Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த் தேசிய முகமூடி அணிந்த முக்கிய நான்கு பிழைப்புவாதிகள்

Suresh-Premachandranஇன்று வடக்குக் கிழக்கில் தீவிர தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் மிக அண்மைக்கால வரலாறு பேரினவாதத்தோடும் இந்திய நலன்களோடும் தொடர்புபட்டதாக அமைந்திருந்தது என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். பலருக்கு இத் தமிழ்த் தேசியவாதிகளின் சேவை தேவையாக இருக்கின்றது. இலங்கையில் தம்மால் வழி நடத்தப்படுகிறவர்கள் என்று புலம்பெயர் நாடுகளிலிருந்து ‘படம் காட்டுவதற்கு’ போதிய பினாமிகளின் பற்றாக்குறையால் இன்று தமிழ்த் தேசியவாதிகளாக்கப்பட்டவர்கள் பலர். தீவிர தமிழ்த் தேசியவாதிகளுள் இன்று முதன்மை இடத்தை சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு வழங்கலாம்

1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய இராணுவம் அழிப்பு நடத்திய போது அதன் துணைப்படையாக ஈ.பி.ஆர்.எல்.எப் இணைந்துகொண்டது. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் நூற்றுக்கணக்கானவர்களை ஈ.பி.ஆர்.எல்.எப் கொன்று குவித்தது. இக் கொலைகளைத் தலைமை தாங்கியவர் இன்றைய தமிழ்த் தேசியவாதி சுரேஷ் பிரேமச்சந்திரன். இந்திய இராணுவத்தின் அனுசரணையுடன் தமிழ்த் தேசிய இராணுவம் என்ற துணைக்குழுவை உருவாக்கி, விடுதலைப் புலிகளுடன் மோதவிட்டு வேடிக்கை பார்த்தது இந்திய இராணுவம். அவ்வேளையில் தெருக்களில் சென்ற இளைஞர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட அத் துணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அதனைத் தலைமை தாங்கியவர்களுள் பிரேமச்சந்திரனும் ஒருவர்.

‘மண்டையன் குழு’ என்ற கொலைப்படையை வழி நடத்திய சுரேஷ் பிரேமச்சந்திரன் தானே நேரில் கொலைசெய்ததைப் பார்த்த ஆதாரஙக்ள் உண்டு. மிகவும் கோரமான கொலைகளில் ஈடுபட்ட பிரேமச்சந்திரன் இன்றைய தமிழ்த் தேசியவாதி. இந்திய இராணுவ காலத்தின் போர்க்குற்றவாளியான பிரேமச்சந்திரன் ஐ.நா வரை சென்று போர்க்குற்றத்தைத் தண்டிக்க வேண்டும் என்று போரின் பின்னணியில் செயற்பட்ட நாடுகளிடமே மன்றாடுவதாக வேடமிடுபவர்களில் ஒருவர்.

ஈ.பி.ஆர்.எல் எப் இன் செயலாளர் பத்மநாபா கொல்லப்பட்டதும், இந்தியாவிலிருந்த பல கோடி சொத்துக்களைத் தமதாக்கிக்கொண்ட பிரேமச்சந்திரனுக்கு இந்தியா இன்னொரு தாய் வீடு. 80 களின் இறுதியில் மண்டையன் குழுவைத் தலைமைதாங்கிய சுரேஷ் பிரேமசந்திரன் பின்னதாக மகிந்த ராஜபக்ச மீன் பிடித்துறை அமைச்சராகப் பதவிவகித்த 1997 ஆம் ஆண்டின் பின்னான மூன்று ஆண்டுகளில் அந்த அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்தார்.

இலங்கை இந்திய அதிகாரவர்க்கங்களின் நம்பிக்கைக்குரிய சுரேஷ் பிரேமச்சந்திரன் இப்போதெல்லாம் ஜெனீவா சென்று மகிந்த ராஜபக்ச உட்படோரைத் தண்டிக்கப் போவதாகக் கூறுகிறார்.இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கை தொடர்பான நூற்றுக்கணக்கான ஆதாரங்களிருந்தும் முன்னை நாள் போராளிகள் மீது நச்சு ஊசி செலுத்தப்பட்டதாக ஆதரமற்ற தகவல் ஒன்றை கட்டவிழ்த்துவிட்டவர்களுள் பிரேமச்சந்திரனும் ஒருவர்.
(தொடரும்..)

Exit mobile version