வொரு தனிசுவைகள் இருப்பினும் ஆழ்ந்த இனிமையும் ,வசீகரமும் பி.சுசீலாவின் குரலில் இருந்தது.
மெல்லிய குரல்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது என்பதும் ஹிந்தி திரையிசையில் லதா மங்கேஷ்கரின் வருகைக்குப் பிறகே ஆரம்பித்தது. லதாவின் பாடல்கள் அதிகம் செல்வாக்கும் செலுத்தியது அவர் பாணியில் பாடும் பாங்கு உருவானது. பி.சுசீலா லதாவின் மிகப்பெரிய ரசிகை என்பதையும் நாம் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.அவரது பாடல்களைப் போலப் பாட வேண்டும் என்று முயற்சிகள் செய்ததாக சுசீலாவே கூறியிருப்பதும் முக்கியமானவையாகும்.
லதாவின் குரலை போல மிக மெல்லியது என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு சுசீலாவின் குரலில் மெருகும், இனிய கனதியும் இருந்தது.பலர் லதாவின் பாடல்களை எண்ணி வியந்த காலங்களில் சுசீலாவின் குரலை வியந்து பார்த்தவர் லதாமங்கேஸ்கர்.தான் பாடும் பாடல்கள் சுசீலாவுக்கு இணையாக உள்ளதா என்று லதா மங்கேஷ்கர் கேட்பதாக அவருடன் நெருங்கிப்பழகிய சிலர் கூறியிருக்கின்றனர்.
பின்னாளில் புகழபெற்ற ஹிந்தித் திரைப்படங்கள் தமிழாக்கம் பெற்ற போது ,ஹிந்தியில் வெளிவந்த மெட்டுக்களை தமிழில் சுசீலா பாடிய பாங்கு லதாவை விஞ்சி நின்றன என்பதற்கு ” யார் நீ ” என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சாடசியாக நிற்கின்றன. ” Wo Haun Thi ” என்ற ஹிந்தி படத்தின் தழுவலாக அமைந்தது அந்தப் பாடல்கள்.மதன் மோகன் என்ற தலைசிறந்த இசையமைப்பாளர் உன்னதமாக இசையமைத்த அந்த மெட்டுக்களை தனது நேர்த்தியான வாத்திய இசையால் ,அதன் மூலவடிவம் குலையாமல் தந்தவர் இசையமைப்பாளர் வேதா.
தழுவல்களையும் , அதன் மூலவடிவத்திற்கு இணையான தகைமைக்கு உயர்த்தி செல்லும் இனிமையையும் நான் காண்கிறேன். அதற்கேற்ப அத்தனை பாடல்களையும் பாடிய சுசீலா , லதாவைவிட மிக அருமையாகப் பாடினார் என்று கூறுமளவுக்கு பாடல்கள் அமைந்துள்ளன.யார் நீ படப்பாடல்கள் எண்ணற்றமுறை ரசித்துக் கேட்ட எனது அனுபவம் சுசீலாவின் பாடல்கள் ,லதாவின் பாடல்களைவிட உணர்வுத்தளத்தில் சற்று உயர்ந்த நிலையில் உள்ளன என்பதே.
எனக்குப் புரிந்த மொழியில் இந்தப்பாடல்களை கேட்பதால் இந்தஉணர்வு ஏற்படலாம் என்ற எண்ணமும் இல்லாமலில்லை. ஆயினும் ,ஹிந்தி புரியவில்லை என்றாலும் பாடும் பாங்கில் சுசீலா சற்று முன்னணியில் இருப்பது போன்ற எண்ணமே மேலெழுந்து நிற்கிறது.
அதே போல தமிழிலிருந்து சென்ற ” அமுதைப்பொழியும் நிலவே ” என்ற பாடலை ஹிந்தியில் ஆசா போஸ்லே பாடிய போதும் அது தமிழுக்கு நிகராக இல்லை என்பதை கேட்பவர்கள் உணர்ந்து கொள்ளலாம்.தமிழிலிருந்து ஹிந்திக்கு சென்று வெற்றிக்கொடி நாட்டிய பாடல் அது.! இசைக்கடலின் அமுதக்கடைவு!
தெளிந்த குரலும் செம்மையான உச்சரிப்பும் கைவரப்பட்ட சுசீலாவின் குரல் 1960 களில் வெளிவந்த மெல்லிசைமன்னர்களின் பாடல்களில் உச்சம் பெற்றன.ஹிந்தித்திரையிசையில் லதாவின் குரலைப் பயன்படுத்தி அற்புதமான பாடல்களைத் தந்த ஒவ்வொரு இசையமைப்பாளரும் ,அவருடன் இணைந்து தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி சாதனைமிகுந்த, இனிய பாடல்களைத் தந்தார்கள்.
உதாரணமாக , லதா – சி.ராமச்சந்திரா , லதா – நவுசாத் , லதா – வசந்த் தேசாய் , லதா – மதன் மோகன் , லதா – சங்கர் ஜெய்கிஷன் , லதா – சலீல் சவுத்ரி போன்ற இசையமைப்பாளர்கள் லதாவுடன் இணைந்து தந்த பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் இசைவேட்கை நிறைந்த இசைரசிகர்களுக்கு விருந்தளிப்பவை.
செவ்வியல் இசையா? , மெல்லிசையா? , ஹசலா?, மேலைத்தேய இசைக்கலப்பா ? அத்தனை பாணியிலும் இழையோடி ஆற்றொழுக்காய் பாய்ந்து செல்லும் இனிய பாடல்களைத் தந்த மேதைகளைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.இந்த இணைவுகளில் வெளிவந்த பாடல்கள் அத்தனையையும் கேட்டவர்கள் கருத்துக் கூறுவதாயின் குழலினிது என்பதை ஒத்துக்கொள்வதை போன்றகாகவே இருக்கும்.
ஹிந்தியில் அத்தனை இசைமேதைகளும் லதாவை எப்படிப்பயன்படுத்தி தலைசிறந்த பாடல்களைத் தந்தார்களோ ,அதே போல மெல்லிசைமன்னர்கள்கழும் சுசீலாவை பயன்படுத்தி எண்ணற்ற இனிய பாடல்களைத் தந்தார்கள். ஹிந்தியில் அத்தனை இசை மேதைகளும் செய்த சாதனைகளை போல தாங்களும் செய்ய வேண்டும் என்று எண்ணி அந்தப் பாரிய பொறுப்பை தங்கள் தோளில் சுமந்த பெருமை மெல்லிசைமன்னர்களையே சாரும். மெல்லிசைமன்னர்கள் இசை இனிமையில் படிந்து பல்வேறு உணர்ச்சிகளில் வீறுகொண்டெழுந்து நிற்கின்ற பாடல்கள் தான் எத்தனை, எத்தனை! எத்தனை உணர்ச்சிகள் !எத்தனை பாவங்கள் ! எத்தனை ,எத்தனை சுவைகள் !வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா ?
இவ்விடத்தில் முக்கியமான இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.எந்த ஒரு புதிய விஷயங்கள் ,அணுகுமுறைகள் அறிமுகமாகும் போதெல்லாம் விமர்சனங்களுக்குள்ளாவதும் ,சர்ச்சைகளுக்குள்ளாவதும் இயல்பானதே! தங்கள் இருப்புக்கே ஆபத்து என்று உணர்பவர்களிடமிருந்து வருவதும் இயல்பானதே !
மெல்லிய குரல் மீதான விமர்சனமும் விதிவிலக்காகவில்லை அந்தவகையில் கர்நாடக இசையின் பாதுகாவலர் கல்கியின் குரல் ஒலித்தது. மெல்லியகுரலில் பாடுவது என்பது கள்ள குரலில் பாடுவது என்பது தான் குற்றச் சாட்டு.
தாம் கேட்டுப்பழகிய குரல்களுக்கு மாறான குரல்களைக் கேட்க நேர்ந்த எழுத்தாளர் கல்கி ஆச்சாரம் கெட்டு போச்சு என நினைத்திருக்கலாம்.இசை குறித்து இவர்களின் ” விமர்சனங்கள் ” மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க பாதிப்பையும் நிகழ்த்தியிருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.கர்னாடக இசையின் மவுசை குலைத்துப் போட்ட சினிமா இசையின் மீதான வெறுப்பும் ,கர்னாடக இசையின் அளவுக்கதிகமான விளம்பரங்களும் கண்ணெதிரில் அ து சரிந்து விழுவதையும் கண்டு கத்திய புலம்பல் என்பதை இன்று நாம் உணர்கின்றோம். மெல்லிய குரல் மீதான ஒரு அவதூறு தான் இந்தக் கள்ளக்குரல் சங்கதியாகும். அதற்கு வரலாற்று பின்னணியும் உண்டு.தங்கள் ஆச்சாரத்தையும் காக்க வேண்டும் தங்கள் பாடகிகள் சினிமாவிலும் தோன்ற வேண்டும்.
தமிழ் சினிமாவின் ஆரம்பகால பாடகிகளாக செவ்வியலிசை அறிந்த பாடகிகள் சிலரை நாம் காண்கிறோம்.எம்.எஸ்.சுப்புலட்சுமி ,டி.கே பட்டம்மாள், என்.வசந்தகோகிலம் போன்றவரை குறிப்பிடலாம் தேவதாசி வேடத்தில் நடிப்பதற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி மறுத்ததும் ,காதல் பாடல்களை பாட டி.கே.பட்டம்மாள் மறுத்ததும் இந்திய சினிமா வரலாற்றில் அடங்குபவையே.அக்கால சினிமா செவ்வியலிசை சார்ந்ததால் அவர்கள் பாட வாய்ப்பு ஏற்பட்டது.அவர்களுக்கான சமூக அந்தஸ்த்தும் இதன் மூலம் கிடைத்தது.
தங்கள் இயல்பான குரல்களால் செவ்வியலிசை பாடும் ஆற்றல்மிக்க பாடகர்கள் சினிமா சார்ந்த பாத்திரங்களின் உணர்வு அதிர்வலை மாற்றத்தை தங்கள் குரல்களில் கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே. செவ்வியலிசையில் இயல்பான பாடும் முறையும் ,சினிமாவில் பாத்திர பண்புகளின் உணர்வலையாக மாற்றி பாடுவதற்கும் ,அதன் சுருதிகளுக்கு ஏற்ப பாட குரலில் ஒருவகை மாற்றமும் தேவைப்படுகிறது. இந்த இருவேறுபட்ட நிலை என்பது இரண்டுவிதமான குரல் பயிற்சியை வேண்டி நிற்கும் ஒருவிதமான கடும் பயிற்சியாகும்.அதன் காரணமாகவே இந்த இரண்டு முறைகளிலும் பாடும் ஆற்றல்மிக்க பாடகர்கள் மிக ,மிக அரிதாகவே காணப்படுகின்றனர்.
குறிப்பாக செவ்வியலிசையில் தமது சொந்தக் குரலில் ,தமது தனித்தன்மையை காட்ட ,தமக்கு இயல்பாக வருகின்ற குரலிலேயே பாட வேண்டும்.சினிமாவில் அப்படியல்ல.ஒருவிதமான பண்புமாற்றம் குரலில் தேவைப்படுகிறது.செவ்வியலிசை பாடகிகள் இயல்பாகப் பாடுவதை கேட்டு பழகிய அக்கால இசைவிமர்சகர்களுக்கு சினிமா பின்னணிப்பாடகிகளின் குரல்கள் கள்ளக் குரலில் பாடுவதாகத் தோன்றியிருக்க வேண்டும்.
கள்ளக்குரலில் பாடினால் மட்டும் இப்படிப்பாட முடியும் என்ற என்ற எண்ணம் சாதாரண ரசிகர்கள் மத்தியிலும் ஒரு காலத்தில் இருந்தது. அது அவர்களின் அறியாமையால் விளைந்ததே. இது போன்ற பத்திரிகை விமர்சனங்களும் இக்கருத்துக்களை வலு சேர்த்திருக்கலாம்
தெளிந்த குரலும் செம்மையான உச்சரிப்பும் கைவரப்பட்ட சுசீலாவின் குரல் 1960 களில் வெளிவந்த மெல்லிசைமன்னர்களின் பாடல்களில் உச்சம் பெற்றன.
தமிழ் சினிமாவில் சுசீலா பாடிய பாடல்களை கதாநாயகிகள் அறிமுகப்பாடல். காதல்வயப்படும் நிலையில் பாடும் பாடல்கள், காதல் பாடல்கள்.காதல் பிரிவை வெளிப்படுத்தும் விரகதாபப் பாடல் ,சோகப்பாடல்கள் என்ற பெரும் பிரிவில் அடக்கிவிடலாம். இதையே நாயகர்களுக்கு பொருத்தியும் விடலாம்.
இந்தவகை அமைப்பும் நாடக இசையுலகிலிருந்தே வந்தது.
இந்த வகைக்குள்ளேயே இசைக்கருவூலங்களை அமைத்து மயக்கம், போதை ,கவர்ச்சி பாடல்கள் என பலவற்றை எல்லா இசைக்கருவூலங்களிலிருந்தும் எடுத்து ஒன்றுகலந்து இனிமை என்ற போதைத்தன்மையில் கலந்து தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள். பெண்குரலுக்கென்று தனியிடத்தை தங்கள் மெல்லிசையில் பிழிந்து தந்து இசையின் இனிய நகர்வை நிலை நிறுத்திக் காட்டினார்கள்.பின்னாளில் இளையராஜா போன்றோர் பெண் குரல்களை அதிகமாகப் பயன்படுத்த வழிகாட்டியது மெல்லிசைமன்னர்களின் பாடல்களே!
வரலாற்றாய்வாளர்கள் கலைப்பொருட்களை வைத்து குறிப்பிட்ட காலத்து வரலாற்று சிறப்புகளை எடுத்துக் கூறுவது போல மெல்லிசைமன்னர்களின் இசையில் சுசீலா பாடிய பாடல்களை ஒரு தொகுப்பாக தருவதே பொருத்தப்பாடானதாக இருக்கும்.
மெல்லிசைமன்னர்கள் இணைந்து இசையமைத்த பாடல்களும் , பின்னர் தனியே பிரிந்து ஏம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள் என இரண்டாக பிரித்து தொகுப்பதே சிறப்பானதாக இருக்கும்.
முதலில் மெல்லிசைமன்னர்கள் இணைந்து இசையமைத்த பாடல்கள்:
பணம் [1952] படம் மூலம் இரட்டையர்களாகி தொடர்ந்த ஆண்டுகளில் சொர்க்கவாசல், சுகம் எங்கே , தேளாலிராமன், பாசவலை , பத்தினி தெய்வம்,பதிபக்தி ,பெற்ற மகனை விற்ற அன்னை , மகாதேவி ,மாலையிட்ட மங்கை ,குடும்ப கவுரவம் ,அமுதவல்லி, தங்கப்பதுமை, தலை கொடுத்தான் தம்பி, பாகப்பிரிவினை,
ராஜமலையசிம்மன்,,ஆளுக்கொரு வீடு, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ,கவலையில்லாத மனிதன் ,இரத்தினபுரி இளவரசி போன்ற படங்கள் என 1960 கள் வரை அங்கங்கே சில தலைசிறந்த பாடல்களைத் தந்தாலும் ப.பா வரிசைப்படங்களே அவர்களின் புகழை நிலைநிறுத்தின.
கர்னாடக இசை, நாட்டுப்புற இசை , ஹிந்துஸ்தானி இசை , மேலைத்தேய இசை என எல்லாவகை இசைப்பாணிகளிலும் அவர்கள் இசையமைத்த பாடல்கள் இசை நயம் மிகுந்த , உணர்வு நலம் செம்மையில் அமைந்த பாடல்களாகும்.அவை சுசீலாவின் குரலில் வெளிப்படும் போது அழகியமிக்க பெருங்கொடையாக அமைந்துவிடுகின்றன.புதிய காலத்தின் புத்தொளிமிக்க குரலும் ,இசையும் இணைந்த உள்ளக்கிளர்ச்சிகளைத் தருகின்ற அழகையும் ஆற்றலையும் இந்த இணைகளின் பாடல்களில் தரிசிக்கின்றோம்.
ஆயினும் பாகப்பிரிவினை [1959 ] ,பதிபக்தி [1959 ] போன்ற படங்களிலே,” தங்கத்தில் ஒரு குறையிருந்தாலும் ” , ” சின்னஞ் சிறு கண் மலர் ” போன்ற சுசீலாவின் இனிய பாடல்களைத் தந்தார்கள். அதைத் தொடர்ந்து வியக்க வைக்கும் எண்ணற்ற இனிய பாடல்கள் பிறந்தன.
பொதுவாக இசைரசிப்பின் உச்சக்கட்ட இன்பத்தை தருபவை சோகப்பாடல்களே ! மனதை இலகுவாக்குவதில் சோகப்பாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒரு மகிழ்ச்சி பாடலைக் கேட்கும் போது கிடைக்கும் இன்பத்தைவிட , அல்லது அதன் விளைவாக பெறும் உடல், உணர்வு மாற்றங்கள் , சோகப்பாடல்களைக்கேட்கும் போது அதிகமாக இருப்பதை நாம் அவதானிக்கலாம்.இந்தக் காரணங்களாலேயே சோகப்பாடல்கள் அதிகம் புகழடைகின்றன. சோகப்பாடல்களைக் கேட்பதால் இதயத்துடிப்பு, கண்ணீர் வெளியேற்றம் போன்றவை உடலியல் மாற்றங்கள் நிகழ்ந்து உடல் சீரடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மெல்லிசைமன்னர்களின் இசையில் பி.சுசீலா பாடிய பெரும்பாலான சோகப்பாடல்களும் மிகவும் புகழபெற்று விளங்குகின்றன.
” சின்னஞ் சிறு கண் மலர் ” , ” கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ ” தொடங்கி பின்வந்த காலங்களில் ஏராளமான பாடல்கள் வெளிவந்து புகழ் பெற்றன.
மெல்லிசைமன்னர்கள் – சுசீலா இணையில் வந்த பாடல்கள்:
02 சொன்னது நீ தானா – நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 – பிசுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஹிந்துஸ்தானி பாணியில் அமைக்கப்பட்ட இந்தப்பாடல் மெல்லிசைமன்னர்களின் இசைச் சிகரத்தில் இருக்கின்ற பாடல் என்று துணிந்து கூறிவிடலாம்.நிகழப்போகும் விபரீதத்திற்கு தயாராகும் நாயகனும் ஆற்றாத சோகத்தை வெளிப்படுத்தும் நாயகி படும் எல்லையில்லாத வேதனையையும் உணர்வு பொங்க வெளிப்படுத்தும் அற்புதமான பாடல்! இந்தப்பாடலில் சித்தார், சாரங்கி வாத்தியங்களின் இனிய பிரயோகங்களும் தாளத்தில் கனகச்சிதமும், நம்மை கவரும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன. பிடிபடாமல் நழுவிஓடும் இனிய மெட்டமைப்பைக் கொண்ட ராகத்தில் மாயம் நிகழ்த்தியிருக்கும் மெல்லிசைமன்னர்களை எங்கனம் பாராட்டாமல் விடுவது.!
சிந்துபைரவி ராகத்தின் மென்மையான சாயல்களை தடவிச் செல்லும் ஜோன்புரி ராகத்தின் எழுச்சியையும் நாம் காண்கிறோம். மெல்லிசைமன்னர்களின் தலை சிறந்த பாடலை சுசீலா உணர்ச்சி ததும்பப் பாடியிருப்பது மிகவும் சிறப்பு.
03 மாலைப் பொழுதின் மயக்கத்திலே – பாக்கியலட்சுமி 1962 – பிசுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
எந்த விதமான வாத்தியங்களை வைத்து சாகசம் புரிய முடியும் என்று நிரூபிக்கும் இன்னுமொரு பாடல்.வீணையையும் செனாய் வாத்தியத்தையும் அவற்றின் இனிய நாதச்சுவைகளை வைத்து உணர்ச்சிநிலைகளின் அற்புதத்தை காட்டி அழகியிலின் உச்சத்தை தொடுகிறார்கள்.
04 உறவு என்றொரு சொல் இருந்தால் – இதயத்தில் நீ 1963 – பிசுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
காதலின் ஏக்கமும் ,வாட்டமும் தருகின்ற இனிய பாடல்.தொகையறாவுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் ” நினைக்கத்தெரிந்த மனமே ” பாடலை நினைவூட்டும்.
05 உன்னை நம்பினார் கெடுவதில்லை – பணக்காரக்குடும்பம் 1963 – பிசுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
சித்தார் இசைக்கருவியை பிரதானமாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடல் இது.துன்பச்சுவையின் உணர்வை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்.
06 தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை – பணம் படைத்தவன் 1963 – பிசுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
துயர நிலையை பிரதிபலிக்கும் இந்த பாடல் பெண்களின் பொதுநிலையை காட்டுவதாய் அமைந்துள்ளது.செனாய்,அதனுடன் இணைத்து ஏனைய இசைக்கருவிகளை பயன்படுத்தி அன்பின் பாய்ச்சலை அழகாக வெளிப்படுத்தும் பாடல்.
07 மன்னவனே அழலாமா – கற்பகம் 1963 – பிசுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
தமிழில் வெளிவந்த பாடல்களில் மனதை வதைக்கும் பாடல்கள் பலவுண்டு.அந்த வகையில் இந்தப்பாடல் முதல் இடத்தில் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது.பாடலின் உணர்ச்சி வெளிப்பாடு , இசையமைப்பு ,பின்னணி இசைசேர்ப்பு ,அமைக்கப்பட்ட ராகம் , பாடல்வரிகள் ,பாடியவிதம் என ஒரு படைப்பின் எல்லாநிலைகளும் ஒருங்கிணைந்த இனிய ஒத்திசைவு இந்தப்பாடல்.
மெல்லிசைமன்னர்களின் படைப்பாற்றலுக்கு சிறப்பு சேர்க்கும் இன்னுமொரு பாடல்.
பீறிட்டெழும் துயர நினைவுகளை ஆற்றுப்படுத்துவதாகவும் ,இனம் புரியாத அதீத உணர்வையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்த இந்தப்பாடல் கீரவாணி ராகத்தின் ஈரத்தையும் ,புதுமெருகையும் காட்டுவதுடன் தமிழ்ச்சினிமா இசையை சிகரத்திலும் வைக்கின்ற பாடல்.
08 பூச்சூடும் நேரத்திலே – பார் மகளே பார் 1963 – பிசுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
மைய இசையரங்குகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ஒப்பாரி என்ற இசை வடிவத்திற்கு உன்னத பின்னணி இசை கொடுத்து ஒப்பாரி இசைக்குறீடாக அமைக்கப்பட்ட பாடல்.பாடலின் சூழ்நிலை , அதற்கு பயன்படுத்தப்பட்ட செனாய் ,மற்றும் விசும்பல்.ஒரு தாயின் பரிவை ,மகளை இழந்த பெருந்துயரத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தும் இப்பாடல் ஒப்பாரி இசைக்கு சிறந்த எடுத்துக்காட்டான பாடல். கண்ணதாசன் தாயின் புலம்பலை மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். இசையோ இயற்பான சோக வெளியில் நம்மை அனாதையாக உணர வைக்கிறது.
09 கண்ணிலே அன்பிருந்தால் – ஆனந்தி 1963 – பிசுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
உள்ளமுவக்கும் மென்மையான சோகம் படரும் இந்தப்பாடல் , பெண்ணொருத்தி தனது காதலை வெளிப்படுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது.செனாய் , எக்கோடியன் குழல் போன்ற வாத்தியங்களை வைத்து அழியா இசையோவியம் படைத்திருக்கிறார்கள்.பாடலின் சரணத்தில் வரும் இடையிசை உச்சத்தைத் தொட்டு செல்கிறது.
10 என்னை எடுத்து தன்னைக் கொடுத்து – படகோட்டி 1964 – பிசுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
பல வாத்தியக்கருவிகளை வைத்து சாகசம் செய்வது ஒருவகையென்றால் எளிமையாக ஒரு சில வாத்தியக்கருவிகளை வைத்து ஜாலவித்தை காட்டுவதும் மெல்லிசைமன்னர்களுக்குக் கைவந்த கலை என்பதை நிரூபிப்பது இந்தப்பாடல்.
நெய்தல் நிலப்பரப்புக்கு புது மெருகு கொடுக்கும் இசை ஓவியமாக அமைந்த இந்தப்பாடல் குழலாலும் , விஸ்வநாதன் குரலின் ஹம்மிங் மற்றும் குழுவினரின் ஹம்மிங்காலும் தீட்டப்பட்டுள்ளது.வனப்பும் ,அழகும் மிகுந்த பாடல். தோற்றப்பாங்கில் மிக எளிமையாகத் தோன்றும் இப்பாடல் வியக்கத்தக்க , மிக நுணுக்கமான சங்கதிகளை விரித்து ,விரித்துக் காட்டி வியக்க வைக்கின்றது …! ” போனவன் போனாண்டி ….வந்தாலும் வருவாண்டி ” என்ற வரிகளை உற்றுக் கேளுங்கள்,எத்தனை எத்தனை விதமான ஜாலங்கள்! இசைக்கு அழகு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் இந்தப்பாடலில் குழல் அதியுன்னதம் என்றால் விஸ்வநாதன்,சுசீலா அதியுச்சம்.! பாடல்வரிகளும் விரகதாபத்தை நன்கு வெளிப்படுத்துகிறது.
11 உன்னை நான் சந்தித்தேன் – ஆயிரத்தில் ஒருவன் 1965 – பி..சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
“என்ன ஒரு கனிவான எடுப்பு / ஆரம்பம் ” என்று எண்ணி வியக்க வைக்கும், சோகத்தின் திரை நம்மீது கவியும் அற்புத உணர்வை வெளிப்படுத்தும் பல்லவி !
துயர மேகம் நம்மீது கவியும் , மாலைநேரத்துக்குரிய “சாதாளிப்பண் ” என்ற நம் மரபு ராகத்தின் [ பந்துவராளி ] இலக்கணங்களை சுமந்து கொண்டு செல்லும் தன்னிச்சையான ஓட்டமும், உள்விரிவும் கொண்ட இந்தப்பாடல் அக்காலத்தில் மரபையும் , புதுமையையும் சுமந்து வந்த சிறந்த பாடல் என்பதில் சந்தேகமில்லை.
உணர்ச்சி வெளிப்பாட்டில் உயர்ந்து நிற்கும் இப்பாடலில் குழலும் , பல்வகை வாத்தியங்களுடன் கோரஸ் இசை கனகச்சிதமாகவும் அழகியல் நோக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை மிகச் சிறப்பானதொன்றுமாகும்.
இப்பாடலின் மூலப்பாடல் மெல்லிசைமன்னர் விஸ்வநாதனின் பேரபிமானத்திற்குரிய நௌசாத் இசையமைத்த பாடலின் மூலத்தை தொட்டுச் செல்வதாயினும் .அழகியலும் உத்வேகமும் ,உள்ளடுக்கு சிறப்புகளும் கொண்ட இந்தப்பாடலை காலம் காலாவதியாக்க முடியாது!
மகிழ்ச்சி பாடல்கள்.
பாடல் வரிகளுக்கு புன்னகை என்ற அணிகலனை அணிவித்த அலங்காரப்பாடல் ஏராளம் உண்டு..உளஎழுச்சி தரும் வாத்தியங்களை இனிமையில் கரைத்து ,அவற்றிலிருந்து புதிது புதிதாய் எல்லைகளை தொட்டு , அலையலையாய் எழும் உணர்ச்சி உச்சங்களைத் தொட்டு, கேட்கும் கணம் தோறும் உணர்வு வெள்ளம் பெருகி குதூகலிக்க வைக்கும் பாடல்களில் , இசையின் ,வாத்தியங்களின் நுண் திரள்களை தேக்கி ,தேக்கி தாங்கள் விரும்பும் நேரங்களில் ஆங்காங்கே மடை மாற்றி , மாற்றி மந்திர ஜாலங்கள் காட்டி , வாத்தியங்களின் மரபார்ந்த படிமங்களை மாற்றி போட்டு திகைக்க வைக்கும் இனிமையில் நம்மை மூழ்கவைக்கும் பாடல்கள் தான் எத்தனை எத்தனை!
இது தான் அற்புதமான பாடல் என்ற திளைப்பில் இருக்கும் போது , இதோ பார் , இதைக்கேள் என்று சொல்வது போல இன்னுமொரு பாடலை அதே வாத்தியங்களை இடம் மாற்றி தந்து , புது நெய்தல்களால் முடிவில்லாத தங்கள் படைப்பு மேதமையின் விசித்திரங்களை நமக்கு காட்டிச் செல்கிறார்கள்.
குழல் ,சந்தூர், சித்தார், ஜலதரங்கம் ,வீணை , நாதஸ்வரம், சாரங்கி ,ட்ராம்போன் ,கிட்டார் , ட்ரம்பெட் , மியூட் ட்ரம்பெட் , தாளத்தில் பொங்கஸ், தபேலா, மிருதங்கம் ,டோலக் , ட்ரம்ஸ் போன்ற இசைக்கருவிகளுடன் , மிமிக்கிரி , விசில் ,ஹம்மிங் போன்றவற்றையும் இணைத்து இந்த விசித்திர நெய்தல்களால் கவ்விப்பிடித்தாட்டும் பாடலைகளைத் தந்து மலைக்க வைத்த பாடல்கள் தான் எத்தனை ,எத்தனை.!
01 ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை – பணத்தோட்டம் 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஜலதரங்கம் , வயலின் முன் இசையுடன் ஆரம்பிக்கும் இந்த இனிமையான பாடல் மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த மிகச் சிறந்த பாடல் என்று சொல்லலாம்.அனாயாசமான நுண்சங்கதிகள் கொண்ட இந்த பாடல் இதமான வளைவுகளையும் ,இனிய மென் சுழிப்புகளையும் சுமந்து செல்கின்ற பாடலாகும்.
பாடலின் பல்லவியின் பின்னணியில் மின்னி மின்னி மறைந்து ஜாலம் காட்டும் ஜலதரங்க ஒலியும் , பல்லவி முடிவில் மேண்டலின் இசையுடன் கைகோர்த்துவரும் ஜலதாங்கமும், அதை அள்ளிச் சென்று அரவணைத்து வரும் வயலின் சேர்ந்திசையும் ,அதை ஆற்றுப்படுத்தி இனிமை சேர்க்கும் குழலிசையும் , மீண்டும் ஒருமுறை மேண்டலின் குழைந்து வர வயலின் அதை உயரே எடுத்து நெஞ்சை அள்ள ,சாரங்கின் மதுரநாதம் குளிர்ந்த காற்றாய் நுளைந்து மனத்தைக் கனிய வைக்க அனுபல்லவி [ திரு நாள் கூடி ….என்ற வரிகள் ] ஆரம்பிக்கிறது.அனு பல்லவி முடிந்து வர நறுமணம் பரவுவது போல சாரங்கியின் இனிய இசை படர்கிறது.அதை தொடர்ந்து ” இரவில் உலவும் திருடன் அவன் என்றான் ” வரிகளில் பாடலின் இனிமை உச்சம் வருகிறது.
பாடிய முறையும் ,இசையமைப்பும் , பாடல் வரிகளும் , வாத்தியங்களும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன.
பொதுவாக எளிதில் கண்டிபிடிக்கக்கூடிய ராகத்தில் அமைக்காமல் மாயாஜாலம் காட்டும் ஒரு புது ராகத்தில் அமைத்து வித்தை காட்டியிருப்பது மெல்லிசைமன்னர்களின் இசைத்தேடலுக்கு எடுத்துக்காட்டாகும். நமக்கு எளிதில் புலப்படும் நமது செவ்வியல் ராகத்தில் அமைக்காமல் ஹிந்துஸ்தானி ராகத்தில் நம்மை தேட வைத்திருக்கின்றனர்.அல்லது அலைய வீட்டிருக்கின்றனர். பல வண்ண ஜாலம் காட்டும் இந்தப்பாடல் காபி ராகமா, பீலு ராகமா , பஹாடி ராகமா என்ன ஒரு விசித்திரமான , நூதனமான ராகம், அல்லது மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கூறுவது போல சினிமா ராகமோ என்று நமது ரசனைக்கும் ,தேடுதலுக்கு சவால் விட்டதொரு பாடல்.இசை அற்புதம்.
அடிப்படை இரண்டு வர்ணங்களை கலக்கும் போது கிடைக்கும் எளிமையான விடை போல அல்லாது , ஏலவே கலந்த இரு வர்ணங்களில், அதில் சிறுபாகத்தை எடுத்து இன்னுமொரு புதுவர்ணம் கலந்து காட்டி அதில் சஞ்சரிப்பது போல ஹிந்துஸ்தானி இசையில் பலவிதமான கலவைகளில் ராகங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த இனியபாடல் மிஸ்ர பஹாடி என்ற ராகத்தில் அமைந்துள்ளது என்பதே எனது நிலையாக உள்ளது.
இந்தப்பாடலை இசையமைப்பாளர்கள் சொல்லிக் கொடுத்த அளவுக்கு தன்னால் பாட முடியவில்லை என்றும் யாருக்கும் சொல்லாமலேயே இடையிலே அழுது கொண்டு சுசீலா வீடு போனதாகவும் , அதற்காக பாடல் .ஒளிப்பதிவாளர் விஸ்வநாதன் தான் ஏதோ சொல்லி சுசீலாவைத் திட்டிவிட்டார் என்று எம்.எஸ்.வி யை திட்ட , அப்படி ஒன்றும் நிகழவில்லை என்றும் , பின்னர் அவரை சமாதானம் பண்ணி பாட வைத்ததாகவும் விஸ்வநாதன் ஒரு பேட்டியில் கூறினார்.
02 சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து – புதியபறவை 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
மலைவாழ் மக்களின் நாட்டுப்புற தாளம் , அதைத்தொடர்ந்து இனிய குழலிசை, அதையொட்டி வரும் சைலபோனின் மிக நுட்பமான நிறைவுடன் ,எழும் சந்தூர் இசையின் இசைத்துளிகளின் சிந்தல், அதையொட்டி வரும் சுசீலாவின் நெஞ்சை ஊடுருவும் மென்மையான குரலில் “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே ” என்று பாடல் ஆரம்பிக்க [ அந்த பல்லவியின் பின்னணியில் ஜலதரங்க ஒலியும் நகர்ந்து வரும் ] உல்லாசவானில் பறந்து செல்லும் ,கையைவிரித்து பறந்து செல் என்று கூறும் தொனியில் அமைந்த வயலின் இசை தரும் எழுச்சியுடன் ஆரம்பமாகும் இந்தப்பாடல் ஆனந்தக்களிப்புக்கு நம்மை எடுத்த எடுப்பிலேயே அள்ளி செல்கிறது.
இடையிசையாக குழல்,சந்தூர் ,வயலின் நெஞ்சை அள்ளும் சுசீலாவின் ஹம்மிங் ,இதமான பொங்கஸ் ,தபேலா தாளம் என அத்தனையும் அபாரம் என்று சொல்லலாம்.இந்தப்பாடலின் ஒலிப்பதிவு தரமும் குறிப்பிட்டு கொள்ளத்தக்கது.அவ்வளவு துல்லியமான ஒலிப்பதிவு..
03 அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் – பஞ்சவர்ணக்கிளி 1964 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
“சத்தியம் சிவம் சுந்தரம்” என்று அழகியல் உணர்வை வெளிப்படுத்தும் தொகையாறாவுடன் ஆரம்பிக்கும் தித்திக்கும் தேன் குரலில் ஆரம்பிக்கிறது பாடல்.
தொகையறா முடிந்து வரும் வாத்திய இசையில் நாட்டியத்திற்கு பயன்படும் பஞ்சமுக தாள ஒலிகளுடன் வீணை ,குழல் ,சித்தார் மட்டுமல்ல , ஆச்சரியம் தரும் வகையில் செனாய் வாத்தியத்தையும் இணைத்து இனிமைக்கு இனிமை சேர்க்கிறார்கள் இசையமைப்பாளர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி. பொதுவாக செனாய் வாத்தியத்தை சோகப்பாடல்களுக்கே பயன்படுத்துவது வழமை.
” அவன் அருளை பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ,,ஆ ..ஆ.. ஆ. ” என்ற வீச்சும் ,நளினமும் மிக்க சங்கதிகளைத் தொடர்ந்து.
” அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்” என்ற பல்லவி வருகிறது. அது முடிந்து வர வரும் வாத்திய இசையில் வீணைக்கும் ,செனாய்க்கும் ஒரு சிறிய டூயட் வைத்து ,அதன்பின்னே இன்ப அதிர்வுகளைத் தரும் வகையில் பஞ்சமுக தாள ஒலியுடன் ,ஜலதரங்கம் ,மிருதங்க தாளத்துடன் , குழலிசையையும் இணைந்து முடியும் இடத்தில் பாடலின் அனுபல்லவி ” பனி பெய்யும் மலையிலே பழமுதிர் சோலையிலே ” என்ற வரிகள் ஆரம்பமாகிறது. அதில் கூட பழமுதிர் சோலையிலே ஆ….ஆ..ஆ.. என்ற இடத்தில் பாடல் அமைக்கப்பட்ட ” திலங் ” ராகத்தின் இதமான ஆலாபனையை வைத்து பேரழகு காட்டுகிறார்கள்.மீண்டும் அனுபல்லவி முடியும் இடத்தில் ” பெண்மையை வாழ்வைத்தான் ஆ..ஆ…ஆ ” என்ற இடத்திலும் அந்த ஆலாபனை அழகாக வரும்.
“மலைமேல் இருப்பவனும்” என்ற சரணத்திற்கு முன்பாக வரும் இடையிசையிலும் ஏலவே வந்த இடையிசையை மீண்டும் செனாய் ,வீணை ,ஜலதரங்கம் குழல் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். “அழகுக்கு அழகானேன்”…. என்று பாடலில் வருபவது போலவே பாடலில் அமைந்த வாத்தியங்களும் , சுசீலாவின் குரலும் அமைந்தது மட்டுமல்ல , அக்காலத்தில் இதுபோன்ற வாத்தியக் குழைவுகளும் மிக அரிதாகவே வந்தன.
சாதாரண ஒரு நாட்டிய பாடலுக்கு எவ்வளவு அலங்கார இசை! என்று வியக்கும் இசையமைப்பும் தேன் குரலும் ! கலைக்கு அழகியல் இல்லாமல் கலை இல்லை !
04 தமிழுக்கும் முதென்று பேர் – பஞ்சவர்ணக்கிளி 1964 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
சிறிய தட்டொலி, எக்கோடியன் ,வயலின் ,சந்தூர் இசைக்கருவிகள் மாறி மாறி சுழன்றடித்து வரும் இனிய [ இனிய என்ற சொல் பத்தாது ] முன்னிசையுடன் ஆரம்பமாகும் எழுச்சிமிக்க பாடல்.
எக்கோடியன் இசைத்தலாட்ட ,வயலின் அதிக உந்தித் தள்ள ,அந்த இசைவீச்சில் சந்தூர் துள்ளி துள்ளி வர ,அந்த துள்ளலை மெதுவாக நீர்த்து போகவைத்து இசைத்தாலாட்டில் மீண்டு அனைத்து செல்கின்றன எக்கோடியன் இசையும் ,வயலின் இசையும் கனிந்து வரும் முன்னிசை என்ற அற்புதம்!
முன்னிசை முடிய பாரதிதாசன் என்ற அற்புதக்கவிஞனின் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்கிற அற்புதவரிகள் இசை என்ற அற்புதத்தால் உச்சத்தில் ஏறுகின்றன.இந்த பல்லவி ஒலிக்கும் இடத்திலேயே ,அதன் பின்னணியில் ,வாத்தியங்களில் எத்தனை விதமான ஊடாட்டங்களை, சுழிப்புகளை இசையமைப்பாளர்கள் வைத்திருக்கின்றார்கள்!
உதாரணமாக, பல்லவியில் “உயிருக்கு நேர்…உயிருக்கு நேர் ” என்ற பகுதியை எக்கோடியன்,வயலின் இசை தழுவுவதையும் , ட்ரம்ஸ் தாள ஒலி மெதுவாக இணைவதையும் ,அதை தொடந்து ” தமிழ் எங்கள் விளைவுக்கு நீர் ” என்ற பகுதியில் எக்கோடியன் தரும் மெல்லிய உறுமலும் , பின் “தமிழுக்கு மதுவென்று பேர் ” என்ற பகுதியில் பின்னணி இசையாக குழல் இசை கனிந்து , தழுவி வரும் அழகும் வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை.
அதைத்தொடர்ந்து .. ” தமிழ் எங்கள் இளமைக்கு பால் ” என்ற வரிகளுக்கு முன்பாக வரும் இடையிசையில் இன்னுமொரு அற்புதமாக , ஒளியின் எதிர்த்திசையிலிருந்து பார்க்கும் போது ஜாலம் காட்டி ,விந்தைகள் புரியும் மழைத்தூறல்கள் போல சந்தூர் தரும் இனிய ஒலிகள் [ 01 :39 தொடக்கம் 01 :55 வரை உள்ள நிமிடத்தில் ] நடனம் ஆடிச் செல்ல , அந்த சந்தூர் ஒலிக்கும் போதே அதன் பின்னணியில் “சைலபோன் ” என்ற இசைக்கருவி உந்தி ,உந்தி ஒத்திசைவு கொடுக்கிற போது வயலினும் ,குழலும் அவற்றை இழுத்து வந்து அனுபல்லவியை ஆரம்பிக்க வைக்க ” தமிழ் எங்கள் இளமைக்கு பால் ” என்ற வரிகள் ஆரம்பமாகிறது.
” தமிழ் எங்கள் இளமைக்கு பால் ” என்ற வரிகளில் பால் என்ற வரிகளில் என்னே ஒரு சுகமான ஆலாபனை பாடலின் உச்சம் என்று சொல்லலாம்.
சரணத்தில் “தமிழ் எங்கள் அறிவுக்கு தோள்” பாடல் வரிகளுக்கு முன்னால் வரும் இடையிசையிலும் பிரஸ் ட்ரம்ஸ்[ Brush drums ] தாளமும் ,சந்தூர் , குழல்,வயலின் இழையும் அழகையும் காண்கிறோம்.
ஏற்கனவே எழுதப்பட்ட அமுதான இந்தப்பாடலுக்கு அமுதமான ஒரு இனிய மெட்டில் இசையமைக்க மேதைகளால் மட்டுமே முடியும்.
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் …..ஆகா ! அந்த வானில் நின்று துலங்கும் இசை நிலவு தான் இந்தப்பாடல்.இந்த உணர்ச்சிமிக்க பாடலை கேட்கும் போதெல்லாம் மெய்சிலிர்ப்பும் , உணர்ச்சி பெருக்கும் உண்டாவதை தவிர்க்க முடிவதில்லை.
சந்தூர் , எக்கோடியன் , குழல் வாத்தியங்கள் எத்தனை அற்புதம் செய்திருக்கின்றன எனபதை கேட்டு ,கேட்டு வியந்த பாடல். இந்தப்பாடல் அமைக்கப்பட்ட செஞ்சுருட்டி, ” என்னே ஒரு அற்புதமான ராகம்” என்பதை இந்தப்பாடலைக் கேட்ட பின்னர் தான் உணர முடிகிறது.
05 அத்தை மகனே போய் வரவா – பாதகாணிக்கை 1962 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
இதமான மென்மையான குரலில் ஆரம்பிக்கும்பாடலின் பின்னணியில் கிட்டாரின் மெதுவான வருடலும், விஸ்வநாதனின் கம்மிங்கும் , பேசுகிறாரா அல்லது பாடுகிறாரா என்று எண்ண வைக்கும் பல்லவி [ அத்தை மகனே ] முடிய சாரங்கியின் இதமான மீட்டல் நிறைவுபெறும் பொது ” அத்தை மகனே போய் வரவா ” பாடலாக வேகம் பெரும் இடையிலேயே வரும் இதமான வயலின் இசை மீட்டலைத் தொடர ” உந்தன் மனதை கொண்டு செல்லவா ” என்ற வரிகள் இரண்டு தடவைகள் வர பல்லவி பாடி நிறைவுறுகிறது.
பல்லவியின் நிறைவோடு தொடரும் வயலின் இசையும்,அதனிடையே முன் வீழும் சந்தூரின் இசைத்துளிகளும்,அதன் பின்னணியில் ஒத்திசைவாக மென்மையான சாரங்கியின் வருடலும் ஒன்றிணைந்து முடிய ” மல்லிகை மலர் சூடி காத்து நிற்கவா ” என்ற வரி ஆரம்பிக்கிறது. அந்த வரிகளைப் பாடும் போதே அதனிடையேயும் சாரங்கியை வைத்து மெதுவாக இனிமை காட்டுகிறார்கள்.
பாடலின் சரணத்திற்கு முன்பாக, ” பெண் பார்க்கும்மாப்பிள்ளை முகம் பார்க்க வா ” என்ற வரிகளுக்கு வரும் இடையிசையில் ஆச்சர்யமிக்க ஜாஸ் இசைக்கருவியான மியூட் ரம்பட் என்ற வாத்தியத்தை மிக அழகாக மெல்லிசை மன்னர்கள் பயன்டுத்துகிறார்கள்.
ஹம்மிங் ,சந்தூர், குழல் ,சாரங்கி , வயலின் , மியூட் ட்ரம்பட் வாத்தியங்களை அனாயாசமாகப் பயன்படுத்தி இசையமைக்கப்பட்ட இனிய பாடல்.சாரங்கி இசை மிக அழகு..
06 பார்த்த ஞாபகம் இல்லையோ – புதியப்பறவை 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
அமர்க்களமான ஆரம்ப இசை: பொங்கஸ் , ட்ரம்பட் அதனுடன் இணைந்த எழுச்சி உச்சம் தரும் ஹம்மிங்குடனும் ஆரம்பிக்கும் விறுவிறுப்பான பாடல்.முற்றுமுழுதான லத்தீன் அமெரிக்க இசைப்பாணியில் அமைந்த அற்புதம்.ஹோரஸ் , ட்ரம்பட் , வயலின் இசை நம்மை புதிய உலகத்திற்கு அழைத்து செல்லும் அதீத உணர்வு தரும் பாடல்.
” அந்த நீல நதிக்கரை ஓரம் ” என்று ஓங்கி குரல் எடுத்து பாடும் இடத்தில் எத்தனை எழுச்சி ! எத்தனை மலர்ச்சி நம் நெஞ்சங்களில் வருகிறது ! வார்த்தையால் வர்ணிக்க முடியாது.பொங்கஸ் தாளம் நம்மை நெகிழ்வுற செய்கிறது. மெல்லிசைமன்னர்களின் ஒப்பற்ற பாடல்.
07 உன்னை ஒன்று கேட்பேன் – புதியபறவை 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.
பியானோ இசையுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் கிட்டார் ,பியானோ ,ட்ரம்பெட் ,ட்ரம்ஸ் என முற்றுமுழுதான மேலைத்தேய வாத்தியங்களின் உதவியுடன் துள்ள வைக்கும் இனிய ஒலியசைவுகளையும் பயன்படுத்தி இசையமைக்கப்பட்ட பாடல்.ஆர்ப்பாட்டமான வாத்தியங்களின் நடுவே அசைந்து வரும் இனிமை ததும்பும் சுசீலாவின் குரலில் பாடல் ஜொலிக்கிறது.
இத்தனை பரிவாரங்கள் இருந்தாலும் மனதை நெருடும் சங்கதிகளும் கொண்ட பாடல்.” கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் ” வரிகளிலும் ” தனிமையில் கானம் சபையிலே மௌனம் உறவு தான் ராகம் உயிரெல்லாம் பாசம்” என்ற வரிகளிலும் தான் எத்தனை இனிமை ,எத்தனை கனிவு என்று வியக்க வைக்கும் பாடல்.
பாடலின் உயிரும் உச்சமும் அந்த இடங்களில் தான் என்று துணிந்து கூறிவிடலாம்.மெல்லிசையின் இழைபிசகாத ஜீவ ஓட்டம் இந்தப்பாடலின் சிறப்பு.
08 கண்கள் எங்கே – கர்ணன் 1964 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஹிந்தி திரையிசைக்கு நிகராக தமிழ் பாடல்களையும் தரமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த பாடல்களில் இதுவும் ஒன்று. கர்ணன் பாடல்கள் அத்தனையும் தனிச் சிறப்பு வாய்ந்தவை.
சந்தூர் , சாரங்கி ,குழல் , செனாய் ,சித்தார் , வயலின் போன்ற வாத்தியங்களுடன் கோரஸ் புதிய உயிர் வீச்சுக்களாய் பின்னிக்கிடக்கின்றன இந்தப்பாடலில் குறிப்பாக செனாய் வாத்தியம் பயன்படுத்தப்பட்ட முறை அபாரம்.
09 அத்தை மக்கள் ரத்தினத்தை – பணக்காரங்க குடும்பம் 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
சந்தூர் ,ஜலதரங்கம்,எக்கோடியன், குழல் ,வயலின் வாத்தியங்களை வைத்து மெல்லிசைமன்னர்கள் ஜாலம் காட்டியபாடல்.பாடலின் இடையிடையே சந்தூர் இசையையும், எக்கோடியன் இசையையும் பாடலை உந்தித்தள்ளும் வகையில் மிக அற்புதமாக பயன்படுத்தியிருப்பது அழகு வெளிப்பாடாகும்.
அனுபல்லவியில் ” முத்து முத்து பேச்சு கத்தி விழி வீச்சு ” இரண்டுமுறை வரும் பகுதியில் இடையில் வரும் சந்தூர் இசையையும் ,சரணத்தில் “கொட்டுமுழக் கூடு கட்டழகு மேனி ” என்ற பகுதியிலும் இடையிசையில் சந்தூர் இசையை மிக அருமையாக பயன்படுத்தியிருப்பார்கள்.
10 காண வந்த காட்சி என்ன – பாக்கியலட்சுமி 1961 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலின் சூழலை நன்கு வெளிப்படுத்தும் அழகான பாடல்.இந்த பாடலை தனியே கேட்பவர்கள் காதலர்களின் நெருக்கத்தையும் ,அந்நியோன்யத்தையும் வெண்ணிலாவுக்கு பூடகமாக கூறும் பாடல் என்றே எண்ணுவர்.ஆனால் படத்தின் கதையமைப்பின் சூழலுக்கு எவ்வளவு பொருத்தமாக எழுதப்பட்டது என்பதை படம் பார்ப்பாவர்களால் மட்டுமே உணர முடியும்.
இந்த அருமையான சூழலுக்கு இனிப்பான இசை! இடையிசையில் குழல் அதிகமாக பயன்படுத்தி இனிமைக்கு இனிமை சேர்த்திருக்கிறார்கள். குழலுடன் சுசீலாவின் குரல் போட்டி போடும் மிக அழகை ரசிக்க வைக்கும் பாடல்.
11 காதல் எனும் வடிவம் கண்டேன் – பாக்கியலட்சுமி 1961 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பூ தானாக மலர்ந்து மனம் வீசுவது போன்ற மிக இயல்பாக இனிமையை அள்ளிக் கொட்டுகின்ற பாடல். பாடலின் ஆரம்பமே இனிமையைப் பறைசாற்றிவிடும் வகையில் சைலபோன் ,குழல் ,வயலின் , கிட்டார் வாத்தியங்களின் ஆச்சரிய இனிய குழைவையும், மதுரத்தையும் முப்பது செக்கன் நிமிடத்தில் காண்பித்து மனதை துள்ள வைக்கும் பாடல்.
காதலின் குதூகலத்தை முன்னிசை அற்புதமாகப் படம் பிடிக்கிறது.
அனுபல்லவியில் ஓ,,, ஓ,,,, ஓ,,,,என்ற சுசீலாவின் இனிய கம்மிங்கைத் தொடர்ந்து, ” துள்ளாமல் துள்ளும் உள்ளம் மின்னல் மின்னும் கன்னம், வரிகளைத் தொடர்ந்து வரும் குழலும் ,உருண்டோடும் தாளமும் காதல் நெகிழ்ச்சியை நம்முள் உண்டுபண்ணிவிடுகிறது.அதன் முடிவில் ” தொட்டவுடன் மேனி எல்லாம் துவண்டுவிடும் கொடியைப்போலே ” என்ற வரிகளின் இசையும் பாடும் கனிவும் உணர்வுகளைக் கிளறும் பாங்கில் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல சரணத்தில் ” நாளெல்லாம் திருநாள் ஆகும் , நடையெல்லாம் நாட்டியமாடும் ” என்ற வரிகளுக்கு முன்பாக வரும் ஓ…ஓ..ஓ..ஆ…ஆ…ஆ. என்ற கம்மிங்கும் , இடையே வரும் மயக்கும் குழல் இசையும் தொடர்ந்து வரும் ” தென்றல் எனும் தேரின் மேலே சென்றிடுவோம் ஆசையாலே ” என்ற வரிகளில் வரும் இனிய இசை நம் உள்ளங்களை நெகிழ்சசியில் திளைக்க வைத்து இன்ப நெகிழ்ச்சியின் உச்சத்தில் ஏற்றி வைத்துவிடுகிறது.மரபு ராகமான கல்யாணி ராகத்தின் சாயலில் அழகும் ஆனந்தமும் மெல்லிசையாய் கொட்டும் பாடல்.
12 பருவம் போன பாதையிலே – தெய்வத்தாய் 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பொங்கஸ் என்ற தாளவாத்தியத்தின் இணையில்லாத “அடியில்” மகிழ்ச்சி கொட்டும் இனிய பாடல். என்னே ஒரு சக்தி ,இனிமை, இளமையின் வசீகரம் என எண்ணி வியக்க வைக்கும் பாடல்.பாடல் வரிகள் கூறுவது போல ” மாலைப்பொழுதில் இளம் தென்றல் தொடாத மலராய் நானிருந்தேன் ” என்று வரிகளுக்கு ஒப்ப இசையும் புத்துணர்ச்சி தருவதாக அமைக்கப்பட்டுள்ளது.கேட்கும் போதெல்லாம் வரம்பு கடந்த இன்பம் பிறப்பதை உணரலாம்.
13 கண்ணன் என்னும் மன்னன் பேரை – வெண்ணிற ஆடை 1965 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குதூகலம் , விறுவிறுப்பு கலந்த இனிமைக்கு இந்த நூதனமான பாடல் சான்று பகரும். பொங்கஸ் தாளத்தின் அதிர்வு , ட்ரம்ஸ் தாளத்தின் தூறல், துள்ளல்,பியானோ இசையின் நளினம் , சந்தூர் இசையின் சிதறல்கள் நவீனத்துவத்தின் இசைப்பாங்குகளை அனாயசமாக கலந்து தரும் பரீட்சாத்தமான அற்புத பாடல்.
14 அம்மம்மா காற்று வந்து – வெண்ணிற ஆடை 1965 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
துள்ளல் இசைக்கு குழல் ,சந்தூர் போன்ற மரபு வாத்தியங்களுடன் ஆரம்பிக்கும் குதூகலப்பாடல். இசையின் மாயரூபம் நாதங்களின் இனிய நீடசியாய் ஒலிக்கும் உத்திகளை வைத்து மெல்லிசைமன்னர்கள் செய்திருக்கும் இசை அற்புதக்கலவை !
நமது நெஞ்சங்களை அள்ளி கொஞ்சும் இனிமையையும் ,காற்றில் மிதத்திச் செல்லும் உவகையும் தருகின்ற பாடல். பாடலின் நடுவில் ” அம்மம்மா…அம்மம்மா ” என்ற பகுதிகள் பாடுபவரின் இனிய கார்வையும் , கண்ணதாசன் பாடலில் குறிப்பிடுவது போலவே ” நீரில் நின்று தேனும் தந்து அள்ளி அள்ளி செல்லும் சுகமோ ” என்கின்ற உணர்வை நமக்கு தருகின்ற பாடல்.இப்பாடலில் ஒலிக்கும் ” அம்மம்மா…அம்மம்மா ” நெடில் ஓசை அற்புதம்.
15 நீராடும் கண்கள் இங்கே – வெண்ணிற ஆடை 1965 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ட்ரம்பட் , பொங்கஸ், கிட்டார் வாத்தியங்களுடன் ஆரம்பிக்கும் காபரே பாணிப் பாடல்.பாடும் குரலில் சற்று நடுக்கத்தை காட்டுவதன் மூலம் அந்த சூழ்நிலையையும் மன உணர்வுகளையும் காண்பிக்கிறார்கள்.எல்.ஆர்.ஈஸ்வரி பாடவேண்டிய பாடலோ என்று எண்ண வைக்கும் இப்பாடல் படத்தில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.அந்தக்காலத்துப் பாடல்கள் குறித்து பி.சுசீலா ஒருமுறை .” அந்தக்காலத்துப் பாடல்களை யாரை பாடினாலும் இனிமையாகவே இருக்கும் ” என்று குறிப்பிட்டது இங்கு எனது நினைவுக்கு வருகிறது.
16 யாருக்கு மாப்பிள்ளை யாரோ – பார்த்தால் பசி தீரும் 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
கேட்கும் தருணங்களிலெல்லாம் பரவசம் தரும் பாடல்களில் இதுவும் ஒன்று.பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் வயலின் உரசலும் ,மேண்டலின் இசை ,ஓபோ இசை என பாடலின் முன்னிசையும் , இடையிடையே வரும் இனிய கம்மிங் , கிட்டார் , மேண்டலின் என இனிமையைப் பெருக்கும் விதத்தில் காரண ,காரியத்தோடு சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது .ஹம்மிங்கில் எஸ்.டி.பர்மனின் பாடல் ஒன்றை தழுவிச் செல்லும் லாவண்யமும் நடந்திருக்கிறது.
17 வா என்றது உருவம் – காத்திருந்த கண்கள் 1962 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
இரவின் இனிமைக்கு, இனிமை பொங்கும் குழலிசையின் அழகைக்காட்டி செல்லும் இப்பாடல் உள்ளத்தை உவகை கொள்ள வைக்கும் இனிய பாடல் . பொங்கிப்பெருகி ,பரவி ஓடும் குழல் இசையும் சேர்ந்தொலிக்கும் பிற இசைகளும் நெஞ்சை அள்ளும். விறுவிறுப்பு ஓட்டமிக்க பாடல் மனஎழுச்சி தரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
18 இளமை கொலுவிருக்கும் – ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
எடுத்த எடுப்பிலேயே மனதைக் கொள்ளை கொள்ளும் குழலிசையுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் தரும் உணர்வை வார்த்தையால் வர்ணிப்பதென்பது மிகக்கடிமான செயல்.
இனிய குழலிசையைத் தொடரவும் சுசீலாவின் ஹம்மிங் ,அதைத் தொடரவும் நெஞ்சை அள்ளும் வயலினிசையும் ,மீண்டும் சுசீலாவின் இனிய ஓ..ஓ.. ஓ..என்ற ஹம்மிங் முடியும் இடத்தில் மெண்டலின் ,குழல் இணைந்து குழைய வீச்சாக எழுகிறது இனிய பல்லவி.
தொடர்ந்து இடையிசையில் மெண்டலின் ,குழல், வயலின் ,மீண்டும் மெண்டலின் குழைந்து இன்பமூட்ட ” அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ ” என்ற வரிகள் வரும். பாடல் வரிகளின் உள்ளேயும் மெண்டலின் மீட்டல்களை நிரவல்களாக வைத்திருக்கும் அழகையும் ரசிக்கலாம்.
சரணத்திலும் அனுபல்லவியைப் போலவே இடையிசையில் எல்லாம் கலந்த கலவையின் கனிவை கேட்கலாம்.இதே பாடல் ஆண்குரலிலும் வெளிவந்தது.அதன் வாத்திய அமைப்பு முற்றிலும் மாறுபட்டிருக்கும்.
19 பாலிருக்கும் பழமிருக்கும் – பாவமன்னிப்பு 1961 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
இரவின் சுகந்தம் வீசும் இந்தப்பாடலில் ஹம்மிங் காதலர்களின் நேய மருவலை , அன்னியோன்யத்தை , காதல்நயப்பைஅள்ளிக் கொட்டுகிறது.பல்லவியைத் தொடர்ந்து வரும் சந்தூர் இசை , பால் நிலாவின் பெரு ஒளி ,நீரலை அசைவில் மின்னும் வைர ஒளிச்சிதறல்களாய் மின்னி, மின்னி ஜாலம் காட்டுவதாய் அமைத்துள்ளது. அது மீண்டும் அனுபல்லவியைத் தொடர்ந்தும் ஒலிக்கும் இசை. இன்ன இடத்தில் இன்ன வாத்தியம் வரவேண்டும் என்பதை உணர்த்துவது போல அமைத்துள்ளது.பாடல் வரிகளும் கவித்துமாகப் புனையப்பட்டுள்ளது
20 அத்தான் என் அத்தான் – பாவமன்னிப்பு 1961 – பி.சுசீலா – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலின் பல்லவியின் பின்னணியில் மென்மையாக நடை போடும் வயலின் ,பல்லவியின் முடிவில் விஸ்தாரமான எக்கோடியன் இசை மேலெழும்பி வர மியூட் ட்ரம்பட் இசை குழைந்து வர ” ஏன் அத்தான் என்னை பார் அத்தன்” என்ற அனுபல்லவி ஆரம்பிக்கிறது.
மீண்டும் சரணத்தில் ,அனுபல்லவியில் பயன்படுத்திய அதே எக்கோடியன், மியூட் ட்ரம்பட் குழைவிசையின் இனிமையுடன் நிறைவுபெற ” மொட்டுத்தான் கன்னி சிட்டு தான் ” என்ற வரிகள் ஆரம்பிக்கிறது.பாடல் வரிகளுக்குப் பின்னணியிலும் வாத்தியங்கள் பயன்படுத்திய அழகு குறிப்பிடத்தக்கது.
மெய்மறந்து ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. எக்கோடியன் , மியூட் ட்ரம்பட் வாத்தியங்கள் பிரமிக்க வைக்கும் வண்ணம் பாடலுடன் இசைந்து செல்லும் அழகோ அழகு! மிகக்கடினமான , நுட்பமான வாத்தியக்கலவை இது.அவர்களின் இசை ஆற்றலுக்கு இந்தப் பாடல் சிறந்த உதாரணம் என்று சொல்லிவிடலாம். நீண்ட இடைவேளை விட்டு மெல்ல அசைந்து செல்லும் இந்தப்பாடல் காதல் விரகத்தை வெளிப்படுத்துவதாக அமைத்த நுட்பம் அருமையாகும்.
21 பக்கத்து வீட்டு பருவ மச்சான் – கற்பகம் 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
இனிய ஹம்மிங்குடன் , மெதுவாக செல்லும் பாங்கோஸ் தாள லயத்துடன் நம்மை அசைத்து செல்லும் இந்தப்பாடல் இன்ப உணர்வை ஒளிர செய்யும்.இடையிடையே வரும் குழல் ,சித்தார் , தபேலா வாத்தியங்கள் மட்டுமல்ல விசில் சத்தம் நம் நெஞ்சை அள்ளுவதாக அமைக்கப்பட்டிருக்கும்.
22 ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – கற்பகம் 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
சித்தார் வயலின், குழல் சந்தூர்,ட்ராம்போன் என நவீன பரிவாரங்களுடன் ஒலிக்கும் இனியபாடல். பாடலின் நடுவே வரும் பாடல் வரிகளை ரசிகர்களே தீர்மானிக்கும் வண்ணம் இடைவெளிகள் விட்டு சிந்திக்க வைக்கும் புதுமையை கையாண்ட பாடல்.
” வயதில் வருவது ஏக்கம் அது வந்தால் வராது ———- ” என்ற இடைவெளியும் , ” வந்ததம்மா மலர் கட்டில் இனி வீட்டினில் ஆடிடும் ——— ” என்று இடைவெளிகளில் வாத்தியங்களை வைத்து புதுமை செய்திருக்கிறார்கள்.இப்பாடலைக் கேட்பவர்கள் வரும் இடைவெளிகளில் தாங்களே தங்களை அறியாமல் பாடும் வண்ணம் தூண்டிவிடும் மிக நுண்ணிய நுட்பத்தை வைத்து இசைரசிகர்களை தூண்டி விடுகிறார்கள்.புது புது உத்திகளை காட்டும் பேரார்வமும் மெல்லிசைமன்னர்களிடம் வெளிப்பட்டதை காண முடிகிறது.
சரணத்தில் ” வருவார் வருவார் பக்கம் உனக்கு வருமே,,,, ஹூம்ம் ,,ஹூம்ம் ! தருவார் தருவார் நித்தம் இதழ் தித்திக்க தித்திக்க ச் ச் ச் ” என்ற இடங்களில் வாத்தியங்களை தவிர்த்து செல்கிறார்கள்.இந்த பாடல் எவ்வளவு புதுமை என்பதை அக்காலத்து பருவ வயதினாரான எனது அத்தை மகள்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன்.
23 கண்ணன் வருவான் கதை சொல்லுவான் – பஞ்சவர்ணக்கிளி 1964 – பி.சுசீலா – இசை : விசுவநாதன் ராமமூர்த்தி
மவுத் ஓகன், எக்கோடியன் ,வயலின் , பொங்கஸ் தாளம் என எழுச்சியான வாத்தியங்களை அனாயாசமாகப் பயன்படுத்தி இசையமைக்கப்பட்ட இனிய பாடல்.இந்தப்பாடலில் பாடல் வரிகளின் சொற்களை வைத்து விளையாடும் புதுமையை நிகழ்த்தி காட்டிய பாடல்.அனுபல்லவியில் ” பட்டு வண்ண சிட்டு வந்து பழம் கொடுக்க ” என்ற வரிகளில் ” பட்டு வண்ண …..சிட்டு வந்து ” என்று சற்று இடைவெளிகளை விட்டு பாடி இனிமை ஊட்டுவார்கள்.
பாடலின் ஆரம்பத்திலேயே விரல் சொடுக்கும் தாளத்துடன்
” வா …வா ….வா …வா ..வா …வா ….
கண்ணே வாடா கண்மணி வாடா
பொன்னே வாடா பொன்மணி வாடா
புன்னகை புரியும் கண்ணா வாடா
புல்லாங்குழலின் மன்னா வாடா
அழகே வாடா அருகே வாடா
அன்பே வாடா முத்தம் தாடா
தாலாட்டுப்பாடலாக அமைந்த இப்பாடலில் முதல்பகுதி குழந்தையை பாராட்டுவதாகவும் , பின்பகுதியில் தனது காதலை நினைத்து பாடுவதாயும் அமைக்கப்பட்டுள்ளது.பாடல் முடிவில் “உண்மையை அதிலே உறங்கவைத்தான் ..உறங்கவைத்தான் ..உறங்கவைத்தான் ..ஆராராரோ ..ஆராராரோ ..ஆராராரோ என்றபகுதி மிகச் சிறப்பாக இருக்கும்.
24 தென்றல் வரும் சேதி தரும் – பாலும் பழமும் 1961 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
கனிவு , இனிமை ,நெகிழ்ச்சி என பல்வகை உணவுர்களை போங்க வைக்கும் இந்தப்பாடலில் வாத்திய அமைப்பு மிக பிரமாதமாக அமைக்கப்பட்டிருக்கும்.குறிப்பாக செனாய் என்ற வாத்தியம் அதி உச்ச உணவர்களை கிளறும் வண்ணம் பயன்படுத்தப்பட்டிருக்கு. கிட்டார் ,குழல் ,எக்கோடியன் மட்டுல்ல இடையிடையே சுசீலாவின் ஹம்மிங் கிளர்ச்சியும் நெகிழ்சசியும் தரும். ஒரு மகிழ்ச்சிப்பாடலில் செனாய் ஒப்பற்றமுறையில் பயன்படுத்தப்பட்டதே சிறப்பு.படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் புகழின் உச்சிக்கு சென்ற பாடல்.
25 பார்த்தால் பசி தீரும் – பார்த்தால் பசி தீரும் 1962 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
மேலைத்தேய செவ்வியலிசை பாணியில் ஒலிக்கும் வயலினிசை தொடங்க ,சுசீலாவின் இனிய ஹம்மிங் ,அதைத் தொடரவும் மெண்டலின் இசையுடன் பல்லவி ஆரம்பிக்கும்.பல்லவியின் பின்னிசையாக மென்மையாக சைலபோன் பொருத்தமாக இணைந்து புது ஜாலம் காட்டும்.
குழல் ,வயலின் ,மெண்டலின் குழைவிசையாக வர அனுபல்லவி ” சிற்றாடை ஆடி வரும் ” என்ற வரிகள் வரும்.சரணத்தில் மிக இயல்பாக ,திணிப்பில்லாத குழைவிசை வர ” பெண்ணோடு சேர்ந்துவிட்டால் ” வரிகள் ஒலிக்கும்.இறுதியில் தனியே மெண்டலின் இசை ஒலிக்க ” பொன்னாடை போர்த்தி வரும் ” வரிகள் வரும்.
இனிய குரலும் ஒருங்கிசைந்த அற்புத இசையும் நம்மை புது உலகத்திற்கு எடுத்து செல்லும்.
26 மங்கள் மேளம் பொங்கி முழங்கிட – கை கொடுத்த தெய்வம் 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குதூகலத்தில் ய்துள்ளிக் குதிக்கும் இந்தப்பாடலிலும் குழல் ,சந்தூர் ,குழல் பரிவாரங்கள் வழமை போலவே பயபடுத்தப்பட்டாலும் செனாய் வாத்தியம் பின்னணியில் மெல்லியதாய் இழையோடிக் கொண்டிருந்தாலும் பாடலின் சரணத்திற்கு முன்பாக இன்பப்பெருக்கை வெளிப்படையாகவே அள்ளிக் கொட்டுகிறது.பாடலின் முடிவிலும் மெல்லிய கோடாய் அணைந்து செல்கிறது செனாய்.
27 அத்தை மடி மெத்தையடி – கற்பகம் 1964 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
லு லு …. ஆயி..ஆரி ஆரி..ஆரி ஆரி ..ஆரி ஆரி ஆரோ என்ற இனிமையான , ஏக்கம் நிறைந்த ,இனம் புரியாத உணர்வுகளை எழுப்பும் ,நெஞ்சை அள்ளும் தாலாட்டு ஓசையுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடலில் எத்தனை கனிவு, இனிமை.அதனுடன் இயைந்து வரும் எக்கோடியன் ,ஜலதரங்கம் மணி ஒலிகள் போன்றவை நகர்ந்து,இயைந்து வரும்.
எத்தனை குதூகலம் ,மகிழ்சசி ,பாசப்பிணைப்பு! பாடலின் பல்லவியுடனியைந்து வரும் எக்கோடியன், மணி ஒலிகள் ,குழல் ,வயலின் ,மெண்டலின் ,சித்தார்,ரோபோ போன்ற வாத்தியங்களின் பிரயோகம் அமானுஷ்ய உணர்வைத் தரும்வகையில் பயன்டுத்தப்பட்டுள்ளன.
28 என்னுயிர் தோழி கேள் ஒரு சேதி – கர்ணன் 1964- பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
எடுப்பான கேதார் ராகத்திலமைக்கப்பட்ட இனிய பாடல் இந்தப்பாடலில் வட இந்திய வாத்தியங்கள் மிக நேர்த்தியுடனும்,அழகுடனும் பயன்படுத்தப்பட்டுள்ளன.கஷ்டமான சங்கதிகளை சுசீலா அனாயாசமாக பாடியிருக்கிறார்.
29 என்ன என்ன வாத்தைகளோ – வெண்ணிறஆடை 1964 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஜாஸ் பாணியிலான பியானோ வாத்திய இசையுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் , துள்ள வைக்கும் பொங்கஸ் தாளத்துடன் பிணைக்கப்படட இனிமை.எக்கோடியன்,மெண்டலின், கிட்டார் போன்ற வாத்தியங்களின் இனிய ஒலிகளையும் இணைத்த இனிமைக்கு இந்தப்பாடல் எடுத்துக்காட்டு.
பாடலின் இடையே வரும் சுசீலாவின் அபாரமான ஹம்மிங்குடன் இணைந்து வரும் பியானோ இசையும் மயக்க , எழுச்சிமிக்க ” உன்னைத்தான் கண்டு சிரித்தேன் ” என்ற வரிகள் வரும், அதனிடையேயும் இத்தாலிய இசையை மீட்டுவது போல மெண்டலின் ஒலிவருடலும் , எக்கோடியன் இசை வருடலும் கற்பனையின் உச்சம்.சரணத்திலும் ,அனுபல்லவி போன்றே இசை லாவண்யம் உச்சம் !
மேலும் சில இனிய பாடல்கள்:
30 மங்கள் மேளம் பொங்கி முழங்கிட – கை கொடுத்த தெய்வம் 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
31 சரவணப் பொய்கையில் நீராடி – இது சத்தியம் 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
32 முத்தான முத்தல்லவோ – நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
33 அன்று ஊமைப் பெண்ணெல்லா – பார்த்தால் பசி தீரும் 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
34 மீனே மீனே மீனம்மா – என் கடமை 1964 – – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
35 மானாட்டம் தங்க மயிலாட்டம் – ஆலயமணி 1962 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
36 அத்தை மக்கள் ரத்தினத்தை – பணக்காரங்க குடும்பம் 1963 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
37 உறவு சொல்ல ஒருவர் இன்றி – பாசம் 1962 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
38 வா என்றது உருவம் – காத்திருந்த கண்கள் 1962 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
39 அத்தை மகனே போய் வரவா – பாத காணிக்கை ணி 1962 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
40 ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – கற்பகம் 1964 – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
41 அன்னை மடி மெத்தையடி – கற்பகம் 1964 – – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
42 பக்கத்து வீட்டு பருவ மச்சான் – கற்பகம் 1964 – – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
43 தேவியர் இருவர் முருகனுக்கு – கலைக்கோயில் 1963 – – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
44 உன்னை ஊர் கொண்டு அழைக்க – பூஜைக்கு வந்த மலர் 1965 – – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
45 தேனூறும் தேனோடை – என் கடமை 1963- பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
தனியே இதுபோன்ற சிறப்பான பல பாடல்களை பாட பி.சுசீலாவைப் பயன்படுத்தினாலும் , எல்.ஆர்.ஈஸ்வரி , எஸ்.ஜானகி போன்ற பாடகிகளையும் நல்ல பாடல்களை பாட வைத்தார்கள்.தனியேயும் ,ஜோடிப்பாடல்களாகவும் அவை அமைந்திருக்கின்றன.பொதுவாக அவற்றை கேட்கும் போது குறிப்பிட்ட அந்தப்பாடல்களை வேறு யாராவது பாடினால் நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படாத வகையில் இனிமையாக அமைந்திருப்பதையும் அவதானிக்கலாம். அவை இயல்பான அழகும் ,மனதுக்கு இன்பமளிக்கக்கூடியதாகவும் இருப்பதை அவதானிக்கலாம். .பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களை இணைத்து மெல்லிசைமன்னர்கள் தந்த சில பாடல்கள்.
01 சித்திர பூவிழி வாசலில் – இதயத்தில் நீ 1964 – பி.சுசீலா + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 மலருக்கு தென்றல் பகையானால் – எங்க வீட்டு பிள்ளை 1964- பி.சுசீலா + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 உனது மலர் கொடியிலே – பாதகாணிக்கை 1962 – பி.சுசீலா + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 முந்தானை பந்தாட அம்மானை – நெஞ்சம் மறப்பதில்லை 1962 – பி.சுசீலா + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு – சர்வர் சுந்தரம் 1964 – பி.சுசீலா + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 வாடியம்மா வாடி – பணக்கார குடும்பம் 1963 – பி.சுசீலா + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 தூது செல்ல ஒரு தோழி – பச்சை விளக்கு 1963 – பி.சுசீலா + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
மெல்லிசைமன்னர்களின் இசையில் முதன்மையாகப் பாடி புகழபெற்றவர்களில் முக்கியமானவர் எல்.ஆர்.ஈஸ்வரி. பெரும்பாலும்கோரஸ் பாடிவந்த எல்ஆர்.ஈஸ்வரியை பல இனிமையான பாடல்களை வைத்தார்கள்.சுசீலா புகழின் உச்சியில் இருந்த இவரையும் நிகராக பாட வைத்தார்கள்.
புத்துணர்ச்சியும், கவர்ச்சியும் ,துடிப்பும் ,இளமையும் மிக்க குரலுக்குச் சொந்தக்காரி எல்.ஆர்.ஈஸ்வரி. பெரும்பாலும் கலகலப்பான பாடல்களில் சிறந்து விளங்கும் காதுக்கு இனிமை வாய்ந்த குரல்.பின்னாளில் காபரே போன்ற கவர்ச்சிப்பாடல்களை பாட வைக்கப்பட்டாலும் மிக இனிமையான பாடல்களையும் அமோகமாகப் பாடும் ஆற்றல்மிக்க பாடகி.
“வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ ” என்ற பாடலைப் பிறிதொரு பாடகி அத்தனை குதூகலத்தவுடனும், துள்ளலுடனும் பாட முடியுமா என்று கற்பனை செய்து பார்க்க முடியாதவண்ணம் பாடி தனது திறமையை வெளிப்படுத்திய பாடகி. இன்னும் பல இனிய பாடல்களை பாடி நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் எல்.ஆர்.ஈஸ்வரி.
மெல்லிசைமன்னர்களது இசையில் அவர் பாடிய பாடல்கள் சில.
01 வாராய் என் தோழி வாராயோ – பாசமலர் 1961 – எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.
வேதமந்திரம், நாதஸ்வரம் ,கோரஸ் ,கைத்தட்டு , சிரிப்பொலிகள் என பல்வகை வினோதங்கள் நிகழ்த்திய பாடல்.ஒரு பாடலுக்குள் எத்தனை, எத்தனை அற்புதங்களை நிகழ்த்த முடியுமோ அத்தனையையும் சாத்தியப்படுத்திய மெல்லிசைமன்னர்களின் சாதனைப்பாடல். அந்த பாடலின் உணர்வை மிக இயல்பாக எல்.ஆர்.ஈஸ்வரி வெளிப்படுத்தியிருக்கும் பாடல்.
02 அம்மம்மா கேளடி சேதி – கறுப்புப்பணம் 1962 – எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 அல்லிப் பந்தல் கால்கள் எடுத்து – வெண்ணிற ஆடை 1964 – எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 மலர் என்ற முகம் ஒன்று – வெண்ணிற ஆடை 1964 – எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 நீ என்பதென்ன நான் என்பதென்ன – வெண்ணிற ஆடை 1964 – எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு – மணியோசை 1963 – எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
தனிப்பாடல் மட்டுமல்ல ஆண்குரல்களுடன் இணைந்தும் பல ஜோடிப்பாடல்களையும் பாடி தந்து திறமையை வெளிப்படுத்தியவர் எல்.ஆர்.ஈஸ்வரி.
ஆரம்ப நிலையில் இருந்த எஸ்.ஜானகி , மெல்லிசைமன்னர்களின் இசையில் இனிமையான சில பாடல்களை பாடினார் எஸ்.ஜானகி தனித்துப்பாடிய பாடல்கள் சில.
01 தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே – ஆலயமணி 1962 – எஸ்.ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி – பாசம் 1962- எஸ்.ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 என் அன்னை செய்த பாவம் – சுமைதாங்கி 1963 – எஸ்.ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 ராதைக்கேற்ற கண்ணனோ – சுமைதாங்கி 1963 – எஸ்.ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 குங்குமப் பொட்டு குலுங்குதடி – இது சத்தியம் 1962 – பி.சுசீலா + எஸ்.ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.
பெண் பாடகிகளை தனியேயும் இரண்டு குரல்கள் இணைந்த பாடல்களிலும் பாட வைத்த மெல்லிசைமன்னர்கள் ஆண்குரல்களுடன் இணைந்தும் பல ஜோடிப்பாடல்களையும் பாட வைத்தார்கள்.அங்கேயும் சுசீலாவின் குரலே முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. அது அவரின் இனிமையான குரலுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் ஆகும்.
[ தொடரும் ]
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 08 : T .சௌந்தர்.