Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

Noam Chomsky – அறிதலும் அறியாதன குறித்த அறிதலும் : யமுனா ராஜேந்திரன்

 

இலங்கைப் பிரச்சினை பற்றி அமெரிக்க மனித உரிமைவாதியும் மொழியியலாளருமான நோம் சாம்ஸ்க்கி ஒரு நேர்முகம் கொடுத்திருந்தார். முன்னாள் ‘லங்கா கார்டியன்’ பத்திரிக்கை ஆசிரியரும், இன்னாள் மகிந்த ராஜபக்சே அரசினது சித்தாந்தியும் ஆன தாயன் ஜயதிலகே அந்த நேர்முகத்தின் பின்னிருந்தார். இலங்கை அரசின் மனித உரிமை மீறல் செயல்பாட்டுக்கு நவகாலனிய – பின்மார்க்சிய (பின் மார்க்சியம்தான் தமிழில் என்னென்ன பாடுபடுகிறது பாருங்;கள்) விளக்கங்களை இலங்கை அரசு சார்பாக அதிகாரபூர்வமாக ஐக்கிய நாடுகள் சபையில் எடுத்து வைப்பவர் தாயன் ஜயதிலகே.

சாம்ஸ்க்கியின் அந்த நேர்முகம் இரண்டு சிக்கல்களைக் கொண்டிருந்தது. இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக எழுதுகிற அதன் பேட்டியாளரது கேள்விகள் முழுமையாக இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் ( கவனிக்க விடுதலைப் புலிகளுக்கு எதிராக அல்ல, முழுத் தமிழர்களுக்கும் எதிராகச் சாம்ஸ்க்கியைத் திருப்பவதாக இருந்தது அந்தக் கேள்விகள்), இந்த வஞ்சகக் கேள்வி வலையில் அவரை அறியாமலேயெ வீழ்ந்தார் சாம்ஸ்க்கி. ‘அறியாமலேயே வீழ்ந்தார்’ எனும் சொற்றொடரை காரணத்துடன்தான் பாவிக்கிறேன்.

இலங்கை அரசு தொடர்பான பல விவரங்களையும் சோம்ஸ்க்கி அறியாமல்தான் இருந்தார். அதைப் போலவே விடுதலைப் புலிகள் இயக்கம் உள்பட எதிர் இயக்கங்களின் தோற்றத்துக்குப் பின்னியான அரச பயங்கரவாதம்; குறித்தும் அவர் அறியாதவராகவே இருந்தார். அதனைப் பிற்பாடு அவர் ஒப்புக்கொள்ளவும் செய்தார். சரியாகச் சொல்வதானால் சமநிலையிலான இலங்கைப் பிரச்சினை குறித்த பார்வை சோம்ஸ்க்கியிடம் இல்லாமல் இருந்தது. பல விடயங்களை அவரது நேர்முகம் கொண்டிருக்கவில்லை. ஓரு வகையில் இலங்கை அரசுக்கு ஆதரவான நேர்முகமாகவே அது ஆனது.

நண்பர் வளர்மதியினது எண்ணக் கருவினையடுத்து, நண்பர்கள் நாகார்ஜூனன்,ஜமாலன்,பெருந்தேவி போன்றவர்கள் நோம் சாம்ஸ்க்கியின் கவனத்திற்கு, இலங்கைத் தமிழரது அவலத்திற்கான காரணங்களையும், இலங்கை அரசினது மனித உரிமை மீறல்களையும் கொண்ட போக வேண்டும் என விரும்பினர். (இது குறித்து நாகார்ஜூனனுடன் நான் விரிவாகப் பின்னர் பேசினேன்). நோம் சாம்ஸ்கிக்கு அனுப்புவதற்காக எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடியதொரு பொதுவான முன்வரைவு (பொதுவான முன்வரைவு என்கிறபோது, பூர்வாங்கமான முன்வரைவிலிருந்து பல சமரசங்கள் ஏற்படுதல் தவிர்க்கவியலாதது என்பது அரிச்சுவடி) நண்பர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, உடன்படுபவர்கள் கையொப்பமிட்டு அது சாம்ஸ்க்கிக்கு அனுப்பப்பட்டது. விரைவாகவே சாம்ஸ்க்கி அதற்கான பதிலும் அனுப்பினார். சாம்ஸ்க்கியின் அறிவு நேர்மைக்கு இதுவொரு சான்றாதாரம்.

நண்பர்கள் அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் மீறல்கள் தொடர்பாகப் பல விடயங்களைத் தான் பேசவில்லை என்பதை சாம்ஸ்க்கி தனது பரிpல் ஒப்புக் கொண்டிருந்தார். காரணமாக தரவுகள் இல்லாத, தனக்கு முழுமையான ‘அறிதல் இல்லாத’ விடயங்கள் குறித்துத் தான் பேச விரும்பியிருக்கவில்லை எனவும் அவரது பதிலில் தெரிவித்திருந்;தார். அவர் முன்பாகச் சொன்ன கருத்துக்களை அவர் மறுக்கவில்லை. தான் சொல்லாத விடயங்கள் பல இருக்கின்றன, தனக்கு அதில் அறிதல் இல்லை என்பதால் அதனைச் சொல்லவில்லை என்பதுதான் அவரது பதிலின்; சாராம்சம்.

இதில் சோம்ஸ்க்கி ஏற்கனவே சொன்ன தன் கருத்தைத் திரும்பப் பெற்றார் (தமிழகப் பொதுப் புலத்தமிழில் வாபஸ் அல்லது ஆங்கிலத்தில் வித்ரால்) என்கிற பிரச்சினையே இல்லை. நோம் சாம்ஸ்க்கி அறிவு நேர்மையுடன் தனது அறிதலையும், தனது அறியாமை குறித்த அறிதலையும் முன்வைத்த நேர்மையான பதில் அவரிடமிருந்து நண்பர்கள் பெற்ற பதில்.

இனி நடந்து கொண்டிருப்பதைப்; பற்றிச் சொல்கிறேன். இணையம் தமிழ் சிறுபத்திரிக்கையின் தொடர்ச்சியான பல பண்புகளை வெளிப்படுத்தி நிற்கிறது. பரந்த இலக்கிய வாசிப்புக் கொண்ட, எழுது மொழியில் பல சோதனைகளையும் நிகழ்த்திப் பார்க்கிற பல காத்திரமான எழுத்தாளர்களை நாம் இணையத்தில் காண முடியும். பெயரிலி, சன்னாசி, டி.சே.தமிழன், அய்யனார், பெட்டை, தமிழ்நதி, மதுமிதா, பைத்தியக்காரன், சுரேஷ் கண்ணன், கென் என இந்தப் பட்டியல் கொஞ்சம் நீண்டது. இன்னும் ஒரு ஐந்து பேர் வரையிலும் இந்தத் தரத்திலும் தளத்திலும் எழுதுகிற படைப்பாளிகள் இருக்கிறார்கள்.

நண்பர் வளர்மதியை நான் இதில் சேர்க்கவில்லை. ஏனெனில் அவர் சிறுபத்திரிக்கை வாசகர்களுக்கு முன்பே அறியப்பட்டவர். பெயரிலி, தமிழ்நதி போன்றவர்களும்; காத்திரமான வாசிப்புள்ளவர்கள் ஏற்கனவே தொகுப்புகள் மூலமும் சிறுபத்திரிக்கைகள் மூலமும் ஒப்பீட்டளவில் அறிய வந்திருப்பவர்கள். டீ.சே.தமிழனது எழுத்துக்கள் தற்போது சிறுபத்திரிக்கைககளில் வரத் துவங்கியிருக்கிறது.

இவர்களில் இரு விதமான பண்புகளை இணைவெளியில் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். முதலாமவர்கள் தமது பரந்த வாசிப்பைப் பகிர்ந்து கொள்பவர்கள். அதனோடு மொழிசார்ந்த இலக்கியப் பரிசோதனைகளில் ஈடுபடுபவர்கள். இரண்டாமவர்கள் இந்த இரு பண்புகளோடு மூன்றாவது பண்பாக இலக்கியவாதிகளுக்கான இணை(ள)ய தளபதிகளாகச் செயல்படுகிற பணியையும் ஏற்பவர்கள். தமிழ் நடுவாந்திரப் பத்திரிக்கை சார்ந்த அதே இலக்கிய கோஷ்டி அரசியல் அல்லது அடியாள் அரசியலை முன்வைப்பவர்கள்.

புகழ்பெற்ற இலக்கியவாதிகளுக்கு பந்தம் பிடிப்பவர்களாக இவர்கள் மாறிப்போகிற ஆபத்துக்கு ஆட்படுகிறவர்கள். ஜெமோ விட்டால் சாநி என்று அவர்களுக்காகத் தளபதி வேலை செய்கிறவர்கள். ஓரு எழுத்தாளனின் படைப்புக்கள் காத்திரமாக இருந்தால் அது தானாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். அதே எழுத்தாளன் இலக்கியமல்லாத பிற அறிவுத்துறைகள் பற்றிப் பேசுவானானால் அவன் பேசுகிற கருத்துக்களின் அரசியலைப் பொறுத்து அது மதிப்பிடப்படும். இவ்வகையில் எழுத்தாளர்களுக்குப் பந்தம் பிடிப்பவர்கள் தமது அரசியலையும் சேர்ந்தே முன்வைக்கிறார்கள் என்கிற நிஜம் அவர்கள் அறியக் கிடக்கிறது என்பதனையும் தெரிந்து கொண்டு எழுத வேண்டும்.

நான் குறிப்பிட்ட மூன்றாவது பண்பை மேற்கோள்ளும் எழுத்தாளர்கள் ஜெமோவுக்கு எதிராகச் சாநியை ஆதரிப்பார்கள். சாநிக்கு எதிராகச் ஜெமோவை ஆதரிப்பார்கள். அடிப்படையில் ஜெமோ சாநி இருவருமே வன்மம் கொண்டவர்கள். ஏதிராளியை அவமானப்படுத்துபவர்கள். தமது எழுத்து வாழ்வின் தொடர்ச்சிக்காக எந்தச் சமரசத்துக்கும் தயங்காதவர்கள். தமக்குத் தெரியாததைப் பற்றியும் தமக்கு அறிவில்லாத பலவற்றைப் பற்றியும் பேத்;திப் கொண்டிருப்பவர்கள். அவர்களது பற்பல வாசிப்புக்கள் மிகவும் மேம்போக்கான அரிச்சுவடி நிலைமையைக் கூடத் தாண்டாதவைகள்.

இவர்களி;டம் தத்துவம், அரசியல், சேகுவேரா பற்றியெல்லாம் கேட்கிற வாசகர்களையும், அதற்கு இவர்கள் அடிக்கிற லூட்டிகளையும் பார்க்க அருவறுப்பாக இருக்கிறது. கிராம்ஸியைப் பற்றியும் சேகுவேரா பற்றியும் தமிழில் இருபதுக்கும் மேற்பட்ட தொகை நூல்களும் அசலாக எழுதப்பட்ட நூல்களும் இருக்கிறது. இந்த முட்டாள்களிடம் போய் ஏன் இவர்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்? எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால், எல்லாவற்றையும் இவர்களிடம் எதிர்பார்க்கிற, இவர்களிடமிருந்து மேற்கோள் காட்டுகிறவர்கள், ஏன் இவர்கள் பேசுகிற விடயங்களை இன்னும் காத்திரமாக, அசலான வாசிப்புடன் எழுதியிருக்கிற எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ், தமிழவன், ரவிச்சந்திரன் (லக்கான்-பிராய்ட்) போன்றவர்களைக் குறைந்தபட்சம் வாசிக்க முயலக் கூடாது?

ஜெமோ-சாரு-பைனரி விவாதங்களினிடையில் சாம்ஸ்க்கி பற்றிய ஒற்றை விவரத்தைப் பற்றிய மறுப்புக்காக இத்தனையையும் முன்னுரையாகத் தரவேண்டியிருக்கிறது. பைத்தியக்காரன் எனும் நண்பரது பதிவுகள் நான் விரும்பிப் படிக்கும் எழுத்துக்கள். நாகார்ஜூனனது விமர்சனக் கடிதத்துக்குப் பின்னர் ‘சோம்ஸ்க்கி தனது கருத்துக்களை வாபஸ் பெற்றுக் கொண்டார்’ என்று அதிரடியாக ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போடுகிறார் பைத்தியக்காரன். அதுவும் சாநி ஜெமோ விவகாரம் பற்றிய ஒரு கட்டுரையில், ஜெமோவை லேசாகத் தடவும் ஒரு கட்டுரையின் இடையில், இந்த அதிரடியோசை கேட்கிறது.

மோசமான பொறுப்பற்ற ஒரு விவரப்பிழை இது. சோம்ஸ்க்கி உலக அளவில் மதிக்கப் பெறுகிற மிக நேர்மையான ஒரு அறிவுஜீவி. இன்று உலகில் வாழ்கிற அறிவுஜீகளில் முதலாமானவர் என பிரித்தானியாவின் ;பிராஸ்பெக்ட்’ இதழின் வாசகர்கள் அவரைத் தேர்வு செய்திருந்தார்கள். குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலான் விடயத்திலும், யுகோஸ்லாவிய ஜனாதிபதியான மிலாசாவிச் விடயத்திலும் அவர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை மேற்கொண்டவர் சோம்ஸ்க்கி. ஹெரல்ட் பின்;ட்டர்-ஜான் பில்ஜர் சோம்ஸ்க்கி மூவரும் கலந்து கொண்ட மனித உரிமை விவாதஅமர்வில் பங்கு கொண்டது எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. இவர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக என்றும் சளையாது பேசி வருபவர்கள். தாயன் ஜயதிலகாவும் அவரது வால்களும் இவர்களை அணுகிப் பேசுவதற்கு முன்பான நிலைபாடுகளை நாம் எடுத்து அவர்களைச் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும். அதற்கான மனித உரிமை சார்ந்த வலு விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இருக்கவில்லை. ஆயினும் அந்தவிதமான காரியத்தை தமிழ்ச்சூழலில் செயல்படுபவராக அமரந்த்தா தற்போது செய்கிறார்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள அவரது தோழர்களுக்கு – அமரந்த்தா கியூபா சென்று வந்தவர் – தமிழர்களின் தரப்பை எடுத்துச் சொல்கிறார். இதே விதமான முயற்சியை இலண்டனின் இயங்கும் தமிழர் தகவல் நடுவத்தின் வழி – கியூப ஈழத்தமிழ் இலக்கிய நிகழ்வொன்றின் வழி – தமிழ் தகவல் நடுவத்தின் இயக்குனரான நண்பர் வரதகுமாரின் வழியில் நாங்கள் முயன்றோம். கியூபக் கவிஞரும் ‘லிடரரி கெஜட்டா’ எனும் ஸ்பானிய இலக்கிய இதழின் ஆசிரியருமான நார்பர்ட்டோ கொடினோவுக்கு இலங்கைத் தமிழர் எதிர்கொள்ளும் அவல வாழ்வை எடுத்துரைத்தோம். இதனைத் தொடர்ந்து செய்திருக்க வேண்டும். இலங்கைத் தமிழரது அவல வாழ்வின் முழுப் பரிமாணங்களையும் அறியவராதது நோம் சம்ஸ்கியினுடைய தவறல்ல, அது எம்முடையது என்பதுதான் சரியானது.

Exit mobile version